சனி, 29 மே, 2010

கலிமண்டிலம்! 4

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா

4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.

5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது குறிலொற்றெடுத்தும் வரலாம்.

காட்டுப் பாடல்கள்!

வரும்புண் டரம்வா ளியின்மார் புருவிப்
பெரும்புண் திறவா வகையே ருதிநீ
இடும்புண் டநீர்மீள் கினுமென் னுழையில்
கரும்புண் டசொல்மீள் கிலள்கா ணுதியால்! --- கம்பரா...

செஞ்சே வகனார் நிலைநீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வனதே வதைகாள்
அஞ்சேல் எனநல் குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிபோ உரையீர்! --- கம்பரா...

அகரம் அமுதா

17 கருத்துகள்:

  1. காவி ரியும்மா மலையைக் கடந்தே
    காவி ரியுந்தான் நடந்தே மெதுவாய்
    தாவி டுதேபே ரலையோ(டு) அகண்டே
    தைவி ளையநந் தமிழ்நா டதிலே!

    பதிலளிநீக்கு
  2. முதல் பாவில் முதற்சீர் நெடிலோசையின்றி அமைந்துவிட்டது.
    மாற்றி அமைத்துள்ளேன்.

    கருநா டகத்தில் தலைகா விரியாய்
    திரிவே யிணிலே திகழ்கா விரியே
    வருமே யகண்டே தமிழ்நா டதிலே
    பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஆசிரியர்களே...

    அபிராமி அந்தாதிப் பாக்கள் என்ன பா வகை என்று அறிய விரும்புகிறேன். சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள உமா! முதலில் எழுதியுள்ள பா ஓசையும் பொருள் நயமும் பொருந்தவில்லை. ஆயினும் அதைத்தாங்களே புரிந்து கொண்டு திருத்தி அமைத்தமை கற்கை ஆற்றலைக் காட்டுகிறது. வாழ்க.

    பதிலளிநீக்கு
  5. இரா. வசந்த குமார். சொன்னது…

    அன்புள்ள ஆசிரியர்களே...

    அபிராமி அந்தாதிப் பாக்கள் என்ன பா வகை என்று அறிய விரும்புகிறேன். சொல்லுங்களேன்.


    கட்டளைக் கலித்துறை அய்யா!

    அபிராமி அந்தாதி முழுவதையும் படிக்க இங்குச் செல்க

    http://library.senthamil.org/004.htm#home

    பதிலளிநீக்கு
  6. பொறிதா னியங்கி பெருகும் உலகில்
    சிறுகைத் தொழில்வாழ் நிபுணர் சிதைந்து
    வறுமை அடைந்தார் வழித வறிநாம்
    ஒருசேர்ந் தவர்கை யொடித்தல் முறையோ?

    பன்னாட் டவர்க்கு பணத்தாற் சலுகை
    மின்னல் விரைவில் விதிகள் விலக்கு
    இன்னாட் டவரோ இடரால் துடிப்பர்
    உண்ணா திருந்தூ ழலில்சோர்ந் திடுவர்.

    பைகள், துணிகள் பலநூ தனவ
    கைகள் குடைகள் கழுத்தில் அணிந
    கைகள் கருத்தைக் கவர்ந்தொ ளிருமுண்
    மைகள் வலிக்கும் மனமோ துடிக்கும்

    ஏழை வயிற்றின் எழுச்சிக் கனலில்
    வீழும் விரைவில் வெளிநாட் டடிமைச்
    சூழல் விலகும் சுகமும் மலரும்
    வாழத் துணிவர் வளமும் பெறுவர்

    புத்தம் புதுவ டிவினில் பொருட்கள்
    மொத்த விலைக்குள் முதலோ டிலாபம்
    சுத்தத் தரத்தில் சரக்கைச் சிறப்பாய்
    விற்பார் வலையால் வெளிநாட் டிலுமே

    போற்றும் வடிவில் பொருள்கள் படைக்க
    ஆற்றல் அரும்ப அரும்வாய்ப் பளிப்போம்
    கூட்டு முயல்வில் குறைகள் களைந்து
    ஏற்று மதியை எளிதாக் கிடுவோம்

    அறத்தை அழிக்கும் அரசாட் சியரே
    பிறநாட் டினிலே பெருவங் கியிலே
    திருட்டுப் பணத்தைத் திறமாய்ப் பதுக்கி
    வளர்ந்த மரபை மறப்பது சரியோ?

    பதிலளிநீக்கு
  7. ஈற்றடியின் எதுகைப் பிழையை திருத்த:

    ‘மறந்தீர் மரபை வருவான் எமனே!’ என மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அருமை. அருமை. அவனடியாரின் சிறுதொழில் பற்றிய பாக்கள் அழகுற அமைந்துள்ளன. வாழ்க

    பதிலளிநீக்கு
  9. காதல் புரிவீர் கனவை நிறைப்பீர்
    சாதல் தொலைப்பீர் சரியென் றழைப்பீர்
    நோதல் விடுப்பீர் நுதலாய் சொலிப்பீர்
    ஆதல் இதனால் அதனால் புகுவீர்!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  10. அண்ணாமலையாரின் பா அருமை. ஓர் ஐயம்

    நுதலாய் சொலிப்பீர் =நுதல் -நெற்றி அல்லவா? அல்லது வேறு பொருளில் அமைத்திருக்கின்றீர்களா? அறியத் தரவும்.

    பதிலளிநீக்கு
  11. சரியாய்க் காண விசாலமான அறிவு நெற்றியில்
    புலப்படுவதால் தான் நுதலாய் சொலிப்பீர்
    என்று கூறினேன் ஐயா!
    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  12. அண்ணாமலை..!! சொன்னது…

    சரியாய்க் காண விசாலமான அறிவு நெற்றியில்
    புலப்படுவதால் தான் நுதலாய் சொலிப்பீர்
    என்று கூறினேன் ஐயா!


    ஓ! தாங்கள் கூறும் விளக்கம் அருமை. ஆனால் உவமை பொருந்துமா என்பது எனக்குத் தெரியவில்லை. நன்றிகள்

    பதிலளிநீக்கு
  13. ஒரு வேளை இப்படி மாற்றலாமோ?

    காதல் புரிவீர் கனவை நிறைப்பீர்
    சாதல் தொலைப்பீர் சரியென் றழைப்பீர்
    நோதல் விடுப்பீர் நுதியாய்ச் சொலிப்பீர்
    ஆதல் இதனால் அதனால் புகுவீர்!

    நுதி -கூர்மையான அறிவு

    பதிலளிநீக்கு
  14. காதல் கருத்தைக் கவிழ்த்திடும் கண்ணிமை
    நோதல் பெற்றவர்க் கு.

    பதிலளிநீக்கு
  15. தளை திருத்தி...:

    காதல் கருத்தைக் கவிழ்த்திடும் கண்ணிமை
    நோதலே பெற்றவர்க் கு.

    பதிலளிநீக்கு
  16. திரு.அகரம் அமுதனாரே!!
    தங்களது திருத்தம் இன்னும் நன்றாகவும், மிகப் பொருத்தமாகவும் உள்ளது!
    மிக்க நன்றிகள் ஐயா!

    திரு.அவனடிமை ஐயா அவர்களின் பா வடிக்கும்
    திறன் பற்றி சொல்லவும் வேண்டுமோ!
    அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  17. திகழ்கா,திகழ்மதி அர்த்தம் வேண்டும் தோழா்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com