சனி, 11 டிசம்பர், 2010

இசைப்பா! 3

இப்பாடத்தில் வேறொரு வகையான இசைப்பாவைப் பற்றி அறியவிருக்கிறோம்.

மறப்பேனா?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

காசி. ஆனந்தன் -மட்டக்களப்பு.

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.

13 கருத்துகள்:

  1. பலவிதப் பாக்களையும் பழகிட வாய்ப்பளிக்கும்
    ஆசான் அகரம் அமுதனாருக்கு நன்றிகள் பல!

    ___/\___


    *
    நர்த்தன மாடிடும் நாயக னாஞ்சிவ
    நாதனை நாம்தொழுவோம் - புவி
    கர்த்தனு மானவன் காலனை உதைத்தவன்
    கால்களை நாம்தொழுவோம்!

    கத்திக ளாய்நிதம் துன்பமும் வருகையில்
    கலங்கியும் நின்றுவிடோம் - புகல்
    நித்திய மானவன் உத்தமன் தாளினை
    நற்றமி ழாய்த்தொடர்வோம்!

    எத்தரின் பித்தன் தாதனின் தாதன்
    ஏற்றமுந் தந்தருள்வான்-பழஞ்
    சித்தருக் கெல்லாம் சித்தரு மானவன்
    சடுதியில் வந்தருள்வான்!

    சந்தனம் துளசியும் வில்வமும் படைத்திட
    சமுத்திர துயர்விலகும் - நம்
    நிந்தனை ஓடிடும் நலமது கூடிடும்
    நித்தமும் வளம்பெருகும்!

    தந்திடுன் னருளைத் தன்மனத் திருளைத்
    தவிடென் றாக்கிடுவாய்-உயர்
    வந்தனை சொல்லிடும் கயிலா யம்உறை
    வேந்தே வரமருள்வாய்!

    உமையொரு பாகனென் றமைந்தருள் உவமையை
    உலகினுக் கேயுணர்த்தி-விடம்
    தமையொரு உயிரினைத் தீண்டிட மறுத்தும்
    தடுத்தாட் கொண்டதும்ஆர்!

    தப்பையும் தப்பென் றுரைத்தால் அவனை
    தன்னிலை செய்தழித்தே-பின்
    ஒப்புயர் வில்தமிழ் உயர்வினை விளக்கிட
    ஒருவிளை யாட்டிதென்பாய்!

    முத்தமி ழால்நிதம் முத்தெனப் பாக்களை
    முழுமதி யாய்க்கொடுக்க - நீ
    வித்தமு தாயிருந் தென்றனின் நாவினில்
    விளையா டியுமருள்வாய்!

    எத்தனை திருவிளை யாடலை தொடர்ந்தே
    எம்மிடம் நிகழ்த்தியுமே-சிவப்
    பித்தனை முத்தனை பரமனை அணுதினம்
    பணிந்திட மறவோமே!


    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  2. அழகிய பக்திப் பாடலை அமைத்துத் தந்த அவனடியாருக்கு ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும். அருமையான பாடல் அய்யா!

    பதிலளிநீக்கு
  3. படிக்கப் படிக்க இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்று தான் தோன்றுகிறது. பதிவிலும் சரி பின்னூட்டத்திலும் சரி - அருமையாக இருக்கிறது. ஆசான் அமுதனாருக்கு நன்றி. ஆனந்தன் ஐயாவுக்கும் அண்ணாமலை ஐயாவுக்கும் நன்றி.

    ஒரு இசைப்பா எழுத முயற்சிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. முயற்சி திருவினையாக்கும். முயல்க. வெற்றி பெறுக. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம்.

    சில வாரங்களாக என்னால் சிறிதும் எழுத முடியவில்லை. முன்பு பல வேலைகளுக்கு இடையிலும் எழுதினேன். ஆனால் இப்பொழுது சற்றும் இயலவில்லை. சிறிது இடைவெளி தேவைப்படுகிறது.

    முயற்சி திருவினையாக்கும். முயல்க. ///இஃதை கருத்தில் கொண்டு முயல்கிறேன்.

    பா எழுதவில்லை என்றாலும் கண்டிப்பாக பாடங்களைப் படித்து வருகிறேன்.

