அடுத்த வகை அறுசீர் மண்டிலம், ஓரடியில்
குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா
என்று அமைந்து வரும் வகையாகும்.
இம் மண்டிலப் பாவில் -
1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.
2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.
4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.
5. நான்கு அடிகளும் அளவொத்து வரும். முதற் சீர் குறில் ஈற்று மாச் சீராக வரும்.
இரண்டு, நான்கு, ஐந்தாம் சீர்கள் விளச் சீர்களாக அமையும்.
மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மாச் சீராக வரும்.
6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.
7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.
எடுத்துக்ககாட்டுப் பாடலைப் பார்ப்போம்:
நீல வண்டறை கொன்றை
.....நேரிழை மங்கையொர் திங்கள்
சால வாளர வங்கள்
.....தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலு ளானைக்
.....காவுடை யாதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
.....எம்மையு மாளுடை யாரே. – சுந்தரர் தேவாரம்.
இன்னொரு எளிய பாடல் :
கொடிய பிணிஎது என்றால்
.....குலைவுற நடுக்கிடும் பசியே
மிடியி னால்வரும் பசியால்
.....வீழ்ந்திடும் உயிர்களுக் களவோ?
ஒடியும் உயிர்களும் நம்போல்
.....உயர்வுள உயிரென எண்ணி
முடியும் மட்டிலும் உதவ
.....முன்வரல் உயர்தவம் அன்றோ! -அரங்க.நடராசனார்
இவ் வகை அறுசீர் மண்டிலம் எழுதலாமே!
//மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மாங்காய்ச் சீராக வரும்.//
பதிலளிநீக்குஎன்றிருக்கிறது. மாச்சீர்தானே?
சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குதிருத்தி விட்டேன்.
நன்றி.
/அரங்க.நடராசனார்/ - இன்
பதிலளிநீக்குகாட்டுச் செய்யுள்கள் மிகச் சிறப்பு. சொல்வதைச் சுருங்கக் கூறி, இதைச் செய், அதைச் செய் என்று அறிவுரையாகக் கூறாமல்,
’பசி ரொம்ப கொடுமைப்பா (முறைகேடும் அதன் விளைவும்), அவனும் நீயும் ஒண்ணு (உதவ வேண்டிய காரணம்), அதனால முடிஞ்சவரை உதவினா (சீர்திருத்த என்ன செய்யலாம்), இதுதான் பலன் (உயர் தவம்)’
--- என்று சுருக்கமாகவும், அழகாகவும் கூறிவிட்டார்.
நம் போல் பாப் புனையப் படிப்போருக்கு, இலக்கணம் மட்டுமல்லாமல், சீரிய சிந்தனைகளை எப்படி பாங்காக பாவடிவில் கொடுப்பது என்பதையும் கற்றுக் கொடுக்கும் காட்டுக்கள் இவை . மிக்க நன்றி ஆசான்களே!
’மிடியை அடித்திடு, விரட்டு’
.............மிரட்டிடும் அறிவுரை இல்லை
மிடியைத் தொடர்ந்திடும் பசியின்
.............விளைவினை சுருக்கென விளம்பி
முடியும் உதவியின் பலனை
.............முறைப்பட மொழிந்திடும் பாவில்
புதுவைப் புலவரின் பாங்கை
.............பொறுப்பினைப் கற்றுணர் வோமே!
பண்டைய வழக்கில் (இலக்கியத்) தமிழில் உள்ள சுந்தரர் தேவாரத்திற்கு பொருள் பெற விரும்பி வலையைத் துழாவ:
பதிலளிநீக்கு*********************
நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும், பிறை ஒன்றும், பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.
*********************
படித்தவுடன், அருமைத் தந்தை பகவான் ரமண மகர்ஷி (ரமண பெருமுனிப் பெருந்தகை) யின் பிரார்த்தனைப் பாடலை நினைவு கூர்ந்தேன்:
அன்போடு நாமங்கேள் அன்பர்தம் அன்பருக்(கு)
அன்பனாய் யிடவருள் அருணாச்சலா!
வண்டிச் சக்கரம் போலே
பதிலளிநீக்குவாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமோக் கிடைப்பது கடிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் மனது
நன்று முன்னவர் நமக்கே
நவின்றதோர் பொறையுடை வாழ்வு.
