செவ்வாய், 2 டிசம்பர், 2008

30. தற்குறிப்பேற்றணி!

உலகில் நிகழும் இயல்பான நிகழ்வைக் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் குறிப்பிடுவதே தற்குறிப்பேற்றணியாம்.

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!


பொருள்:- இவளுடைய மையுண்ட கண்களுக்கு இருவகையான பார்வைத்தன்மைகள் உண்டு. ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.

கண்கள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை. அதில் பார்வை என்பது இன்றியமையாதது. அப்பார்வை நோய்செய்வதாயும் நோய்க்கு மருந்தாவதாயும் உரைப்பது தற்குறிப்பேற்றணி வகையாகும்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்!


பொருள்:- அனிச்சம் பூவும் அன்னப்பறவையின் இறகும் பெண்ணின் தாள்களுக்கு முள்ளுடன் கூடிய நெருஞ்சிப் பழம் போல வருத்தும்.

பெண்ணின் தாள்கள் மென்மை பொருந்தியவையே. ஆயினும் அனிச்சமும் அன்னத்தின் இறகும் அதனினும் மென்மை வாய்ந்தன என்று யாவரும் அறிவர். ஆயினும் கவிஞன் இயற்கைக்கு மாறாக தன்குறிப்பை ஏற்றி உரைக்கிறார்.

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு -நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு!

பொருள்:-அவளின் நுண்ணிய இடையானது பருத்துயர்ந்த அவளது இளங்கொங்கைகளை முற்றவும் சுமந்து நிற்கும் வலிமையுடையது ஆகமாட்டாதென்று அவளுடைய காலிலே விளங்கும் நூபுரங்கள் புதிய தேன் அலம்பிக் கொண்டிருக்கும் நீண்ட கூந்தலுடைய அவளின் இருகழல்களிலும் தாழ்ந்து கிடந்து எந்நோரமும் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கும்.

பெண்கள் நடந்து செல்கையில் நீண்ட நெடிய கூந்தல் இடையின் பின்புறத்தில் ஆடிஅசைவது இயல்பே. அக்காட்சியைக் கண்ட கவிஞன் கொங்கைகளின் சுமைதாங்காமல் இடைநுடங்குவதாகக் கால்கொலுசினிடம் புலம்புகிறது என்று தன்குறிப்பை ஏற்றிப் பாடுகிறான். ஆதலால் இப்பாடல் தற்குறிப்பேற்றணி வகையாம்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலைத் தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.


பொருள்:- மல்லிகை அரும்புகளையே வெண்சங்காக எண்ணிக் கொண்டு வண்டினம் ஊதிஊதி முழக்குகின்றனவாம். சிறந்த கரும்பினாலான வில்லை உடைய மன்மதன் தன் மலர்க்கணைகளை ஆராயந்து எடுத்துவந்து தன்னைப் பற்றிய உண்மையினைப் பேணுதற்குத் தொடங்கினான். இப்படியாக முல்லை மலர்என்னும் மென்மையான மாலையானது தோளிலே கிடந்து அசைய புல்லிய மாலைப்பொழுதானது அசைந்து நடந்து வந்தது.

அந்தியின் வருகையை ஓர் பேரூர்வலமாக (ராஜபவனி) கவிஞன் உயர்த்திக் (உயர்வுநவிற்சி அணி) கூறியிருப்பதோடு வண்டானது இயல்பாக அமர்ந்து தேனெடுப்பதை மலரை சங்காக எண்ணிக்கொண்டு ஊதி முயங்குகின்றது என்று தன்குறிப்பை ஏற்றிக் கூறியமையால் தற்குறிப்பேற்றணியாகும்.

சிறப்புப் பாடம்! வலிமிகுமிடங்கள்

குறிப்பு:- சங்கர் இராஜகுரு போன்ற நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி இச்சிறப்புப் பாடத்தைத் தருகிறேன்.

சொல்லியங்களைப் பிழையின்றி அமைக்க முகாமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள் வலிமிகுமிடங்கள் மற்றும் வலிமிகாவிடங்கள் ஆகியவை அடங்கும். இப்பாடத்தில் வலிமிகுமிடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வலி என்பது வல்லெழுத்துகளாம். அவ் வல்லெழுத்துகள் எங்கெல்லாம் மிகுந்து வரும் என்பதை அறிந்து எழுதப்பழகுவோம்.

