திங்கள், 23 ஜூன், 2008

பாடம்10 குறள்வெண்பா!

ஒன்றே முக்கால் அடிகள் அதாவது ஏழு சீர்களைக் கொண்டது குறள் வெண்பா!

குறள்வெண்பா எழுதுகிற போழ்து கவனிக்க வேண்டியவை:-

வெண்பாவிற்கு மோனை எதுகைத்தொடைகள் முக்கியம் எனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டதால் நாம் குறிக்கவரும் கருத்தைத் தொடைகள் பொறுத்திக் கூறல் கடினம். ஆதலால் சில விதி தளர்த்தல்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்.

1-குறள்வெண்பாவின் முதல் அடியில் பொழிப்புமோனையோ அல்லது ஒரூஉ மோனையோ அமைந்தால் நலம்.

2-இரண்டாமடியாகிய ஈற்றடியில் பொழிப்புமோனை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம் அவ்வளவே.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி! -அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை நன்கு கவனிக்க. இரண்டாமடியில் கூறவந்த பொருள் கருதி பொழிப்பு மோனை அமையப்பெறாது செந்தொடையான் இயன்றமை காண்க.

குறிப்பு:-

இதனால் பொழிப்பு மோனையின்றியே பாடவேண்டும் என்பதில்லை. பொருட்செறிவு குன்ற வலிந்து மோனை அமைக்கத் தேவையில்லை. அவ்வளவே.

3-முதலடியின் முதற்சீரிலும் இரண்டாமடியின் முதற்சீரிலும் எதுகை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம்.

4-முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரூஉ எதுகை அமையபாடுவது.

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்தன்
குரலோ? இதுயாழோ? கூறு! -அகரம்.அமுதா

இக்குறளை நன்கு கவனிக்க. முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்றமையால் அடியெதுகை அமையாது வந்தமை அறிக.

5-வெண்பாவில் பொதுவாக நேரிசை இன்னிசை என இருவகை உண்டெனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டமையால் இன்னிசை நேரிசை என்னும் பாகுபாடு கிடையாது.

6-மிகுந்த பொருட்செறிவுடன் கூடிய கருத்துக்களை எடுத்துவைக்கும் போது தொடைகள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குறிய னாகச் செயல்! திருக்குறள்.

இக்குறள் வெண்பாவை நோக்குக. முதலடியில் மோனைத்தொடையோ எதுகைத்தொடையோ அமையப்பெறவில்லை. அடியெதுகையும் அமையவில்லை. இரண்டாமடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனைபெற்று இணைமோனை மட்டுமே வந்துள்ளது.

குறிப்பு:-

இவைபோன்று இன்னும் பன்முறைகள் இருப்பினும் தற்காலத்தில் குறள்வெண்பாவிலும் பொழிப்புமோனை அடியெதுகை இரண்டும் அமையப்பாடுவதே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது.

காட்டு:-

சீரடி மூன்றால்பார் தீரஅளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு! -அகரம்.அமுதா

ஆக குறள் வெண்பாவில் மோனை எதுகை அமையப் பாடிவிடின் அளவியல் வெண்பாவில் மோனைஎதுகை அமைத்துப் பாடுவது மிக எளிதாகிவிடும். இப்பாடத்தைப் படிப்போர் குறள்வெண்பாவில் உள்ள சந்துபொந்துகளில் நுழைய முற்படாமல் முடிந்தவரை மோனை எதுகை அமையப்பாட வேண்டுகிறேன்.

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்

    - கடையிணை மோனை மட்டும்தானே இங்கு?
    - பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா?

    பதிலளிநீக்கு
  2. பீ/லி/பெய் சாகாடும் /அ/ச்சிறும் /அ/ப்பண்டஞ்
    சா/ல/ மிகுத்துப் பெயின்

    - கடையிணை மோனை மட்டும்தானே இங்கு?

    ஆம்!

    - பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா?

    ஆம்! ஜீவா!எதுகையைப் பொருத்தவரைகுறிலுக்குக் குறில் நெடிலுக்கு நெடில் வந்தால் போதும். அஆஐஒள-உயிர்ப்புணர்ச்சிதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. ஜீ! இப்பொழுதிலிருந்தே தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ளவும்.

    இன்னும் மூன்று நான்கு பாடங்களுக்குப் பின் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடும் பகுதியை அறிமுகப்படுத்தலாமா என நண்பர் முகவை மைந்தநோடு பேசிவருகிறேன். தங்களுக்குச் சம்மதமா?

    பதிலளிநீக்கு
  3. செந்தொடை விளக்கவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உமா அவர்களே! தங்களின் செந்தொடை பற்றிய வினாவிற்குத் தங்களின் முதல் வெண்பாவே சான்று.

    தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
    எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
    என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
    வெண்பா வரைந்தேன் விரைந்து.

    இவ்வெண்பாவின் முதலடியைப் பாருங்கள்:- ஓரடியில் வர வேண்டிய மோனையானது இணைமோனையாகவோ, பொழிப்பு மோனையாகவோ, ஒரூவு மோனையாகவோ அமையாது மொத்தத்தில் மோமையே அமையாது வந்துள்ளதல்லவா? இதுவே செந்தொடை. அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் அடிகளில் எதுகையும் அமையவில்லையல்லவா? ஆக மோனைத்தொடை எதுகைத் தொடை இழைபுத் தொடை இவற்றிலொன்றைப் பெறாத வற்றைச் செந்தொடை எனலாம். செந்தொடை செய்யும்போது மிகவும் கவனம் தேவை. மோனையோ எதுகையோ பற்ற பிறபவோ (தளைகளைத் தவிர்த்து) அமைக்காது எழுதும் போது பொருட்செறிவு நிறைவைத்தர வேண்டும். இல்லையென்றால் ஆன்றோர்கள் ஏற்கமாட்டார்கள். சங்க நூல்களில் புறநானூற்றுப்பாடல்கள் பல செந்தொடையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

    குறிப்பு:-

    செந்தொடை- சந்தப்பாடல்களிலும் அகவல் போன்ற பாடல்களிலும் அமைக்கப்படுவது. வெண்பாவிற்கு அதுபோருந்தாது. கட்டாயமாக செந்தொடை பொருத்தி எழுதப்படும் வெண்பாவை இன்னிசை வெண்பா என முடிவுகட்டிவிடலாம். இன்றைய காலகட்டத்தில் செந்தொடை பொருத்தி எழுதுவாரில்லை. ஆக செந்தொடைப் பற்றிப் பெரிதாகக் கருதவேண்டாம்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com