வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா!

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா, தூங்கிசைச் செப்பலோசை வெணபா அறிந்தோம்.

இனி, ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா அறிந்திடுவோம்.

இதில், ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் வழக்கம்போல் காய்ச்சீரும் வரவேண்டும்.

இறுதிச் சீர் வழக்கம்போல் ஓரசைச் சீர். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கேப் பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

- வாக்குண்டாம்

நீங்கள் விரும்பும் பொருளில், ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா எழுதுக.

5 கருத்துகள்:

  1. காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
    காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகின்றேன்
    காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
    கப்பல் கடலைக் கடக்க.

    [காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
    கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.][ஐயா என்னவாயிற்று சில நாட்களாய் யாரும் வலைப்பக்கம் வரவில்லையே. உங்கள் மாணவர்களை ஏமாற்றலாமா?]

    விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
    இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
    சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
    கணமும் நெருப்பாய் மிகுந்து.
    [ தீயைக் குறிக்கும் சுடர், தணல், நெருப்பு ஆகியன சினத்தின் தன்மைக்கு உவமையாகவும் நின்றதால் உவமைப்பின்வரு நிலையணி எனக் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  2. உமா,

    முதலில் உங்கள் வினாவிற்கான விடை:

    அகரம் அமுதா அவருடைய கணிப்பொறி பழுது பட்டதாகக் கூறினார்.

    அதனால்தானோ என்னவோ நேற்று வரையிலும் பின்னூட்டம் எதுவுமே கிடைக்கவில்லை.

    இன்றுதான் கிடைத்தன.

    கணிப்பொறி சரியாகி இருக்கும் என்று எண்ணுகிறேன். அ.அ. கூறினால்தான் என்ன ஆயிற்று என்று தெரியும்.
    ****
    காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
    காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகின்றேன்
    காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
    கப்பல் கடலைக் கடக்க.
    ****

    இறைப் பற்றாளரை உருக்கும் பாடல்.
    உவமையும் மிகச் சிறப்பு.
    இன்னும் சிறப்பாக்க, ஒரு திருத்தம் செய்யலாம்.
    காத்தருள்வாய் என்று கூறிய பின் காப்பாய் என்று முருகனிடம் மறுபடியும் கேட்டல் தவறில்லைதான்.
    என்றாலும் -

    காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
    சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
    காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
    கப்பல் கடல்கடக் க.

    என்றிருக்கலாமா என்று எண்ணினேன்.

    (இறுதிச்சீர் ஓரசைச்சீராக அமைவதற்காகச் சிறு மாற்றம்!)

    நீங்களே இன்னும் சிறிது எண்ணினால் இதைவிடச் சிறப்பாகவும் அமைக்க முடியும்.
    ----------------------------------
    விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
    இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
    சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
    கணமும் நெருப்பாய் மிகுந்து.

    அருமை!
    சிறப்பான உவமையணியுடன் கருத்து விளக்கம் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  3. உமா,

    முதற் பாடலின் இரண்டாமடி,

    "சாத்திப் பரிவாய்ச் சலியாதே ஓம்புதல்போல்" - என்று அமைவதுதான் பிழையின்றி இருக்கும் .
    சற்றுக் கவனக் குறைவாக 'சலியாது ஓம்புதல்போல்' என்று எழுதிவிட்டேன்

    பொறுத்தாற்றுக.

    சலியாது ஓம்புதல்போல் என்பது சேரத்தெழுதும் போது, "சலியா தோம்புதல்போல்" என ஆகித் தனள தட்டுவதைக் கவனிக்க.

    பதிலளிநீக்கு
  4. பழகிசைத் தன்னில் பணிவாக நானும்
    ஒழுகிசைப் பாவொன் றுரைத்தேன் -பழகு
    கணியினி உற்ற கடுநோயைப் போக்கும்
    பணிநிறை உற்றவுடன் பார்த்து!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com