செவ்வாய், 8 செப்டம்பர், 2009

நிலைமண்டில ஆசிரியப்பா



நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருப்பதோடு, எல்லா அடியும் அளவொத்து அமைந்திருக்கும்.

இன்னும் விளங்கக் கூறின், நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஈற்றயலடி உட்பட அனைத்து அடிகளும் நாற்சீர் அடிகளாக அமைந்திருக்கும்.

வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்

உள்ளுவ உள்ளி உவர்ப்ப உவர்த்துக்

கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே

யாமுறும் இன்பம் யாவரும் உறவே

நன்கினி துரைத்துப் பொன்கனி போல

இருநிலம் போல இனிதுவாழ் குவமே!

- புலவர் குழந்தை

இனி, அகரம் அமுதா ஐயா குறிப்பிட்டதைப் போன்று தமிழ்த்தாய் குறித்து நிலைமண்டில ஆசிரியப்பா எழுதுவோம்.

26 கருத்துகள்:

  1. அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
    பழகிடும் தமிழின் பற்பலச் சொற்களாய்
    விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
    கலக்கம் நீக்கி கருத்தினைச் சேர்த்தே
    சிந்தனைத் தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
    வந்தனம் என்றுநாம் வணங்கிட கந்தனும்
    தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
    செந்தமிழ்த் தன்னையும் சிறப்புற நமக்கே!

    பதிலளிநீக்கு
  2. //நன்கினி துரைத்துப் பொன்கனி போல

    இருநிலம் போல இனிதுவாழ் குவமே!//

    இருநிலம் போல - தயைச் செய்து விளக்கவும்.

    தமிழ்த்தாய் வாழ்த்தோடு கூடியவிரைவில் மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
    பழகிடும் தமிழின் ////பற்பலச் சொற்களாய்/////
    விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
    கலக்கம் ////நீக்கி கருத்தினைச் சேர்த்தே////
    சிந்தனைத் தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
    வந்தனம் என்றுநாம் வணங்கிட கந்தனும்
    தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
    ////செந்தமிழ்த் தன்னையும்//// சிறப்புற நமக்கே!


    தங்கள் இப்பாடலில் சில ஒற்றுப் பிழைகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிடவே அக்கோடுகள்.. இப்படி இருக்க வேண்டும் ......


    அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனைப்
    பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய்
    விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
    கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சேர்த்தே
    சிந்தனைத் தமிழாய்ச் செயல்களும் தமிழ்க்காய்
    வந்தனம் என்றுநாம் வணங்கிட கந்தனும்
    தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
    செந்தமிழ்த் தன்னையும் சிறப்புற நமக்கே!

    பதிலளிநீக்கு
  4. உமா அவர்களுக்கு.....

    ////////இருநிலம் போல - தயைச் செய்து விளக்கவும்.//////


    தயை செய்து - ஒற்று மிகா.



    இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நான் இணையப்பக்கம் வர இயலாது. இருப்பினும் பாடங்கள் தடைபடாது. தமிழநம்பி அவர்கள் பாடங்களை வழங்குவார். நான் வரும் திங்கட்கிழமை (14/9/09) தமிழகம் செல்லவிருக்கிறேன். இனி தமிழகம்தான் வாழும் ஊராகும். ஆதலால் பொறுத்தருள்க. மூன்று மாதங்களுக்குப் பின் கன்டிப்பாக இணையப்பக்கம் தொடர்ந்து வருவேன்.

    நன்றிகள். தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ******************
    அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
    பழகிடும் தமிழின் பற்பலச் சொற்களாய்
    விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
    கலக்கம் நீக்கி கருத்தினைச் சேர்த்தே
    சிந்தனை தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
    எந்தமிழ்க் கந்தனை என்றும்நாம் வணங்கிடத்
    தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
    செந்தமிழ் தன்னுடன் சிறப்புற நமக்கே!
    ********************************
    சிறப்பான பாடல்.
    ஒரே ஒரு சொல் மாற்றியுள்ளதைக் கவனியுங்கள்.
    பாராட்டும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  6. ***இருநிலம் போல - அருள் கூர்ந்து விளக்கவும்***

    இருநிலம் = பெரிய நிலம் -
    இவ்வுலகம்.