திரு. அவனடியாரின் அழகான விளாக்கத்தைப் படித்தவுடன் நெகிழ்ந்தேன். மிகவும் உண்மை. நம் பாவில் அரிய கருத்துகளை அழகாக தர நமக்கு நல்ல பாடம் தான்.நன்றி.
பதிலளிநீக்கு//நன்று முன்னவர் நமக்கே
நவின்றதோர் பொறையுடை வாழ்வு.//
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரு கொடையுடை வாழ்வு.
அவனடிமை ஐயா,
பதிலளிநீக்குஅருமை.
சுந்தரர் பாட்டின் பொருளை அழகிய நடையில் அழகாகத் தந்தீர்கள்.
பாடலும் நன்று.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு*************
பதிலளிநீக்குவண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.
*****************
உமா,
உங்கள் பாடல் சரியாக அமைந்திருந்தது.
ஓசைக்காகச் சிறு மாற்றம் செய்திருக்கிறேன்.
சொற் செப்பம் கருதி மனது என்பதை மாற்றியுள்ளேன்.
//சுந்தரர் பாட்டின் பொருளை அழகிய நடையில் அழகாகத் தந்தீர்கள்.//
பதிலளிநீக்குதமிழநம்பி ஐயா: நன்றி. தேவாரப் பாடல் பொருளை இந்த தளத்திலிருந்து எடுத்தேன்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7075&padhi=075&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தமிழ்.!
பதிலளிநீக்குகந்தன் நகையிற் பிறந்து
காலத்தின் வேகத்தில் வளர்ந்து..
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து..
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்து..
தந்தந் தூயனி றமாகி
தரணியை ஆண்டிடுந் தாயே..!!
**********
பதிலளிநீக்குகந்தன் நகையினிற் பிறந்து
காலவே கத்தினில் வளர்ந்து
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்துத்
தந்தத் தூய்நிற மாகித்
தரணியை ஆண்டிடுந் தாயே!
************
அண்ணாமலை ஐயா,
நல்ல முன்னேற்றம்.
விளம் வரவேண்டிய இடங்களில் மாற்றியிருக்கிறேன்.
கவனிக்க.
நீங்களே கூட உங்களுக்கு விருப்பமான வகையில்
மாற்றி அமைக்கலாம்.
நன்றி.
ஐயா, தங்களது திருத்தங்களுக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅடுத்தடுத்த பாக்களில் எம்மை மேம்படுத்திக் கொள்ள இது உதவும்..
நன்றி!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசிக்கிமுக்கி ஐயா,
பதிலளிநீக்குஎன் 'எலி'ப்பொறியின் எதிர்பாராத தவறான இயக்கத்தால் உங்கள் பதிவு அகன்று விட்டது.
பொறுத்தாற்றுக.
மறுபடியும் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.
ஐயா,
பதிலளிநீக்குவருந்தத் தேவையில்லை.
இதோ என் பாடல்:
உலகின் முதன்மொழி தமிழாம்
....உரைப்பவர் மொழியறி வாய்வர்!
உலகின் முதற்குடி இவராம்
....உரைப்பவர் தொல்பொருள் ஆய்வர்!
உலகில் உரிமைகள் இழந்தே
....ஒடுங்கிய இனமிவர் இன்றே!
உலகின் பரப்பினி லெங்கும்
....உழற்றமிழ் உளத்தவர் எண்ணீர்!
சிக்கிமுக்கி ஐயா...
பதிலளிநீக்குநன்றாய்க்கேட்டீர்கள் போங்கள்..
உணர்வரா உற்றார்..??
தமிழே !
பதிலளிநீக்குசொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்தே அழகுற உரைக்க
....தரணியி லெனக்காரு மில்லை!
எந்தன் மனதினை யாளும்
....ஏகமாய்ச் சுயம்புவாய் வாழும்
இந்தி ரலோகமு மாள
....ஏத்திட விளைந்திடு தமிழே..!
சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையிலி நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் தகுமோ?
வந்தென் நாவினில் அமர்ந்து
....வார்த்தைகள் தொடுத்திடு வாயே.!
