திங்கள், 29 செப்டம்பர், 2008

பாடம் 24 உவமையணி!

உவமை உருபுகள்:- போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றவை உவமை உருபுகளாகும்.

உவமானத்திற்கம் உவமேயத்திற்கும் இடையே போல என்ற பொருள் தரும் உவமை உருபுகள் வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு!

உவமை:-

சுடுவதால் பொன்னானது மிகுதியான ஒளிசிந்தும்.

உவமேயம்:-

துன்பம் என்ற நெருப்பு சுடுவதனால் அறிவொளி மிகுந்து காணப்படும். இதில் போல என்ற உவமை உருபு வெளிப்படை.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று!

உவமானம்:-

கூட்டாடும் அவைக்கு மக்கள் கூட்டம் நிறையும். கூத்தாட்டம் முடிந்தால் வற்றிவிடும்.

உவமேயம்:-

செல்வத்தின் நிலையும் அப்படியே. அற்று என்ற உவமையுருபு வெளிப்படை.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்!
போல என்ற உவமை உருபு வெளிப்படையானது காண்க.

ஒருவர் உடலில் ஒருவர் ஒடுங்கி
இருவரெனும் தோற்றம் இன்றிப் -பொருவங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று!

வெள்ள நீரில் மேலும் வெள்ளநீர் சேர்ந்தால் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காணமுடியாதோ அதுபொல இருவரும் ஒருவரில் ஒருவர் இணைந்தனர். இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மந்திரத்தால் மாங்காய் விழும்!

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. உவமை என்றாலும் உவமானம் என்றாலும் ஒன்றல்லவா?

    பதிலளிநீக்கு
  2. //இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.//
    அப்போது, உவமை உருபு ஏதும் இல்லாமல் வந்தால், அது உவமை அணி இல்லையா?
    சில சமயம் உவமையயும், உவமேயத்தையும் பிரிக்க '-' மட்டும் பயன்படுத்தப் படுகிறதே, அப்போது?

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஜீவா! உவமையென்றாலும் உவமானமென்றாலும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
  4. மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
    மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
    எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
    'மந்திரத்தால் மாங்காய் விழும்'.

    பதிலளிநீக்கு
  5. மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
    மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
    எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
    'மந்திரத்தால் மாங்காய் விழும்'.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com