    இருங்கல் என்றால் பெரிய மலை.
    இருங்கலி என்றால் மிக்க ஆரவாரம்.
    இருங்குடி ஆயர் என்றால் பெரிய குடியில் பிறந்த ஆயர்.
    இவ்வாறே,
    இருஞ்சினம், இருஞ்சோலை, இருஞ்சிறை வண்டு போன்ற சொற்களிலும் 'இரு' பெரிய தன்மையைக் குறிக்கின்றது.
    இந்த 'இரு' கருமைக் கருத்தையும் தருவதுண்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. திரு.அமுதா அவர்களுக்கு. வருக! வருக! உங்களால் தமிழ் சிறத்ததுபோல் இனி தமிழ் நாடும் சிறக்கட்டும். ஒற்றுப் பிழைகளை நீக்கிக் கொள்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. திரு. தமிழநம்பி அவர்களுக்கு

    மிக அற்புதமாக திருத்தியமைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    இருநிலம் - வெகு நாட்களாக எனக்கிருந்த ஐயம் நீங்கியது. மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

    [திரு.அகரம் அமுதாவின் வெண்பா எழுதலாம் வாங்க பதிவினால் நான் மிக்க பயன் அடைந்துள்ளேன். காலத்தால் அழியா கவித்திரனை எனக்களித்தவர் திரு.அமுதா. அவரது தற்காலிகப் பிரிவால் வலையின் தொடர்பு அறாது தாங்கள் எடுத்து நடத்துவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் தமிழால் எங்கள் தமிழும் உள்ளமும் நலம் பெரும் என்பது திண்ணம். மிக்க நன்றி.]

    பதிலளிநீக்கு
  9. தமிழ்த்தாய் வாழ்த்து.

    தாயே வாழ்க! தமிழே வாழ்க!
    தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
    தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
    சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
    தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
    தமிழர் எழுக! தாயும் வாழ,
    தன்னினம் வாழ, தமிழா எழுக!
    இன்னல் யாவும் இன்றொடு முடிக!
    கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
    விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
    ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
    தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
    கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
    கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
    அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
    இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
    தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
    எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
    தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
    தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க வாழ்கவே!

    பதிலளிநீக்கு
  10. தமிழ்த்தாய் வாழ்த்து.

    தாயே வாழ்க! தமிழே வாழ்க!
    தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
    தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
    சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
    தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
    தமிழர் எழுக! தாயும் வாழ,
    தன்னினம் வாழ, தமிழா எழுக!
    இன்னல் யாவும் இன்றொடு முடிக!
    கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
    விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
    ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
    தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
    கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
    கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
    அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
    இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
    தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
    எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
    தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
    தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க வாழ்கவே!

    பதிலளிநீக்கு
  11. //நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருப்பதோடு, எல்லா அடியும் அளவொத்து அமைந்திருக்கும்.//

    அய்யா இதில் எல்லா அடிகளும் நான்கு சீர்களாய் [அளவடியாய்]வரும் என அறிகிறேன். ஆயினும் ஒரு அடியில்

    தேமா புளிமா கூவிளம் கருவிளம்

    என் வந்தால் எல்லா அடியும் அவ்வாறே வரவேண்டுமா?

    அருள் கூர்ந்து விளக்கவும்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உமா அவர்களுக்கு,

    தமிழ்த்தாய் வாழ்த்து அருமை!

    வெண்பா எழுதுவது தெளிவானாற் போல், உங்களுக்கு ஆசிரியம் எழுதுவதும் தெளிவாகி விட்டது.


    ***தேமா புளிமா கூவிளம் கருவிளம்

    என வந்தால் எல்லா அடியும் அவ்வாறே வரவேண்டுமா?***

    தேவையில்லை!
    ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் ஒரே வாய்பாட்டில் வரவேண்டியதில்லை.

    ஈரசைச்சீர்களும் மூவசைச் சீர்களில் காய்ச்சீரும் எந்த அமைப்பிலும் வரலாம்.
    எதுகை மோனைகள் அமைந்து வருதல் சிறப்பு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி அய்யா.