அமிழ்த மென்நடை யாலே
பதிலளிநீக்குஅம்தமிழ் செய்திடும் நண்பர்
தமிழ நம்பியின் பாடம்
தன்னிலென் நெஞ்சையி ழந்தேன்
குமிழின் மென்மையைப் போலே
குற்றமில் லாமனப் போக்கால்
தமிழில் எங்களைத் தேற்ற
தக்கன செய்திடப் போந்தார்
வேற்று சொற்களை நீக்கி
வெல்தமிழ்ச் சொற்களைத் தேக்கி
ஆற்று நீர்நடை போலே
அம்நடை செய்திட வைத்தார்
ஏற்று நாமதைப் பற்றி
இன்புறு பண்களி யற்றிச்
சாற்று வோமிதை செய்தால்
தண்டமிழ் வாழ்ந்திடு மன்றோ!
*****************
பதிலளிநீக்குதமிழே !
சொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்த அழகினை உரைக்க
....தரையினில் உறவெனக் கில்லை!
எந்தன் மனத்தினை யாளும்
....இணையிலா மொழியென வாழும்
இந்தி ரவுலகும் போற்றி
....ஏத்திட விளைந்திடு தமிழே..!
சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையொடு நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!
வந்தென் நாவினில் அமர்ந்து
....வழங்குக பாக்களைத் தாயே.!
***************
அண்ணாமலை ஐயா,
கருத்துச் செப்பம் சொற் செப்பம் கருதிச் சிறு மாற்றங்கள்.
தந்தே - நெடில் ஈற்று மாச்சீர்.
இம் மண்டிலத்தில் முதற்சீர் குறிலீற்று மாச்சீர் ஆக வரவேண்டும்.
இனி, நன்கு எழுதுவீர்கள்.
பாடல் எழுதிய பின்னர்த் திரும்பவும் ஒருமுறை சரி பார்த்தால், நீங்களே கூட செப்பம் செய்வீர்கள்.
பாராட்டு. நன்றி.
அன்பார்ந்த அ.அ.ஐயா,
பதிலளிநீக்குநன்றி. இயற்கை எழிலை, இனிய தமிழை, இங்குள தமிழர் எழுச்சியை, எங்குமுள மன்பதை வாழ நல்லுணர்வுகளை, மாந்த நேயத்தை இன்னும் பலவற்றைப் பற்றிப் பாடி மகழ்வூட்டுங்கள்.
*************
வேற்று சொற்களை நீக்கி
வெல்தமிழ்ச் சொற்களைத் தேக்கி
ஆற்று நீர்நடை போலே
அம்நடை செய்திட வைத்தார்
ஏற்று நாமதைப் பற்றி
இன்புறு பண்களி யற்றிச்
சாற்று வோமிதைச் செய்தால்
தண்டமிழ் வாழ்ந்திடு மன்றோ!
******************
அருமை.
நன்றி.
//////அன்பார்ந்த அ.அ.ஐயா,
பதிலளிநீக்குநன்றி. இயற்கை எழிலை, இனிய தமிழை, இங்குள தமிழர் எழுச்சியை, எங்குமுள மன்பதை வாழ நல்லுணர்வுகளை, மாந்த நேயத்தை இன்னும் பலவற்றைப் பற்றிப் பாடி மகழ்வூட்டுங்கள்.
*************//////
நன்றிகள் அய்யா கண்டிப்பாக செய்கிறேன்.
உயிர்க்கொல்லி நோய் தொற்றிய ஒருவன் உரைப்பதாக இப்பா!
பதிலளிநீக்குஎட்டிப் பார்த்திடும் காமம்
என்றனை வென்றது மெல்ல
கொட்டித் தீர்த்திட வேண்டிக்
கூடினேன் மாதினை ஓர்நாள்
விட்டுப் பிரிந்ததும் என்னைத்
தொற்றிய தேஉயிர்க் கொல்லி
மட்டில் லாத்துயர் நெஞ்சை
வாட்டிவ தைத்திடும் நாளும்
பாயில் இன்பமும் வேண்டிப்
பரத்தைய ரோடுற வாடி
நோயில் வீழுதல் நன்றோ
நொந்தவன் சொல்லினைக் கேட்பீர்
வாயில் புன்சிரிப் பேந்தும்
விலைமகள் சேர்ந்திட வேண்டா
தாயின் மறுவடி வான
தன்மனை கூடுதல் நன்றே!
அருமையாகச் சொன்னீர்கள்
பதிலளிநீக்குதிரு.அகரம் அமுதா அவர்களே..
நீவிர் வாழ்க..
தமிழநம்பி ஐயா அவர்களுக்கு
பதிலளிநீக்குஎன் நன்றிகள்!
