சனி, 17 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 2

அடிதோறும் எட்டு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அறையடி முறையே காய் + காய் + காய் + மா என அமைந்திருக்க வேண்டும். அடுத்த அறையடியும் அப்படியே அமைந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறாக நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.


காட்டு!

அருகமர்ந்து தன்மனையாள் அகம்விரும்பி நல்ல
அறுசுவையும் நிறைஉணவை அருங்கணவர்க் கூட்ட
விருப்பின்றிச் செல்வத்துச் செருக்கேறி நின்று
வெறுத்தாற்போல் முன்கவளம் உணமறுத்துப் பின்னர்
அருந்தியவர் பிறிதோர்நாள் பெருவறியர் ஆகி
அயலார்முன் போய்உணவை இரந்துண்பார் அஃதால்
பெருஞ்செல்வம் நிலைத்ததெனக் கருத்தினிலே எண்ணிப்
பேணுகின்ற நற்றன்மை உடையதன்று காண்பீர்!

--- கவிமாமணி இறையரசன்.

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!


இவ்வாரான இலக்கண அமைப்பில் "பிளாஸ்டிக்கு" என்ற தலைப்பில் பாவியற்ற வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

33 கருத்துகள்:

  1. ஆகா..ஒவ்வொரு வரியும் அருமை!
    மீண்டும், மீண்டும் படித்து மகிழ்ந்தேன்!
    திரு.அகரம்அமுதா அவர்களுக்கு மிக நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  2. சுவையான வரிகள். ஞெகிழி - இன்றைக்குத் தான் இந்தச் சொல்லைத் தெரிந்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஞெகிழிப் பொருட்கள் நிரம்பி வழிய
    நகரம் நரகமா கும்.

    ஞெகிழியின் கேட்டைப் பாடிடச் சொன்னீர்
    நெகிழ்ந்தேன் நும்பதிப் பால்.

    வரும்நோய் விரைவில் ஞெகிழிக் குவிப்பால்
    மரணம் இனியெளி தே.

    பதிலளிநீக்கு
  4. ஞெகிழி எனற சொல்லுக்கு கொள்ளிக்கட்டை என்றல்லவா பொருள் இருக்கிறது அகராதியில்; பிளாஸ்டிக்கிற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதா ?

    பதிலளிநீக்கு
  5. /////அவனடிமை சொன்னது…

    ஞெகிழி எனற சொல்லுக்கு கொள்ளிக்கட்டை என்றல்லவா பொருள் இருக்கிறது அகராதியில்; பிளாஸ்டிக்கிற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதா ?////

    ரப்பர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கே தமிழில் ஞெகிழி என்று பெயர். பலூனை ஞெகிழிப்பை அல்லது நெகிழிப்பை என்பர். நான் தவறாக பிளாஸ்டிக்கிற்குப் பெயராகப் பயன்படுத்திவிட்டேன். பிளாஸ்டிக் என்ற தலைப்பிற்கே பாவியற்றவும்.

    பதிலளிநீக்கு
  6. அவனடிமை குறட்பாக்கள் என்னை அவரடிமையாக்கி வருகின்றன.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அகராதியின் பெயரென்ன? எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  7. //அகராதியின் பெயரென்ன? எங்கே கிடைக்கும்?//

    பெற்றவர் விட்டுலகில் மற்றதைப் பெற்றிட
    உற்றநற் றோழன் வலை.

    இங்கே செல்லுங்கள் ஐயா:
    http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

    பதிலளிநீக்கு
  8. /ரப்பர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கே தமிழில் ஞெகிழி என்று பெயர். பலூனை ஞெகிழிப்பை அல்லது நெகிழிப்பை என்பர். நான் தவறாக பிளாஸ்டிக்கிற்குப் பெயராகப் பயன்படுத்திவிட்டேன்./

    இரப்பர் என்பதற்கு மென்மம் அல்லது அழிப்பான் என்றும்,
    பிளாஸ்டிக் என்பதற்கு ஞெகிழி என்றும் அழைக்கப் படுவது உண்மையே

    பதிலளிநீக்கு
  9. பிளாஸ்டிக்

    தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
    தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
    விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
    விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
    குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
    கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
    பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
    பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!

