வியாழன், 25 நவம்பர், 2010

இசைப்பா! 1

நாம் இதுவரைப் பெரும்பாலான பாவகைகளைப் பற்றி அறிந்து, இயற்றி இருக்கின்றோம். இப்பகுதியில் நாம் காண இருப்பது இசைப்பாக்களைப் பற்றி!

ஓர் ஒலி ஒழுங்கிற்குட்பட்டு எழுதும் பாவை இசைப்பா என்றால் அது மிகையாகாது. குறிப்பாக இவ்வகைப் பாக்கள் எழுதும் போது தளைகளைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. ஓசை ஒழுங்கிருந்தால் போதும். சிந்து, நொண்டிச் சிந்து போன்றவை இசைப்பாக்களே!


இப்பகுதியில் மிகவும் எளிமையான முறையில் எழுதப்படும் இசைப்பாடல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மதியுரை!

தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? -அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை -அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது -தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு -நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு! -அகரம் அமுதன்.


இப்பாடல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
 இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

 ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. இப்படியே அனைத்து வரிகளையும் இயற்றுதல் ஒருவகை இசைப்பாவே. முயலுக.

அகரம் அமுதன்

24 கருத்துகள்:

  1. அமுதனாசானுக்கு: நல்ல கருத்து, நன்றி.
    //இப்பாடல்,
    மா + மா
    மா + மா
    மா +மா + காய் =ஓரசைச்சொல்,
    மா + மா
    மா + மா
    மா + மா + காய்!//
    ஐயா! முதல் ஆறு சீர்களில் தேமா அல்லது புளிமா என்கிறீர்கள்; உங்கள் உதாரணப் பாவில் ‘விளச்’-சீர்கள் வருகின்றனவே.

    பதிலளிநீக்கு
  2. //////ஐயா! முதல் ஆறு சீர்களில் தேமா அல்லது புளிமா என்கிறீர்கள்; உங்கள் உதாரணப் பாவில் ‘விளச்’-சீர்கள் வருகின்றனவே.///////


    ஆம். முதல் ஆறுசீர்களும் இயற்சீர் என எழுதுதற்குப் பதிலாக மாச்சிர் எனக்குறிப்பிட்டிருக்கின்றேன். கவனக்குறைவால் இது நிகழ்ந்திருக்கின்றது.

    முதல் ஆறுசீர் இயற்சீர் ஏழாம் சீர் காய்ச்சீர் எனக்கொள்க. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. தாயின் பாலே
    சேயின் அமுதம்
    தெய்வம் தந்த அருமருந்தாம் பால்
    ஈயின் சிறக்கும்
    தாயின் நலமும்
    நோயின் றிருக்கும் வழியதுவாம்.

    [எதுகை எப்படி வரவேண்டும்(?) என்பதையும் அருள் கூர்ந்து தெரிவிக்கவும்.]

    பதிலளிநீக்கு
  4. நலம் வாழ
    ------------

    சுத்தம் செய்வோம்
    நித்தம் எங்கும்
    சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல்
    வித்தே முளைக்கும்
    சத்தாய் உண்போம்
    வஞ்சம் கோபம் விலக்கிடுவோம்.

    பதிலளிநீக்கு
  5. தாயின் பாலே
    சேயின் அமுதம்
    தெய்வம் தந்த அருமருந்தாம் பால்
    ஈயின் சிறக்கும்
    தாயின் நலமும்
    நோயின் றிருக்கும் வழியதுவாம்.

    [எதுகை எப்படி வரவேண்டும்(?) என்பதையும் அருள் கூர்ந்து தெரிவிக்கவும்.]



    உமா அவர்களின் இப்பா அருமையானதும் பொருளுடையதும் ஆகும். வாழ்க.