சற்றேறக் குறைய வலிமிகுமிடங்கள் இருபத்தாறு அல்லது இருபத்தேழு இடங்களாகும். அவ்விடங்களை அறிவோம்.

1) அ இ உ - என்னும் சுட்டெழுத்துகளின் முன் வலிமிகும்.

காட்டு:-
அ+பையன் - அப்பையன்
இ+ பொருள் - இப்பொருள்
உ+ பக்கம் - உப்பக்கம்

2) அந்த இந்த உந்த என்னும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அந்த+ பூனை - அந்தப்பூனை
இந்த + பை - இந்தப்பை
உந்த+ பக்கம் - உந்தப்பக்கம்.

3) எ-என்ற வினா எழுத்தின் முன்னும் எந்த- என்ற வினா இடைச்சொல்லின் முன்னும் வலி மிகும்.

காட்டு:-
எ+ பொழுது - எப்பொழுது
எந்த +திசை - எந்தத்திசை

4) அங்கு இங்கு எங்கு ஆங்கு ஈங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு -எனும் இடப்பொருள் உணர்த்தும் மென்தொடர் குற்றியல் உகர இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அங்கு + போ - அங்குப்போ
இங்கு + தா - இங்குத்தா
எங்கு + கொடுத்தாய் - எங்குக்கொடுத்தாய்
ஆங்கு + பார் - ஆங்குப்பார்
ஈங்கு + செய் - ஈங்குச் செய்
யாண்கு + பேசினான் - யாண்குப்பேசினான்
ஆண்டு + தாவினான் - ஆண்டுத்தாவினான்
ஈண்டு + கூடினர் - ஈண்டுக் கூடினர்
யாண்டு + சென்றான் - யாண்டுச்சென்றான்.

5) அப்படி இப்படி எப்படி எனும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அப்படி + சொல் - அப்படிச்சொல்
இப்படி + கூறு - இப்படிக்கூறு
எப்படி + தந்தாய் - எப்படித்தந்தாய்

இக்கிழமைக்கான ஈற்றடி:- பூவைமேல் எத்தனை பூ!

அகரம்.அமுதா

9 கருத்துகள்:

  1. அணியும் விளக்கமும் அருமை.
    கோவலன் மதுரைக்கு வரும்போது நகரின் நிலை வாயிலில் உள்ள கொடிகள் மோலும் கீழும் ஆட்டுவதை, நீ இங்கு வாராதே என்பது போல ஒரு பாடல் சிலப்பதிகாரத்திலே(சரியான்னு தெரியலை) வரும். அதுவும் தற்குறிப்பேற்றணியா??

    பதிலளிநீக்கு
  2. அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!
    மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!
    தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற
    "பூவின்மேல் எத்தனை'ப்' பூ!"

    பதிலளிநீக்கு
  3. நன்றி நயரேசன் அவர்களே! தாங்கள் சுட்டியுள்ள சிலப்பதிகாரப் பாடலும் தற்குறிப்பேற்ற அணியே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    வணக்கம் சிக்கிமுக்கியாரே!

    வெண்பா அருமை வாழ்த்துகள். பூவைமேல் எத்தனை பூ என்பதே சரி இடையில் ஒற்று மிகாது.

    பதிலளிநீக்கு
  4. இதே கருத்தமைப்பில் இன்னும் வார்த்தைகளைச் அழகாய் பயன்படுத்த முடியும். இன்னும் யோசனை செய்து கொண்டிருக்கின்றேன்.
    எழுதாத ஒரு காதல் கதையின் முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி அத்தியாயமும்! இலக்கணப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்! முடிந்தால், திருத்தவும்!

