செவ்வாய், 21 ஜூலை, 2009

எளிமையும், புதுமையும்!

பாரதிக்குப் பின் வெண்பாவில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணராய்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நால்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். ---நாலடியார்---

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்கு கொக்கொக்க கைக்கைக்கு
காக்கைக்குக் கைக்கைக்கா கா! ---கவி காளமேகம்---

என்றெல்லாம் எழுதிவந்த காலத்தில்…

எமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் –உமைக்கினிய
மைந்தன் கணநாதன் வாழ்விப்பான் நற்குடியை
சிந்தையே இம்மூன்றும் செய்! ---பாரதி---

தன்மேனி மாசுகளைத் தான்கண்டு நீக்கிவிடக்
கண்ணாடி உன்முகத்திற் கண்விழிக்கும் –உண்மையம்மா!
விண்ணில் குளிக்க விதியில்லை என்றேஉன்
கண்ணில் குளிக்கும் கடல்! ---கவிப்பேரரசு வைரமுத்து---

புதுமைப்பித்தன் காலத்தில் ஓர் புதுமை நிகழ்ந்தது. நிகழ்த்தியவன் புதுமைப்பித்தனே! எளிமையான பல வெண்பாக்கள் செய்திருக்கிறான். அவற்றிலொன்று…

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணாள முன்னாக் கசக்குதா? –அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா(ள்)
போயேன் தொலைஞ்சிப்போ யேன்! ---புதுமைப்பித்தன்---


இதற்குப்பிறகு, தொடர் வண்டியின் பெட்டிகளைப்போல பலரும் எளிமையான வெண்பாக்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்…

இங்கிலீஸ்ல பத்து தமிழில் இருவது
விஞ்ஞானத் தில்கணக்கில் எவ்வேயாம் –அஞ்சி
புவியியலில் ஆறு வரலாறில் எண்டா!
எவன்டாடே வாத்தி ஒனக்கு? ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


எம்பிள்ளை வர்ரச்சே தாங்கதவைச் சாத்தனுமா?
எம்பிள்ளை பிச்சையா கேக்கவந்ததான்? –எம்பிள்ளை
குந்த இடமில்லே? பிளாக்கண்ட்ஒய்ட் டீவிக்கே
இந்தஜென்பம் ஏதுக் கடீ! ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் –அங்கங்கே
சிங்கி யடிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்! ---தஞ்சை இனியன்---

வள்ளுவன் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கின்றார் ஏனென்றால் –உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்! ---சுஜாதா---


இப்படிப் பற்பலரைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் வழியில் அடியேனும், (ஆயினும் சற்றே மாறுபட்ட கோணத்தில்) பற்பல முயற்சிகளைச் செய்துபார்த்திருக்கிறேன். அவற்றுள் சில…

நாம் அனைவரும் அன்றாடம் பேருந்தில் பயணிப்பது தவிற்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்ட நெரிசல் வேறு. நடத்துனர்களின் ஆளுமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பயணிகளை ஆடுமாடுகள் எனக்கருதி இங்குநகர், அங்குநகர் என வறுத்தடுத்தவிடுவர். இச்சூழலை மனத்திற் கொண்டு எழுந்தவையே பின்வரும் இருவெண்பாக்கள்.

கண்டக்டர்:-
இந்தாப்பா! பஸ்ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!?
வந்துட்டான் என்உசுர வாங்கன்னே –அஞ்சிருவா
சீட்டுக்குச் சில்லைரைய நீட்டாம நூறுருவா
நோட்டெடுத்து நீட்டறியா நீ?!

பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோத்துநான் அங்கநின்னா –சேட்டையக்
காட்டுற; அங்கயிங்க ஓட்டுற; நோட்டுதந்தா
நீட்டுற; சில்லரைக்கே சீட்டு?

தேநீரைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரர்கள் குடிக்கிறார்களோ இல்லையோ அதுதெரியாது. ஆனால் தமிழனால் காலையில் தேநீர் குடிக்காமல் காலைக்கடன்களைக் கழிக்கவே முடியாது என்றாகி விட்டது. ஊருக்கு ஊர் தெருவிற்குத் தெரு தேநீர்கடைகள் முளைத்துப் புற்றீசல்கள் போல் பெருகி விட்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் நானுரைப்பதன் உண்மைப் புரியும்.

அதுவும் நம்மீர்களில் தேநீர் அருந்திக்கொண்டே செய்திதாள்களை நோட்டமிடுவது கண்கூடு. இச்சூழலைப் பாட முனைந்ததைப் பாருங்களேன்…

கஸ்டமர்:-
டிக்யாஷன் இல்லாமல் டீயொன்னு போடப்பா!
பக்காவாப் போட்டாப் பணமுண்டு –அக்கவுண்டில்
கேக்கிறதா எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டின்னா
சாக்கடைக்குப் போய்டுஞ் சரி!

கடைக்காரன்:-
டீக்கடைப் பெஞ்சிலும் டிக்கியப் பார்க்பண்ணி
பாக்கிவெச்சிப் பால்டீயாக் கேக்குற –போக்கிடம்
வேறின்றிப் பேப்பருல வெச்சக்கண் வாங்காம
ஆறிடம்ஆர் டர்போடு றே!?

இன்றைக்கு அறிவுரை சொல்லாத ஆளே கிடையாது. இதனைக் கருத்திற் கொண்டு எழுந்தது பின்வரும் வெண்பா…

எம்.ஏ படிச்சதுக்(கு) ஏத்தவேல வேணுமுன்னு
சும்மாத் திரிஞ்சா சுகப்படுமா? –பம்மாத்துக்
காட்டாம கைக்குக் கிடைச்சவேலை பாத்தாத்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!


எளிமையாக எழுதப்புகும் அதே வேளையில் கவிதைக்கான நயம் குன்றாது செழுங்கற்பனையேற்றிப் பாட மறந்துவிடக்கூடாது. அதற்காகவே மேலே பல காட்டுக்களை வழங்கினேன். புதுமையாக வெண்பாப்படைக்க விரும்புவோர் யாவரும் தான் கண்ட காட்சியையோ? நிகழ்ச்சியையோ? எதைவேண்டுமானாலும் கவிதையாக்கலாம். இருப்பினும் அவை இறுதியில் கவிதையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலம் கணக்கில் வைத்துக்கொள்ளாமல் விட்டுவிடும்.

புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா!
சூழும் பகைவற்குச் சொல்! ---வைரமுத்து---

வெண்பா வடிவத்தில் எழுதுவதால் மட்டுமே அவையாவும் கவிதையாகிவிடாது. இறுதியில் கவிதைக்குறிய நயத்துடன் இருக்க வேண்டும். இதனை மனத்தில் இறுத்திக்கொண்டு புதிய புதிய துறைசார்ந்த, பொருள் சார்ந்த வெண்பாக்களைத்தீட்ட முற்படுவோமாக.