    பதிலளிநீக்கு
  10. //குறுப்பான குழந்தைக்கும் // குறும்பானக் எனக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  11. சேமிப்பு

    சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
    சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
    பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
    பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
    தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
    தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
    மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
    மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.

    பதிலளிநீக்கு
  12. பிளாஸ்டிக் பொருட்கள் பெருகப் பாரில்
    பிலாக்கணம் பாடிடு வோம்.

    பிளாஸ்டிக்கின் கேட்டினைப் பாவாக்கச் சொன்னீர்
    விளாசிடுவர் நம்வலைங் ஞர்.

    பதிலளிநீக்கு
  13. தளை தட்டி:
    பிளாஸ்டிக் பொருட்கள் பெருகிடப் பாரோர்
    பிலாக்கணம் பாடிடு வர்.

    உமா அவர்களின் இருபாவும் அருமை!

    பதிலளிநீக்கு
  14. சொக்கவைக்கும் கிறங்கவைக்கும் நம்மை யெல்லாம்
    சுகமாக்கும் சுலபமாக்கும் வேலை யெல்லாம்
    உகயுகமாய் உரிமையோடு உலகில் வாழும்
    உடனிருந்தே உயிரைவாங்கும் உலகைக் கொல்லும்
    தகதக‌க்கும் தங்கமல்ல பளிங்கும் அல்ல‌
    தேடவைக்கும் நீருமல்ல பணமும் அல்ல‌
    மக்கிவிடும் மரித்துவிடும் பொருளும் அல்ல‌
    மண்மகளை மலடாக்கும் பொருள்கள் அம்மா

    பதிலளிநீக்கு
  15. /வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
    விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
    புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
    சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
    தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
    திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
    நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
    விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

    பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
    அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
    எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
    அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
    நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
    ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
    அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
    ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!/

    அருமை அமுதா அவர்களே

    பதிலளிநீக்கு
  16. /சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
    சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
    பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
    பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
    தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
    தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
    மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
    மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்./

    உமா அவர்களே

    சிந்தையில் கொண்டு
    செயல்பட வேண்டியது

    அருமை

    பதிலளிநீக்கு
  17. /
    ஞெகிழிப் பொருட்கள் நிரம்பி வழிய
    நகரம் நரகமா கும்.

    ஞெகிழியின் கேட்டைப் பாடிடச் சொன்னீர்
    நெகிழ்ந்தேன் நும்பதிப் பால்.

    வரும்நோய் விரைவில் ஞெகிழிக் குவிப்பால்
    மரணம் இனியெளி தே.

    பிளாஸ்டிக் பொருட்கள் பெருகப் பாரில்
    பிலாக்கணம் பாடிடு வோம்.

    பிளாஸ்டிக்கின் கேட்டினைப் பாவாக்கச் சொன்னீர்
    விளாசிடுவர் நம்வலைங் ஞர்./

    உங்களுக்கு உரித்தான பாக்களால் பாமாலை படைத்து வீட்டீர்கள்.

    வாழ்த்துகள் அய்யா

    பதிலளிநீக்கு
  18. //...பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
    பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!//

    உமா அவர்கள் ’ப்ளாஸ்டிக்’ என்று தலைப்பைக் கொடுத்து, ஆனால் பாவில் எதைப் பற்றி பாடுகிறார் என்று கூறாமல் பா வடித்தார்.

    //...மக்கிவிடும் மரித்துவிடும் பொருளும் அல்ல‌
    மண்மகளை மலடாக்கும் பொருள்கள் அம்மா//

    திகழ் அவர்கள் தலைப்பும் இல்லாமல் பாட்டிலும் பெயர் வராமல் பாடினார்.