    எதுகை அடியின் முதற்சொல்லில் மட்டுமிருந்தால் போதும். காண்க தங்களின் 'தாயின், ஈயின்'

    மோனைனையப் பொருத்தவரை ஒன்றாம் மூன்றாம் ஐந்தாம் சீர்களில் அமைந்துவருதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. அகரம் பொழிந்த
    அழகிய இசைப்பா
    அறிவுரை கூடிய அமுதமழை - தாய்ச்
    சிகரஞ் சிறப்புறும்
    சிவனுமைச் சிந்தனை
    சேய்களுஞ் செழிக்குஞ் சீர்வழியாம்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கங்கள்!

    *
    கடவுள் என்பவன்
    யாரென் றறிய
    யாரைக் கேட்பேன் அறியவில்லை - சரி
    கடவுச் சீட்டு
    தருபவன் யார்தான்
    எங்கிருந் தென்றும் புரியவில்லை...

    இசைபட ஒலிக்கும்
    இன்பமுங் கொடுக்கும்
    கருவியில் நாதம் எவ்வாறோ-நம்
    வசைகளைப் போக்கும்
    வடிவமும் மறைத்த
    கடவுளும் உள்ளான் அவ்வாறே...

    விண்ணையும் மண்ணையும்
    விளையாட் டாய்சிறு
    விளக்காய்க் காப்பதும் இறைவனென்றால்-அம்
    மன்னவன் மக்களை
    மாண்புற உலகினைக்
    காக்க மறந்தே அழிப்பதுமேன்?

    உலகினை உருக்கி
    உயர்வாய்க் கொடுத்த
    உத்தமன் என்றும் நல்லவனே-நிதம்
    அலகினில் சிக்கிய
    இரையாய் அதனை
    அழித்தொழிப் பதுவும் மானிடனே!

    கேள்விக ளனைத்தும்
    கிளம்பும் நொடியில்
    பதிலாய் மூளையில் தருவதுயார்-பொன்
    தூள்களைப் போலே
    என்னுள் பரவி
    துயர்விடும் பதிலினைத் தருவதும்யார்?

    நீரினைக் கொழிக்கும்
    நிலத்தினில் பரவும்
    நெடுமரம் தன்னிலும் உயிராக-அதன்
    வேரென் றிருந்து
    விழுதுகள் செழிக்க
    வைத்திடும் இறைவன் அவனேதான்..

    உன்னிலும் இருந்து
    உயிரையும் இயக்கி
    ஒருநொடி கேள்வியென் றாகிடுவான்-பின்
    கண்களை இமைக்கும்
    கணத்தில் பதிலாய்
    கடவுள் அவனே உரைத்திடுவான்!

    நன்மையும் அவனே
    தீமையும் அவனே
    நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
    உன்னிலும் அவனே
    என்னிலும் அவனே
    ஊனுயிர் உலகும் அவனேதான்!

    நன்றிகள்!
    சிறிய இடைவெளிக்குப் பின் தங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  9. அவனடியாரின் பா அழகு. வாழ்க. அண்ணாமலையாரின் பாவனைய நீண்ட பாவெழுத வேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. அண்ணாமலையாருக்கு. நீண்ட இடைவேளைக்குப் பிறகுத் தாங்கள் எங்களோடு இணைந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சித் திருகிறது. பாவும் அருமை. மிகச்சிறந்த பா. வாழ்க.

    பதிலளிநீக்கு
  11. பூங்கா!

    நரகத் திடையே
    துறக்கம் போல
    நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
    சிரிக்கும் பூக்களைத்
    திருடா திருக்கத்
    திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

    சின்னப் பூக்கள்
    சிரிக்கும் அழகில்
    சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
    கன்னம் வைத்துக்
    கவின்மலர்த் தேனைக்
    கவர்ந்து போகும் பொன்வண்டு!

    திங்கள் தவழும்
    தென்றல் உலவும்
    சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
    தங்கும் பூங்காத்
    தன்னைச் சார்ந்து
    தங்கிக் களிப்பார் தனிமையிலே!

    விரித்த பாய்போல்
    விளங்கும் பாதை
    விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
    இருக்கும் மனம்விடுத்(து)
    இலைதழை மறைவில்
    இன்புறும் வகையால் உளங்களிக்கும்!

