சனி, 20 ஜூன், 2009

ஐகாரக் குறுக்கம்

வாசகர்களுக்கு வணக்கம்,

வெண்பா எழுதலாம் வாங்க வலைப்பதிவில் நண்பர் திரு. அகரம் அமுதா அவர்களுடன் இனி நானும் இணைகிறேன்.

இவ்வலைப்பதிவில் என் முதல் பதிவு...

வெண்பாவின் ஈற்றடியைத் தந்திட வித்தளத்திற்
கன்புடனே என்னை யழைத்தமைக் காயல்ல
இன்டமிழின் வெண்பாச் சுவையதனை எந்தமிழர்

நன்கறியச் செய்தமைக்காய் ஞாலமுள மட்டும்
சிகரங்கள் தொட்டே சிறந்தோங்கி வாழ்க
அகரம் அமுதாப் புகழ்.
-இராஜகுரு.


"ஐ" என்பது நெடில் எழுத்தே. மாத்திரை அளவில் சொன்னால் 2 மாத்திரை.
ஆனால் ஐகாரம் எல்லா இடங்களிலும் நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலேயே ஒலிப்பதில்லை.

ஐகாரம் சொல்லின் இடையிலும் முடிவிலும் வரும் பொழுது நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து குறிலெழுதுக்குண்டான 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் முதலில் வரும்பொழுது 1 1/2 மாத்திரை அளவு ஒளிக்கு. "ஐ" என்று தனித்து ஒலிக்கும் போதே 2 மாத்திரை அளவு ஒலிக்கும்.

இது தெரியாதவர்கள் ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களை தவறாக அசை பிரித்து வெண்பாவையும் தவறாக எழுதக்கூடும்.

அதனால், ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களில் ஐகாரத்தை குறிலாகவே கொண்டு அசை பிரிக்க வேண்டும்.

எ.கா


1. அகந்தையினால் - அகந் / தையி / னால் ('அகந் / தை / யினால்' என்பது தவறு)
2. அருமையினால் - அரு /மையி /னால் ('அரு / மை / யினால்' என்பது தவறு)

இந்த இரண்டு சொற்களிலுமே ஐகாரம் குறுகுவதை நன்கு கவனிக்கலாம்.

'அகந்தையினால்' என்பதற்கும் 'அகந்தயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.
'அருமையினால்' என்பதற்கும் 'அருமயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.

இதன் காரணம் ஐகாரம் குறுகுவதே .

ஆக, அசை பிரித்தல் என்பது எழுத்துகளைச் சார்ந்ததல்ல. எழுத்துகளின் கோர்வையினால் எழுகின்ற ஓசையைச் சார்ந்தது.

நாம் இங்கு எடுத்துக்காட்டாக பார்த்த இரண்டு சொற்களுமே ஒரு சரித்திரத்தையே சொல்லக்கூடிய இரண்டு வெண்பாக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
அவை,

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

ஆண்டி லிளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சினைப் பயல்.
-மகாகவி பாரதி

இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இலக்கியத்தில் உண்டு.

முத்துக்
கவிப்பந்தல் முன்னே நிழல்போடப்
பித்தக் கவிதைகளைப் பேசுகிறேன் - முத்தமிழே!
பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சென்பேன்; என்பாடல்

வெள்ளைக் கனவின் விரிப்பு.
-கவிப்பேரரசு வைரமுத்து

பெற்றெடுத்தப் பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு.

-இராஜகுரு

இக்கிழமைக்கான ஈற்றடி - "மனம்மயக்கும் மாயத் தமிழ்"

இராஜகுரு

23 கருத்துகள்:

  1. அழைத்த உடன்வந்தென் அன்பிற் கிணங்கி
    இழைத்தாய் அரிய இடுகை -தழைத்திங்
    குனதாற்றல் ஓங்க உதவும் ஞான்றும்
    மனதை மயக்கும் தமிழ்!

    பதிலளிநீக்கு
  2. எனது உனது எனவில்லா தெல்லோர்
    மனதை மயக்கும் தமிழ்.

    ***

    ஒரு சலூன் வெண்பா :

    வெட்டும் தலைமேல் வழித்த முகதாடை
    தொட்டிட பட்டாய்ப் பளபளக்க - கட்டாயம்
    கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
    சிட்டிங்கில் சீராகும் பார்.

    எப்படி இருக்கின்றது அ.அ., மற்றும் இராஜகுரு..?

    பதிலளிநீக்கு
  3. வருக இராஜகுரு அவர்களே, வளமான பதிவுகள் பலவும் தருக!

