வெள்ளி, 4 ஜூன், 2010

கலிமண்டிலம்! 5

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகள் அமைந்த பாடல்.
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.

காட்டுப்பா

சிவந்தெழு கதிரவன் சிதறிடும் ஒளியில்
நிவந்தெழுங் கடலலை நிகழ்த்திடும் சதிரில்
உவந்திசை எழுப்பிடும் ஒலிக்குயில் அலகில்
கவர்ந்திருந் தொளிருவாள் கவியெனும் அழகே! --- புலவர் அரங்க. நடராசன்.


களிதரும் மதுவெனக் கரங்கொளும் எவரும்
ஒளியிழந் தறிவினொ டுடலமும் மெலிய
நளிமிகுந் துழளுவர் நவைவழி நகர்வர்
விளிவினில் நமனிடம் விழைகுவர் மடிந்தே!

குணங்கெடும், குடிகெடும் குடியினை விரும்பாய்;
பணங்கொடுத் தழிவெனும் படுகுழி விழுவாய்;
மனைதனை, மகவினை மனத்தினில் நினைந்தால்
துணையென மதுவினைத் தொடர்ந்திட ஒணுமோ? --- அகரம் அமுதன்

10 கருத்துகள்:

  1. நதிக்கரை நுரையினில் நனைவதும் அழகே.
    கதிரவன் ஒளியினில் கரைவதும் சுகமே.
    அதிமணம் பரவிட அலர்வதும் மலரே.
    பதியவன் மனதினில் படர்வதும் அவளே.

    தொடும்விரல் திகைத்தது, திரள்சரம் முகத்தில்
    படும்பொருள் எதுவென பதுக்கிய வினாவை
    நடுவிரா அவளிடம் நாயகன் வினவ,
    விடும்வரை விலகிய வெட்கம் அதுவே.

    அலைகடல்; அழகிய அரம்பையர்; அருமைக்
    கலைப்பொருள்; பழகிய கருமிரா; குறுகும்
    சிலையிடை; கழட்டிய சிறுதுணி; கொதிக்கும்
    உலையரி, எழுதிட உடையது கவியே.

    குளத்தினில் ஒருமுறை குளித்திடும் பொழுதில்
    தளர்த்திய இடைத்துணி தவறிட, கயல்கள்
    உலர்த்திய வலையுடை அணிந்திடப் பலரும்
    வளர்நிலம் நனைத்திடும் வலுமழை ஆனர்.

    குறுகுறு எனுமிரு கருவிழி மதுவே!
    துறுதுறு விரலொடு தொடையிடை முழவே!
    கருகரு விழுநதி கனிமறை எழிலே!
    பொறுபொறு எனுமொலி பொழிலுடை இரவே!

    பதிலளிநீக்கு
  2. வசந்த் அவர்களின் பாக்கள் அருமை. இருப்பினும் சிலஇடங்களில் தளை தட்டகின்றன.

    பதிலளிநீக்கு
  3. சரி. மாற்றம் செய்த பாக்கள் ::

    தொடும்விரல் திகைத்தது, திரள்சரம் முகத்தில்
    படும்பொருள் எதுவென பதுக்கிய வினாவை
    நடுவிரா அவளிடம் நாயகன் வினவ,
    விடும்வரை விலகிய வெருட்பய மதுவே.

    குளத்தினில் ஒருமுறை குளிக்கையில் குமரி
    தளர்த்திய இடைத்துணி தவறிட, கயல்கள்
    உலர்த்திய வலையுடை அணிந்திடப் பலரும்
    வளர்நிலம் நனைத்திடும் வலுமழை ஆனர்.

    குறுகுறு எனுமிரு கருவிழி மதுவே!
    துறுதுறு விரலொடு தொடையிடை முழவே!
    கருகரு விழுநதி கனிமறை குழலே!
    பொறுபொறு எனுமொலி பொழிலுடை இரவே!

    பதிலளிநீக்கு
  4. சந்ததச் சல்லாபஞ் சலிக்கும் வரைக்கும்வ
    சந்ததன் சாறைப் பிழிந்தார்.

    சக்கையாய்ச் சில்மிஷம் செய்யக் கரும்பிலும்
    சக்கையாய்ச் சாவும் சுவை.

    பதிலளிநீக்கு
  5. வசந்தின் பாக்கள் அருமை. அவனடியாரின் சில்மிஷமும் அருமை

    பதிலளிநீக்கு
  6. செறுபகை தொடர்வினை செழுங்கொடி அழித்து
    குறுநகை பலதொழில் கூற்றுவன் தொலைத்து
    வருபிணி முதுமையும் ஒருயுகம் அடக்க
    தருமமும் இரக்கமும் தகைபுரிந் திடுமே!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  7. அண்ணாமலையாரே! அருமை அருமை. வாழ்க அய்யா!

    பதிலளிநீக்கு
  8. கதவினை அடைத்துநான் கடைவரை நடக்க
    அதற்குளே அறைக்குளே அலைந்தன பொருட்கள்
    இதையது அதையிது இழுத்தது திறந்த
    கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே!

    [toy story மாதிரி நாமில்லா நேரம் நம் வீட்டிலுள்ள பொருட்கள் உணர்வுற்றால்? முகுந்த் நாகராஜன் புதுக்கவிதையில் இது போல் எழுதியிருப்பார். நானும் இப்படி சிந்தித்ததுண்டு என்பதால் மரபுப் பாவில்.]

    பதிலளிநீக்கு
  9. ஆஹா! நல்ல கருத்து. சொற்செறிவிலும், பொருட்செறிவிலும், பொருட்கோர்வையிலும் இப்பா உமா அவர்களின் வழக்கமான உயர்-தரத்துக்கு ஈடில்லை என்றாலும் அடிக்குறிப்பினால் மெருகடைகிறது என்றே நினைக்கிறேன். நன்றி.

    இதோ இப்பாவின் தாக்கத்தில்:

    பொருளுயிர் பெறுங்கதை பொருட்களின் களிப்பு
    மறுபடி மடிவுறும் மனிதனின் வரவால்
    மருள்வினை மயக்கமாம் மனமிதன் எழுச்சி
    முருகனின் வருகையில் முழுவதும் அடங்கும்.

    பதிலளிநீக்கு
  10. உமா மற்றும் அவனடியாரின் பாக்கள் அருமை. அருமை. புதுமையாக உள்ளது.


    +++ இதைய(து) அதையி(து) இழுத்தது திறந்த +++


    உமா அவர்கள் புணர்ச்சி விகுதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.


    +++ அதற்குளே அறைக்குளே அலைந்தன பொருட்கள் +++

    ஒரே வரியில் அடுத்தடுத்து இரண்டு ஏகாரங்கள் நடையெழிலைக் குறைப்பதாகக் கருதுகின்றேன்.

    அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள்! = என்று வரலாம்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com