    அமைதி தேடி
    அலையும் கூட்டம்
    அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
    அமைதி தேட
    அமைத்த பூங்கா
    அமைதி இழந்து தவிக்கிறது!

    மாலை வந்தால்
    மக்கள் வந்து
    மலிவார் அமைதி பறிபோகும் -சிலர்
    மாலை வந்தால்
    மனத்துயர் விடுத்து
    மறுபடி கிளப்ப இரவாகும்!

    பின்னல் தலையில்
    பிஞ்சுப் பூக்கள்
    பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
    புன்னகை சிந்தும்
    பூக்களை மெல்லப்
    பூவிரல் நாடிப் பறிக்கிறது!

    சிரித்து மகிழ்ந்து
    சிலபொழு திருந்து
    செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
    வருத்தும் நினைவின்
    வளர்முளை கிள்ளி
    மறக்கச் சிலபேர் வருகின்றார்!

    போகாப் பொழுதைப்
    போக்கித் தொலைக்க
    பூங்கா சேரும் பலருண்டு -உடல்
    வாகாய் விளங்க
    வடிநற் காற்று
    வாங்க வருவார் சிலருண்டு!

    முந்தியை விரித்து
    மூலையில் படுத்து
    மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
    குந்திய இடத்திற்
    கொஞ்சிக் குலவிக்
    குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

    ஓவ்வொரு மரமும்
    ஓவ்வொரு கல்லென
    உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
    அவ்வவர் துணையொடு
    அண்டிக் களித்து
    அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

    கொணர்ந்த பொருளைக்
    குதப்பித் தின்று
    குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
    மணக்கும் பூங்கா
    மணத்தைக் குளைக்க
    வாயிற் புகையொடு சிலர்வருவார்!

    நகைக்கும் பூங்கா
    நாடி மகிழ்ந்து
    நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
    புகைக்கும் அரங்கெனப்
    புகைத்தாற் ப+ங்கா
    புகழ்தனை இழந்து காடாகும்!

    விழுப்ப மெல்லாம்
    விளங்கும் ஒழுக்கம்
    வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
    ஒழுக்கக் குறைகள்
    ஒழித்து விழுப்பம்
    உயர்ந்து விளங்க யார்காவல்?

    சீருடை அணிந்த
    சிறார்கள் போலச்
    சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
    பேருடை தன்னின்
    பெரும்புகழ் குறைத்தல்
    பிழையெனச் சாடி முடிக்கிறது!

    பதிலளிநீக்கு
  12. பூங்கா!

    நரகத் திடையே
    துறக்கம் போல
    நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
    சிரிக்கும் பூக்களைத்
    திருடா திருக்கத்
    திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

    சின்னப் பூக்கள்
    சிரிக்கும் அழகில்
    சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
    கன்னம் வைத்துக்
    கவின்மலர்த் தேனைக்
    கவர்ந்து போகும் பொன்வண்டு!

    திங்கள் தவழும்
    தென்றல் உலவும்
    சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
    தங்கும் பூங்காத்
    தன்னைச் சார்ந்து
    தங்கிக் களிப்பார் தனிமையிலே!

    விரித்த பாய்போல்
    விளங்கும் பாதை
    விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
    இருக்கும் மனம்விடுத்(து)
    இலைதழை மறைவில்
    இன்புறும் வகையால் உளங்களிக்கும்!

    அமைதி தேடி
    அலையும் கூட்டம்
    அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
    அமைதி தேட
    அமைத்த பூங்கா
    அமைதி இழந்து தவிக்கிறது!

    மாலை வந்தால்
    மக்கள் வந்து
    மலிவார் அமைதி பறிபோகும் -சிலர்
    மாலை வந்தால்
    மனத்துயர் விடுத்து
    மறுபடி கிளப்ப இரவாகும்!