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிற்து.

    வாழ்த்துகள்



    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  5. மரபுக் கவிதை புதுக்கவி தையென
    அருவியாய் கொட்டும் அழகுத் தமிழே
    உன்னழகுக் காண்டுள் ளமுரைத் திடுமே
    மனம்மயக்கும் மாயத் தமிழ்.

    பதிலளிநீக்கு
  6. வருக! வருக! வசந்தகுமார் அவர்களே! தங்கள் வெண்பாக்களுக்கான கருத்தை நண்பர் இராசகுருதான் உரைக்க வேண்டும். இருப்பினும் அவருக்குமுன் நான் தங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டதால் கருத்துரைக்கத் தளைப்பட்டேன்.

    முதல் குறள் வெண்பாவில் இரு இடங்களில் தளைத்தட்டுகிறது. மற்றியமைத்து விட்டேன். வெகுளிகொள்ள வேண்டா!

    'எனதுன தென்றே இரண்டில்லா தெல்லார்
    மனதை மயக்கும் தமிழ்.'

    இரண்டாம் வெண்பாவில் ஒற்றுப்பிழைகள் உள்ளன.

    வெட்டும் தலைமேல் வழித்த முகத்தாடை
    தொட்டிட பட்டாய்ப் பளபளக்கக் -கட்டாயம்
    கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
    சிட்டிங்கில் சீராகும் பார்.


    அருமை அருமை. வாழ்க வசந்த் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி ஜீவா அவர்களே.

    பதிலளிநீக்கு
  8. திகழ்மிளிர் அவர்களுக்கு,

    தங்களுடைய கவிதை மிக அருமை. அழகிய பொருள். ஆனால் சில இடங்களில் தளைத்தட்டுகிறது.

    நான் பிழைகளைச் சுட்டிக்காட்ட மட்டும் தான் விரும்புகிறேன். அவைகளை தாங்களே சரி செய்து மாற்றுவது தான் சிறப்பு. அப்பொழுது தானே அந்தக் கவிதையின் முழு உரிமையும் தங்களுடையதாக இருக்கும். தாங்கள் வெண்பா பழகுவதும் மேலும் சிறப்படையும்.

    நான்காம் சீருக்கும் ஐந்தாம் சீருக்கும் இடையில் தளைத்தட்டுகிறது ("தையென அருவியாய்").

    அதே போல் எட்டாம் சீருக்கும் ஒண்பதாம் சீருக்கும் இடையிலும் தளைத்தட்டுகிறது ("தமிழே உன்னழகுக்").

    "அருவியாய் கொட்டும்" என்ற சீர்களுக்கு இடையில் ஒற்று மிகும்.

    பதிலளிநீக்கு
  9. அருமை வசந்த குமார் அவர்களே. நகைச்சுவை மிக்க கவிதை.
    இது போன்ற நகைச்சுவை வெண்பாக்களுக்காக ஒரு தனி ஈற்றடியே தரலாம்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. /
    தங்களுடைய கவிதை மிக அருமை. அழகிய பொருள். /

    நன்றி நண்பரே

    /நான் பிழைகளைச் சுட்டிக்காட்ட மட்டும் தான் விரும்புகிறேன். அவைகளை தாங்களே சரி செய்து மாற்றுவது தான் சிறப்பு. அப்பொழுது தானே அந்தக் கவிதையின் முழு உரிமையும் தங்களுடையதாக இருக்கும். தாங்கள் வெண்பா பழகுவதும் மேலும் சிறப்படையும்.
    /

    உண்மை தான்

    /ஆனால் சில இடங்களில் தளைத்தட்டுகிறது. /

    நானும் உணர்ந்தேன்.


    மரபுக் கவிதை புதுக்கவி தையென்று
    அருவியாய்க் கொட்டி எனையாளும் பொங்குதமிழே
    உன்னழகுக் கண்டுள் ளமுரைத் திடுமே
    மனம்மயக்கும் மாயத் தமிழ்.

    பதிலளிநீக்கு
  11. அருமை திகழ்மிளிர். ஆனால் இன்னும் சில திருத்தங்கள் செய்யவேண்டும்.

    "பொங்குதமிழே" என்பது கனிச்சீராக அமைந்திருக்கிறது. கனிச்சீர் வெண்பாவில் இடம்பெறாது.

    "உன்னழகு" என்பதை "உனதழகு" என்று மாற்றினால் எதுகை அமையக்கூடும்.