    இடுகையில் அகரத்தார் விண்ணப்பித்ததால் ப்ளாஸ்டிக்கைக் குறித்து தான் பாடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம், இல்லை என்றால் அது மிகவும் கடினமாக ஆகும் இல்லையா ?

    ப்ளாஸ்டிக் வேற்று மொழிச்சொல் என்பதால் தயக்கமா?

    தற்காலக் கண்டுபிடிப்புகள், அதுவும் தமிழரல்லாதவர் கண்டுபிடுத்து பரவலாக உபயோகிக்கும் பொருட்களின் பெயர்களை அந்த மொழிச் சொல்லையே வைத்து குறிப்பிடுவது தவறா ?

    பதிலளிநீக்கு
  19. //உங்களுக்கு உரித்தான பாக்களால் பாமாலை படைத்து வீட்டீர்கள்.//

    நன்றி அய்யா!

    குறட்பாவே மாலை அவனடிமை கையால்
    குறமாதின் கோவிற் கணி.

    பதிலளிநீக்கு
  20. உமா அவர்களின் பிளாஸ்டிக் தலைப்பிபாலான பா என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவை, காடுகளுக்கும், காற்றிற்கும், விலங்களுகள் முதலாக மனிதர் வரை, மேலும் நிலத்திற்கும் பெருந்தீங்காக அமைவதை அழகுறவும் தெளிவுறவும் விளக்கியிருகிறார் வாழ்க அவர்கள்.

    பதிலளிநீக்கு
  21. உமா அவர்களின் சேமிப்பு என்ற தலைப்பிலான கவிதையும் அருமை. அருமை. பெருவட்டி தருகிறோம் எனக்கூறிக்கொண்டு நாட்டில் முளைக்கும் பைனான்ஸ் நிறுவனங்களில் மக்கள் பணம்போட்டு ஏமாறுவதையும், அதிலிருந்து மீளுவதையும் அழகுற வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க.

    பதிலளிநீக்கு
  22. திகழ் அவர்களின் பிளாஸ்டிக் என்ற தலைப்பிலான பா மிகச் சிறப்பு. பிளாஸ்டிக்கால் உலகம் அடையும் தீமைகளை அழுகுற பாவாக்கியுள்ளார். இறுதி இருவரிகள் நெஞ்சைத் தொடுவதாக உள்ளன. வாழ்க.

    பதிலளிநீக்கு
  23. அவனடியாரின் குறள்கள் ஒவ்வொன்றும் நெஞ்சைத் தொடுவனவாக உள்ளன. அவரின் தனித்திறன் ஒவ்வொரு குறள் வெண்பாவிலும் பளிச்சிருகிறது. வாழ்க அய்யா!

    பதிலளிநீக்கு
  24. அப்பாதுரையார் மற்றும் அண்ணாமலையார் இருவரும் பாவுடன் வருக வருக என வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. விசமோ பிளாஸ்டிக்? விருத்தம் விழைவோம்:
    வசந்தின் வகையொரு பா!

    பதிலளிநீக்கு
  26. இதோ ஒரு மாற்றுக்கோணம்:
    *********
    பிளாஸ்டிக்கைப் பழிசொல்லிப் பாக்கற்கள் எறிய
    .....பேரார்வத் துடனெழுந்தால் பேனாவில் பிளாஸ்டிக்
    குலாவிடுமில் லத்தரசி கூந்தலிலே பிளாஸ்டிக்
    .....கூடைநாற் காலியும்பல் தூரிகையும் பிளாஸ்டிக்
    விலாவெலும்பின் முறிவதனை நிமிர்த்திடுநீள் தகடும்
    .....வெகுவேகம் அறுவையின்பின் தைக்குமிழை பிளாஸ்டிக்
    உலாவிடுமென் சிறுவூர்தி, பறந்திடுமவ் விமானம்
    .....உலகெங்கும் உளபொருட்கள் பலதிலுமிப் பிளாஸ்டிக்

