இவ் 'அந்தாதி' என்ற வடமொழிப் பெயருக்கு என்ன தமிழ்ப் பெயர் அமைக்கலாம் என முகவை மகனாரோடு ஆய்வுரை நிகழ்த்தியபோது 'அடிதொடர்' என்ற பெயர் 'அந்தாதி' என்ற வட சொல்லிற்கு நேர்ப்பொருளாக அமையும். ஆக 'அடி தொடர்' எனப் பெயர் சூட்டிவிடலாம் என்றார். மேலும் பற்பல சோற்களைப் பொறுத்திப் பார்த்தோம். அவற்றில் குறிப்பிடத் தக்கவை - 'அடிதொடர், அடிமுதல், அடிமுதலி போன்றவை.
இருப்பினும் அடி என்கின்ற சொல் 'வரி' -அதாவது பாவின் ஓரடியைக் குறிக்கும் ஆதலால் பாவின் இறுதிச்சொல்லைக் குறிப்பதற்கு 'ஈறு' அல்லது 'ஈற்றுச்சொல்' என வழங்கப் படுவதறிந்து நானும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்களும் எண்ணிப்பார்த்து அலவலாவியபோது 'ஈற்று முதலி' அல்லது ஈற்றெடுப்பு' என அழைப்பதே சாலச்சிறந்ததாகும் எனவும், அது நேரடி வடமொழியின் மொழிபெயற்பாக இல்லாமல் முழுக்க முழுக்க தமிழுக்குறிய சொல்லாட்சியாக அமையும் எனமுடிவெடுத்து அமைக்கப் பட்டதே 'ஈற்றெடுப்பு; (அ) ஈறுமுதலி) என்னும் இப்பெயர்கள்.
இதன் இலக்கணத்தைப் பார்ப்போம். வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறை போன்றவற்றில் இம்முறையைப் பின்பற்றி எழுதுவதுண்டு. எழுதப்படும் பாடலின் இறுதிச்சீரை, தொடரும் பாடலின் முதற்சீராக அமைத்தெழுதுதல் ஈற்றெடுப்பாகும்.
காட்டுகள்-
யாவர்க்கும் நல்லாளா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! -ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து.
தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்ந்து
வாழும் இனமாய் வகைசெய்தாய்! -பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்ந்தாய் எழுந்து.
எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற் குரியோய்! -அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு.
ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழ புகுந்தேன் அணைந்து. ---அகரம் அமுதா ---
முதற் பாவின் ஈற்றுச்சீராகிய 'தாழ்தல்' எனும் பொருளுடைய, 'தாழ்ந்து' எனுஞ்சொல் இரண்டாம் வெண்பாவின் முதல் சொல்லாய் வந்து நின்றமை நோக்குக. இப்படி நிலைப்பாடலின் இறுதிச் சொல்லும் வரும் பாடலின் முதற்சொல்லும் ஒன்றாதல் 'ஈற்றெடுப்பு' ஆகும். மேலும் நிலைப்பாடலின் இறுதி சொல் மட்டுமன்றி, இறுதிச்சீரின் முதல் எழுத்தோ அல்லது இறுதி எழுத்தோ, ஒன்றப்பாடுவதும் ஈற்றெடுப்பே ஆகும்.
காட்டுகள் -
தவறுணர்ந்து பேணத் தலைப்படு; தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!
புட்டிப்பால் ஆகும் பிரவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!
மேலிரண்டுப் பாடல்களும் தமிழைச் சீரழிக்கும் நோக்கில் மொழிக்கலப்புச் செய்வோரையும் தமிழைப் பேணாரையும் சாடி நான் எழுதிய ஈற்றெடுப்பின் இடைப்பட்ட இரண்டுப் பாடல்கள். அவற்றை உற்று நோக்குக. 'இயம்பு' என்ற முதல் குறளின் ஈற்றுச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய 'பு' அடுத்த பாடலின் முதல் சொல்லின் முதல் எழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்குக.
கடிது தமிழென்பார் கண்ணிலார்; தேடிப்
படித்தயலைக் காப்பார் பரிந்து!
படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!
இவ்விரு பாடல்களை நோக்குக. முதற்பாடலின் ஈற்றுச்சீரின் மதலெழுத்து வரும்பாடலின் முதலெழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்கவும்.
இவ்வகையின் ஈற்றெடுப்பை முயன்று பார்க்குமாறு வேண்டுகிறேன்.
இக்கிழமைக்கான ஈற்றடி - எழுத்துப் பிழைநீக் கியன்று!
அகரம் அமுதா
நடையோ அபாரம்! நவில்கருத்தும் நன்றே!
பதிலளிநீக்குதடையென்றா லாங்காங்கே யுள்ள - கடையிற்
பழுத்த பழத்திற் புகுந்ததீய வண்டுபோன்
றெழுத்துப் பிழைநீக் கியன்று!