    பூப்பூவாய் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பூவுனக்கே
    பூவுந்தன் புன்னகை என்றும் எனக்கே
    மலரெல்லாம் சூட்டி உனதழகைப் பாடினேன்
    'பூவைமேல் எத்தனை பூ'

    'பூவை உனையன்றி வாழ்வேது' என்றேன்நான்
    பூரித்து 'நீயன்றி நானேது' என்றாய்நீ
    பூவையுன் கண்தனில் பூப்பூத்(து) அருவியாக
    பூவைமேல் எத்தனை பூ!

    -------------------------------

    பூவுனை சேராமல் தேகமென்று சாயுமோ
    பூவை உனைமணக்க வேறொருவன் ஞாயமோ
    பூவைக்கோர் பூதந்து வாழ்த்துறைக்கச் சென்றுபார்த்தால்
    பூவைமேல் எத்தனை பூ!

    -----------------------------

    ஒரு வழியாக தங்கள் பதிவுகளைப் படித்தேன். கல்லூரி வேலைகளுக்கு நடுவில் நேரம் கிடைப்பது அவ்வப்பொழுது கடினமாகிவிடுகின்றது. தங்கள் பாடங்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சங்கர்! "பூவைமேல் எத்தனை பூ!" எனும் ஈற்றடிக்கு மூன்று அழகிய இன்னிசை வெண்பா வடித்து அசத்திவிட்டீர்கள். வாழ்த்துகள். தொடர்ந்து பாடங்களைக் கவனித்து ஈற்றடிக்குப் பாடல்கள் புனையுமாறும் கோருகிறேன். நன்றி.

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  6. "எகர வினாவும்" அளவுப்பண்பைக் குறிக்கும் "தனை" என்ற சொல்லும் கூடி அமைந்துள்ள 'எத்தனை' என்ற சொல்லின் முன் வலி இயல்பு என்று எங்கும் இலக்கண விதி இருப்பதாகத் தெரியவில்லை.

    ஒலிப்புக்கு எளிதாகவும் ஏந்தாகவும் அமைய மேற்குறித்த இடங்களில் வலி மிகுத்து எழுதல் சிறப்பு என்ற கருத்திலேயே...

    அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!
    மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!
    தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற
    "பூவின்மேல் எத்தனை'ப்' பூ!"

    - என்ற வெண்பாவை எழுதினேன்.

    நீங்களோ, "பூவைமேல் எத்தனை பூ என்பதே சரி இடையில் ஒற்று மிகாது."
    என்று எழுதிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சிக்கிமுக்கி அவர்களே! ஒற்றுமிகும் மிகா இடங்களைப்பற்றி ஆழ்ந்த அறிவுபெற்றிருக்கிறீர்கள். ஆயினும் சிறு தடுமாற்றம் அடைந்திருக்கிறீகள் என நினைக்கிறேன்.

    "எ" கர வினாவொடு "துணை" எனும் அளவைக் குறித்தசொல் சேரும்போதே வலிமிகும்

    காட்டு:-

    எத்துணை பெரியது -எத்துணைப்பெரியது
    அத்துணை சிறியது -அத்துணைச்சிறியது
    இத்துணை செலவு -இத்துணைச்செலவு எனவரும்.

    அத்தனை இத்தனை எத்தனை என்ற எண்ணிக்கையைக் குறிக்குங்கால் வலிமிகாதென்பது இலக்கணம் காட்டும் நெறி. வலிமிகா இடங்கள் பற்றிய இலக்கணத்தை உற்று நோக்குக.

    காட்டு:-

    அத்தனை செடிகள் -அத்தனைசெடிகள் என்றே வரும்.

    பதிலளிநீக்கு
  8. வேண்டிய பதிவு.
    நளவெண்பாவில் 'தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகால் வயிறலைத்து
    வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம்.
    இதுவும் . தற்குறிப்பேற்ற அணி
    ஒரு திரைப்பாடல்....
    முகிலினங்கள் அலைகிறதே,முகவரிகள் தொலைந்தனவோ?
    முகவரிகள் தொலைந்ததனால்
    அழுதிடுமோ அவை மழையோ?
    வேறு இலக்கியப் பாடல் தெரிந்தால் போடவும்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் உயர்திரு யோகன் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மீண்டும் வருக. ஆதரவு தருக. இலக்கியத்தில் தற்குறிப்பேற்றணி நிறையவுள்ளன.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com