1.நேரிசை ஆசிரியப்பா
2.இணைக்குறள் ஆசிரியப்பா
3.நிலைமண்டில ஆசிரியப்பா
4.அடிமறிமண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை:-
1.ஆசிரியத்தாழிசை
2.ஆசிரியத்துறை
3.ஆசிரிய விருத்தம்
வகைகள்:-
1.நேரிசையாசிரியப்பா
ஏல்லா அடிகளும் அளவடியாக வந்து, ஈற்றியலடி சிந்தடியாக வருவது நேரிசையாசிரியப்பாவாகும்.
குறிப்பு:-
ஈற்றியலடி – ஈற்றடிக்கும் முன்னுள்ள அடியாகும்.
காட்டு:-
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறக்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெந் நிலவில்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே! –பாரிமகளிர்
இப்பாவின் ஈற்றியலடி சிந்தடியானமையால் நேரிசையாசிரியப்பாவாயிற்று.
2. இணைக்குற ளாசிரியப்பா
நேரிசையாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் வருவது இணைக்குற ளாசிரியப்பாவாகும்.
குறிப்பு:-
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றியலடி சிந்தடியாக வரும் என்பது அறிந்ததே. ஈற்றியலடிமட்டுமல்லாது மற்ற ஓரிரு அடிகள் அல்லது பலவடிகள் சிந்தடியாகவும் குறளடியாகவும் வரின் அது இணைக்குறளாசிரியப்பாவாகும்.
காட்டு:-
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீர்ந்து
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே!
இப்பாவில் முறையே இரண்டாம் மூன்றாம் அடிகள் குறளடிகளாகவும், நான்காம் மற்றும் ஈற்றியலடி சிந்தடியாகவும் வந்து இணைக்குறளாசிரியப்பாவானமை காண்க.
தொடரும்...
அகரம் அமுதா
/ஏல்லா அடிகளும் அளவடியாக வந்து, ஈற்றியலடி சிந்தடியாக வருவது நேரிசையாசிரியப்பாவாகும்./
பதிலளிநீக்கு'அளவடி' என்றால் - ஒரே அளவில் (சீர்கள் ஒரே எண்ணிக்கையில்) உள்ள அடிகள் எனக் கொள்ளவேண்டுமா ?
'சிந்தடி' என்பதை அளவில் குறைந்த (சீர்கள் எண்ணிக்கை பிற அடிகளை ஒப்பிடும்போது குறைவாக இருக்கும்) அடி எனக் கொள்ளலாமா ?
காட்டுகளுக்கு பொருளும் கூறமுடியுமா ?
தூய தமிழின் சுவையையும், இலக்கியச் சொல்லாட்சியையும் ரசிக்கலாமே...
உடனே வேண்டும் என்று இல்லை. உங்கள் பணிகளுக்கேற்ப மெதுவாக பதித்தாலும் போதும்.
மிக்க நன்றி..
அவனடியாருக்கு....
பதிலளிநீக்குஅடிகளின் அளவுகளை வெண்பாத்துவக்கப் பாடங்களில் தெளிவாக வழங்கியுள்ளமையால் விரிவாக உரைக்காமல் விட்டிருக்கிறேன்.
இரண்டு சீர்களைக் கொண்ட அடி - குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி - சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி -அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி - கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி - கழிநெடிலடி
இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி
நாற்சீர் அளவடி ஐஞ்சீர் கழிலடி
அறுசீர் முதலன கழிநெடி லடியே! -என்பார் தொல்காப்பியன்.
////அவனடிமை கூறியது...
பதிலளிநீக்குகாட்டுகளுக்கு பொருளும் கூறமுடியுமா ?
தூய தமிழின் சுவையையும், இலக்கியச் சொல்லாட்சியையும் ரசிக்கலாமே...////
அடுத்தடுத்த பாடங்களில் அப்படியே செய்யலாம்.
அதிசயமாய் எல்லோரும் வலையிலிருப்பதாய் தோன்றுகிறதே???
பதிலளிநீக்குவெண்பாவிற்கும் இனங்கள் உண்டல்லவா?
பதிலளிநீக்கு////உமா கூறியது...
பதிலளிநீக்குவெண்பாவிற்கும் இனங்கள் உண்டல்லவா?////
ஆம்.. உண்டு.
அவை:-
வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்.