    இன்னுமொரு வேண்டுகோள். எனது பாடல்களில் ஒற்றுப் பிழைகள் மலிந்து விடுகின்றன. புணர்ச்சியிலக்கணம் நன்றாக பதியும் வண்ணம் எளிதாக ஒரு புத்தகம் பரிந்துரைக்க வேண்டுகிறேன். செய்வதைச் சற்றே திருந்தச் செய்யலாமென்றுதான். தங்கள் பணிகளுக்கு இடையூறாக இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள ஆசிரியர்களே...

    கொஞ்ச நாட்களாய் இத்தளத்திற்குள் எட்டிப் பார்க்காமல் இருந்தேன். ஆசிரியர் அகரம் அமுதாவுடன் இன்னும் நிறைய அனுபவசாலிகள் சேர்ந்து தளத்தை மற்றொரு பரிணாமத்திற்கு கொண்டு செல்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது. இப்போது ஆசிரியப்பாவைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளது பிடித்திருக்கின்றது. அடியேனின் பாக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்..!! உமா கலக்குவதைக் கண்டு மற்றுமொரு மகிழ்வு.

    நேரிசை ஆசிரியப்பாவில் ஒரு முயற்சி::

    பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
    சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்,
    செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
    மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை..!"

    'கண்ணோரம் கண்ணீர்க் கடலுக்காக' ஒரு வெண்பா::
    சிவந்து விடும்பின் சிறியதாய் மாற்றும்
    எவரருகில் வந்தாலும் ஒட்டும் - அவர்விழி
    தன்னிலும்! சென்னைக்கண் நோயிலெப் போதிலுங்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

    தமிழ்த்தாய்க்கு ஓர் அகவற்பா செய்ய முயன்றதில்...
    தமிழென் மொழியெனத் தயங்கா துரைத்தேன்.
    "அமிழ்தா?" கேட்டார் அயலார் ஒருவர்.
    "இல்லை..!" என்றேன். இம்மியும் யோசியாது,
    தொல்லை என்றெனைத் தூற்றினர் எந்தமிழர்.
    அளவின்றிப் பருகிட அமுதும் நஞ்சாகும்.
    புலவோர் பலர்தம் பூதவுடல் நீக்கினும்
    நிலம்மேல் நிலையாக நீள்புகழ் பெற்ற
    வள்ளுவனாய்க் கம்பனுமாய்ப் பாரதியாய் இளங்கோவாய்த்
    தெள்ளுதமிழ்ப் பாவிசைத்துத் தேன் துளிகள் தான்கலந்து
    அள்ளியள்ளிச் சுவைத்தாலும் அடங்காத ஆர்வமாய்,வான்
    கள்ளினும் மேலாகத் தமிழைச்
    சொல்லுவேன் அமிழ்தினுக்கும் அமிழ்தினுக்கும் அமிழ்தெனவே!

    நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  15. வருக! வசந்தகுமார் அவர்களே!

    உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.
    ****************
    பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
    சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்,
    செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
    மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை..!"
    **********************
    நெஞ்சார்ந்த பாராட்டு!

    சரியாக நேரிசை ஆசிரியப்பா எழுதியிருக்கிறீர்கள்!

    ******
    சிவந்து விடும்பின் சிறியதாய் மாற்றும்
    எவரருகில் வந்தாலும் ஒட்டும் - அவர்விழி
    தன்னிலும்! சென்னைக்கண் நோயிலெப் போதிலுங்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.
    ********
    வேறுபட்ட எண்ணத்தில் பொருத்தமாக எழுதப்பட்ட வெண்பா!

    பாராட்டும் நன்றியும்.

