தோழர்களே! தோழிகளே!
வெண்பா எழுதலாம் வாங்க! பகுதியில் தமிழ்ப் பாவடிவங்களிலேயே தலைசிறந்த அழகான புரிந்துகொண்டால் பாடுதற் கெளிய அதேவேளையில் இலக்கணம் அறிந்த பெரும் பாவலர்களையும் மண்ணைக் கவ்வச் செய்துவிடும் ஆற்றல் படைத்த வெண்பாவைக் கற்க விருக்கிறோம்.
முதலில் வெண்பா என்றால் என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழின் தொன்மையையும் சற்றே பார்ப்போம்!
வெண்பா என்றால் வெள்ளைப் பாவேன்றும், கள்ளங்கபட மற்ற பாவேன்றும், குற்றமற்ற பாவேன்றும், தூய்மையான பாவேன்றும், பொருளற்ற பாவேன்றும் பொருள் கொள்ளலாம்.
மேலும் வெண்பாவிற்கு உரிய வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை ஆகிய வெண்+தளைகளால் ஆனதாலும் வெண்பா எனுன் பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம்.
வெண்பாவை வெண்+பா எனப் பிரித்தால் வெள்ளைப் பா என்றாகும் அல்லவா?
வெண்மை தூய்மைக்கு உவமை அல்லவா?
வெண்மை சமாதானத்திற்கு உவமை அல்லவா?
வெண்மை ஒன்றுமற்றதுபோல் தோன்றும் ஆனால் எழு நிறங்களும் அடங்கிய ஓர் நிறமல்லவா?
வெண்மை கள்ளங்கபடம் அற்ற தல்லவா? (கள்ளங்கபடமற்ற மனதை வெள்ளை மனம் என்கிறோமே!)
இப்படி பல பொருளை வெண்பா என்னும் ஒரு சொல் தருமென்றால் வெண்பாவால் எழுத முடியாத நிகழ்வும் கருத்தும் இருக்க முடியுமா?
(வெண்பா என்ற சொல்லுக்கு வேறு பொருளும் இருப்பதாகக் கருதினால் பின்னூட்டில் தெரியப் படுத்தலாம்)
தொன்மை!
உலக மொழிகளுள் தமிழ்மொழியே முதன்மையான மொழியாகும். காரணம் இதன் இயல்பும் எளிமையும் இனிமையுமே ஆகும். தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இயல்பான ஒலியுடையவை. இவ்வெழுத்துக்கள் தனித்தும் சொல்லின் கண்ணும் ஒரே தன்மையாக ஒலிக்கும் இயல்புடையவை. தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையில் புணர்ந்து சொன்னயமும் பொருள் நயமும் ஓசை நயமும் பயக்குந்தன்மை தமிழ் எழுத்துகளுக்கே உரிய தனித்தன்மை ஆகும்.
தமிழ்மொழி மிக எளிதில் பேசவும் எழுதவும் படுவது. நிரம்பிய இலக்கியச் செல்வமுடையது. முற்ற முடிந்த திண்ணிய இலக்கண வரம்புடையது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்தது.
பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்போருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும்
கவிம்மலையா ளமுந்துளுவும்
உன்னுதிரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவயக்
கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
என மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியந்து பாடியிருக்கிறார் என்றால் தமிழின் இனிமையிப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிற உயரியக் கருத்துக்களைத் தன்னகத்தே தேக்கி அதைக் காலங்காலமாக உலகுக்கு வழங்கிவரும் உயரிய ஆற்றல் படைத்தமொழி நம் செந்தமிழ் ஒன்றே!
நடை!
நம் தமிழில் செய்யுள் நடை உரை நடை என இருவகை உண்டு.
பழங்காலம் தொட்டு இவ்விரு நடை எழுதும் தமிழில் பயின்று வந்தன.
உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது சிலப்பதிகாரம். இவ்விரு நடையும் தமிழுக்கு இருகண் போன்றவை.
இவ்விரு நடையில் சிலவகை எழுத்தில் பலவகைப் பொருளை எண்வகைச் சுவையும் ததும்ப சொல்லணி பொருள் அணி என்னும் இருவகை அணிகலத்துடன் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஆழமுடைத்தாதல் முதலிய அழகுமிளிற கருத்தைக் கவரும் கற்பனைச் செறிவுடன் அமைத்துக் கூற ஏற்ற இடம் செய்யுள் ஆகும்.
தொல்தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும் அவை வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆகும்.
வெண்பா ஒழிய மற்ற முன்று பாவகைகளிலும் விருத்தப் பாக்கள் இடைக்காலத்தில் தோன்றின. சிந்து மற்றும் வண்ணப்பாக்களும் இடைக்காலத்தில்தான் தோன்றின.
பாவகைகளிலேயே இளமையான பிற பாக்களுக்குறிய தளைகள் இடம்பெறாது நடைபோடுகிற ஆற்றல்வாய்ந்த வெண்பாவையே இப்பகுதியில் நாம் கற்கவிருக்கிறோம்.
அகரம்.அமுதா
அற்புதம் அமுதா டீச்சர்....மிக அருமையான ... இக்காலகட்டத்திற்கு தேவையான முயற்சி...