இக்கிழமைக்கான புதிய முயற்சி:-
குறும்படம் ஒன்று காண நேர்ந்தது. பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோனேன். இக்குறும்படத்தில் இறுதியில் காட்டப்படும் இருவிழிகள் என்னச்சொல்ல விழைகின்றன என்பதை வெண்பாவாக்க வேண்டுகிறேன். குறும்படம் பார்க்க இங்குத்தட்டவும்!

இக்கிழமைக்காண ஈற்றடிகள்:- “நெருப்பில் விழுந்த நிலவு!” அல்லது, “நிலவில் பிறந்த நெருப்பு!”


அகரம் அமுதா

73 கருத்துகள்:

  1. அருமையான பாக்கள்

    பாரதிக்குப் பின் தமிழே புத்துணர்ச்சி பெற்றது உண்மை தான்.

    இயன்றவரை இனிக்கும் தமிழில் பாக்கள்
    புனைவது தமிழைத் தழைக்க வழிவகுக்கும்.


    /தன்மேனி மாசுகளைத் தான்கண்டு நீக்கிவிடக்
    கண்ணாடி உன்முகத்திற் கண்விழிக்கும் –உண்மையம்மா!
    விண்ணில் குளிக்க விதியில்லை என்றேஉன்
    கண்ணில் குளிக்கும் கடல்! ---கவிப்பேரரசு வைரமுத்து---/

    வார்த்தைவிளையாட்டில் பாக்கள் வரைவதும் பலரை தமிழின்பால் ஈர்க்கும்

    /வள்ளுவன் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
    மெள்ள நடக்கின்றார் ஏனென்றால் –உள்ளே
    திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
    குறுக்கிட்டால் கோபம் வரும்! ---சுஜாதா---/

    எல்லாரும் புரியும்வண்ணம்
    இனிமை கொஞ்சும்வண்ணம்
    தமிழ் எழில்வண்ணம்
    இருக்கும்படி எழுதுவதும்
    நன்று.

    பதிலளிநீக்கு
  2. ////எல்லாரும் புரியும்வண்ணம்
    இனிமை கொஞ்சும்வண்ணம்
    தமிழ் எழில்வண்ணம்
    இருக்கும்படி எழுதுவதும்
    நன்று.////

    உண்மைதான் திகழ்மிளிர் அவர்களே! வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. குறும்படத்தின் விழிகளைப் பற்றி சில பாக்கள், ஈற்றடியை வைத்து ஒரு வெண்பா இதோ. வாய்ப்புக்கு நன்றி.

    **********************
    ஆடை அழகினை மூடியும் கண்களின்
    சாடையில் சாட்டையைக் காண்.

    ஆடும் அழகினை போர்த்தியும் பெண்மயில்
    சாடும் விழியிரண் டால்.

    பல்லாடிப் போன படுகிழ வன்மாரும்
    சல்லாபம் செய்வார் சுகமாய் - சிலைபோல்
    மனைவிகள் நான்காம் திருமணம் செய்வார்
    அனைவர்க் கிடுவார் திரை.

    சிற்றிடையாள் சற்றே சிரித்தாலும் சீர்குலையும்
    பட்டுடையாள் பஞ்சில் படுந்தீ - மறைத்தார்
    தலைமுதல் கால்வரை யென்றாலும் கண்கள்
    நிலவினில் வீழ்ந்த நெருப்பு(*).

    (*) - குளிர்ச்சி, கோபம் ஒரே சமயத்தில் பொங்குவதால்
    **********************

    பதிலளிநீக்கு
  4. வருக! அவனடியார் அவர்களே! வெண்பாக்கள் சிறப்பு! வாழ்க நீவீர்.. தொடர்ந்து வருக! ஆதரவு தருக!

    பதிலளிநீக்கு
  5. ////வள்ளுவன் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
    மெள்ள நடக்கின்றார் ஏனென்றால் –உள்ளே
    திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
    குறுக்கிட்டால் கோபம் வரும்! ---சுஜாதா---////

    சுஜாதாவுக்கு பதில்:
    *****************************
    கோபம் குணக்கறை வள்ளுவர்க் குண்டென்றீர்
    சாபம் நமக்கொன்று நேரும் - அபவாதம்
    வாசுகியார் அம்மை கிசுகிசுப்ப தேனென்றால்
    பாசுனையில் நீர்பருகத் தான்
    *****************************
    * 'நீர்'-ஐ தண்ணீராகவும், சுஜாதாவைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்..
    வள்ளுவம் என்னும் ஊற்றில் நாமெல்லோரும் பருகுவதுபோல், வாசுகி அம்மையாருக்கும் நிச்சயம் விருப்பம் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ////சுஜாதாவுக்கு பதில்:
    *****************************
    கோபம் குணக்கறை வள்ளுவர்க் குண்டென்றீர்
    சாபம் நமக்கொன்று நேரும் - அபவாதம்
    வாசுகியார் அம்மை கிசுகிசுப்ப தேனென்றால்
    பாசுனையில் நீர்பருகத் தான்/////


    அவனடிமை அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். அழகான அறிவுப்பூர்வமான பதில். தங்கள் வெண்பா ஆற்றல் கண்டு வியக்கிறேன்.

    சுஜாதா அவர்களின் அக்கவிதையைப் படித்தவுடன் நானும் ஒரு வெண்பாவைப் பதிலாக எழுதியிருந்தேன். அது இது...


    குறுக்கிட்டால் கோபம் வருமோ? வெகுளி
    ஒறுத்தார்க் கின்பமென் றார்க்கு? -கிறுக்கும்
    பிடித்ததோ நம்தம் சுஜாதா விற்கு?
    துடிக்குதே நெஞ்சம் எனக்கு!

    பதிலளிநீக்கு
  7. //புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
    குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
    வாழும் கவிதைகள் வடிவத்தில் இல்லையடா!
    சூழும் பகைவற்குச் சொல்! ---வைரமுத்து---//

    'வாழும் கவிதைகள்' சரிதானா ? தளை உதைக்கிறதே ('கவிதை'?) - இருந்தாலும் வை.மு-வுக்கு கோபம் அதிகம்:

    வைரத்தில் முத்தாய்ப் பெனவருங் கருத்தை
    உரைத்தார் பகையவர்க் குண்டோ ? - இருந்தும்
    வடிவமும் சேர்ந்தநல் வார்த்தையும் கொண்ட
    அடிகளால் நம்மை யடித்தார்.

    பதிலளிநீக்கு
  8. //குறுக்கிட்டால் கோபம் வருமோ? வெகுளி
    ஒறுத்தார்க் கின்பமென் றார்க்கு? -கிறுக்கும்
    பிடித்ததோ நம்தம் சுஜாதா விற்கு?
    துடிக்குதே நெஞ்சம் எனக்கு!//

    ஆமாம், நன்றாகச் சொன்னீர்கள்..- எனக்கும் நெஞ்சம் துடிக்கத்தான் செய்தது - ஆனால் சுஜாதாவை ஏச வள்ளுவர் இடம் கொடுக்க மாட்டார் என்று தோன்றியது, மேலும் தம்பதியினர் இருவர் மேல் பட்ட கறைக்கு ஈடுகட்டும் வண்ணம் எழுத விழைந்தேன்.