தங்களின் திருத்தங்களுக்கு மிக்க நன்றி!
மழலை மொழியினைப் போன்றும்
பதிலளிநீக்குமயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசைப் போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தன்னிலேப் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
காலை எழுந்திட வேண்டும்
பதிலளிநீக்குகனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்
தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
புரிந்தெனை என்வழி தன்னில்
// போகச் செய்திடு வீரே
பதிலளிநீக்குபுரிந்தெனை என்வழி தன்னில்/
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.
**********
பதிலளிநீக்குமழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************
காலை எழுந்திட வேண்டும்
கனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்
தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.
************************
மூன்று பாடல்களும் சரியாக அமைந்துள்ளன.
///நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை///
அருமை.
அ.அ. ஐயா,
பதிலளிநீக்குஅருமையான அறிவுரைப் பாடல்.
///வாயில் புன்சிரிப் பேந்தும்
விலைமகள் சேர்ந்திட வேண்டா
தாயின் மறுவடி வான
தன்மனை கூடுதல் நன்றே!///
சொல்ல வேண்டிய செய்தி.
மிக்க நன்றி அய்யா.
பதிலளிநீக்கு//நோகப் பூவிதழ் பிரித்து
பதிலளிநீக்குநுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை //
மிக சிறப்பாக ”குறிலீற்று மா+ விளம்+ மா+ விளம்+ விளம்+ மா” அறுசீர் மண்டிலப்பா புனைந்து சீரிய சிந்தனையையும் பகிர்ந்துள்ளீர்கள் உமா.
எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்க வாழ்த்துகள்.
பண்கள் படைத்திடும் பதுமா
பரிவொடு படிப்பினைத் தருமா
தின்கைப் பிடித்தவர் இறுமாந்
தேத்திட மணந்தரு மம்மா
துன்கை யெழுதிடும் தேன்மா
துளைநிகர் தொடுத்தநற் பாமா
லைம்பொற் கரனடி திருமா
லுளமகிழ் மருகனைத் தருமா?
அவனடிமை ஐயா,
பதிலளிநீக்குஅருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
***பாமா
லைம்பொற் கரனடி திருமா
லுளமகிழ் மருகனைத் தருமா?***
இந்த இடத்தில் நெருடலாக உள்ளது.
பிரித்தெழுதி விளக்கிவீர்களா!
நன்றி.
/பிரித்தெழுதி விளக்கிவீர்களா!/
பதிலளிநீக்குஅம்மா, உன் கை எழுதிடும் தேன் மாதுளை நிகர் தொடுத்த நற் பாமாலை ஐந்து பொற் கரனான (விநாயகனின்) அடி (அதாவது, அடியவன்: தம்பி), திருமாலின் உளம் மகிழும் மருகன்-(அதாவது,மருமகன் முருகன்)-ஐத் தருமா (நினைவூட்டுமா) ?
உமாவை பார்த்து பாடுவதல்லவா ? அதனால் ‘மா’ ’மா’ என்று எழுத முயற்சித்தேன்; கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது :-(
அழகன் திருமால் மருகன்
பதிலளிநீக்குஅருந்தமிழ்த் தலைவன் அவனடி
கழலினைப் பற்றித் தொழுதே
கருத்தினை வடித்திட பண்ணும்
குழைந்தது குறைவற கூறிய
குருவடி போற்றி போற்றி
மழையென வாழ்த்திடு அவனடி
யாரடி பணிந்தேன் யானே
[மா+மா+மா+
மா+மா+மா]
குறைவற கூறிய குருவடி போற்றி - பா கற்பித்த திரு தமிழ நம்பி திரு. அமுதா அவர்களை பணிந்து போற்றுகின்றேன்.
மழையென வாழ்த்திடு அவனடியாரடி - வெகுவாக என்னைப் பாராட்டி ஊக்கமளிக்கும் திரு அவனடிமையாரையும் போற்றி பணிகிறேன்.
//மழையென வாழ்த்திடு அவனடி
பதிலளிநீக்குயாரடி பணிந்தேன் யானே
மழையென வாழ்த்திடு அவனடி
யவரடி பணிந்தேன் யானே.