பதிலளிநீக்குமுதல் மாணவன்
நந்தா நாச்சிமுத்து.
அன்பு நண்பரே!
பதிலளிநீக்குவெண்பா இலக்கணத்தைத் தாங்கள் போதித்துள்ள இப்பக்கத்துக்கு நான் வந்ததில், நிறைய கற்றுக் கொண்டேன். வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
ஆ, இவ்வளவு பெரிய பாடம் - முழுக்க படிக்க சில நாட்களாகும், பொறுத்தருளவும்!
பதிலளிநீக்குமோனத்தொடை வரை படித்திருக்கிறேன், அதில் எழுந்த வினாக்கள்:
1. ஒன்றாம் சீரையும் மூன்றாம் சீரையும் மோனைத்தொடைக்காக ஒத்து நோக்குவதுபோல், இரண்டாம் மற்றும் நான்காம் சீரையும் நோக்கலாமா?
2. குறிப்பிட்ட சில உயிர்மெய்களைத் தவிர, இதர எழுத்துக்களுக்கு இனம் கிடையாதா?
3. ஒரு சீரை - ஈரசைச்சீராகப் பிரிப்பதா அல்லது மூவசைச்சீராக பிரிப்பதா என்பதை முடிவு செய்ய இந்த தொடைகள் கைகொடுக்கும் போலத் தெரிகிறது, சரியா?
4. உயிர் எழுத்துக்களில் இனமோனை எளிதாகப் புரிகிறது (அகர, இகர, உகர கூட்டணி). ம-வ கூட்டணி, மற்றும் த-ச கூட்டணி - ஒரே ஓசை நயம் இல்லாததுபோல் இருக்கிறதே...?
5. முதல் சீரையும் இரண்டாம் சீரையும் ஏன் மோனைத் தொடைக்காக ஒத்து நோக்குவத்தில்லை?
மன்னவன் வந்தான்
தங்கச் சொம்பு
சந்தம் தங்கும்
போன்றவை மோனைத்தொடைகள் இல்லையா?
மிக்க நன்றி கிரிஜாமணாளன் அவர்களே! தங்கள் வருகை என்னைப் பெரின்பத்தில் ஆழ்த்தியதென்றால் அது மிகையாகாது!
பதிலளிநீக்குஜீவா! தங்களுடைய இந்த வினாக்களுக்கெல்லாம் ஓர் பாடமே எழுதவேண்டும். அடுத்தப்பாடம் தங்களுடைய வினாவைப் பற்றியதுதான். ஆகையால் இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளவும்.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி!
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த பாராட்டுகள்!
விழுப்புரம் 'பாடல் வளாகம்' என்ற அமைப்பின் வழி மரபு பாடல்கள் எழுதும் பயிற்சி வகுப்புகளை மாதத்திற்கு இரு நாள் இரண்டு மணிநேர வகுப்புகளாக 15 மாதங்கள் நடத்தியிருக்கின்றோம்.
அவ்வகுப்புகளில் பயின்றோர்
பாடல்கள்,
புதுவையினின்றும்
வெளிவரும் 'நற்றமிழ்' என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழில்
தொடர்ந்து வெளிவந்தன என்ற செய்தியையும்
உங்களுக்குக் கூறுவதில் மகிழ்ச்சி!
அன்பன்,
'பாடல் வளாகம்' ஒருங்கிணைப்பாளனும் பொறுப்பாண்மையனுமான,
தமிழநம்பி.
மிக்க நன்றி தமிழநம்பி அவர்களே! தங்களிடம் மரபுபயின்ற மாணவர்களிடம் என்வலையை அறிமுகப்படுத்தி ஈற்றடிக்கு வெண்பா எழுதச்சொல்லுங்களேன். அவர்களுக்கும் பயிற்சிசெய்தாற்போல் இருக்குமல்லவா?
பதிலளிநீக்குஉண்மைதான்!
பதிலளிநீக்குஆனால், அவர்களில் கணிப்பொறிப்பயிற்சியும் வசதியும் உதையோர் மிகவும் குறைவே!
என்றாலும் ஊக்கப்படுத்துகிறேன்.
அன்பன்,
-தந.
நன்றி தமிழ நம்பி அவர்களே!
பதிலளிநீக்குஇதில் எனக்கு எதுவும் புரிந்தும் புரியாமல் போல் இருக்கிறது. பள்ளியில் கூட இலக்கணம் சரியாக பயிலாதது காரணம் என்று தெரிகிறது..தமிழ்மொழி எனக்கு பிடித்த காரணத்தால் பெண் குழந்தை க்கு வெண்பா என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தேன்.. அதன் அர்த்தம் தெரிந்து கொண்டால் விளக்குவதற்கு சுலபமாக இருக்கும் என்று வலைதளத்தில் நுழைந்தேன்..பெயருக்கு அர்த்தம் புரிந்தது ஆனால் புதிய செய்யுல் அல்லது வெண்பா க்கல் எழதலாம் வாங்க நீங்கள் அழைத்தது தமிழில் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது..நிச்சயமாக நான் தெரிந்து கொண்டு இந்த பக்கத்திற்க்கு மீண்டும் வருவேன் நன்றி வணக்கம்
பதிலளிநீக்கு