புதன், 28 மே, 2008

பாடம்3 சீர்!

இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.

1 ஈரசைச்சீர்

நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.

அவை:-

நேர் நேர் -தேமா
நிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.

நிரை நிரை -கருவிளம்
நேர் நிரை -கூவிளம் இவ்விரண்டுச் சீரும் விளச்சீர் எனப்படும்.

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம்
எனுமிவை நான்கும் ஈரசைச் சீரே!
-தொல்காப்பியம்

2- மூவசைச்சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நான்கினோடும் நேர் நிரை என்னும் இருஅசைகளையும் உழறினால் (பெருக்கினால்) (4x2-8) மூவசைச் சீர்களாகும்.

அவை:-

நேர் நேர் நேர் -தேமாங்காய்
நிரை நேர் நேர் -புளிமாங்காய்
நிரை நிரை நேர் -கருவிளங்காய்
நேர் நிரை நேர் -கூவிளங்காய் -என் நான்கு காய்ச்சீரும்

நேர் நேர் நிரை -தேமாங்கனி
நிரை நேர் நிரை -புளிடாங்கனி
நிரை நிரை நிரை -கருவிளங்கனி
நேர் நிரை நிரை -கூவிளங்கனி -என நான்கு கனிச்சீரும் கிடைக்கும்

குறிப்பு:-

நாம் காணவிருக்கும் வெண்பாப் பாடத்திற்கு மாச்சீர் இரண்டும், விளச்சீர் இரண்டும், காய்ச்சீர் நான்கும் மொத்தம் எட்டு சீர்களே தேவை என்பதால் கனிச்சீரை விட்டுவிடுவோம்.

இங்கே சில சொற்கள் தரப்பட்டுள்ளன. அசைபிரித்துப் பார்க்கவும். ஈரசைச் சீரா மூவசைச் சீரா என்பதையும் கவனிக்கவும்.

1.கணக்கு 2.கூப்பாடு 3.பண்பாடு 4.நல்லிணக்கம் 5.கட்டளை 6.இராக்கோழி 7.தண்ணீர் 8.பு+ம்புகார் 9.பாகற்காய் 10.செந்தமிழ்

குறிப்பு:-

சோல்லின் முதலில் ஐ-வரிசை எழுத்துக்களோ ஔ-வரிசை எழுத்துக்களோ வரின் அவ்வெழுத்துக்களை நெடிலாகத்தான் கொள்ளவேண்டும்.

எ.காட்டு:-

தையல் – தை/ யல் -இச்சொல்லில் ஐகாரம் சொல்முதலில் வருவதால் தை என்னும் எழுத்து நெடிலுக்குரிய இரண்டுமாத்திரைகளோடு வருவதைக் காண்க.

ஆனால் அதே ஐகாரமும் ஔகாரமும் சொல்லின் இடையிலோ கடையிலோ வரின் குறிலுக்கரிய மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். (தன் மாத்திரை அளவினின்றுக் குறைந்துவருவதால் இதனை ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் என்பர்)

எ.காட்டு:-

கையையெடு -கை /யையெ /டு இதில் கை ஓர் அசையாகவும் ‘யையெ’ என்னும் ஈரெழுத்தும் சேர்ந்து ஓர் அசையானதையும் காண்க. (ஔகாரம் சொல்லின் முதலிலன்றி சொல்லின் இடையிலும் கடையிலும் வராது. எனினும் ஔகாரத்திற்கும் பொருந்தும்)

கண்ணுடையார் -கண் ணுடை யார்
புண்ணுடையார் -புண் ணுடை யார்

காடைகௌதாரி -கா /டைகௌ/ தா /ரி என நான்கு அசைகளாக் பிரிந்தமை காண்க. ( ‘டைகௌ’ இவ்விரு நெடிலும் தன் மாத்திரை அளவிலிருந்துக் குறைந்துக் குறிலேபோல் வருவதைக் காண்க.)

இதுபோல் சில சொற்களைப் பிரித்துப்பார்க்கவும்.
1.தேனடை 2.கெண்டைமீன் 3. கொண்டைமுடி 4.கையுறை 5.கைப்பை

3.அசைச்சீர்

நேர் நிரை என்னும் இரண்டசையும் வெண்பாவின் ஈற்றில் தனிச்சீராக வரும். இதை அசைச்சீர் என்பர்.

எ.காட்டு:-

நேர் -நாள்
நிரை -மலர்

கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி
ஊனெடுத்த தேவன் உரு!
-அகரம்.அமுதா

-இவ்வெண்பாவின் ஈற்றுச்சீராகிய உரு -நிரையசையானதைக் காண்க தனியசையாக கவெண்பாவின் ஈற்றில் இச்சொல் வருவதால் அது மலர் என்னும் வாய்பாடெடுத்து வருவதறிக.

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் பார் என்கிற நேரசை வெண்பாவின் ஈற்றில் வருவதால் நாள் வாய்பாடெடுத்து வருவது காண்க.

