ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியமண்டிலம்- 3

அறுசீர் மண்டிலத்தில் அடுத்த வகையைப் பார்ப்போம் :

இவ் வகையில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து காய் + காய் + காய் + காய் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

( காய் என்று குறித்துள்ள இடத்தில் கூவிளங்காய், புளிமாங்காய், தேமாங்காய், கருவிளங்காய் -இவற்றுள் எதுவும் வரலாம்; மா என்று குறித்துள்ள இடத்தில் தேமாவோ புளிமாவோ வரலாம். )

இதன் அமைப்பை 'நான்கு காய், ஒரு மா, தேமா' என்றும் கூறலாம்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
..........தெங்கும் காணோம்!

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
..........பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
..........நன்றோ சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
..........செய்தல் வேண்டும்.

இது பாரதியார் பாடல் என்று நாம் அறிவோம்.


இனி, பாவேந்தர் பாடல் ஒன்று :

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே
..........கவின்செய் முல்லை

அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே
..........அன்பே கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை
..........ஈட ழித்து

வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல
..........வாய்ப தைக்கும்.


எழுதத் தொடங்குக.

முடியுமானால், உவமை போலும் அணி அமைத்து எழுதுக.

வெண்பாவை விட எளிதாக இவ்வகை மண்டிலங்களை எழுத முடியும் எனபதை நீங்களே உணரலாம்.

25 கருத்துகள்:

  1. முத்தமிழின் அறிஞனென்பான் தமிழுலகத் தலைவனென்பான்
    முறையாய் ஒன்றும்
    அத்தமிழுக் கியன்றுசெய்யான் வாய்ப்பேச்சால் வென்றிடுவான்
    அதுவு மன்றி
    முத்தமிழும் தன்னாலே முகிழுதென மேடைதொறும்
    முழங்கித் தீர்ப்பான்
    முத்தமிழர் காதோடு முகிழ்மலரைச் சூடுவதை
    முனைப்பாய்க் கொள்வான்!

    ஆங்கிலமே கல்விமொழி ஆகிவிட அதையெதிர்க்கா
    அறிவுப் பஞ்சை
    ஆங்கிலத்தை ஆளவிட்டு தமிழ்நாட்டை விட்டுதமிழ்
    அகலச் செய்தான்
    பூங்குளத்துத் தாமரைபோற் பூத்ததமிழ் போயொழியப்
    புரிந்தான் எல்லாம்
    ஈங்குலகில் தாய்மொழிக்கே இவன்போலும் இரண்டகமும்
    இழைத்தா ருண்டோ?

    தனக்குற்ற எதிரிகளைத் தகையில்லாச் சொற்களினால்
    சாடும் கீழோன்
    தனக்கென்று தொலைக்காட்சி தன்பெயரில் நடத்திடுவான்
    தகையில் லாதான்
    தனக்குப்பின் தன்மகனே நாடாள வேண்டுமேனத்
    தவிக்கும் நெஞ்சன்
    தனக்குப்பெண் ஆனவளை தில்லியிலே ஆளவிட்டுத்
    தாங்கி நிற்பான்!

    இத்தாலிப் பேய்தேடி இரண்டகனாம் இவன்செல்வான்
    இணைதாள் வீழ்வான்
    செத்தாலும் இந்திநமக் கெதிரியென்பான் தன்மக்கள்
    சென்று கற்க
    ஒத்தாசை செய்திடுவான் ஈழத்தில் எந்தமிழர்
    உறுகண் உற்றுச்
    செத்தாலும் சென்றுதடுத் திடமுனையான் தன்னலத்தான்
    திருவில் லாதான்!

    பதிலளிநீக்கு
  2. அன்பார்ந்த அ.அ.,

    கடும்புயலாகவும் பேரிடியாகவும் வெடித்திருக்கின்றீர்கள்.

    அருமை.

    ***ஈங்குலகில் தாய்மொழிக்கே இவன்போலும் இரண்டகமும் இழைத்தா ருண்டோ?***

    குறிப்பாக, இந்த அடியின் அமைப்பு மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. வலையின் அமைப்பை மாற்றித் தந்திருக்கிறீர்கள்.

    பின்னூட்டங்கள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிகள் தமிழநம்பி அய்யா அவர்களே

    பதிலளிநீக்கு
  5. அன்பு அகரம் அமுதா...

    எரிமலைத் தமிழை முதன்முதலில் இங்கு தான் கண்டேன். வாழ்த்துக்கள் என்று சொல்ல மனம் வருந்துகிறது. கருத்து அப்படி. ஆயினும் உங்கள் தமிழுக்கு வணங்குகிறேன்.