    பின்னல் தலையில்
    பிஞ்சுப் பூக்கள்
    பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
    புன்னகை சிந்தும்
    பூக்களை மெல்லப்
    பூவிரல் நாடிப் பறிக்கிறது!

    சிரித்து மகிழ்ந்து
    சிலபொழு திருந்து
    செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
    வருத்தும் நினைவின்
    வளர்முளை கிள்ளி
    மறக்கச் சிலபேர் வருகின்றார்!

    போகாப் பொழுதைப்
    போக்கித் தொலைக்க
    பூங்கா சேரும் பலருண்டு -உடல்
    வாகாய் விளங்க
    வடிநற் காற்று
    வாங்க வருவார் சிலருண்டு!

    முந்தியை விரித்து
    மூலையில் படுத்து
    மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
    குந்திய இடத்திற்
    கொஞ்சிக் குலவிக்
    குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

    ஓவ்வொரு மரமும்
    ஓவ்வொரு கல்லென
    உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
    அவ்வவர் துணையொடு
    அண்டிக் களித்து
    அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

    கொணர்ந்த பொருளைக்
    குதப்பித் தின்று
    குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
    மணக்கும் பூங்கா
    மணத்தைக் குளைக்க
    வாயிற் புகையொடு சிலர்வருவார்!

    நகைக்கும் பூங்கா
    நாடி மகிழ்ந்து
    நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
    புகைக்கும் அரங்கெனப்
    புகைத்தாற் ப+ங்கா
    புகழ்தனை இழந்து காடாகும்!

    விழுப்ப மெல்லாம்
    விளங்கும் ஒழுக்கம்
    வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
    ஒழுக்கக் குறைகள்
    ஒழித்து விழுப்பம்
    உயர்ந்து விளங்க யார்காவல்?

    சீருடை அணிந்த
    சிறார்கள் போலச்
    சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
    பேருடை தன்னின்
    பெரும்புகழ் குறைத்தல்
    பிழையெனச் சாடி முடிக்கிறது!

    பதிலளிநீக்கு
  13. ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

    இரவில் இருவர்
    இயற்றிய ஆட்டத்(து)
    உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
    இறக்கும் வரையில்
    இளமை தொடங்கி
    இனிதே ஆடி அடங்குகிறான்!

    தினவெ டுத்தவன்
    தோள்கள் தளருமுன்
    துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
    உணர்ச்சி மிக்கவன்
    உள்கோ பத்தை
    உலவ விட்டுப்பின் வாடுகிறான்!

    முகத்தின் முன்னே
    முறுவ லிப்பவன்
    முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
    அகத்தில் தீதை
    ஆட விட்டவன்
    அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!

    தனமொன் றினையே
    தகுதி யென்பவன்
    தப்பின் வழியை நாடுகிறான் -நற்
    குணமென் பதையே
    குழியில் இட்டவன்
    கோபுரம் மீதே வாழுகிறான்!

    சுயநல மதையே
    சூத்திர மாக்கிச்
    சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
    மயங்கி மதுவில்
    மனதை விட்டவன்
    வாழ்வைத் தொலைத்துத் தேடுகிறான்!

    விதியின் வழியில்
    விருப்ப முற்றவன்
    'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
    மதியி ருப்பதை
    மறந்து போனவன்
    வாழ்வே சுமையென விண்டிடுவான்!

    மோகப் போழ்தினில்
    மெல்லிடை தனிலே
    சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
    தேகம் தளர்கையில்
    சிற்றிடை யதையே
    நரகம் என்பவர் சிலருண்டு!

    ஆடி அடங்கும்
    வாழ்க்கை இதையே
    வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
    ஆடும் ஆசையை
    அகற்றும் ஆசையால்
    ஆசையை புத்தன் வென்றானா?

    பிறப்பில் தொடங்கும்
    ஆட்டம் இதனை
    இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
    இறப்பில் இவனே
    முடித்த ஒன்றை
    அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!

