"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்" எனபதைச் சுருக்கமாக 'அறுசீர் மண்டிலம்' என்றும் அழைப்பர்.
அறுசீர் மண்டிலத்தில் அரை அடியில் மா+மா+காய் என்ற சீரமைப்பில் பாடல்கள் எழுதப் பயின்றோம்.
அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தை மூன்று வகையாக எழுதுகிறோம்.
ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :
(அ). முதல் வகை :
1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.
2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.
4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.
5.நான்கு அடிகளும் அளவொத்து விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.
6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.
7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.
எடுத்துக்காட்டுப் பாடல் :
நீரிடை யுறங்குஞ் சங்கம்
..........நிழலிடை யுறங்கும் மேதி
தாரிடை யுறங்கும் வண்டு
..........தாமரை யுறங்கும் செய்யாள்
தூரிடை யுறங்கும் ஆமை
..........துறையிடை யுறங்கும் இப்பி
போரிடை யுறங்கும் அன்னம்
..........பொழிலிடை யுறங்கும் தோகை.
இது கம்பராமாயணம், நாட்டுப்படலம்- 6. பாடல்
இப் பாடலின் முதல் அரை அடி, நீரிடை யுறங்குஞ் சங்கம் (கூவிளம் +புளிமா + தேமா) என்று அமைந்துள்ளது.
முதலடியின் அடுத்த அரை அடி, நிழலிடை யுறங்கும் மேதி (கருவிளம்+ புளிமா+ தேமா) என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதற்சீர் விளச்சீராகவும் (கருவிளம் அல்லது கூவிளம்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் வருவதைக் காணலாம்.
இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுப் பாடல் :
அங்கவர் அடைப்பின் நீங்கி
. அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
. தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
. செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
. ஏன்வலி யுறுத்தா துள்ளார்? - த.ந.
(ஆ) இரண்டாம் வகை :
இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற் சீர் முதல் வகைப் பாடலில் கூறிய வாறு விளச் சீராக வரும் அல்லது அம் முதற் சீர் மாங்காய்ச் சீராகவும் வரும்.
அதாவது, அரைஅடியில் முதற்சீர் விளச்சீர் அல்லது மாங்காய்ச்சீர் (கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய் நான்கில் ஒன்று) இரண்டாம் சீர் மாச்சீர் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமா பெற்று வரும்.
எடுத்துக்காட்டுப் பாடல் :
தண்டலை மயில்கள் ஆடத்
..........தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
..........குவளைக்கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
..........தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
..........மருதம்வீற் றிருக்கு மாதோ.. - கம்பராநாட்டுப். 4.
இப்பாடலில் 'கொண்டல்கள்', 'மருதம்வீற்' ஆகிய முதற்சீர்கள் இரண்டும் மாங்காய்ச் சீர்களாவும் பிற முதற்சீர்கள் விளச்சீர்களாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்.
(இ) மூன்றாம் வகை :
இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற்சீர் மாங்காய்ச் சீராகவும் ( தேமாங்காய் அல்லது புளிமாங்காய்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் இருக்கும்.
எடுத்துக்காட்டுப் பாடல் :
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
..........இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
..........துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
..........மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
..........கால்வண்ணம் இங்குக் கண்டேன் - கம்பரா. அகலிகை.24.
பொறுமையாக, ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றாக மூன்று வகையிலும்
அறுசீர் மண்டிலங்கள் எழுதத் தொடங்குக.
ஐயங்கள் இருப்பின் தயங்காது கேட்க.
ஓர் அரைஅடி எழுதிவிட்டால், பிறகு எளிதில் முழுப்பாடலும் எழுதிவிடலாம்.
எழுதத் தொடங்குக.
அறுசீரில் அகவல் ஆக்க
பதிலளிநீக்கு.....அழைத்தாரே தமிழர் ஆசான்
மறுக்காமல் மண்டலந் தன்னில்
.....மகிழ்வோடு மனதைத் தாரீர்
சிறுபிள்ளை சிந்தாய்ச் சிந்தும்
.....சிலகாலம் பாடம் கேட்டும்
வெறும்வாயும் விளையாட் டாக
.....வெண்டலையில் வெண்பா பாடும்.
மண்டலம் -> மண்டிலம் - மாற்றிவிட்டேன்
பதிலளிநீக்குஅறுசீரில் அகவல் ஆக்க
.....அழைத்தாரே தமிழர் ஆசான்
மறுக்காமல் மண்டிலந் தன்னில்
.....மகிழ்வோடு மனதைத் தாரீர்
சிறுபிள்ளை சிந்தாய்ச் சிந்தும்
.....சிலகாலம் பாடம் கேட்டும்
வெறும்வாயும் விளையாட் டாக
.....வெண்டலையில் வெண்பா பாடும்.