    உங்கள் வெண்பாக்கள் பலவும், உங்கள் பதிவாள நண்பர்களின் ஆக்கங்கள் பலவும் வெகு ஜோர்.... எவ்வளவு அழகான, சுவையான எண்ணங்கள், நிகழ்வுகள், விளைவுகள் பாருங்கள்.

    டீக்கடையில், பேருந்தில் நடக்கும் சாதாரண பேச்சு வழக்கு தமிழிலேயே கவிதை எழுதி கலக்கிவிட்டீர்கள் - அந்த காலத்து என். எஸ். கிருஷ்ணன் பாட்டுக்களை நினைவு படுத்தியது...

    ஆமாம், இராஜகுருவை 'வானம்' தலைப்பு கொடுத்ததற்கு சாடினாரே - 'சுவற்றில் சிறுநீர்' புலவர் - அவரை எங்கே காணோம் ? - அவர் பட்டியலிட்ட இக்காலத்து நிகழ்வுகளுக்கும் பாட்டு எழுத மாட்டோரோ என்ற ஆவல்.....

    வாழ்க...

    பதிலளிநீக்கு
  9. //////அவனடிமை சொன்னது…

    //புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
    குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
    வாழும் கவிதைகள் வடிவத்தில் இல்லையடா!
    சூழும் பகைவற்குச் சொல்! ---வைரமுத்து---//

    'வாழும் கவிதைகள்' சரிதானா ?/////



    இலக்கணப்படி சரியாகவே அமைந்துள்ளது அய்யா!

    வா+மும் --- கவி+தைகள்
    நேர்+நேர் --- நிரை+நிரை

    மாமுன் நிரை வந்து இயற்சீர் வெண்டளை சரியாகவே போருந்தியிருக்கிறது அய்யா!



    /////வைரத்தில் முத்தாய்ப் பெனவருங்க ருத்தை
    உரைத்தார் பகையவர்க் குண்டோ ? - இருந்தும்
    வடிவமும் சேர்ந்தநல் வார்த்தையும் கொண்ட
    அடிகளால் நம்மையடித் தார்.//////

    அருமை அருமை. கலக்குகிறீர்கள். தொடர்ந்து தங்களது ஆதரவை வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு வழங்கக் கோரிகை வைக்கிறேன். ஏற்பீராக.

    பதிலளிநீக்கு
  10. //////அவனடிமை கூறியது...
    //குறுக்கிட்டால் கோபம் வருமோ? வெகுளி
    ஒறுத்தார்க் கின்பமென் றார்க்கு? -கிறுக்கும்
    பிடித்ததோ நம்தம் சுஜாதா விற்கு?
    துடிக்குதே நெஞ்சம் எனக்கு!//

    ஆமாம், நன்றாகச் சொன்னீர்கள்..- எனக்கும் நெஞ்சம் துடிக்கத்தான் செய்தது - ஆனால் சுஜாதாவை ஏச வள்ளுவர் இடம் கொடுக்க மாட்டார் என்று தோன்றியது, மேலும் தம்பதியினர் இருவர் மேல் பட்ட கறைக்கு ஈடுகட்டும் வண்ணம் எழுத விழைந்தேன்./////


    அட அட அட என்ன அருமையான சிந்தனை. வாழ்த்தி வணங்கிறேன் அய்யா!

    இதைத்தான் வள்ளுவன்:-

    ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொருத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்! என்றானொ?


    நான் இன்பமெய்துவிட்டேன். நீங்கள் பொன்றும் துணையும் புகழ்படைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. /////உங்கள் வெண்பாக்கள் பலவும், உங்கள் பதிவாள நண்பர்களின் ஆக்கங்கள் பலவும் வெகு ஜோர்.... எவ்வளவு அழகான, சுவையான எண்ணங்கள், நிகழ்வுகள், விளைவுகள் பாருங்கள்.

    டீக்கடையில், பேருந்தில் நடக்கும் சாதாரண பேச்சு வழக்கு தமிழிலேயே கவிதை எழுதி கலக்கிவிட்டீர்கள் - அந்த காலத்து என். எஸ். கிருஷ்ணன் பாட்டுக்களை நினைவு படுத்தியது.../////


    மிக்க நன்றிகள் அய்யா!



    /////ஆமாம், இராஜகுருவை 'வானம்' தலைப்பு கொடுத்ததற்கு சாடினாரே - 'சுவற்றில் சிறுநீர்' புலவர் - அவரை எங்கே காணோம் ? - அவர் பட்டியலிட்ட இக்காலத்து நிகழ்வுகளுக்கும் பாட்டு எழுத மாட்டோரோ என்ற ஆவல்...../////


    வருவார் வசந்தன்! வனப்புப்பாச் செய்து
    தருவார் அழகுத் தமிழில் -கருவாய்
    உதித்தநற் கற்பனைக் கோர்வடுவம் தந்து
    பதிப்பார்தன் வெண்பாவைப் பார்த்து!

    பதிலளிநீக்கு
  12. //இலக்கணப்படி சரியாகவே அமைந்துள்ளது அய்யா!

    வா+மும் --- கவி+தைகள்
    நேர்+நேர் --- நிரை+நிரை

    மாமுன் நிரை//
    'மாமுன் நிரை' நீங்கள் சொல்வது சரிதான்; ஆனால் ஒரு கேள்வி : கவி+தை+கள் = நிரை+நேர்+நேர் (புளிமாங்காய்?) இல்லையா ?
    இப்படி இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் 'மாமுன் நிரை' சரிதான்...

    ஆனால்... நான் முதலில் சொல்ல வந்த தளை இடிப்பு இதில்:
    'கவிதைகள் வடிவத்தில்' ?

    'கவிதைகள்'-ஐ அடுத்து 'வடி' என்று வரலாமா ?

    பதிலளிநீக்கு
  13. /////அவனடிமை கூறியது...

    ஆனால்... நான் முதலில் சொல்ல வந்த தளை இடிப்பு இதில்:
    'கவிதைகள் வடிவத்தில்' ?

    'கவிதைகள்'-ஐ அடுத்து 'வடி' என்று வரலாமா ?//////

    மன்னிக்க வேண்டும் அய்யா! நான்தான் தவறு செய்துவிட்டேன். பொதுவாக பற்பல மரபுக்கவிதைகள் எனது நினைவகத்தில் இருப்பதால் இடுகைக்கான பாடங்களை வரையும்போது நூல்களை அருகில் வைத்துக்கொண்டு எழுதுவதில்லை.

    தாங்கள் குறிப்பிட்ட பிழை என்னால் ஏற்பட்டதே!

    கவிதை வடிவத்தில் -என்று வரவேண்டும்.

    புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
    குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
    வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா!
    சூழும் பகைவற்குச் சொல்!

    பதிலளிநீக்கு
  14. கொச்சைச் சொற்களும் அளவற்ற அயற்சொற்களும் கலந்து எழுதும் பாடல்கள், யாப்பிலக்கணப்படி பாடல்களே அல்ல.

    பதிலளிநீக்கு
  15. //வருவார் வசந்தன்! வனப்புப்பாச் செய்து
    தருவார் அழகுத் தமிழில் -கருவாய்
    உதித்தநற் கற்பனைக் கோர்வடுவம் தந்து
    பதிப்பார்தன் வெண்பாவைப் பார்த்து!//

    பாட்டுக்கு ஏது வரம்பு? தினமவர்
    பாட்டுக்கு ஏதும் எழுதட்டும் - நாட்டு
    வசந்தத்தை வானத்தை வார்த்துன்தன் வீர
    வசனத்தை வீசு வசந்தா!

    அறிவும் இயலும் அறிவியலும் சேர்த்து
    பொறியியலில் ஈயுமோர் பாட்டின் - கருவதனை
    கேட்டெமது சிந்தை கணிணியைத் தேடிப்பா
    ராட்டெழுத ஓடிடு மே.

    பதிலளிநீக்கு
  16. //////சவுக்கடி கூறியது...

    கொச்சைச் சொற்களும் அளவற்ற அயற்சொற்களும் கலந்து எழுதும் பாடல்கள், யாப்பிலக்கணப்படி பாடல்களே அல்ல.//////



    தங்கள் இக்கருத்தை நான் வழிமொழிகிறேன் சவுக்கடியவர்களே! நீங்கள் என்னை இதுபோன்ற பாடல்களை வைத்து எடைபோட முடியாது. எடை போட்டுவிடக்கூடாது என்பது என் கோரிக்கை. நான் தனித்தமிழ் விரும்பி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வல்லாட்சி செலுத்திவரும் வடமொழியைக்கூட நான் எனது பாக்களில் கலப்பதைத் தவிர்ப்பவன். காண்க எனது அகரம் அமுதா வலையை. பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களோ அல்லது எனது மற்றொரு வலையான தமிங்கிலிஷ்.காம் வலையிலோ எழுதியுள்ள பாக்கள் அனைத்தும் தனித்தமிழுன் மீது காதல்கொள்ளுமுன் எழுதியவை..

    பதிலளிநீக்கு
  17. ///// அவனடிமை கூறியது...

    பாட்டுக்கு ஏது வரம்பு? தினமவர்
    பாட்டுக்கு ஏதும் எழுதட்டும் - நாட்டு
    வசந்தத்தை வானத்தை வார்த்துன்தன் வீர
    வசனத்தை வீசு வசந்தா!

    அறிவும் இயலும் அறிவியலும் சேர்த்து
    பொறியியலில் ஈயுமோர் பாட்டின் - கருவதனை
    கேட்டெமது சிந்தை கணிணியைத் தேடிப்பா
    ராட்டெழுத ஓடிடு மே.//////



    வணக்கம் அவனடிமை அவர்களே! தங்கள் இரண்டு பாடல்களையும் படித்து வியந்தேன். நீங்கள் மறுமோழியிட்ட நேரத்தையும் பார்த்தேன். நான் மறுமொழியிட்டுச்சில மணித்துளிகளில் இரண்டு பதில்வெண்பாக்களை யாத்துக் கலக்கியிருக்கிறீர்கள். வாழ்க. வாழ்க. வாழ்க.

    விரைவாகப் பாடி வியந்திட வைத்தீர்
    நிறைவாக வெண்பாவில் நேராய் -அறைகின்றீர்
    வில்விடு பட்டு விரையம்பாய்! அய்யாவும்
    சொல்வடு மாற்றும் மருந்து!


    சிற்சில பிழைகள் இருக்கின்றன . தவிர்க்கவும்.



    ///////பாட்டுக்கு ஏது வரம்பு? தினமவர்
    பாட்டுக்கு ஏதும் எழுதட்டும் - நாட்டு
    வசந்தத்தை வானத்தை வார்த்துன்தன் வீர
    வசனத்தை வீசு வசந்தா!//////


    பாட்டுக்கு + எது =பாட்டுக் கேது! -ஓரசை குறைவதைக் கவனிக்கவும். இரண்டாம் வரியின் முதல்இரண்டாம் சொற்களும் அப்படியே!


    ///////அறிவும் இயலும் அறிவியலும் சேர்த்து
    பொறியியலில் ஈயுமோர் பாட்டின் - கருவதனை
    கேட்டெமது சிந்தை கணிணியைத் தேடிப்பா
    ராட்டெழுத ஓடிடு மே.//////



    அறிவும் இயலும் அறிவியலும் சேர்த்துப்
    பொறியியலில் ஈயுமோர் பாட்டின் - கருவதனைக்
    கேட்டெமது சிந்தை, கணிணியைத் தேடிப்பா
    ராட்டெழுத ஓடிடு மே.

    ஒற்றுப்பிழைகள் தவிர்க்கவும். வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  18. தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
    வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
    கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
    மூடியத வள்மன து.

    [குறும்படம் மிக அருமை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.]

    பதிலளிநீக்கு
  19. அ/அ அவர்களே: பிழைகள் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.. பாராட்டுக்கள் என் அப்பன் முருகனையே சேரும்...

    பதிலளிநீக்கு
  20. //விரைவாகப் பாடி வியந்திட வைத்தீர்
    நிறைவாக வெண்பாவில் நேராய் -அறைகின்றீர்
    வில்விடு பட்டு விரையம்பாய்! அய்யாவும்
    சொல்வடு மாற்றும் மருந்து!//

    மருந்தெனவே பாட்டில் மணங்கமழ் வார்த்தை
    அரும்புமே அல்லாவுன் அன்பால் - திருந்தவே
    மாட்டேனென் றேபெண்ணை தாழ்த்திடும் மாக்களின்
    கூட்டத்திற்ப் பூப்போல் விழும்.

    பதிலளிநீக்கு
  21. வேறொரு கோணத்தில்:

    மாப்பூச்சும் மல்லிகையும் மங்கை யுனக்கேனோ
    நீபோற்றும் தேகம் நிலையாமோ? - சாபோற்றும்
    சீசதையிற்ச் செல்லரிக்குஞ் சாம்பல் சடலத்தில்
    ஆசை அலங்கார மேன்?

    பதிலளிநீக்கு
  22. ///உமா கூறியது...

    தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
    வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
    கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
    மூடியத வள்மன து.

    [குறும்படம் மிக அருமை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.]//////



    வாழ்த்துக்கள் உமா! வெண்பா அருமையாக, சிறப்பாக, விரைவாகப் படைக்கின்ற ஆற்றலைப் பெற்றுவருகிறீர்கள். தங்களை அடுத்த கட்டத்திற்கு நகரப்பணிக்கிறேன்.