    பதிலளிநீக்கு
  14. நெஞ்சம் இனிக்க
    நிறையப் புகழ்வார்
    நல்லுளம் கொண்ட அவனடியார் அவர்
    கொஞ்சும் தமிழில்
    குறைதவிர்த் தெழுத
    கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால்

    சிந்தியப் பூவை
    சேர்த்துக் கட்டும்
    செயலாய்ச் சொல்லும் அறிவுரைதாம் நம்
    சிந்தைத் தெளிய
    சிறப்பாய் அமைய
    செய்யும் உதவி சிறியவையோ

    பண்ணில் அழகை
    பார்வையில் தெளிவை
    பழகச் செய்யும் நெறியினையே அவர்
    பரிவாய் புரியும்
    படியாய் உரைப்பார்
    படைப்போம் சிறந்த பாக்களையே

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. /நன்மையும் அவனே
    தீமையும் அவனே
    நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
    உன்னிலும் அவனே
    என்னிலும் அவனே
    ஊனுயிர் உலகும் அவனேதான்!

    /

    அருமை

    அண்ணாமலை அவர்களே

    பதிலளிநீக்கு
  17. /அமைதி தேடி
    அலையும் கூட்டம்
    அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
    அமைதி தேட
    அமைத்த பூங்கா
    அமைதி இழந்து தவிக்கிறது!

    /

    பாக்கள் அனைத்தும் அற்புதம்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. அண்ணாமலை அவர்களின் பா மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. நன்றிகள் திகழ் அவர்களே! நீங்களும் முயலலாமே!

    பதிலளிநீக்கு
  20. //விழுப்ப மெல்லாம்
    விளங்கும் ஒழுக்கம்
    வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
    ஒழுக்கக் குறைகள்
    ஒழித்து விழுப்பம்
    உயர்ந்து விளங்க யார்காவல்?//

    நல்ல கருத்துச் செறிவுள்ள பாடலய்யா! நன்றி. புறக்காவல் வைத்து பொதுவிடங்களைக் காப்பாற்றமுடியுமா? அல்லது பொதுமக்கள் மனம் மாறவேண்டுமா?

    பூங்காற் றில்புகை
    புன்சொலின் பேரொலி
    புண்ணாய்ப் போனது பொதுவிடமாம் - இனி
    ஆங்குள அழுக்கினை
    அறவே அழித்திட
    அகவழுக் கறுப்போம் அதுவிடமாம்.

    பதிலளிநீக்கு
  21. //நன்மையும் அவனே
    தீமையும் அவனே
    நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
    உன்னிலும் அவனே
    என்னிலும் அவனே
    ஊனுயிர் உலகும் அவனேதான்!/

    அண்ணா மலையின்
    அழகுத் தமிழ்ப்பா
    ஆன்மீ கத்தை அலசுவதேன் - அது
    அண்ணா மலையான்
    அருட்பெயர்த் திறனவர்
    அளிப்பது அரிய அருஞ்சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  22. //தினவெ டுத்தவன்
    தோள்கள் தளருமுன்
    துடியிடை மீதே ஆடுகிறான் ..//

    //மோகப் போழ்தினில்
    மெல்லிடை தனிலே
    சொர்க்கம் கண்டவர் பலருண்டு //

    தத்துவப் பாடல்
    தமதினப் பாடல்
    தருவதில் தீரன் திருவமுதன் - இவன்
    இத்தனை பணியின்
    இடையிலும் இன்புற
    இருபா விசைத்தான் அதிசமர்த்தன்.

    பதிலளிநீக்கு
  23. //சிந்திய’ப்’ பூவை//
    //சிந்தை’த்’ தெளிய//

    அவனடி மைப்புகழ்,
    அவப்பெய ரெல்லாம்
    அவனையே சேரும் அறுமுகனே - தினம்
    கவனமோ டொற்றை
    கருத்தொடு கொடுக்க
    கவிமணங் கமழும் குருபரனே!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com