/////மண்டலம் -> மண்டிலம் - மாற்றிவிட்டேன்/////
பதிலளிநீக்குவிளச்சீர் வரக்கூடாதே!
மறுக்காமல் விருத்தந் தன்னில்
என்றே இருக்கட்டும்.
திருத்தம் பொருத்தமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி அகரம் அமுதா அவர்களே.
பதிலளிநீக்குமேலும் ஒரு ஐயம்:
கடைசி அடியில் நான்காவதான சீர் ’வெண்டலையில்’ - கூவிளங்காய்-ஆக மற்ற முதற்சீர்களையும், நான்காம் சீர்களையும் (உ.: ‘வெறும்வாயும்’ , ‘சிலகாலம்’ - புளிமாங்காய்) ஒத்து வராததாக இருக்கிறதே.
இது சரியா ?
1. விளச்சீர்+மா+தேமா
பதிலளிநீக்குஉழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.
2.விளச்சீர்/மாங்காய்ச்சீர்+மா+தேமா
விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா சொல்லும்
கூலிக்கு வேலை செய்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
ஒழிந்திடும் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!
[இரவு நேர பள்ளிக்காவது அனுப்பச் சொல்லி ஒரு குழந்தைத்தொழிலாளியின் விண்ணப்பம்]
திரு.அவனடிமையாருக்கு என் வணக்கம். மீண்டும் தங்கள் பாணியில் பாக்கள். சிறப்பு. மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவெண்டலையில் வெண்பா பாடும்.
பதிலளிநீக்குவெண்டலையில் - மாற்றாக
வெள்ளோசை வெண்பா பாடும்
எனலாமா? [வெள்ளோசை - வெண்பாவிற்குரிய ஓசை என்பதுதானே பொருள்?]
1. நீரினை உண்ணும் முகில்
பதிலளிநீக்குநிலத்தினில் உதிக்கும் அகில்
வேரினில் மணக்கும் வெட்டி
வேனிலில் பெய்யும் மழை
காரிலே காணும் நிலா
கனியிலே திகட்டாப் பலா
ஊரிலே இல்லை ஒப்பு
உள்ளது பிள்ளை எச்சில்.
2. வானென்ற குவளை மேலே
வந்தது பொத்தல் கோடி
காணென்று சொல்லிப் பெய்த
கடும்பனி கோடி கோடி
ஊனென்று வெள்ளை வட்டம்
உலாவரும் நிலாத் தட்டம்
வீணென்று விழுங்கி ஏப்பம்
விடும்கரும் துளையோர் மர்மம்.
3. ஆனையொன்று வீதியில் ஆங்கே
அசைந்தாடி நடந்தே வரும்
பானைபோன்ற வயிறு கொண்டு
பாதமெனத் தூண்கள் உண்டு
நினைத்தாலே ஊரை முட்டும்
நின்றாலே வானம் எட்டும்
தினையளவே அதற்கு மாந்தன்
தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.
அறுசீரில் அகவல் ஆக்க
பதிலளிநீக்கு.....அழைத்தாரே தமிழர் ஆசான்
மறுக்காமல் மண்டிலந் தன்னில்
.....மகிழ்வோடு மனதைத் தாரீர்
சிறுபிள்ளை சிந்தாய்ச் சிந்தும்
.....சிலகாலம் பாடம் கேட்டும்
வெறும்வாயும் விளையாட் டாக
.....வெண்டலையில் வெண்பா பாடும்.
அவனடிமை ஐயா, வருக, வணக்கம்.
நீங்கள் விளம்/மாங்காய் + மா + தேமா என்ற அமைப்பில் (இரண்டாம் வகை) எழுதியிருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது. அறுசீர் மண்டிலம்-2இல்
முதல் வகையிலும் மூன்றாம் வகையிலும் பா எழுதுங்கள்.
'வெண்டளை' எனத் திருத்திவிடுக. நன்றி.
வாவ். திரு.வசந்த குமார். பாக்கள் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு****உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
பதிலளிநீக்குஉண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.
அமைப்பு சரியாக உள்ளது.
நான்காம் அடி முதற்சீரில் எதுகை அமைத்து எழுதினால் இன்னும் சிறக்கும்.
( உழைப்பினில், இளைஞனே,களைந்திடு வரையில்சரி. நான்காம் அடி முதற்சீர் 'கைவரக்' எதுகை அமையாதுள்ளது.)