    அதாவது, இதுவரைத் தாங்கள் எழுதிவந்தவை இன்னிசை வெண்பாக்களே! இனி நேரிசை வெண்பாவிற்கு மாற வேண்டுகிறேன். ஏனெனில் நேரிசை வெண்பாக்களே எழுதுபவரைக் கவிஞராகக் காட்டும். நேரிசை வெண்பாவிற்கே மதிப்பு அதிகமும் கூட! ஆதலால், முதற்சீர்,ஐந்தாம்சீர்,எட்டாம்சீர் -ஓரெதுகையாகவும்; ஒன்பதாம்சீர்,பதிமீன்றாம்சீர் ஓரெதுகையாகவும் அமைத்துப் பாடவும். அதுவே நேரிசை வெண்பாவாகும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. /////அவனடிமை கூறியது...

    மருந்தெனவே பாட்டில் மணங்கமழ் வார்த்தை
    அரும்புமே அல்லாவுன் அன்பால் - திருந்தவே
    மாட்டேனென் றேபெண்ணை தாழ்த்திடும் மாக்களின்
    கூட்டத்திற்ப் பூப்போல் விழும்./////


    கலக்குகிறீர்கள் அவனடிமை அவர்களே! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ////அவனடிமை கூறியது...
    வேறொரு கோணத்தில்:

    மாப்பூச்சும் மல்லிகையும் மங்கை யுனக்கேனோ
    நீபோற்றும் தேகம் நிலையாமோ? - சாபோற்றும்
    சீசதையிற்ச் செல்லரிக்குஞ் சாம்பல் சடலத்தில்
    ஆசை அலங்கார மேன்?//////



    அவனடிமை அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் முயன்றுபாருங்கேன்..வேறுகோணத்தில் ஏதாவது தோன்றுகிறதா என்று.

    பதிலளிநீக்கு
  25. அன்பு அகரம் அமுதா...

    ஈற்றடிக்கு வெண்பாக்கள் ::

    நெருப்பில் விழுந்த நிலவு ::

    விரலைத் தொடுகையில் கைநுனியில் வேர்க்கக்
    குரலைத் துழாவநா கோர்த்து - "வரலை..!"
    மறுத்துக்கொண் டேதுடித்து மாரிட்சா யும்பெண்,
    நெருப்பில் விழுந்த நிலவு.

    நிலவில் பிறந்த நெருப்பு ::

    சந்த்ரயனில் முன்சாமி சல்லென்று போனார்.மின்
    எந்திரங்கள் பார்த்துக்கொள் ளெந்த பயமுமின்றி
    வந்துசேர்ந்தார் முன்சாமி. வாழ்த்தி நிலாராசா.
    "இந்தியா வில்லெல்லோ ரும்நலமா?" கேட்க

    "குஜாலாத்தான் கீறாங்கோ. குப்பையெதும் இல்ல.
    உஜாலாவுட்(டு) சுத்தஞ்செஞ் சாப்ல பளிச்னு
    மஜாவா இருக்காங்கோ. குப்பையள்ற காண்ட்ராக்ட
    ராஜா எடுத்தீங்க. என்னெதுக்கு கூப்ட்டீங்(க)?"

    "பலகாலம் சூரியன் வெண்ணொளி தந்தான்.
    சிலநாளாய்ச் சொந்தமாய்ச் செவ்வொளிக்கு ஆசை."
    "கலங்காத!" தீப்பெட்டி தேய்க்க அதுதான்
    நிலவில் பிறந்த நெருப்பு.

    குறும்பட வெண்பா ::

    ஆடை அவரவர் ஆசை. அதற்காக
    மேடையில் மென்னடை போடுகின்ற - பேடையின்
    போதையுடை யும்வேண்டாம். எவ்வுடையி லும்வாழ்வுப்
    பாதையில் நல்லதாய் நட.

    அவனடிமை அவர்கள் கேடதற்கிணங்க, ஒரு காலத்தில் எழுதிய வெண்பா. Housing Loan பற்றியது ::

    ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
    போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
    வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
    கிட்டிடும் வங்கிக் கடன்.

    இது இலவச இணைப்பு ::

    கதிரவக் கிரகணம்.

    சூலைத்திங் கள்நான்காம் வாரபுதன் இவ்வாண்டு
    காலை. கிழக்கினில் வானத்து - ஆளைப்
    பொறுப்பைத் தொடங்கத் தடுத்ததார் என்றால்
    நெருப்பை மறைத்த நிலவு.


    மற்ற எல்லாப் பாடல்களையும் விட்டு விட்டு, அவனடிமை அவர்கள் 'சுவற்றில் சிறுநீரை' ஏந்திக் கொண்டு எதிர்பார்க்கின்றார். இது தான் உலக நியதி போல! வாழ்க!

    பதிலளிநீக்கு
  26. அமுதா மிக்க நன்றி கண்டிப்பாக முயற்சி செயகிறேன்.

    திரு.வசந்த குமார் பல பாக்கள் தந்து தினறச் செய்கிறார். வெகு அருமை.நெருப்பை மறைத்த நிலவு மிக நன்று அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. உமா அவர்களுக்கு ஒன்று:

    நேரிசையோ டின்னிசை நாமணக்க நாளுமே
    பாரசையும் மூவசையில் பாடிப் - பறப்பீர்
    அமுதன் அறிவுரையில் ஈரசையும் சேர்த்து
    அமுதைப் படைப்பீ ருமா.

    குறும்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கோணம்:

    ஏனென்று கேட்காமல் ஏந்திழையாள் ஏற்றிடுவாள்
    வீணென்று வாதாட வாய்திறவா - வானொத்த
    கண்ணழகாள் தன்னை கருப்புடையுள் ளாக்கவே
    கண்ணீரைத் தேக்கும் இமை.

    பதிலளிநீக்கு
  28. இரா. வ. அவர்களே : கலக்கிட்டீங்க..
    வாழ்த்துக் கூற ஒரு குறள்:

    இராவசந் தன்னின்று இட்டார் இடுகை
    இராவலா? யில்லை சுகம்!

    (இராவலா? - அறுவையா?)

    எழுதாமல் வேடிக்கை பார்க்கும் ராஜகுரு, திகழ்மிளிர், சவுக்கடி மற்றும் இதர சகோதர சகோதரிகளுக்கு:

    சவுக்கடி பட்டாலும் சால்ஜாப்பு சொல்லாம
    அவுங்கடி பாட்டுக் களை. ;-)

    பதிலளிநீக்கு
  29. //////இரா. வசந்த குமார். கூறியது...