    தொலைபேசிக் கருவியுடல் கனத்திருக்கும் பிளாஸ்டிக்
    .....துடைத்தாலும் துலங்காமுக் காலியிலும் பிளாஸ்டிக்
    கலைவண்ணச் சுவர்ப்படங்கள் சுற்றியுளச் சட்டம்
    .....கணினிகளின் பெட்டியெலாம் கண்கவரும் பிளாஸ்டிக்
    உலைவைத்து உடனடியாய் நுண்ணலையின் அடுப்பில்
    .....உணவினைநாம் உண்டாக்கும் பாத்திரமும் பிளாஸ்டிக்
    இலைமறைவாய் உள்ளழகை உயர்த்திவிடும் நிபுணர்க்(கு)
    .....ஒட்டுறுப்புச் சிகிச்சையிலும் உறுதுணையாம் பிளாஸ்டிக்


    வெறுத்தொதுக்கும் வகையிலிதன் கேடொன்றும் இல்லை
    .....வீண்வாதப் புரளியினால் வெறுமச்சம் வேண்டா
    தரம்பகுக்கும் எண்ணொன்றை தன்னடியில் கொண்ட
    .....தரமான பிளாஸ்டிக்கின் பொருட்பயனைப் புரிந்து
    மறுசுழர்ச்சிச் செய்துவிட மக்களெலாம் முனைந்தால்
    .....மரங்களைப்பின் தலைமுறைக்கு மறக்காமற் றரலாம்
    கருவழியே வரும்பொருட்கே குறைநிறைகள் உளதே
    .....அருட்துணையால் அவன்படைப்பும் அவ்வழியே ஆகும்.
    *********

    பதிலளிநீக்கு
  27. கடைசி அரையடியை மோனைச் செறிவும்/பொருட்செறிவும் வேண்டி இவ்வாறு மாற்றிப் படிக்குமாறு கோருகிறேன்:

    கருவழியே வரும்பொருட்கே குறைநிறைகள் உளதே
    .....கைகொடுக்கும் கவினுலகின் பலபொருட்கும் அஃதே.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. //தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
    தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
    விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
    விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
    குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
    கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
    //

    பிளாஸ்டிக் பையை மட்டுமல்ல எந்த ஒரு வீட்டிலிருந்தோ, பணி செய்யும் இடத்திலோ, தொழிற்சாலைகளிலிருந்தோ கழிவுப் பொருளையும் வெளியே எறியக்கூடாது / தன்னிச்சையாக கொளுத்தக்கூடாது. இதுதான் நமக்குள் வேண்டிய ஒழுக்கம்.

    பிளாஸ்டிக், காகிதம், எரிபொருள்கள், இராசயனப் பொருட்கள் (காட்டு: வர்ணப் பூச்சு), கணிணிப் பொருட்கள் போன்ற மறுசுழர்ச்சி செய்யவேண்டிய கழிவுப் பொருட்களை போடுவதற்கு தனியான ’சேகரி’கள் உண்டாக்கவேண்டும். அதை மறுசுழற்சி செய்யும் ஆலைகளை உண்டாக்க வேண்டும். அவ்வளவுதான். மாட்டையோ வேறு வீட்டு விலங்கினங்களையோ ஏன் கண்டபடி தெருவில் விடவேண்டும் ?

    //பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
    பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!//

    ஒரு மெந்நெகிழிப் பையை நிறுத்திவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி, பயன், கழிவளவு குறைந்துவிடுமா ? அதே போல் பல வகையான நெகிழிக் குப்பிகளை தடை செய்தால், அதற்கு மாற்றுப் பொருள் என்ன என்று யோசிக்க வேண்டாமா? - கண்ணாடிக் குப்பியா (உடைந்துவிடும், நொறுங்கினால் சிறு துளிகள் குடிக்கும் பானத்தில் கலக்கலாம்) ? இல்லை உலோகக் குப்பியா (எடை கூடுதல், கீழே விழ்ந்தால் நசுங்கும், மேலே பட்டால் வலியுண்டாக்கும்) ?

