திங்கள், 8 பிப்ரவரி, 2010

வெள்ளொத் தாழிசை!

நாம் இதற்குமுன் வெண்பாக்களின் பற்பல வடிவங்களையும், கூறுகளையும் பார்த்திருக்கிறோம். குறிப்பாக சிந்தியல் வெண்பாவைப் பற்றியும் பார்த்திருக்கிறோம்.

சிந்தியல் வெண்பாக்கள் மூன்று சேர்ந்து ஒரே பொருளைத் தாங்கிவரின் அதனை வெள்ளொத் தாழிசை என்பர். ஒரு கருத்தை அடியொற்றி மூன்று சிந்தியல் பாக்கள் புனைதலே வெள்ளொத் தாழிசை எனவும் கொள்ளலாம்.

காட்டு:-

வெள்ளொத் தாழிசை!

இனப்பகைவன் ஆனான் இரண்டக நெஞ்சன்
மனக்கரவு பேணும் வகையால் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

பிணக்கிப் பிரிந்தான் பிழைபட வாழ்ந்தான்
இணக்கம் இரண்டகரோ டென்னும் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

தனக்குவகை வேண்டியே தப்பின் வழிநின்(று)
இனமழிப்பைக் கண்டின் புறலால் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

அருளன் -விநாயகமூர்த்தி முரளீதரன் என்னும் கருணா

இவ்வகையில், வெள்ளொத் தாழிசையிலான பாக்களைப் புனைய வருவீராக....

அகரம் அமுதா

8 கருத்துகள்:

  1. இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!

    மறத்திற்கே நல்லுருநீ; மாத்தமிழர் மானத்

    திறத்தை விளக்கும் திரு.


    தன்னேரில் ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்

    தன்னலத்தார் அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ந்துவர

    நன்முத்தே இட்டாயே வித்து.


    முத்துக் குமாரேயெம் மூத்த பெருமுரசே!

    செத்தெழுச்சி தந்ததனிச் சீரா! திருவிளக்கே!

    வித்தியதும் ஆகாதே வீண்.

    பதிலளிநீக்கு
  2. உள்ளம் கவர்ந்தது உள்ளே புகுந்தது
    கள்ளாய்ச் சுவைப்பது கன்னல் இனிப்பென
    வெள்ளத் தமிழிசைத் தேன்.

    பாகாய்ச் சிலதுளி பல்பதிக்கப் பாட்சேறாய்
    வாகாய்க் கலந்திட வார்த்தைப் பலாச்சுளை
    போகாய்த் தமிழை மறந்து.

    நீலம் படர்ந்த நெடும்பனி வானத்துக்
    கோலம் மினுமீன்கள் போலவென் பூந்தமிழ்ச்
    சாலம் பகரும் நிலைத்து.

    ***

    அன்பு அகரம் அமுதா...

    தாங்கள் திரும்பவும் வந்தது மகிழ்ச்சி. தங்கள் சரிபார்ப்புக்காகச் சில வெண்பாக்கள் எழுதி வைத்துள்ளேன். இக்கண்ணியைச் சொடுக்கினால் கண்ணனைப் பற்றி எழுதிய கவிகள் கிடைக்கும். கண்டு, விமர்சித்தால் உகப்புறுவேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. மானத் தமிழின் முத்துக்குமார் பற்றிய வெள்ளொத்தாழிசை அருமை. அருமை. அருமை. வாழ்த்துகள் சவுக்கடியாரே! தங்கள் ஒத்துழைப்பை தொடந்து நல்க வேண்டுகிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் வசந்த குமார். அழகிய பாக்களை அளித்துள்ளீர்கள். தங்கள் பாட்டினுள் பலாச்சுளை இருப்பதுமட்டுமல்லாமல் பாட்டுமுழுதும் பலாச்சுளையாய் இனிக்கிறது. வாழ்க.

    தங்களின் கண்ணன் பற்றிய பாக்களை படித்துவிட்டுக் கருத்துரைக்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா,
    வணக்கம்.
    அருளன் -முத்தையா முரளிதரன் என்னும் கருணா
    என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விநாயகமூர்த்தி முரளீதரன் என்று திருத்துங்கள்.

    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு
    பாவக் கரையழித்து காக்கும் கருணையே
    சேவற் கொடியோன் சிறப்பு.

    தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
    இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
    அல்லல் அகலும் விரைந்து.

    எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
    சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
    தித்திக்கும் தேனாய் இனித்து.

    வேலும் மயிலும் துணையென நம்பியே
    நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
    சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.

    [மூன்று சிந்தியல் வெண்பாக்கள் மட்டுமே வரவேண்டுமா?]

    பதிலளிநீக்கு
  7. அழகியதோர் வெள்ளொத்தாழிசை வாழ்த்துகள்.

    [மூன்று சிந்தியல் வெண்பாக்கள் மட்டுமே வரவேண்டுமா?]

    ஆம். மூன்றுபாடல்களே வரவேண்டும்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com