புதன், 18 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 4

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பசித்தால் உண்பது நன்றாகும்
பசியா துண்பது நோயாகும்
புசிக்க வாழ்வது பெருந்தீங்கு
புசித்தல் வாழ்வதற் கெனல்நன்றே! -புலவர் அரங்க. நடராசன்

8 கருத்துகள்:

  1. முருகா வந்திடு அருகாக
    மருகும் நெஞ்சினைக் கேட்பாயோ?
    ஒருநாள் பொழுதினில் உனைமறந்தால்
    மருளும் எனதுயிர் அறியாயோ!

    கந்தா துயர்விடுங் கதிர்வேலா
    எந்தாய் வேறுயார்? உலகினுக்கும்
    உந்தாய் அமைவது உன்வேலே!
    நிந்தாள் பணிந்திட நிதம்செயமே!

    செந்தா மரைதனில் பிறந்திட்டோய்
    சிந்தா மலரென அறுமுகமாய்
    வந்தாய் வடிவெனத் திகழ்ந்தமுதம்
    தந்தாய் தமிழெனும் தாய்வடிவில்!

    தென்றல் வந்துடன் தாலாட்டும்
    கொன்றை மலர்களும் பூச்சூட்டும்
    மன்னா! சிவகுரு பவனே!நீ!
    நின்றே ஆடுவ தெவ்விடம்சொல்!

    கதியும் கடவுளும் நீயேதான்.
    துதியும் தெய்வமும் நீயேதான்..
    பதியும் பண்களும் நீயேதான்..
    விதியை செயித்திட உன்னருள்தான்!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  2. அண்ணா மலையினுள் அரும்புமருள்
    அந்நாக் கினில்பொழி அருந்தமிழே
    அன்னா ருளக்கவி அரும்புகளோ
    அண்ணா மலைமகன் அறுமுகனே!

    பதிலளிநீக்கு
  3. கல்லாய் மனத்தினை கடிதாக்கி
    சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
    பொல்லா நோயது சுயநலம்போல்
    கொல்லும் மற்றெதும் அறிவீரோ?

    பதிலளிநீக்கு
  4. சற்றுன் மனத்திருள் நீயகற்றி
    பற்றென் கைகளை பயம்விலக்கி
    கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
    உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!

    பதிலளிநீக்கு
  5. வஞ்சி மண்டிலம் வடிவிலெம்மை
    நஞ்சாஞ் சுயநலம் நசித்திடென்றார்
    துஞ்சா துமைமகன் துணைபுரிய
    அஞ்சும் அகந்தையை அகற்றென்றார்!

    பதிலளிநீக்கு
  6. அண்ணாமலையாரின் முருகன் பற்றிய பாடல் அருமை. வாழ்க

    பதிலளிநீக்கு
  7. உமா அவர்களின் இரண்டு பாடல்களும் சிறப்பாக உள்ளன. வாழ்க

    பதிலளிநீக்கு
  8. ஆஃகா! ஒரு வரி வாழ்த்தென்றாலும், அகரமாசான் வந்துவிட்டாரே!

    சிகரத் தலைவனின் சிவனுமையின்
    மகனைப் பாடினர் மகிழ்ந்துறவே
    நகர வாழ்வினில் நைந்துழலும்
    அகரம் அமுதரும் அருமையென்றார்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com