    ***

    இருள்பொறிந்த தனியறைக்குள் இமைகரைத்தப் பொழுதொன்றில்
    இயங்கா நின்றுள்
    திருநிறைந்த வானவில்லைத் திசைகாட்டும் முள்ளொன்றின்
    திணையில் பாடல்
    பொருள்வயிந்த வார்த்தைகளுள் புலப்படாத மர்மத்துப்
    பொருண்மை ரூபம்
    உருவமைந்து வந்தாற்போல் உள்முகிழ்த்து எழுதாநின்
    றுரைத்த திப்பா.

    பொடக்காலி மூலயில செவப்புநிறத் தூணிருக்கு.
    பாட்டி போயி
    மடக்கிவெச்ச நாக்காலில மம்முதரு கணக்கா
    மரிச்ச தாத்தா
    கடன்வாங்கப் போனவரு காத்தாயி வர்றாருனு
    கத்திச் செத்தா.
    கெடந்துகனா நெனப்புலயும் நெழல்போலத் தளும்புதுசெங்
    கெளவித் தூண்.

    ரோமாபேர். பதின்வயது. செவ்விளமை. கிடார்மேனி.
    ரோமம் பஞ்சு.
    ஆமாமாம் எனதுபதில் அழகியாவள்? எனக்கேட்டால்.
    அணைத்துப் பார்க்கத்
    தாம்மாவென் றாற்றளிர்ப்பூ வுடைநீக்கிப் பஞ்சணையில்
    தள்ளிச் சாய்த்துத்
    தேமாயென் பதாய்முடிக்கச் சொன்னாளோர் முத்தம்பின்
    தேனாய் "மாமா".

    பதிலளிநீக்கு
  6. ஆகாயித் தளத்தினிலே அழகுதமிழ் அரும்புமது
    அறிவைத் தூண்டும்
    பாகாமிவ் வகரத்தார் புயலெனவே புடைத்திடுவார்
    புல்லர் தம்மை
    வாகாயோர் வசந்தத்தில் வஞ்சியரை விரும்பியவர்
    வலைகள் வீச
    போகாதே பல்லிளித்து பலதளத்தும்; பாப்புனைந்து
    படிப்போம் வாவா.

    பதிலளிநீக்கு
  7. 15-ஆம் நூற்றாண்டின் புலவர் கபீரின் ஆவாதி மொழி தோஹா ஒன்று கேட்டதின் தாக்கம்
    http://www.youtube. com/watch? v=qdx95JVxmCE :

    ***********
    நீர்நிலையில் பிறந்திறக்கும் மீனுக்கே தாகமென்றால்
    நகைப்பே யன்றோ
    பார்வெளியில் பரந்தவனை பார்ப்பதற்கு செல்வாரே
    காபா காசி
    ஓர்பொருளை மனைதனிலே மறந்துவிட்டு வெளிதேடி
    அலைவார் வீணே
    காரிருளாம் மனமழிய கடவுளையே கபீரன்பால்
    காண்போம் நம்முள்!
    ***********

    பதிலளிநீக்கு
  8. கணிப்பொறியில் மரபுப்பா கற்றெழுத பயிற்சிதரும்
    கருத்தைக் கொண்டே
    மணித்தமிழில் யாப்பறிந்த மாண்பாளர் ஈங்கிருவர்
    மகிழ்ச்சி யோடே
    பிணிக்கின்ற உரையினிலே பிழையற்ற எளிமையிலே
    பெருநுட் போடே
    அணிக்கழகு சேர்த்தாற்போல் அன்புடனே பயிற்றுகிறார்
    அவர்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  9. அன்பார்ந்த வசந்தகுமார்,
    உங்கள் மண்டிலப் பாக்கள் சரியான அமைப்பில் உள்ளன.
    கொச்சைச் சொற்களையும் அயற்சொற்களையும் தவிர்த்தெழுதல் பாட்டிற்கு மதிப்பளிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அவனடிமை ஐயா,
    ************
    ஆகாயித் தளத்தினிலே அழகுதமிழ் அரும்புமது
    அறிவைத் தூண்டும்
    பாகாமிவ் வகரத்தார் புயலெனவே புடைத்திடுவார்
    புல்லர் தம்மை
    வாகாயோர் வசந்தத்தில் வஞ்சியரை விரும்பியவர்
    வலைகள் வீச
    போகாதே பல்லிளித்து பலதளத்தும்; பாப்புனைந்து
    படிப்போம் வாவா.
    ****************
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.

    ஒரே ஒரு செய்தி.

    எந்த எழுத்திற்கு எந்த எழுத்து மோனையாக வரும் என்பதை நினைவில் கொள்ள ஒரு வெண்பா உண்டு.
    அது இது :

    அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
    இகரமோ டீகாரம் ஏஎ - உகரமோ
    டூகாரம் ஓஒ, ஞநமவ தச்சகரம்
    தோகாய் கிளையெழுத்தாச் சொல்.