    விரலைத் தொடுகையில் கைநுனியில் வேர்க்கக்
    குரலைத் துழாவநா கோர்த்து - "வரலை..!"
    மறுத்துக்கொண் டேதுடித்து மாரிட்சா யும்பெண்,
    நெருப்பில் விழுந்த நிலவு.///////



    ////சூலைத்திங் கள்நான்காம் வாரபுதன் இவ்வாண்டு
    காலை. கிழக்கினில் வானத்து - ஆளைப்
    பொறுப்பைத் தொடங்கத் தடுத்ததார் என்றால்
    நெருப்பை மறைத்த நிலவு. //////


    இவ்விரு பாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன வசந்த். மற்ற பாடல்களும் சிறப்பெனினும் இவை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. /////உமா கூறியது...
    அமுதா மிக்க நன்றி கண்டிப்பாக முயற்சி செயகிறேன்.

    திரு.வசந்த குமார் பல பாக்கள் தந்து தினறச் செய்கிறார். வெகு அருமை.நெருப்பை மறைத்த நிலவு மிக நன்று அவருக்கு என் வாழ்த்துக்கள்.//////


    வசந்திற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள். சக கவிஞரிடமிருந்து வாழ்த்து வாங்குவது அவ்வளவு எளிதல்ல. உமா அவர்களின் உயர்ந்த உள்ளம் அதைச்செய்திருக்கிறது. பட்டையைக்கிளப்புங்கள்.

    பதிலளிநீக்கு
  31. //////அவனடிமை கூறியது...



    குறும்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கோணம்:

    ஏனென்று கேட்காமல் ஏந்திழையாள் ஏற்றிடுவாள்
    வீணென்று வாதாட வாய்திறவா - வானொத்த
    கண்ணழகாள் தன்னை கருப்புடையுள் ளாக்கவே
    கண்ணீரைத் தேக்கும் இமை. ///////



    வாழ்த்துக்கள் அவனடிமை அவர்களே! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். முந்தைய தங்கள் பாடல்கள் அனைத்தும் கவிக்கூற்றாகவே உள்ளன. இப்பாடலும் கவிக்கூற்றே எனினும் அவளது உள்ளக் குமுறலை வெளிக்கொணர்வதாக உள்ளது. மீண்டும் வாழ்த்துக்கள். அவள் விழிகள் பேச விழைகின்ற மொழியைக் கவிதையாக்கமுடியாமல் தற்காலிகமாகத் தோற்றுப்போனதை நான் ஒத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அவனடிமை அவர்களுக்கு.....

    http://blogintamil.blogspot.com/2009/07/3_25.html -இவ்வலையின் இன்றைய இடுகையைக் காண வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. அன்பு அகரம் அமுதா மற்றும் உமா அவர்களுக்கு...

    நன்றிகள். ஈற்றடி சிறப்பாக கொடுத்தபடியாலும், கொஞ்சம் ஈகோவை இடறி விட்டபடியாலும் சற்று நல்லதாகவே வெண்பாக்கள் வந்து விழுந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். காரணர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

    என் பின்னூட்டத்தை மீண்டும் படித்து பார்த்த போது, கொஞ்சம் அதிகப்படியாகவே தரம் குறைந்து பதில் சொல்லியிருப்பது தெரிந்தது. அவனடிமை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  34. அமுதா அவர்களே: தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. குறள் வெண்பாக்கள் இரண்டையும் பதிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்கள் வலைப்பக்கத்திற்கு ஏற்ற தரம் இல்லாததால்...
    வணக்கம்.

    பதிலளிநீக்கு
  35. வசந்த் அவர்களுக்கு: அமுதா சொன்ன வெண்பாக்கள் நெருப்பில் விழுந்த நிலவும், கிரகணப் பாடலும் பிரமாதம். முன்சாமி கலக்கிட்டார். வெண்பாக்களில் கதை சொல்வது எளிதல்ல. அதுவும் சந்திரனுக்கு உதவும் விதம், கற்பனை வித்தியாசமானது...
    'வங்கிக் கட'னுக்கு உங்களுக்கு கடன்பட்டேன். அதென்ன 'சற்கட்டு' ?
    தொடர்ந்து எழுத பணிவான வாழ்த்துக்கள்.

    உமா, ராஜகுரு, திகழ்மிளிர், சவுக்கடி இவர்களிடமிருந்தும் கவியருவி பொழியும் என்று எதிர்பார்க்கலாமா ?

    அகரம் அமுதாவுக்கு நன்றி. நிறைய புகழ்கிறீர்கள். உங்கள் உள்ளத் தூய்மையைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. //////இரா. வசந்த குமார். சொன்னது…


    என் பின்னூட்டத்தை மீண்டும் படித்து பார்த்த போது, கொஞ்சம் அதிகப்படியாகவே தரம் குறைந்து பதில் சொல்லியிருப்பது தெரிந்தது. அவனடிமை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.//////




    வணக்கம் வசந்த்! மனிதன் சினம் கொள்வதும், சினம் ஆறியதும் அச்சினத்திற்கு வருந்துவதும் இயல்பே. இத்தவறை முந்தைய இடுகையில் நான் செய்து உமாவால் திருத்தப்பெற்றதைப் படித்திருப்பீர்கள். தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. தப்புகள் ஒறுக்கப்பட வேண்டியவை. தாங்கள் செய்தது தவறு. ஆகையால்தான் அதுபற்றி நான் ஒன்றும் பேசாது விளகியிருந்தேன்.



    ஒரு ஒற்றுமையைக் கண்டு வியக்கிறேன் வசந்த். நீங்கள் அவனடிமை அவர்களிடம் மன்னிக்கவேண்டியுள்ளீர்கள். அவரோ தனது பின்னூட்டில் தங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறார். இதை ஏன் வியக்கிறேன் என்றால், நீங்கள் அவரிடம் மன்னிக்க வேண்டியதை மட்டறுத்து வெளியிட எனது மின்மடலில் வந்து காத்திருக்க, அவனடிமை அவர்களும் தங்களைப் பாராட்டிப் பின்னூட்ட மிட இரண்டையும் ஒரே நேரத்தில் தான் வெளியிட்டேன். ஆக நீங்கள் மன்னிப்புக் கோரியதோ, அவர் இயல்பாகப் பாராட்டியதோ நீங்கள் இருவருமே அறியாமல் நிகழ்ந்த ஒன்று. வாழ்க.

    பதிலளிநீக்கு
  37. /////அவனடிமை கூறியது...