    "தையென்று அருவியாய்" என்பதை "தையென் றருவியாய்" என்று புணர்ச்சியோடு எழுதினால் இன்னும் அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. /மரபுக் கவிதை புதுக்கவி தையென்
    றருவியாய்க் கொட்டி எனையாளும் பொங்குதமிழே
    உனதழகுக் கண்டுள் ளமுரைத் திடுமே
    மனம்மயக்கும் மாயத் தமிழ்./

    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  13. திகழ்மிளிர் அவர்களுக்கு,

    "பொங்குதமிழே" என்பது கனிச்சீராக அமைந்திருக்கிறது. கனிச்சீர் வெண்பாவில் இடம்பெறாது.

    தங்களுடைய சொற்களைக் கொண்டே கவிதையை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறேன்.

    மரபுக் கவிதை புதுக்கவி தையென்
    றருவியாய்க் கொட்டும் அழகுத் தமிழே
    உனதழகு கண்டுள் ளமுரைத் திடுமே
    மனம்மயக்கும் மாயத் தமிழ்.

    பதிலளிநீக்கு
  14. தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும்
    இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும்
    நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம்
    மனம்மயக்கும் மாயத் தமிழ்.

    வணக்கம் திரு. இராஜகுரு. வருக உங்கள் முதல் பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள். நிறைய கற்க ஆவலாயுள்ளோம்.

    வணக்கம் அமுதா, யாப்பிலக்கணம் முழுதுமே தங்கள் பதிவில் தொடர்ந்தால் மகிழ்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மயங்கிடுதோ உங்கள் மனமும்! தமிழ்க்காய்
    இயங்குவதே நந்தம் இலக்காம் -நயங்கண்டு
    நற்றமிழை நாடகத்தில் நாட்டிக் களிகொள்வோம்
    பொற்றொடியே வாழ்த்துப் புகல்!

    பதிலளிநீக்கு
  16. அருமை உமா அவர்களே.

    தேனினிதோ செந்தமிழில் நீர்செய்த செங்கவிதை
    தானினிக்கக் கண்டனனே பாடினனே நாவினிக்க
    நற்றமிழைக் கற்போர் உளமினிக்கச் செய்தீர்
    மனமயக்கும் மாயக் கவி.

    பதிலளிநீக்கு
  17. வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
    நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
    நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
    இல்லை உனக்கு இடர்.

    பதிலளிநீக்கு
  18. நாணுகின்றேன் நற்றமிழில் நீரெனையே ஓர்கவி
    என்றதனால், நாடுகின்றேன் உந்தனையே நற்கவியை
    நான்புனைய நல்லிலக்க ணங்கற்பிக் கும்நீர்
    எனக்கே இராச குரு.

    பதிலளிநீக்கு
  19. உமா அவர்களே! தாங்கள் இன்னும் சிலமாதங்களில் வெண்பா இலக்கியம் படைக்க முயலலாம். நினைத்தவற்றை வெண்பாவில் பாடும் ஆற்றலை அடைந்து வருகிறீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. நற்கவிதை நீர்புனைய நல்லிலக்க ணஞ்சொல்லும்
    நற்பணிக் கென்னை யழைதீர் கடமையென்
    ஏற்(று)உம் கருத்தை இயம்புகின்றேன் நற்கவியின்
    ஈற்றடியில் உண்டோர் பிழை.

    "இல்லை உனக்கு இடர்" என்ற அடியில் "உனக்கு இடர்" என்ற சொற்கள் புணர்ந்தால் "உனக்கிடர்" என்றாகும். இந்த ஒரு பிழை மட்டும் தான்.
    மற்றபடி கவிதைகள் மிக அருமை. அழகிய ஓசை நயம்.
    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மிக்க நன்றி திரு.இராஜ குரு. பிழைச்சுட்டியமைக்கு நன்றி. பிழைநீக்கி எழுத பயில்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வெண்பாவில் வேந்தரெலாம் என்பதாலே வநதிடுக
    நண்பாநீர் தந்தால் களம்தருவேன் கல்லூரி யில்
    மண்தான்எம் கோவையில் மன்றம் தரத்திட்டம்
    இந்துஸ்தான் கல்லூரிக் குள்.

    ராஜ.கார்த்திக்
    கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
    கோவை

    9750143631

    பதிலளிநீக்கு
  23. வெண்பாவில் வேந்தரெலாம் என்பாலே வந்திடுக
    நண்பாநீர் தந்தால் களம்தருவேன் கல்லூரி யில்
    மண்தான்எம் கோவையில் மன்றம் தரத்திட்டம்
    இந்துஸ்தான் கல்லூரிக் குள்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com