செவ்வாய், 7 டிசம்பர், 2010

இசைப்பா! 2

இப்பாடத்தில் ஒருவகை இசைப்பாவைப் பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
......நீட்டி யழைத்து
......நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
......நிறைப்பது கவிமாலை!
வாசம் பரப்பி
......வண்டை அழைப்பது
......வண்ண மலர்சோலை! -என்னை
......வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
......மதியும் வந்தே
......மங்கல வானெழுதும்! -விண்மீன்
......வாழ்த்திசைப் பண்ணெழுதும்!
சோலை வந்தபின்
......சில்வண் டெல்லாம்
......சொக்கியா நின்றுவிடும்? -பூக்கள்
......வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
......உயர்த்திப் பிடித்த
......உறுவில் மையெழுத்து! -மின்னல்
......ஒளியோ கையெழுத்து!
அருவிக் குழந்தை
......ஆறே மங்கை
......ஆழி மூப்பாகும்! -கரைக்கு 
......அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
......கயமை சமூகம்
......கண்டிடு கவிதையிலே -அவைதான்
......கவிதைகள் என்பவனே!
இயற்கைக் கவிஞன்
......எழுதாக் கவிதைகள்
......எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
......இடுகிறாய் பிடிநெருப்பு!

இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!

தனிச்சொல்லுக்கு முன்னுள்ள சீரும், அதற்கு நேர் கீழ் உள்ள சீரும் இழைபுத்தொடை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், எட்டாம் சீர்கள் மோனை அமைதல் சிறப்பு.

ஒன்றாம் மற்றும் பத்தாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

14 கருத்துகள்:

  1. அருமை தங்கள் பா. இயைபுத் தொடையோடு அமையும் இசைப்பா நெஞ்சை அள்ளும் விதமாக உள்ளது. முயன்று பாவுடன் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. /நேசக் கையை
    ......நீட்டி யழைத்து
    ......நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
    ......நிறைப்பது கவிமாலை!
    வாசம் பரப்பி
    ......வண்டை அழைப்பது
    ......வண்ண மலர்சோலை! -என்னை
    ......வடிப்பது கவிச்சோலை!
    /

    சொல்ல வார்த்தை இல்லை;
    சொக்கி நிற்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. உமா சொன்னது…

    அருமை தங்கள் பா. இயைபுத் தொடையோடு அமையும் இசைப்பா நெஞ்சை அள்ளும் விதமாக உள்ளது. முயன்று பாவுடன் வருகிறேன்.

    வருக வருக. அழகுப்பாக்கள் ஆக்கித் தருக.

    பதிலளிநீக்கு
  4. திகழ் சொன்னது…

    சொல்ல வார்த்தை இல்லை;
    சொக்கி நிற்கிறேன்



    சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் லின்மை அறிந்து!

    பதிலளிநீக்கு
  5. நகர வாழ்வு

    நீண்ட தெருக்கள்
    நெளிந்த பாலம்
    நிறைய கட்டிடங்கள் -விண்தொட
    நிற்கும் பட்டிணத்தில்

    வேண்டும் எதுவும்
    விரைந்தே கிடைக்கும்
    வேகம் வாழ்வோடு - மறந்த
    விவேகம் மண்ணோடு

    ஆண்பெண் பிரிவிலை
    அனைவரும் சமமிங்
    ஆயிரம் வாகனங்கள்-சாலை
    அதன்மேல் குடித்தனங்கள்

    தூண்டும் திரைப்பட
    துறையில் ஓர்நாள்
    துலங்கிடும் கனவோடு-நுழைந்தவர்
    துயரம் மனத்தோடு

    ஆண்டியும் உண்டிங்
    ஆயிரம் கோடி
    அடைந்தவர் வாழ்கின்றார்-வாசலை
    அடைத்தவர் வாழ்கின்றார்.

    வீண்பழி வருமென
    விலகியே வாழ்வதை
    விரும்பியே ஏற்கின்றார் -வாழ்வின்
    வெற்றியை இழக்கின்றார்.

    கிராம வாழ்வு.

    சட்டை இல்லை
    சாலை இல்லை
    சட்டம் தெரியவில்லை -மனங்கள்
    சாக்கடை ஆகவில்லை

    கட்டிடம் இங்கிலை
    காசுடன் பணமும்
    கையில் இருந்ததில்லை-சனங்கள்
    கடமை மறந்ததில்லை

    பட்டும் இல்லை
    பகட்டும் இல்லை
    பட்டினிக் கிடந்திடுவார்-பிறர்துயர்
    பட்டால் கலங்கிடுவார்.