    அமுதா அவர்களே: தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. குறள் வெண்பாக்கள் இரண்டையும் பதிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்கள் வலைப்பக்கத்திற்கு ஏற்ற தரம் இல்லாததால்.../////

    அவனடிமை அவர்களுக்கு என் விளக்கம். அய்யா! ஓர்முறை, பாரதி தாசனிடம் ஓர் தமிழறிஞர், " நீங்கள் தான் தனித்தமிழாளனாக மாறிவிட்டீர்களே! தங்களின் முந்தைய கவிதைகளில் வடமொழிச்சொற்கள் மிகுந்திருக்கின்றனவே. அவற்றை நான் வேண்டுமானால் (வடசொற்களை நீக்கித்) தமிழ்ப்படுத்தித் தரட்டுமா? என்றாராம். அதற்குப் பாரதி தாசன், " வேண்டாம் அய்யா! இவன் வந்தவழியைப் பின்னாளில் அனைவரும் அறியவேண்டும். நான் செய்த தவறுகளைத் திருத்தி மறைத்துவிடுவதால் அவைகள் தவறுகள் இல்லை என்றாகி விட்டாது. ஆக எனது முந்தைய வடசொல் கலந்த கவிதைகளைத் தமிழ்ப்படுத்த வேண்டாம். நான் முன்னாளில் வழிமாறிச்சென்றுதான் பின்பு நல்வழிச் சேர்ந்தேன் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்றாராம். இதையே நான் தங்களுக்கும் உரைக்க விரும்புகிறேன். நாம் தவறும் நல்லதும் செய்வோம். காலம் பார்த்துக்கொள்ளும் எது தவறு எது சரி என்பதை.


    /////தங்கள் வலைப்பக்கத்திற்கு ஏற்ற தரம் இல்லாததால்...///////



    நம் வலையின் (நன்றாக கவனிக்கவும்) நம் வலையின் வெற்றி என்னன்னா? ! அதற்கென்று இரு தரத்தை தேர்ந்தெடுக்காததுதான். இங்கு நாம் வெண்பா பயில்கிறோம். தவறுகள் நேர்வது இயல்பே! தவறுக்குத் தீர்வு தவறை நீக்குவதல்ல. திருத்திக்கொள்வது. நாம் நம்மைத் திருத்தி முழுமையடைய முயன்று கொண்டிருக்கிறோம். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  38. /////அவனடிமை கூறியது...

    வசந்த் அவர்களுக்கு: அமுதா சொன்ன வெண்பாக்கள் நெருப்பில் விழுந்த நிலவும், கிரகணப் பாடலும் பிரமாதம். முன்சாமி கலக்கிட்டார். வெண்பாக்களில் கதை சொல்வது எளிதல்ல. அதுவும் சந்திரனுக்கு உதவும் விதம், கற்பனை வித்தியாசமானது...
    'வங்கிக் கட'னுக்கு உங்களுக்கு கடன்பட்டேன். அதென்ன 'சற்கட்டு' ?
    தொடர்ந்து எழுத பணிவான வாழ்த்துக்கள். //////



    அவ்வை சொல்லுவாள்:-

    அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
    நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் -
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்.


    ஆர் யு கிரேட்.


    //////உமா, ராஜகுரு, திகழ்மிளிர், சவுக்கடி இவர்களிடமிருந்தும் கவியருவி பொழியும் என்று எதிர்பார்க்கலாமா ? //////



    அவர்கள் இனிவரும் காலங்களின் நிறைவான வெண்பாக்களைப் படைக்கவில்லையென்றால் ஆசிரியனுக்குறிய மிடுக்கோடு நான் கையில் பிரம்பை எடுத்துவிடுவேனாக்கும்.!


    ////அகரம் அமுதாவுக்கு நன்றி. நிறைய புகழ்கிறீர்கள். உங்கள் உள்ளத் தூய்மையைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.//////


    இதுதான் அய்யா! உண்மையான பெரும் புகழ்ச்சி. என்னை நாணச்செய்து விட்டீரே!

    பெண் நாணினால் அது கவிதையாக இருக்கும். ஆணாகிய என்னை நாணச்செய்யலாமா? இது அடுக்குமா?

    பதிலளிநீக்கு
  39. ///////சவுக்கடி பட்டாலும் சால்ஜாப்பு சொல்லாம
    அவுங்கடி பாட்டுக் களை. ;-)///////



    ஃஆ... ஃஆ... ஃஆ....

    ஏச்சுத் தமிழ்கொண் டெழுதுவார் மத்தியிற்
    பேச்சுத் தமிழ்செய்தீர் பார்த்து.

    பதிலளிநீக்கு
  40. திரு.அவனடிமை அவர்களின் ஆசியிருக்கும் போது கண்டிப்பாக நிறைய எழுதலாம்.முயற்சி செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  41. விழுந்தால் எழவொண்ணா ஒண்டழல் தன்னில்
    விழுந்தாள் எழுந்தாள் மிதிலைக் -கொழுந்தாள்!
    கறுப்பு மனத்தான் கவர்ந்ததால் அன்றோ
    நெருப்பில் விழுந்தாள் நிலவு!


    மிதிலைக் கொழுந்து -சீதையைக் குறித்தது; கறுப்பு மனத்தான் -இராவணனைக் குறித்தது.

    பதிலளிநீக்கு
  42. ///////சவுக்கடி பட்டாலும் சால்ஜாப்பு சொல்லாம
    அவுங்கடி பாட்டுக் களை. ;-)///////


    சிறு திருத்தம்.

    சவுக்கடி பட்டாலும் சால்ஜாப்பு சொல்லா(து)
    அவுங்கடி பாட்டுக் களை.

    பதிலளிநீக்கு
  43. //
    விழுந்தால் எழவொண்ணா ஒண்டழல் தன்னில்
    விழுந்தாள் எழுந்தாள் மிதிலைக் -கொழுந்தாள்!
    கறுப்பு மனத்தான் கவர்ந்ததால் அன்றோ
    நெருப்பில் விழுந்தாள் நிலவு!
    //

    அமுதா அவர்களே: சொற்சுவை, நடை எல்லாம் அசத்துகிறது. கருத்து கொஞ்சம் கேள்விக்குறியானதோ என்று தோன்றுகிறது.

    கருத்து வேறுபாட்டை மனத்தில் உண்டாக்கிய சீதாப்பிராட்டியை வணங்கி இதோ ஒரு மாற்று-வெண்பா சமர்ப்பிக்கிறேன்:

    கொண்டவனின் எண்ணத்தில் குற்றம் கறைந்திட
    பெண்மணிதன் தேகம் எரித்தனள் - அன்றி
    சிரசுகள் பத்தில் சிறுமதியா னுக்கா
    நெருப்பினில் வீழ்வாள் மதி?

    'மதி'-யை 'நிலவு' என்றும் 'எண்ணிப்பார்' என்றும் கொள்ளலாம்.

    நிற்க. வேறொரு கேள்வியும் மனதில் தோன்றுகிறது; உங்கள் ஈற்றடியில், ஈற்றுச்சீர் ஈரசையாக உள்ளதே, முதல் இரண்டு சீர்களையும் ஈற்றுச்சீரையும் உரக்க சொல்லும் போது (தளையெல்லாம் சரியாக வந்தாலும்) ஓசை நயம் குறைவது போல் தோன்றுகிறதே, இது சரிதானா ?

    குறிப்பாக,

    'நெருப்பில் விழுந்தாள் நிலவு' என்பது சரியா?
    இல்லை
    'நெருப்பில் விழுந்தாள் நிலா'
    என்பது சரியா?