அந்தாதி என்றே அறிந்திருந்த சொல்லுக்கு ஈற்றெடுப்பு மிக அருமையான தமிழ்ப் பெயர்.
பதிலளிநீக்குஅருமை வாழ்க வசந்த் அவர்களே!
பதிலளிநீக்குநன்றி உமா அவர்களே!
மண்ணில் முதல்பிறந்து குன்றாப் புகழோடு
பதிலளிநீக்குஎண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்துகளை
நீக்க இலக்கணம் கண்டு இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போ டுகண்ணியு கம்தாண்டி என்றும்
தழைக்க தமிழா தமிழ்பேசு சற்றே
எழுத்துப் பிழைநீக் கியன்று!
வாழ்த்துக்கள் உமா அவர்களே! சில திருத்தங்கள்-
பதிலளிநீக்குமண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியி கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழித்துப் பிழைநீக் கியன்று!
உடையில் சடையில் நடையில் இடையில்
பதிலளிநீக்குஎடையிலே சிந்திடும் கண்மணியே அகற்று
அழுக்கைமனத் தில்இருந்து மட்டுமல்ல உந்தன்
எழுத்துப் பிழைநீக் கியன்று !
உடையில் சடையில் நடையில் இடையில்
பதிலளிநீக்குஎடையிலே சிந்திடும் கண்மணியே அகற்று
அழுக்கைமனத் தில்இருந்து மட்டுமல்ல உந்தன்
எழுத்துப் பிழைநீக் கியன்று !
அருமை. சில இடங்களில் தளைத்தட்டுகிறது. கவனம் தேவை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉடையில் சடையில் நடையில் இடையில்
பதிலளிநீக்குஎடையிலேசிந் தித்திடும் கண்மணியே ! உள்ளத்(து)
அழுக்கை அகற்றிடு ! அப்படியே கொஞ்சம்
எழுத்துப் பிழைநீக் கியன்று !
வசந்தும் உமாவும் திகழ்மிளிர் தானும்
பதிலளிநீக்குகசந்தார் எழுத்துப் பிழையை; -இசைந்து
செழித்த தமிழைச் சிதைக்கா தினிதே
எழுத்துப் பிழைநீக் கியன்று
புணரா தமைந்த பதங்களி னாலே
பதிலளிநீக்குபுதியவர் பாக்கள் பிழையுற கண்டேன்
இலக்கணங் கற்றே முறையாய் எழுத்துப்
பிழைகள் தவிர்பீர் இயன்று.
-இராஜகுரு
இராஜ குருவின் இனிய மொழியில்
பதிலளிநீக்குவிராவிக் கிடக்கும்மெய் தன்னைப் -பராவி
விழைந்தேற்று தேர்க இளங்கவிகாள்! ஏட்டில்
பிழைகள் தவிர்ப்பீர் பெரிது.
ஐயா,
பதிலளிநீக்குவணக்கம்.
அந்தாதிக்கு 'ஈறுதொடங்கி' என்ற பெயருண்டு.
சிலர் 'கடைமுதல்' என்றுங்கூறுவர்.
வருக சிக்கிமுக்கியாரே! அழகான இரண்டு பெயர்களை அறியத்தந்துள்ளீர்கள். வாழ்க. இவ்விரு பெயர்களையுன் நான் முன்புஅறியேன். இருப்பினும் புதியபுதிய பெயர்கள் தோன்றுவதால் பிழையில்லையாதலால் இதுவும் இருக்கட்டுமே!
பதிலளிநீக்குஒருபொருள்களுக்குப் பலபெயர்களும், பலபொருள்களுக்கு ஒருபெயரும் தமிழில் உண்டல்லவா! ஆக இதையும் ஏற்போம்.
அற்புதமாய்க் கவி புனைந்து அன்புடன்தான் தருகின்றீர்.
பதிலளிநீக்குகற்பதற்கு ஆவலாய் இருக்கிறது. காசு சேர்க்க ஆங்கிலத்தின்
பொற்பதங்கள் பிடித்துத் தமிழ் இலக்கணம் பயிலா என் போன்ற
அற்பனுக்கும் இயலுமோ சொல்லுங்கள்.
ஆங்கிலத்தின் பொற்பத்தை அண்டிப் பிழைத்தாலும்
பதிலளிநீக்குபாங்குதமிழ் கற்றுப் பயனுறலாம் -ஈங்குநீர்
வந்து கவிபடித்து வங்கக் கடலன்ன
சிந்து கவிபடைப்பீர் தேர்ந்து!
வணக்கம் நண்பர் க்லேய்ஹார்ஸ் அவர்களே உங்களாலும் முடியும். தொடர்ந்து வருகை புரிந்து பாடங்களை கற்க உங்களாலும் எழுத முடியும். பிறரை எழுத்தூண்டுவதே இவ்வலையின் நோக்கம். வருக ஆதரவு தருக