    அ - ஆ, ஐ, ஒள
    இ - ஈ, ஏ,எ
    உ - ஊ,ஓ,ஒ
    ஞ - ந
    ம - வ
    த - ச

    முதலில் பயின்றதை நினைவு படுத்திக் கொள்க.
    இ - ஈ,ஏ,எ வுடன் யகரம் உயிரெழுத்துக்களுக்கு மட்டும் மோனையாக வரும்.

    மேலே உள்ள பாடலில்,
    பா வுக்கு மோனையாக ப,பை, பெள மோனையாகும்.

    போ வுக்கு பொ,பு,பூ மோனையாகும்.
    கவனிக்க நினைவூட்டினேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. 15-ஆம் நூற்றாண்டின் புலவர் கபீரின் ஆவாதி மொழி தோஹா ஒன்று கேட்டதின் தாக்கம்
    http://www.youtube. com/watch? v=qdx95JVxmCE :

    ***********
    நீர்நிலையில் பிறந்திறக்கும் மீனுக்கே தாகமென்றால்
    நகைப்பே யன்றோ
    பார்வெளியில் பரந்தவனை பார்ப்பதற்கு செல்வாரே
    காபா காசி
    ஓர்பொருளை மனைதனிலே மறந்துவிட்டு வெளிதேடி
    அலைவார் வீணே
    காரிருளாம் மனமழிய கடவுளையே கபீரன்பால்
    காண்போம் நம்முள்!
    ***********
    மேலே நீங்கள் கொடுத்த முகவரியில் பார்க்க முயன்றேன்.
    கிடைக்கவில்லை.
    பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
    மோனையை மட்டும் சரிபார்த்துக் கொள்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சிக்கிமுக்கியாரே!
    அழகு தமிழில் அருமையான மண்டிலப்பா.
    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தமிழ நம்பி ஐயா: மோனை விதிகளை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. நினைவில் கொண்டு எழுத முயல்கிறேன்.
    அந்த சுட்டி இதுதான்:
    http://www.youtube.com/watch?v=qdx95JVxmCE
    இந்த சுட்டியில் எல்லா எழுத்துக்களும் (ஒன்றன்பின் ஒன்று) சேர்ந்து இருக்கவேண்டும் (without space in between). சுட்டி முகவரியை நகல் (copy) செய்து ஒட்ட (paste செய்ய) வேண்டும்.
    முதல் நிமிடங்களில் பாடகர் சிறிது உரையாற்றினாலும், அதைத் தொடர்ந்து கபீரின் பாடல் வருகிறது. மொழி வேறானாலும் கருத்து சிறப்பானது.
    நன்றி, வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஐயா.

    பார்த்தேன்; கேட்டேன்.

    அந்தப் பாடலின் பொருளைத்தான் அறுசீர் மண்டிலப் பாவில் கூறியிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். சரியா?

    பதிலளிநீக்கு
  15. அருமை. அருமை. வசந்த், அவனடியார், சிக்கிமுக்கியாரின் பாக்கள் அனைத்தும் அருமை. அருமை. தமிழநம்பி அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் அனைவரும் மிக அழகாக பாக்கள் புனைய பழகிவருகிறோம் என்பதே பெருமகிழ்ச்சி தருகிறது. வாழ்க அவரின் தமிழ்ப்பணி. வளர்க வெண்பா எழுதலாம் வாங்க வலையின் கற்கையாளர்கள்.

    பதிலளிநீக்கு
  16. சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
    சிலையாய் நிற்கும்
    பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகி
    பொன்னாய் மின்னும்
    பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
    பாடம் தன்னை
    கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
    கனியும் காலம்

    பதிலளிநீக்கு
  17. **************
    சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
    சிலையாய் நிற்கும்!
    பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப்
    பொன்னாய் மின்னும்!
    பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
    பெற்றி தன்னை!
    கற்றிடுநீ துனபத்தும் கடமைசெய கட்டாயம்
    கனியும் காலம்!
    ************************

    உமா,
    அருமையான பாடல் உவமை அணிகளோடு நன்றாக அமைத்துள்ளீர்கள்.
    சிறு திருத்தம்.
    பாடம் என்பதைப் பெற்றி என்று எழுதலாம் மோனை சிறப்பதற்காக.
    மெற்றி என்றால் குணம், தன்மை,பெருமை என்றெல்லாம் பொருத்தமாகவே பொருள் அமையும்.

    இறுதி வரி எனக்குத் தோன்றியவாறு எழுதிக் காட்டியிருக்கிறேன். நீங்கள் எழுதியதில் பிழை இல்லை.

    பாராட்டு. நன்றி

    பதிலளிநீக்கு
  18. /சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
    சிலையாய் நிற்கும்
    பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகி
    பொன்னாய் மின்னும்
    பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
    பாடம் தன்னை
    கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
    கனியும் காலம்/

    அருமை உமா அவர்களே

    கருத்தும் உவமையும் நன்று

    பதிலளிநீக்கு
  19. அன்பு தமிழநம்பி ஐயா...