எளிதில் திருத்திக் கொள்ளலாம்.
நன்றி.
2.விளச்சீர்/மாங்காய்ச்சீர்+மா+தேமா
பதிலளிநீக்குவிடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா சொல்லும்
கூலிக்கு வேலை செய்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
ஒழிந்திடும் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!
நன்றாக அமைந்துள்ளது.
மூன்றாம் வரியில் முதற் சீருக்கும் நான்காம் சீருக்கும் மோனை அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
(அடித்திட....ஒழிந்திடும்)
நன்றி.
வசந்தகுமார்,
பதிலளிநீக்குமூன்று வகையிலும் பாடல் எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டு.
மூன்றாம் சீர் தேமா வருமாறு செய்த எளிய திருத்தங்களோடு கீழே காண்க :
1. நீரினை உண்ணும் கொண்மூ
நிலத்தினில் உதிக்கும் பூழில்
வேரினில் மணக்கும் வெட்டி
வேனிலில் பெய்யும் மாரி
காரிலே காணும் திங்கள்
கனியிலே திகட்டாப் பாகல்
ஊரிலே இல்லை ஒப்பு
உள்ளது பிள்ளை எச்சில்.
2. வானென்ற குவளை மேலே
வந்தது பொத்தல் கோடி
காணென்று சொல்லிப் பெய்த
கடும்பனி கோடி கோடி
ஊனென்று வெள்ளை வட்டம்
உலாவரும் நிலாத் தட்டம்
வீணென்று விழுங்கி ஏப்பம்
விடும்கரும் துளையோர் மர்மம்.
3. ஆனையொன்று தெருவில் ஆங்கே
அசைந்தாடி நடந்தே போகும்
பானைபோன்ற வயிறு கொண்டு
பாதமெனத் தூண்கள் உண்டு
நினைத்தாலே ஊரை முட்டும்
நின்றாலே வானம் எட்டும்
தினையளவே அதற்கு மாந்தன்
தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.
(கொண்மூ – மேகம், பூழில் –அகில், திங்கள்- நிலா, பலா –பாகல்)
அருமையாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
நன்றி.
அன்பு தமிழநம்பி ஐயா...
பதிலளிநீக்குநன்றிகள்.
நீங்கள் திருத்திய பின்பு தான் சில மாக்கள் ஓரசைகளாக மட்டுமே நின்று விட்டதைக் கவனிக்க முடிந்தது. நன்றிகள். ஆனால் 'கொண்மூ'வைப் பார்த்ததும் 'திக்'கென்றிருந்தது. கொஞ்சம் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். :)
நீரினை உண்ணும் கொண்டல்
நிலத்தினில் செழிக்கும் வண்டல்
மற்ற மாற்றங்கள் பிடித்திருக்கின்றன.
அன்பு உமா...
பதிலளிநீக்குபொதுவாக அறிவுரை சொல்லும் வெண்பாக்கள் எனக்கு கொஞ்சம் அலர்ஜியாகவே இருக்கின்றன. எனவே அவற்றைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்வதில்லை. ஆனால், உங்களின் 'குழந்தைக் கல்வி' வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. ரொம்ப வாழ்த்துக்கள்.
//[இரவு நேர பள்ளிக்காவது அனுப்பச் சொல்லி ஒரு குழந்தைத்தொழிலாளியின் விண்ணப்பம்]
இது எதற்கு..? வெண்பாவிலேயே சரியாகச் சொல்லவில்லையோ என்று ஏன் சந்தேகம்? அப்படி சந்தேகம் இருந்தால் அதைத் தெளிவாக்கும் வரை செப்பனிட வேண்டும் அல்லவா? இது போல் தெளிவுரை கொடுப்பது புலவரின் வேலை இல்லை. அதை வேறொரு கூட்டம் பார்த்துக் கொள்ளும். :)
எழுத்தைச் சுவாரசியமாக்கும் வித்தை ஒன்று சொல்லட்டுமா..? ஒரு முழுமையான படைப்பில் மிக அத்தியாவசியமான வார்த்தைகள் (அவன், அங்கே, நான் போன்றன) தவிர பிற வார்த்தைகள் ஒருமுறைக்கு மேல் வராமல் தவிர்த்தல் வேண்டும்.
//விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா சொல்லும்
கூலிக்கு வேலை செய்வேன்
இரண்டாவதாய் வரும் 'வேலை செய்வேனு'க்குப் பதில் வேறு உகந்த வார்த்தைகளை எழுத முடியுமா, பாருங்களேன்.
நன்றிகள்.