    'சிறியதாய் மாற்றும்' என்பதைச் சிறிது விளக்குங்கள். நன்கு
    அறிந்து சுவைத்து மகிழ!
    *********************
    தமிழென் மொழியெனத் தயங்கா துரைத்தேன்.
    "அமிழ்தா?" கேட்டார் அயலார் ஒருவர்.
    "இல்லை..!" என்றேன். இம்மியும் யோசியாது,
    தொல்லை என்றெனைத் தூற்றினர் எந்தமிழர்.
    அளவின்றிப் பருகிட அமுதும் நஞ்சாகும்.
    புலவோர் பலர்தம் பூதவுடல் நீக்கினும்
    நிலம்மேல் நிலையாக நீள்புகழ் பெற்ற
    வள்ளுவனாய்க் கம்பனுமாய்ப் பாரதியாய் இளங்கோவாய்த்
    தெள்ளுதமிழ்ப் பாவிசைத்துத் தேன் துளிகள் தான்கலந்து
    அள்ளியள்ளிச் சுவைத்தாலும் அடங்காத ஆர்வமாய்,வான்
    கள்ளினும் மேலாகத் தமிழைச்
    சொல்லுவேன் அமிழ்தினுக்கும் அமிழ்தினுக்கும் அமிழ்தெனவே!
    *************************
    சிறப்பான பாடல்!

    வசந்தகுமாருக்கு மறுபடியும் பாராட்டு!

    தொடர்ந்து வாருங்கள் வசந்தகுமார்.

    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா ஆஹா
    வசந்த் அய்யா, நெடுநாள் கழித்து வந்தாலும், கலக்கிட்டீங்க அய்யா கலக்கிட்டீங்க.
    எங்கியிருந்து எங்கிட்டு போறீங்க.
    /"மதியத்திற் கரிசியில்லை..!"/ என்று பாரதியின் ஒருமுகமாக தமிழ் படைக்கும் காட்சியையும், மனைவியின் மென்மையான நடைமுறை வாழ்க்கை அவலத்தை நினைவு கூர்வதையும், இப்படி துல்லியமாக, அதுவும் சுருக்கமாக பாடி கையோடு இக்கால சென்னைக்கு /சென்னைக்கண் நோயிலெப் போதிலுங்/ என்று தாவி விட்டீரே. அருமை அருமை.
    இன்னும் நிறைய வருவீர்கள் எங்களுக்கெல்லாம் தமிழ் விருந்து படைப்பீர்கள் என்று நம்புகிறேன்.....
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உமா அவர்களே:
    தமிழ்த்தாய் வாழ்த்தும், முருகன் பாட்டும் மிக சிறப்பாக, ரசிக்கும்படி வந்துள்ளது. பாப்பயணம் தொடர வாழ்த்துகள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. உமா அவர்களுக்கு,

    ***ஒற்றுப் பிழைகள் மலிந்து விடுகின்றன.புணர்ச்சியிலக்கணம் நன்றாக பதியும் வண்ணம் எளிதாக ஒரு புத்தகம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.*****

    இடையூறு எதுவுமில்லை.
    அகரம் அமுதா ஐயா வல்லெழுத்து மிகுதல் குறித்து எழுதியுள்ளார் என்றே எண்ணுகின்றேன்.

    கடைகளில் பல்வேறு புத்தகங்கள் இதன்தொடர்பாக உள்ளன.
    ஆனால், பார்த்ததும் மலைப்பாகத் தெரிவதனால் பெரும்பாலாரால் முழுவதும் படிக்க முடிவதில்லை. சில நூல்கள் பிழையான செய்திகளைக் கூறுவனவாயும் உள்ளன.

    இலக்கணச்சுடர் ஐயா இரா.திருமுருகனார் 'இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்' என்று ஒரு சிறிய நூல் எழுதியிருந்தார். விலை பதினேழு உருபா தான். இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

    அகரம் அமுதா ஐயாவுடன் கலந்து பேசி அடிப்படையான செய்திகளைச் சுருக்கமாகத் தரலாம் என்று ஓர் எண்ணம் உள்ளது.
    பிறகு அறிவிப்போம்.
    ஈடுபாட்டிற்கு மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
  19. /////அகரம் அமுதா ஐயாவுடன் கலந்து பேசி அடிப்படையான செய்திகளைச் சுருக்கமாகத் தரலாம் என்று ஓர் எண்ணம் உள்ளது./////

    அப்படியே செய்வோம் அய்யா! நானும் என்னால் முடிந்தவரை உதவுகிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. அன்பு அகரம் அமுதா, தமிழநம்பி, அவனடிமை...