என்போல் உழந்தார் இடர்?
என்றனுக் கிந்தநிலை ஏன்?
தாய்வழிப் பாட்டனைத் தான்! -இவ்வீற்றடிகளில் வரும் ‘இடர்’ ‘ஏன்’ ‘தான்’ போன்றவை நாள் அல்லது மலர் வாய்பாடெடுத்துவருதல் காண்க.


4.காசு, பிறப்பு!

முன்பு கண்ட நேரசை நிரையசைக் குரிய வாய்பாடாகிய நாள் மலர் என்னும் அசைகளோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்துவந்தால் நாள்- காசாகவும் மலர்- பிறப்பாகவும் மாறும்.

பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசையுகரத்தை நேர்பு என்றும் பிறப்பு என்னும் நிரையசையுகரத்தை நிரைபு என்றும் கொண்டனர்.

வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!
-அகரம்.அமுதா

-இவ் வெண்பாவில் ‘பெரிது’ என்னும் (நிரைபு) பிறப்பு வாய்பாடைக்காண்க.

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!
-அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் நெஞ்சு என்னும் (நேர்பு) காசு வாய்பாடெடுத்தமை காண்க.


நேரசையுகரம் -நேரசையோடு (குசுடுதுபுறு) என்னும் வல்லின உகரம் சேர்ந்தது.
நிரையசையுகரம்- நிரையசையோடு வல்லின உகரம் (குசுடுதுபுறு) சேர்வது.

எ.காட்டு:-

பாடு காது ஊறு தேக்கு- நேரொடு வல்லின உகரம் சேர்ந்து (நேர்பு) காசு வாய்பாடெடுத்தல் காண்க.

கிழடு புணர்ந்து பிணக்கு விறகு நடாத்து நிரையொடு உகரம்சேர்ந்து (நிரைபு) பிறப்பு வாய்பாடெடுத்தல் காண்க.

நாள்மலர் காசு பிறப்பெனும் நான்கும்
வெண்பா வீற்றில் மேவிடுஞ் சீரே.
-தொல்காப்பியம்

குறிப்பு:-

நாள் மலர் என்பன வெண்பாவின் ஈற்றில் அன்றி வேறிடங்களில் வரா. காசு பிறப்பு இவ்விரண்டும்; வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமா எனக் கொள்ளவேண்டும். வெண்பாவின் ஈற்றில் மட்டுமே காசு பிறப்பாக மாறும்.

அகரம்.அமுதா

13 கருத்துகள்:

  1. சரி பாருங்கள் அமுதா....

    1.கணக்/கு நிரை நேர்
    2.கூப்/பாடு நேர் நிரை
    3.பண்/பாடு நேர் நிரை
    4.நல்/லிணக்/கம் நேர் நிரை நேர்
    5.கட்/டளை நேர் நிரை
    6.இராக்/கோழி நிரை நிரை
    7.தண்/ணீர் நேர் நேர்
    8.பூம்/புகார் நேர் நிரை
    9.பாகற்/காய் நிரை நேர்
    10.செந்/தமிழ் நேர் நிரை

    4.நல்/லிணக்/கம் நேர் நிரை நேர் மட்டும் மூவசை ... கரெக்ட்டா?

    பதிலளிநீக்கு
  2. கூப்/பா/டு -நேர்நேர்நேர் -தேமாங்காய்
    பண்/பா/டு -நேர்நேர்நேர் -தேமாங்காய்
    இராக்/கோ/ழி -நிரைநேர்நேர் -புளிமாங்காய்
    பா/கற்/காய் -நேர்நேர்நேர் -தேமாங்காய்

    நீங்கள் முதற்பாடத்திலிருந்து மீண்டும் கருத்தூண்றிப் படிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்னொரு வினா:
    ஈற்றசைச்சீர் உதாரணம்: ஓடா, வாடா, தேடா
    என முடியலாமா?
    (இது காசு என்னும் வாய்ப்பாடுக்கு ஒப்புமா?)

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாகக் கூடாது. ஏன்னா! ஓடா என்பதை அசை பிரிச்சா ஓடா நேர் நேர்-தேமாவாகிவிடும். வெண்பாவின் ஈற்றில் ஓடா என்று வரக்கூடாது. ஓடு என்றுதான் வரவேண்டும்.

    நீங்கள் கேட்கலாம். ஓடு-நேர்நேர்-தேமா தானே? இதுவும் தேமா. அதுவும் தேமா. அப்படி இருக்கும் போது ஓடு-என்று முடியலாம். ஓடா என்று முடியக்கூடாதா? இது என்ன ஓரவஞ்சனை என்று.

    ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும். வெண்பாவில் மொத்தம் 15 சீர்கள். இதில் 14சீர்களுக்கு ஓரிலக்கணம். 15-வது சீராகிய ஈற்றுச் சீருக்கு ஓரிலக்கணம்.