    கொட்டும் வானம்
    கொடுக்கும் கெடுக்கும்
    குறையுடன் வாழ்கின்றார்- விட்டுக்
    கொடுத்தவர் வாழ்கின்றார்.

    பதிலளிநீக்கு
  6. நகரம், சிற்றூர் பற்றிய இரு மாறுபட்ட பாக்களும் அருமை. அருமை.

    பட்டும் இல்லை
    பகட்டும் இல்லை
    பட்டினி கிடந்திடுவார் -பிறர்துயர்
    பட்டால் கலங்கிடுவார்

    ஆஃகா! அருமை.

    பதிலளிநீக்கு
  7. /சட்டை இல்லை
    சாலை இல்லை
    சட்டம் தெரியவில்லை -மனங்கள்
    சாக்கடை ஆகவில்லை/

    இயல்பு

    பதிலளிநீக்கு
  8. //
    இயற்கைக் கவிஞன்
    ......எழுதாக் கவிதைகள்
    ......எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
    ......இடுகிறாய் பிடிநெருப்பு!

    //

    ஆகா! அகரம் அமுதனார் ..அருந்தமிழ்க் கவிஞனார்..!

    பதிலளிநீக்கு
  9. ///
    கட்டிடம் இங்கிலை
    காசுடன் பணமும்
    கையில் இருந்ததில்லை-சனங்கள்
    கடமை மறந்ததில்லை..

    பட்டும் இல்லை
    பகட்டும் இல்லை
    பட்டினிக் கிடந்திடுவார்-பிறர்துயர்
    பட்டால் கலங்கிடுவார்.
    ///

    திருவமை.உமா அவர்களின் ஒப்பீடு அருமை!
    அத்தனையும் உண்மை!

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய சிறுமுயற்சியும்..


    பிரம்மனிடம் சில கேள்விகள்!
    *
    பிறப்பால் விளைவது
    பூமியில் என்ன?
    பிரம்மனை நான்கேட்டேன்-கெஞ்சும்
    குரலால் தான்கேட்டேன்!
    இறப்பால் விளைவது
    என்னஇவ் வுலகில்?
    எனையே அவன்கேட்டான்- கேள்வியை
    மாற்றிப் புடம்போட்டான்!


    நம்குர லுக்கும்
    நாயகன் செவியை
    நன்றாய்ச் சாய்க்கின்றான்-உலகில்
    எனையும் பார்க்கின்றான்!
    எம்குர லுயர்த்தி
    இன்னும் இரண்டொரு
    கேள்விகள் கேட்போமே-என்னதான்
    செய்வான் பார்ப்போமே!

    காட்டிலும் மேட்டிலும்
    கடவுளைத் தேடியோர்
    கூட்டமும் அலைகிறதே?-இதனால்
    குடும்பமும் தொலைகிறதே?
    வீட்டினில் வைத்தெமை
    வணங்கிடு போதும்
    காடும் மேடெதற்கு-நீயேன்
    கானகம் போவதற்கு?

    இல்லறம் உள்ளவர்
    துறவறம் நாடிட
    உலகே வீண்தானோ?-இப்படி
    உழல்வதும் சரிதானோ?
    இல்லறம் துறவறம்
    இரண்டும் நல்லறம்
    ஆற்றினில் ஓடியபின்-நீரும்
    ஆழ்கடல் அடைந்திடுமே!

    பிறந்திடும் உயிர்கள்
    ஓர்நாள் இறக்கும்
    இறந்தபின் என்னாகும்?-சொல்லென்
    வாழ்நாள் பொன்னாகும்!
    சிறந்திடும் ஆழ்கடல்
    சிறுதுளி தந்திடும்
    மேகமென் றேயாகும்-அதுவே
    மீண்டும் ஆறாகும்!

    ஏழு பிறப்பே
    எவர்க்கும் என்றால்
    இறைவா நீஎதற்கு?-இங்கே
    நாங்கள் வணங்குதற்கு!
    பாழும் மனிதா
    கேள்விக ளாலே
    படுத்தி யெடுப்பதுமேன் -என்னைப்
    பாவியென் றாக்குவதேன்!

    இத்தனை கடினம்
    எங்களின் வாழ்வில்
    ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே
    உலகில் இன்புறவா!
    எத்தனை கேள்விகள்
    இன்னமும் உளவோ?
    என்னைப் போகவிடு!-இலையேல்
    இங்கே சாகவிடு!