    //உங்கள் மண்டிலப் பாக்கள் சரியான அமைப்பில் உள்ளன.
    கொச்சைச் சொற்களையும் அயற்சொற்களையும் தவிர்த்தெழுதல் பாட்டிற்கு மதிப்பளிக்கும்.

    சில ஐயங்கள்.

    அ. கொச்சைச் சொல் என்று எதைச் சொல்கிறீர்கள்? பேச்சு மொழியையா? அங்கே எழுதியிருப்பது கொங்குத் தமிழ். இப்படி எழுதக் கூடாது என்று ஏதாவது இலக்கணம் இருக்கின்றதா?

    ஆ. இலக்கணம் திசைச்சொல் என்று ஒன்று வைத்திருப்பதே அயல் சொற்களைத் 'தேவைக்கேற்றாற்போல்' பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காகத் தான் என்று படித்திருக்கிறேன். இந்த இடத்தில் 'கிடார்' என்ற கருவியை ஓர் உவமையாகப் பயன்படுத்தும் போது சொல்ல வந்த அர்த்தம் இன்னும் செறிவடைகின்றது என்று தான் எழுதப்பட்டுள்ளது.

    தெளிவாக்குங்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. அன்பு வசந்த குமார்,

    பேச்சு மொழியை ஆசிரியன் கூற்றாக எழுதுதல் மொழியைச் சிதைக்கும்; வட்டார வழக்கைக் குறிப்பிட, பேச்சு மொழியை ஒருவரின் (கதை உறுப்பினர் அன்றி நிகழ்வில் இருப்போர்) கூற்றாக மேற்கோளில் காட்டலாம் என்பதே மொழியறிஞர்கள் வலியுறுத்தும் செய்தியாகும்.

    இயன்றவரை அயற்சொற்களைத் தவிர்த்தல் பாடலுக்குச் சிறப்பளிக்கும் என்ற கருத்து இலக்கணச்சுடர் புதுவை இரா.திருமுருகன் போன்ற பல தமிழறிஞர்களின் கருத்தாகும்.

    அயற்சொல் கலப்பு தொடர்பான கட்டுரை ஒன்று
    கீழ்க்காணும் சுட்டியில் உள்ளது.
    http://thamizhanambi.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
    அன்புகூர்ந்து படித்துப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. //பேச்சு மொழியை ஆசிரியன் கூற்றாக எழுதுதல் மொழியைச் சிதைக்கும்; வட்டார வழக்கைக் குறிப்பிட, பேச்சு மொழியை ஒருவரின் (கதை உறுப்பினர் அன்றி நிகழ்வில் இருப்போர்) கூற்றாக மேற்கோளில் காட்டலாம் என்பதே மொழியறிஞர்கள் வலியுறுத்தும் செய்தியாகும்.//

    தமிழநம்பி ஐயா: இது புரியவில்லையே, காட்டுகளுடன் எது சரி, எது சரியில்லை என்று விளக்கமுடியுமா ?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அவனடிமை ஐயா,
    எழுத்தாளன், இயல்பாகவே எல்லா நிலைகளிலும்- எப்போதும்- பேச்சு வழுக்கில் -கொச்சைச் சொற்களில் எழுதுதல் முறையன்று.

    ஆனால் பேச்சு வழக்கை வெளிப்படுத்தவே கூடாதென்று கூறவில்லை.
    கதையாயின், கதை உறுப்பினர் உரையாடலில் மேற்கோளில் காட்டலாம்.

    செழியன், 'எலே, அங்கிட்டு என்றா செய்றே!' என்று உரத்த குரலில் அவனிடம் கேட்டான்.

    அவன், 'தோ, வந்துடய்யா' என்று குரல்
    கொடுத்துக் கொண்டே விரைந்து வந்தான்.
    - என்று எழுதலாம்.
    கட்டுரை, பாக்களிலும் இதைக் கடைப்பிடிக்க அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    எழுத்தாளர் நா.பா., புதின ஆசிரியர் மு.வ., பாரதியார் மற்றும் பல அறிஞர்களும் இதை வற்புறுத்துகின்றனர்.

    இற்றை எழுத்தாளர்கள் தொடங்கும்போதே கொச்சை நடையிலேயே எழுதத் தொடங்குகின்றனர்.
    நா.பா. இதைக் கண்டிக்கிறார்.

    மொழி மரபு, மொழிக்காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாவிட்டால் காலப்போக்கில் மொழி திரியும்; நாமும் அடையாளம் இழப்போம்.

    பதிலளிநீக்கு
  23. விளக்கத்திற்கு நன்றி தமிழநம்பி ஐயா. (’ஐயா’ சரியா, ’அய்யா’ சரியா?)

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com