மன்னிக்கவும்.கண்ணிணியிலேயே எழுத நினைத்து முற்றுந் தவறாக எழுதினேன். மாச் சீர் வருமிடம் ஈரசைச் சீராய் வர எழுதிவிட்டேன். ஆசிரியரைப் போற்றுமிடத்து இவ்வாறு எழுதியது வெக்கப்படவேண்டியது. மீண்டும் மன்னிக்கவும். பிழதிருத்தி மீண்டும் எழுதுகிறேன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவானைப் பிளந்தது வெப்ப
பதிலளிநீக்குவாசனை தீட்டிய அப்பம்.
கானை நனைத்தது மாலை
கழுவியக் கடுமிரா மேகம்.
மானைக் குறித்தது மதியம்
மாமிச உணவெனச் சிங்கம்.
ஏனைக் காட்சிகள் உண்டு
என்மடிக் கணிணியில் படமாய்!
**அழகன் திருமால் மருகன்
பதிலளிநீக்குஅருந்தமிழ்த் தலைவன் அவனடி
கழலினைப் பற்றித் தொழுதே
கருத்தினை வடித்திட பண்ணும்
குழைந்தது குறைவற கூறிய
குருவடி போற்றி போற்றி
மழையென வாழ்த்திடு அவனடி
யாரடி பணிந்தேன் யானே**
நல்ல முயற்சி உமா அவர்களே. இதன் தாக்கத்தில், சற்றே மாற்றிய இன்னுமொரு முயல்வு இதோ:
அழகன் திருமால் மருகன்
...............அருந்தமிழ்த் தலைவனைத் தொழுது
கழலைப் பெறநிதம் கதறும்
...............கருத்தினை வடித்திடத் தேனில்
குழைத்துப் பாத்திறங் கொடுத்த
...............குருமலர்த் திருவடி போற்றி
அழைத்து அவனடி யார்க்கும்
...............அகமகிழ்ந் தேபணி புரிவோம்!
! - குறிப்பு: ”எம்மையு மாளுடை யாரே” – என்று சுந்தரர் பாடியது போலே இறைவனின் (உண்மையான) அடியவருக்கு பணி புரிவதே இறைவன் பணி எனக் கொள்ளுவோம்.
வசந்த் அவர்களே:
பதிலளிநீக்கு**வானைப் பிளந்தது வெப்ப
வாசனை தீட்டிய அப்பம்.
கானை நனைத்தது மாலை
கழுவியக் கடுமிரா மேகம்.
மானைக் குறித்தது மதியம்
மாமிச உணவெனச் சிங்கம்.**
- புரியவில்லையே ஐயா.
திரு.அவனடிமையார் அவர்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅவனடிமை ஐயா,
பதிலளிநீக்கு***பாமா
லைம்பொற் கரனடி திருமா
லுளமகிழ் மருகனைத் தருமா?***
பாமாலை + ஐம்பொற்கரன் இரண்டும் சேர்ந்தால் பாமாலைம்பொற்கரன் என ஆகாது.
விரும்பும் வகையில் திருத்திடுக.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவசந்த குமார்,
பதிலளிநீக்குஉங்கள் பாடல் சரியான அமைப்பில் உள்ளது.
கணினி - என்று திருத்தி விடுக.
சிக்கி முக்கியார்க்கு,
பதிலளிநீக்குபாராட்டு. நன்றி.
தமிழர் எண்ணுவரா?
உமா,
பதிலளிநீக்குஆறு சீர்களும் மாச்சீர்களாக அமைந்த மண்டிலப் பாடலை அடுத்து வரும் பகுதியில் தானே எழுதவேண்டும்!
திருத்திய பிறகு, சரியான இடத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவனடிமை ஐயா,
பதிலளிநீக்கு***அழகன் திருமால் மருகன்
......அருந்தமிழ்த் தலைவனைத் தொழுது***
இரண்டாம் சீர் விளம் வருமாறு திருத்துங்கள்.
**இரண்டாம் சீர் விளம் வருமாறு திருத்துங்கள்.**
பதிலளிநீக்குநன்றி ஐயா. இதோ திருத்திய பா கீழே.
நன்றி உமா அவர்களே, உங்கள் எண்ணங்களை, சொற்களை களவாடி நிற்கின்றேன். மன்னித்துவிடுங்கள். உங்களுக்கே இப்பாவை சமர்ப்பிக்கிறேன்.