    பிரம்மன் இறந்தால்
    பிறப்பது எங்கனம்?
    பூமியில் பிறப்பதற்கே-பிரம்மா
    இத்தனை பயமெதற்கு?
    பரமன் உடுக்கையை
    புரட்டுதல் போலே
    புவியினை அசைப்பானே-கண்டும்
    பிறந்திட நினைப்பேனோ!

    உனக்கும் மேலே
    ஒருவன் உண்டோ
    ஒருநொடி காண்பேனோ?-சிற்சில
    கேள்விகள் கேட்பேனோ?
    மனதை மயக்கும்
    மதியுனக் கெனினும்
    மயங்கிட மாட்டேனே - சாபம்
    மறுமுறை கூட்டேனே!

    போதும் பிரம்மா
    பொய்களை நிறுத்து
    புண்ணியம் கொடுத்துவிடு!-பூமியில்
    பிறப்பினை நிறுத்திவிடு!
    ...
    என்மேல் என்றும்
    எள்முனை தவறிலை
    என்தொழில் நின்றாலும்-மனிதா
    உன்தொழில் நிற்காதே!

    மனிதா
    உன்தொழில் நிற்காதே!


    பிரம்மன் சொன்னதில்
    பிரமை பிடித்தே
    பேதைமை ஆகியதே-கேள்விகள்
    மறதியென் றேகியதே!
    பரமனில் பிரமனில்
    பாரினில் தவறிலை
    பாழும் மனதினுள்ளே - பாராய்
    பலவிதத் தவறுகளும்!

    பாராய்
    பலவிதத் தவறுகளும்!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. //////இல்லறம் துறவறம்
    இரண்டும் நல்லறம்
    ஆற்றினில் ஓடியபின்-நீரும்
    ஆழ்கடல் அடைந்திடுமே!//////



    /////இத்தனை கடினம்
    எங்களின் வாழ்வில்
    ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே
    உலகில் இன்புறவா!
    எத்தனை கேள்விகள்
    இன்னமும் உளவோ?
    என்னைப் போகவிடு!-இலையேல்
    இங்கே சாகவிடு!///////



    ///////உனக்கும் மேலே
    ஒருவன் உண்டோ
    ஒருநொடி காண்பேனோ?-சிற்சில
    கேள்விகள் கேட்பேனோ?
    மனதை மயக்கும்
    மதியுனக் கெனினும்
    மயங்கிட மாட்டேனே - சாபம்
    மறுமுறை கூட்டேனே!////////


    இறைவனும் நீங்களும் பேசுவதாக அமைந்த பாடல் அருமையான கற்பனை + நகைச்சுவை + அறிவார்ந்த பா என்பதில் ஐயமில்லை. வாழ்க.

    பதிலளிநீக்கு
  12. அகரம் அமுதன் அய்யா அவர்களின் இடுகைப் பாவும், உமா அவர்கள், அண்ணாமலை அவர்களின் பாக்களும் மிக அற்புதமாக உள்ளன. நல்ல கருத்துச் செறிவு, சொல்லாளல் எல்லாம் சேர்ந்து படிக்கவும், படித்ததை அசைபோடவும் செய்கின்றன.

    இயற்கை வர்ணனை, நகர-கிராம வாழ்வு, வாழ்வியல்/இறையியல் என்று தலைப்புகளும் பலதாக தளத்தின் தரத்திற்கேற்ப பல சிந்தனைகளைத் தூன்றுகின்றன.

    பாவலர்களுக்கு நன்றிகள் பல.

    திகழ் அவர்களும் பாவினங்கள் கொண்டுவரலாமே.

    அப்புறம், வசந்த் அவர்கள், சிக்கிமுக்கியார், சவுக்கடியார், அப்பாதுரையார், தமிழநம்பி அய்யா, மற்றும் ஏனைய பாப்பெருமகனார்கள் எல்லோரும் எங்கே போய்விட்டனர்?

    பதிலளிநீக்கு
  13. //இயற்சீர் + இயற்சீர்
    ......இயற்சீர் + இயற்சீர்
    ......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
    ......இயற்சீர் + காய்ச்சீர்!
    இயற்சீர் + இயற்சீர்
    ......இயற்சீர் + இயற்சீர்
    ......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
    ......இயற்சீர் + காய்ச்சீர்!//

    தனிச்சொல் எப்படி அமைய வேண்டும்?

    பதிலளிநீக்கு
  14. ஈரசைச் சீராக அமைய வேண்டும். அதாவது இயற்சீர்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com