இவைபற்றி முன்பே உரைத்துள்ளேன் என நினைக்கிறேன். ஆனால் அவற்றைத் தனித்தனியாக பாடமாகவோ, பாக்கள் புனையவோ வழங்கவில்லை என்பது உண்மை. அதன் கரணியம் யாதெனில் அவை புலவர்களாலும் எழுதப்படாமல் தவிர்க்கப்பட்டதுதான் கரணியம்.
ஒர் சந்தேகம்
பதிலளிநீக்குமோனை அமைத்து எழுதும் போது அஆஐஒள -ஓரினம்
அல்லவா, எனின் க மற்றும் கை என்பது மோனைதானே?
பொ, பூ என்பதும் மோனை தானே?
ஓர் எழுத்துக்கு அவ்வெழுத்து,அதன் இனம் மற்றும் அவற்றின் நெடில் எல்லாமே மோனையாகுமல்லவா?
மற்றும் ஒன்று. நீங்கள் பல இடங்களில் கரணியம் என்று எழுதுகிறீர்கள். காரணம் என்பது தவறா?
பதிலளிநீக்குவேண்டா - வேண்டாம் என்பது போல் இது தவறோ என்றே கேட்கிறேன்.
/////மோனை அமைத்து எழுதும் போது அஆஐஒள -ஓரினம்
பதிலளிநீக்குஅல்லவா, எனின் க மற்றும் கை என்பது மோனைதானே?/////
ஆம். க,கா,கை,கௌ இவை மோனையே ஆகும்.எதுகைக்கு மட்டுமே குறிலுக்குக் குறிலும், நெடிலுக்கு நெடிலும் தேவை. மோனையில் அப்படிப் பார்க்கத் தேவையில்லை.
ஆனால் அடிமோனையில் முதலடியின் முதற்சீரில் மோனை எழுத்து குறிலாயின், இரண்டாமடியின் முதலெழுத்தும் குறிலாக அமையவேண்டும். (இது தங்களுக்கு முன்பே தெரிந்ததே)
////பொ, பூ என்பதும் மோனை தானே?////
கண்டிப்பாக.
/////ஓர் எழுத்துக்கு அவ்வெழுத்து,அதன் இனம் மற்றும் அவற்றின் நெடில் எல்லாமே மோனையாகுமல்லவா?/////
இனவெழுத்து என்பது வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்படும். இனமோனை என்பது வல்லினமோனை, மெல்லினமோனை, இடையின மோனை, எனக்கொள்ளலாம்.
முதல்மொனை ""க"" வாக அமைந்து , இதற்கான பொழிப்பு மோனை "க,,கா,,கை,,கௌ" ஆக அமையாதபோது, "த, தா, தை, தௌ, ச, சா, சை, சௌ, ப, பா, பை, பௌ" இவற்றிலொன்றையும் பெற்றுவரலாம். அப்படிவரின் அதை வல்லினமோனை என்பர். மெல்லினமோனை, இடையினமோனைக்கும் அப்படியே.
மேலும் ஒருவகையிலும் மோனையைக் கொள்ள வழியுள்ளது.
முதல்மோனை "க" வாக அமைந்து அதற்கான பொழுப்புமோனை, "க,கா,கை,கௌ" இவற்றிலொன்றைப் பெறாது, "கி,கீ,கு,கூ,கெ,கே,கொ,கோ" இவற்றிலொன்றையும் பெற்றுவரலாம். ஆனால் இவையெல்லாம் மிக அரிதாகப் பயன்படுத்தப் படுபவை என்பதை மறக்க வேண்டா.
/////மற்றும் ஒன்று. நீங்கள் பல இடங்களில் கரணியம் என்று எழுதுகிறீர்கள். காரணம் என்பது தவறா?
வேண்டா - வேண்டாம் என்பது போல் இது தவறோ என்றே கேட்கிறேன்.////
தமிழறிஞர்கள் காரணம் தமிழ்வடிவமில்லை என்றும், கரணியமே தமிழென்றும் கூறுகின்றனர். பயன்படுத்தியும் வருகின்றனர். அதையே நானும் பின்பற்றுகின்றேன்.
மிக்க நன்றி அமுதா அவர்களே.
பதிலளிநீக்குஇதில் எதுகை மோனையற்று எழுதலாமா அக்கா
பதிலளிநீக்கு