அழகன் மால்மரு மகனை
...............அருந்தமிழ்த் தலைவனைத் தொழுது
கழலைப் பெறநிதம் கதறும்
...............கருத்தினை வடித்திடத் தேனில்
குழைத்துப் பாத்திறங் கொடுத்த
...............குருமலர்த் திருவடி போற்றி
அழைத்து அவனடி யார்க்கும்
...............அகமகிழ்ந் தேபணி புரிவோம்!
அன்பு அவனடிமை ஐயா...
பதிலளிநீக்குவெப்ப அப்பம் = சூரியன். காட்டை நனைத்தது மாலைநேரத்தைக் கழுவி வந்த கடும் இரவில் மேகம். மானை மதிய உணவிற்கென குறித்து வைக்கும் சிங்கம். போன்ற பல இயற்கைக் காட்சிகளை இப்போது என் மடிக் கணினியிலேயே பார்க்கிறேன். வளர்ச்சியா..? தாழ்ச்சியா..?
வசந்த குமார் மற்றும் அவனடியாரின் பாக்கள் அருமை. அருமை.
பதிலளிநீக்கு//////இரா. வசந்த குமார். சொன்னது…
வளர்ச்சியா..? தாழ்ச்சியா..?//////
கண்டிப்பாக வளர்ச்சிதான். தாங்கள் முன்பைக் காட்டிலும் தற்பொழுது பாப்புனைவதில் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் தெரிகிறது. வாழ்க.
**பாமாலை + ஐம்பொற்கரன் இரண்டும் சேர்ந்தால் பாமாலைம்பொற்கரன் என ஆகாது. விரும்பும் வகையில் திருத்திடுக.**
பதிலளிநீக்குநன்றி தமிழநம்பி ஆசான் அவர்களே. தங்கள் நுண்-பரிசீலனை எல்லாத் தவறுகளையும் பிடித்துவிடுவதால், நன்கு புரிந்தெழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. மிக்க நன்றி.
‘லை’-ஐத் தாண்டி ஒரு ‘ஐ’ விட்டுப் போனது இப்போது புரிந்தது. நெருடலுக்கான காரணமும் தெரிந்தது. இதோ கீழே திருத்திய பா.
முன்பே உள்ள சொற்றொடர்களாலும், மூன்றாம், ஆறாம் சீர்களின் ஈற்றசை ஒத்த ஓசையாலும், உமா அவர்களை பாராட்டும் நோக்கத்தாலும், சவால் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் உங்கள் ஊக்கத்தால் ஓரளவு சமாளித்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்).
திண்மைப் போர்த்திறன் வருமா
.....திடமொடு பரிவினைத் தருமா
தின்சுற் றத்தினர் இறுமாந்
.....தெழுந்திட உணர்தரு மம்மா
துன்கைப் படவரும் தேன்மா
.....துளைநிகர் பாத்தமி ழன்மா
னங்கொன் றவர்வழி தீர்மா
.....னத்தொடு பொசுக்கிடும் தீமா!
அன்வயப்படுத்தி:
திண்மைப் போர்த்திறன் வரும்;மா(பெரும்)-திடமொடு பரிவினைத் தரும்; மாதின் சுற்றத்தினர் இறுமாந்து எழுந்திட உணர் தரும் அம்மா (உமா) : உன் கைப்பட வரும் தேன் மாதுளை நிகர் பா, தமிழன் மானங்கொன்றவர் வழி (வழியை மட்டும், அவரையே அல்ல) தீர்மானத்தொடு பொசுக்கிடும் தீ (அம்)மா !
**********
பதிலளிநீக்குதிண்மைப் போர்த்திறன் வருமா
.....திடமொடு பரிவினைத் தருமா
தின்சுற் றத்தினர் இறுமாந்
.....தெழுந்திட உணர்தரு மம்மா
துன்கைப் படவரும் தேன்மா
.....துளைநிகர் பாத்தமி ழன்மா
னங்கொன் றவர்வழி தீர்மா
.....னத்தொடு பொசுக்கிடும் தீம்மா!
********************
முயன்று திருத்தி விரும்பியவாறு கருத்தைக்
கூறியிருக்கிறீர்கள் ஐயா.
நன்றி.
நன்றி வசந்த் புலவரே: உமது மடிக்கணினியின் இயற்கை காட்சி வர்ணனை அபாரம்.
பதிலளிநீக்குமடித்தோழி மேலொளிரும் முன்னழகை மாந்தி
வடித்தார் வசந்தரோர் பா.