    எந்த ஒரு பொருளுக்கும் குறையிருக்கும்; அறிவு, ஆக்க பூர்வமாக அதை சரி செய்யவோ, இல்லை மாற்று வழி கண்டுபிடிப்பதற்கோ முயற்சிக்காமல் குறை மட்டும் சொல்வதால் என்ன பயன்?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. மேலே உள்ள மறுமொழிகளில் பல விவரங்கள் வலையிலிருந்து படித்து தெரிந்து கொண்டது. காட்டு: http://maraboorjc.blogspot.com/2006/04/2_09.html

    மேலும் பல தளங்களில் பிளாஸ்டிக்கின் குறை/நிறைகளை அலசுகிறார்கள் வலைஞர்கள்.

    வலையில் வரும் செய்திகள் / கட்டுரைகள் எல்லாம் உண்மையாக, சரியாக இருக்குமா என்ற ஒரு ஐயம் பலருக்கும் இருந்தாலும், சிந்திக்க வேண்டிய பல தகவல்கள் கிடைப்பதும் உண்மைதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. உண்மைதான் திரு.அவனடியாரவர்கள் சொன்னது போல் பிளாஸ்டிக்கின் பயன் மிக பெரிதே. ஆயினும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கையான பொருட்களை பயன் படுத்தலாம். அல்லது அதன் மறு சுழற்சிக்கு கவனம் செலுத்தவேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படும் சில பிளாஸ்டிக் எழுதுகோல் ,பைகள் போன்றவை சரியாக அப்புறபடுத்தமுடியாமல் எவ்வளவு கெடுதலை ஏற்படுத்துகின்றன. அவை இன்று குப்பையாக மட்டுமல்லாமல் நாளை நம் மண்ணையுமல்லவா பாதிக்கும்.
    எப்படி இருப்பினும் பிளாஸ்டிக்கினால் உண்டாகும் பயன் அதன் தீமையை விட மிகப் பெரிதே. அப்படிப் பட்ட மிக தேவையான காரணங்களுக்கு மட்டும் பயன் படுத்தி குப்பையைக்குறைக்கலாமல்லவா? இ-குப்பை எனப்படும் கணினிப் பொருட்களும் பிளாஸ்டிக்கும் நாளை நம் சந்ததியினருக்கு தீங்காகாதவாறு நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.[இப்படிப் பட்ட பிளாஸ்டிக் பைகளாய்க்கொண்டு நம் தமிழகத்தில்தான் தார் சாலை அமைத்துள்ளார்கள் ஒரு குழுவினர் அதன் விவரம் சரியாகத்தெரியவில்லை. முயன்று அறிந்து சொல்கிறேன். அப்படி பட்ட சில கண்டுபிடிப்புகள் தோன்றும். மனிதனின் தேவைதானே அனைத்தையும் உண்டாக்குகிறது. இதுவும் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  31. தாமதமாய் வந்ததற்கே தவிக்கிறது நெஞ்சம்
    தாமரையில் தீயெனவே பிளாஸ்டிக்கின் வஞ்சம்
    ஆமிதுவே அழித்திடுமே உலகினையே கொஞ்சம்
    அள்ளஅள்ள விதைத்திடுமே அமுதூற்றாய்ப் பஞ்சம்
    மாமழையைத் தடுத்திடுமே மாசிதுவும் தானே..
    மண்ணுக்குள் கடல்புகுமே மனிதர்க்கு துன்பம்.
    போமென்று விரட்டிவிட வேண்டாமே இதனை
    புத்தியோடு செயல்பட்டால் புதுமையுண்டே இதிலும்..!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  32. plastic ற்கு ஞெகிழி சரியான அர்த்தமா ?

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com