    சிறப்பாக அமையவில்லை என்றாலும் இப் பாடத்திற்கான என் முயற்சி

    பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
    பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
    ஒன்றேக் குறியென ஊழல் செய்து
    உழைப்பவர் வாடிடவேப் - பொது

    பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
    பிச்சைக் காரரென - மக்களை
    மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
    வன்முறைக் காரர்களை - தன்

    பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை
    புழுவாய் துடித்திடச்செய் - மனங்
    கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
    காலால் மிதித்திடச்செய்-அவர்

    நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
    நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
    வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
    வாய்மை விதைதிடச்செய் - ஓம்

    சக்தி சக்தி சக்தி என்றும்
    சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
    மக்கள் விழித்து வல்லமை யோடு
    மாற்றம் கண்டிடச்செய்.

    பதிலளிநீக்கு
  6. //அப்பாதுரை சொன்னது…
    படிக்கப் படிக்க இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்று தான் தோன்றுகிறது. பதிவிலும் சரி பின்னூட்டத்திலும் சரி - அருமையாக இருக்கிறது. //

    அப்பா துரையின் அலுப்பினை அறவோ
    டகற்றுவாய் அறத்தலைவா** - அவனியில்
    எப்பா வினமும் என்றும் எழுதிட
    இயலுமே எளிதலவா! - இறையருட்

    தத்துவம் தனையே தருமிவர் தெளிவு
    திறமுடன் வெண்பாவாய் - துளிர்த்தெழும்^^
    சிறுவன் நசிகே தனனின் சரிதை
    சுவைத்திரு வெம்பாவாய்.

    ** அறத்தலைவன் - தர்மராஜன், எமன்
    ^^ பார்க்க அப்பாதுரை அவர்களின் கடோபனிஷத் பதிப்புகள்: http://nasivenba.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. //உமா சொன்னது…
    தன்
    பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை
    புழுவாய் துடித்திடச்செய்//

    சக்தி பாடல் நன்றாக இருக்கிறது.

    ‘பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை’ என்பது எவரைக் குறிக்கிறது? எப்படி அவர்களை கயவர்களுடன் சேர்த்தீர்கள் ?

    பதிலளிநீக்கு
  8. ‘பொறுப்பை மறந்து படிக்கும் பெண்களை’ என்பது எவரைக் குறிக்கிறது? எப்படி அவர்களை கயவர்களுடன் சேர்த்தீர்கள் ?//

    தெளிவாக இல்லையோ?மன்னிக்கவும்.

    தன் பொறுப்பு எவ்வளவுப் பெரிது என்பதை நினைக்காமல் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து அவர்கள் புழுவாகத்துடிக்கும் படி அவர்களின் எதிகாலத்தை வீணாக்கும் ஆசிரியர்களே மனங்கல்லாய்ப் போன கயவர்கள்.
    [ஐயா இவ்வாறு மாணவிகளைக்கற்பழித்த ஆசிரியர்கள் சிலரைப்பற்றியச் செய்திகளை கேள்விப்பட்டதன் விளைவே இது.]

    பதிலளிநீக்கு
  9. //தன் பொறுப்பு எவ்வளவுப் பெரிது என்பதை நினைக்காமல் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து அவர்கள் புழுவாகத்துடிக்கும் படி அவர்களின் எதிகாலத்தை வீணாக்கும் ஆசிரியர்களே...//

    உங்கள் விளக்கத்திற்கு பிறகு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நன்றி.

    பின்னே வரும் மூன்று ‘செய்’-களும், ’மிதித்திடச்செய்’, ‘விதைதிடச்செய்’, ’கண்டிடச்செய்’ என்று சக்தியிடம் செய்யும்படி சொல்ல, ‘பெண்களை
    புழுவாய் துடித்திடச்செய்’-இல் வரும் முதல் ‘செய்’ மட்டும் ‘பெண்களை புழுவாய் துடித்திடச்செய்யும்....கயவரை’ என்ற பொருளில் உபயோகித்துள்ளீர். இதுதான் குழப்பத்தின் காரணம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
    ____/\_____

    பதிலளிநீக்கு
  12. அவனடிமை ஐயா... மிக நன்றி.
    நான் முன்பு சொன்னதும் சரிதானே - உடனே எழுத வரவில்லை பாருங்கள்.
    முயற்சி திருவினையாக்கும் - சரியே. விடப்போவதில்லை. :)

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com