    நன்றிகள் தங்கள் வாழ்த்துக்களுக்கு...!

    அ. பொதுவாக சிறுகதையை மரபுக் கவிதையில் எழுத விழைவேன். இப்பாரதிப் பாவும் அம்முயற்சியில் ஒன்று. இப்பாவை எழுதும் போது ஒன்றும் தெரியவில்லை. முடித்த பின் படித்துப் பார்த்தால் இன்னும் சில நுணுக்கங்கள் தெரிந்தன. கதறிய பாஞ்சாலிக்கு இடைவிடாமல் ஆடை கொடுத்ததாக எழுதியவருக்கு அரிசி கொடுக்கவில்லையே கண்ணன்..! சமையலறை இருட்டு என்பது அவர்களது வறுமைக்கு ஒரு குறியீடாகக் கொள்ளலாம். பாரதி எழுதும் போது அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக செல்லம்மாள் மெல்லமாகப் பேசுகிறார்.

    படிப்பவர்களோடு சேர்ந்து நானும் இவற்றை எண்ணி வியக்கின்றேன். ஒரு நல்ல படைப்பு நம்மைப் பயன்படுத்தி, தன்னை எழுதிக் கொள்கின்றது என்ற என் அபிப்ராயத்தை இப்பாடலும் உறுதிப்படுத்துகின்றது.

    ஆ. மெட்ராஸ் ஐ தொல்லை வந்தால் கண்கள் சிவந்து, நீர் கட்டி, இமைகள் ஒட்டிச் சுருங்கி விடும் அல்லவா..? அது தான் 'சிறியதாக மாற்றும்'. :)

    இ. சொல்லவும் வேண்டுமா..? தமிழைப் பற்றி எழுதத் தொடங்கினால் என் போன்ற சிறுவருக்கும் சிறப்பாக வருமே..!!

    நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம். பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. திரு.இரா வசந்த குமார் வலைக்கு வந்தமை மிக்க மகிழ்ச்சியினும் மகிழ்ச்சி.

    // செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
    மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற் கரிசியில்லை..!"//
    அற்புதம்,
    தமிழ்த்தாய் அகவற்பா அருமை வாழ்த்துக்கள்.

    திரு.அகரம் அமுதா வந்துவிட்டீர்களா? மிக்க நன்றி.

    திரு. தமிழநம்பி அவர்களுக்கு
    //அகரம் அமுதா ஐயாவுடன் கலந்து பேசி அடிப்படையான செய்திகளைச் சுருக்கமாகத் தரலாம் என்று ஓர் எண்ணம் உள்ளது.
    பிறகு அறிவிப்போம்.// மிக்க நன்றி.
    தங்களைப் போல் பரிவோடு மிகச் சிறப்பாக சொல்லிக்கொடுப்பவர் இருக்கையில் படிப்பவர் ஈடுபாட்டில் குறையிருக்காது. மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
  22. தமிழைப்பற்றி எழுதத் தொடங்கினால் எல்லாருக்குமே சிறப்பாக வரும் என்று நீங்கள் கூறியுள்ள கருத்து உண்மையே.

    விளக்கங்கள் அளித்ததற்கு மிக்க நன்றி.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நன்றி உமா.

    பாடல் எழுதும் உங்களைப் போன்றோரின் ஈடுபாடே ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

    அவனடிமை அய்யாவையும் பாடலுடன் எதிர்பார்க்கின்றேன்.
    விரைவில் பாடல்களோடு வருவார் என்று நம்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
  24. நிலைமண்டில ஆசிரியப்பாவில் கஙித்தளை வருமா ? எந்த தளைகள் வரும் பதில் நலம் பயக்கும்.

    பதிலளிநீக்கு
  25. ஆசிரியக்பாவில் தேமா புளிமா கருவிளம் கூவிளம் ,
    காய்ச்சீர்,தேமாங்கனி புளிமாங்கனி இவை வருமா?

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com