    அதென்ன ஈற்றுச் சீருக்கு மட்டும் வேறிலக்கணம்?

    வெண்பாவின் அழகே அதன் ஈற்றடியில்தான் உள்ளது. அதிலும் ஈற்றுசீர் வெண்பாவின் முகம்போல. நாம் உடல் முழுவதும் அழகுபடுத்துவதில்லை. குறிப்பாக முகத்தையல்லவா அழகு படுத்துகிறோம். மற்றவர்கள் நம் முகத்தைப் பார்த்துப் பேசுகிற போது நாம் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவல்லவா?

    அதுபோலத்தான் வெண்பாவின் ஈற்றுச் சீரையும் அழகு படுத்துகிறோம்.

    பெண்தன் முகத்தில் பவுடர் லிப்ஸ்டிக் ஐப்ரோ ஸ்டிக்கர்ப்போட்டு போன்றவை வைத்து அழகுபடுத்துதல் போல நாம் வெண்பாவையும் அழகுபடுத்துகிறோம்.

    எதையெதையெல்லாம் வைத்து.

    அதுதான் நாள் மலர் காசு பிறப்பு!

    இதில் காசு பிறப்பு இவ்விரண்டையும் பாருங்கள் இறுதியில் உகரப் புணர்ச்சியோடு முடிகிறதல்லவா?

    ஓடா-தேமா- ஓ-தே டா-மா
    ஓடு-காசு -ஓ-கா டு-சு -நன்றாகக் கவனிக்கவும்

    வெண்பாவின் ஈற்றுசீர் ஈரசைச் சீராக வந்தால் கண்டிப்பாக உகரப் புணர்ச்சியுடன் தான் முடியவேண்டும் இதுவும் வெண்பாவின் விதிகளுள் ஒன்று!

    பதிலளிநீக்கு
  5. நல்லது, விளக்கத்திற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. //வெண்பாவின் அழகே அதன் ஈற்றடியில்தான் உள்ளது. அதிலும் ஈற்றுசீர் வெண்பாவின் முகம்போல. நாம் உடல் முழுவதும் அழகுபடுத்துவதில்லை. குறிப்பாக முகத்தையல்லவா அழகு படுத்துகிறோம். மற்றவர்கள் நம் முகத்தைப் பார்த்துப் பேசுகிற போது நாம் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவல்லவா?

    அதுபோலத்தான் வெண்பாவின் ஈற்றுச் சீரையும் அழகு படுத்துகிறோம்.
    //

    கலக்கலான விளக்கம். பொதுவில் விவாதிக்கும் போது இலக்கண விதி என்ற அளவில் மட்டுமே பேசுவார்கள். ஒப்புமை சுவையோடும், ஏற்கத் தக்கதாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நன்றி! நன்றி! நன்றி! முகவை அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. 1.கணக்கு
    கண/க்கு
    = நிரை/நேர்
    =புளிமா

    2.கூப்பாடு
    கூ/ப்பா/டு
    = நேர்/நேர்/நேர்
    =தேமாங்காய்

    3.பண்பாடு
    பண்/பா/டு
    =நேர்/நேர்/நேர்
    =தேமாங்காய்

    4.நல்லிணக்கம்
    நல்/லிணக்/கம்
    =நேர்/நிரை/நேர்
    =கூவிளங்காய்

    5.கட்டளை
    =கட்/டளை
    =நேர்/நிரை
    =கூவிளம்

    6.இராக்கோழி
    =இராக்/கோ/ழி
    =நிரை/நேர்/நேர்
    =புளிமாங்காய்

    7.தண்ணீர்
    =தண்/ணீர்
    =நேர்/நேர்
    =தேமா

    8.பூம்புகார்
    =பூம்/புகார்
    =நேர்/நிரை
    =கூவிளம்

    9.பாகற்காய்
    =பா/கற்/காய்
    =நேர்/நேர்/நேர்
    =தேமாங்காய்

    10.செந்தமிழ்
    =செந்/தமிழ்
    =நேர்/நிரை
    =கூவிளம்

    அமுதன் சரியா எழுதி இருக்கேனா நான்...

    பதிலளிநீக்கு
  9. 1.கணக்கு
    கணக்/கு
    = நிரை/நேர்
    =புளிமா

    2.கூப்பாடு
    கூப்/பா/டு
    = நேர்/நேர்/நேர்
    =தேமாங்காய்

    மற்றவை அனைத்தும் சரியே! வாழ்த்துகள். மீண்டும் மீண்டும் முயலுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. நான் இரண்டாம் பாடத்தில் கேட்ட வினாவிற்கு
    விடை மூன்றாவது
    பாடத்தில் கிடைத்தது... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  11. நன்றிகள் இரவுப்பறவையாரே! தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஈற்றுச் சீருக்கான விளக்கம் �� அருமை, அழகு

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com