வசந்த குமார்,
பதிலளிநீக்குஉங்களின் எளிமைப் படுத்தம் சிறப்பு.
நன்றி.
அன்பு தமிழநம்பி ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள். வெண்பா எழுதக் கற்றுக் கொள்வதன் மூலமாகத் தளை தட்டாமல் எழுதும் நுட்பம் கைவரப் பெற்று விட்டது என்று நம்பி, 'தமிழ்ப்படத்தின்' ஒரு பாடலுக்கு (ஓ...மக...ஸீயா...) நானே சில வரிகள் இட்டுக்கட்டி எழுதிப் பார்த்தேன்.
http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_18.html
அனைவரும் பார்த்து கருத்து சொன்னால், மகிழ்வேன்.
நன்றிகள்.
/////இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். ////
பதிலளிநீக்குஅய்யய்யோ! நான் எதையும் அகற்றவில்லை. மேலும் அனைவரது பாக்களும் அழகு. வெளுத்துக்கட்டியுள்ளீர்கள். தமிழநம்பி அய்யா அவர்களின் திருத்தங்கள் சிறப்பாக உள்ளது. வாழ்க.
பசி + ஊனம் + ஆழிப்பேரலை = மகிழ்ச்சி?
பதிலளிநீக்குசுட்டிடும் வெளியில் ஓர்நாள்
.......சுருண்டுநான் கிடந்தேன் பாயில்
பட்டினி வயிற்றின் சத்தம்
.......பேரலை இரைச்சல் போலே
சட்டென சிறுவர் ஓட்டம்
.......சென்றது கடலும் உள்ளே
கட்டையின் காலும் கீழே
.......களிப்பிலே ஒருகால் வட்டம்.
திரு.தமிழநம்பி அய்யா அவர்களுக்கு
பதிலளிநீக்குமிக்க நன்றி. தவறுகளை திருத்திக்கொள்கிறேன்.
//அடித்திட வேண்டாம் கேட்பேன்
அன்றாடம் இரவு நேரம்//
என்று திருத்தியிருந்தேன் ஆயின் எழுதும் போது பழைய படி எழுதியிருக்கிறேன்.
மற்றபடி இன்னும் செம்மையாக்க முயல்கிறேன்.
திரு.வசந்த குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குதங்களின் மிகச் சிறப்பான கருத்துக்கள் எனக்கு ஒரு பாடமாகவே அமைந்து விட்டன. [உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எழுதும் போது நானே இப்படி நினைத்ததுண்டு.] ஆயினும் வடிவம் சரியாக வர எளிதான கருத்தையே எடுத்தாள வேண்டிவந்தது.[அடுத்தடுத்த பாக்களும் அப்படியே அமைந்து விட்டது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், எதைச் சொல்லவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.]
தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கென் மனமார்ந்த நன்றி.
அன்புடன் உமா.
குடித்திடும் அப்பா காட்டும்
பதிலளிநீக்குகூலிக்கு வேலை செல்வேன்//
எனத்தான் எழுதினேன். மிகவும் கவனக்குறைவோடு எழுதியிருக்கிறேன்.செம்மையாக அமையவில்லை. திருத்திக்கொள்கிறேன்.
1.பெற்றவர் தமக்கே பிள்ளை
பதிலளிநீக்குபெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!
2.களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர் தமக்கே அதனை
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்த செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.
3.உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!
களைப்புற்ற காலம் என்றே
பதிலளிநீக்குகருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர் தமக்கே அதனை
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்த செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.
இப்பாடலில்.
இளையவர் தமக்கே அதனை - இதில் தேமா வரவேண்டிய இடத்தில் 'அதனை' எனப் புளிமா வந்துள்ளது.
இளையவர்க் குதவும் வண்ணம் - என்று மாற்றலாம் அல்லது நீங்கள் விரும்புகின்றவேறு தேமே வரும்படி எழுதிக்கொள்ளலம்.
முளைத்த செடியோ அன்றி - இங்கு முளைத்த என்பது புளிமாவாக உள்ளது.
'முளைத்திட்ட' என்று மாற்றலாம்.
இவை தவிர, மற்றவை அனைத்தும் சரியாக உள்ளன.
தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறலாம். எழுத எழுத செப்பமாக வரும்.
பாராட்டும் நன்றியும்.
கருவினில் வளரும் பிள்ளை
பதிலளிநீக்குகருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.
*************
பதிலளிநீக்குகருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.
*************
பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.
பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.
பாராட்டு. நன்றி.
மிக்க நன்றி அய்யா. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பதிலளிநீக்கு