    'தாள்' என்று முடியும் நெடில் சப்தம் முன்னே வருவதால் 'நிலவு' என்கிற புளிமா (நிறை-நேர்) கொஞ்சம் தொய்வடைகிறதோ ?

    இலக்கணம் என்ன சொல்லுகிறது ?

    [சவாலும் இல்லை, தப்பு கண்டுபிடிக்கும் எண்ணமும் (தகுதியும்) இல்லவே இல்லை, தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்]

    குறள் வெண்பா திருத்தத்திற்கு நன்றி.
    :-)

    பதிலளிநீக்கு
  44. //////உமா, ராஜகுரு, திகழ்மிளிர், சவுக்கடி இவர்களிடமிருந்தும் கவியருவி பொழியும் என்று எதிர்பார்க்கலாமா ? //////

    கண்டிப்பாக

    அவர்கள் இனிவரும் காலங்களின் நிறைவான வெண்பாக்களைப் படைக்கவில்லையென்றால் ஆசிரியனுக்குறிய மிடுக்கோடு நான் கையில் பிரம்பை எடுத்துவிடுவேனாக்கும்.!

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  45. குறும்படத்தின் தாக்கம் இன்னும் விட்டபாடில்லை:

    ***************** மதம் தரும் இதம் ***************************

    கிறுத்துவ பாதிரி சோதரி மாரும்
    கருத்துடன் என்றும் கருத்தரை நாட
    உருவத்தை வெள்ளை உடையில் மறைத்தார்
    ---------
    மருந்தென அதையே கருதியே தானோ
    பெருந்தகை இஸ்லா மியப்பண் பாளர்
    கருத்தமேற் சீரையை பெண்ணுக் களித்து
    ஒறுத்தவர் மேலங்கி அணிய விதித்தார்
    ---------
    இருந்திட வீடும் வசதியும் இல்லை
    இருப்பினும் இந்து மதத்தில் இறைவன்
    திருவேங் கடனின் திருவினை தீர
    கருநிற கண்ணும் முகமும் விடுத்து
    திரையிட்டுப் பார்த்தார் தங்கத்தி னாலே
    ---------
    வெறுக்கா தினியவர் வார்த்தை வனிதையே
    சோரா திடுவுறை யை !
    ***************************************************************************

    ஒறுத்தவர் - ஆசையை அடக்கியவர், (முஸ்லீம்) குருமார்கள்

    திருவினை தீர - 'உடம்பை, உருவத்தை, முழுக்க' என்றும் கொள்ளலாம்
    'கடவுளின் வேலை - அதாவது, மாயை - தீர்ந்துவிட' என்றும் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  46. //////கொண்டவனின் எண்ணத்தில் குற்றம் கறைந்திட
    பெண்மணிதன் தேகம் எரித்தனள் - அன்றி
    சிரசுகள் பத்தில் சிறுமதியா னுக்கா
    நெருப்பினில் வீழ்வாள் மதி?//////


    அவனடிமை அவர்களுக்கு! வணக்கம். தங்கள் வெண்பாவைப் படித்துச் சுவைத்தேன். தங்களுக்கிவ் ஐயம் எழுந்தது சரியே. நிற்க.


    இராமனின் ஐயத்தைப் போக்குவதற்காகத் தான் சீதை தீயில் இறங்கினாள். இது யாவறும் அறிந்ததே. ஆனால் இராமன் முதல் குற்றவாளி இல்லை என்பதே என் கருத்து.

    இராமனுக்கேன் அவ்வையம் எழுந்தது? ஓர் சலவைத்தொழிலாளி சீதையின் கற்பின் மீது ஐயுற்றதால் அது இராமனுக்குத் தெரியவந்ததால் சீதையைத் தீயில் இறக்கி நாட்டினரின் அது போன்ற குற்றச்சாட்டிலிருந்து சீதையை விடுவிக்கவே தீயில் இறக்கினான்.

    ஆக, சலவைத்தொழிலாளி முதன்மைக் குற்றவாளியா என்றால் அதுவும் இல்லை. இராவணன் கடத்தியதால்தான் சலவைத்தொழிலாளி ஐயுற நேர்ந்தது. ஆக, இராவணனின் காம உணர்ச்சிக் காரணமாக சீதை கடத்தப்பட்டாள். கடத்தப்பட்டு அவன் நாட்டில் சிலகாலங்கள் சிறைவைக்கப்பட்டதால் சலவைத்தொழிலாளி, இத்தனை காலம் சிறைவைத்திருந்தவன் தொடாமல் விட்டிருப்பானா? என்ற தனது ஐயத்தை எழுப்பினான். ஆதலால்தான் இராமன் சீதையைத் தீயில் இறக்கினான்..


    ஆகவேதான் இராவணனின் அச்சிறுச்செயலை முதன்மைக் குற்றம் என்ற அளவில் முன்னிலைப்படுத்த அவ்வெண்பாவைப் படைத்தேன். இக்கருத்தை உள்வாங்கிக் கொண்டு பின் வெண்பாவைப் படிப்பீரேல் தவறு தோன்றாது என் கருத்து. இருப்பினும் மாற்றுக் கருத்தத் தங்களிடம் இருப்பின் முன்னுரைக்க வேண்டுகிறேன்.


    ////விழுந்தால் எழவொண்ணா ஒண்டழல் தன்னில்
    விழுந்தாள் எழுந்தாள் மிதிலைக் -கொழுந்தாள்!
    கறுப்பு மனத்தன் கவர்ந்ததால் அன்றோ
    நெருப்பில் விழுந்தாள் நிலவு!////

    பதிலளிநீக்கு
  47. அவனடியாரே! தங்கள் இன்னிசை வெண்பா அருமை... அருமை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. //////'நெருப்பில் விழுந்தாள் நிலவு' என்பது சரியா?
    இல்லை
    'நெருப்பில் விழுந்தாள் நிலா'
    என்பது சரியா?/////


    இரண்டும் சரியே!!


    ////'தாள்' என்று முடியும் நெடில் சப்தம் முன்னே வருவதால் 'நிலவு' என்கிற புளிமா (நிறை-நேர்) கொஞ்சம் தொய்வடைகிறதோ ?
    இலக்கணம் என்ன சொல்லுகிறது ?////


    நிச்சயமாகத் தொய்வடையாது. பொதுவாக வெண்பாவில் தளைகளைச் சரியாகப் பயன்படுத்தி எழுதினாலே அதன் ஓசை மாறுவதற்கு இடமே இல்லை.


    நிலவு என்ற சொல் வெண்பாவின் இடையில் வந்தால் மட்டுமே அது புளிமாவாகும். வெண்பாவின் இறுதியில் வரின் அதன் பெயர் பிறப்பு (நிரைபு).


    தங்கள் ஐயம் தீர்க முன்னோர் வரைந்த சில ஈற்றடிகள்.


    1.கோதிலா ஏறாங் கொடி! (றா-நெடில்முன் நிறை-மலர்)

    2.என்வாழ்க்கை இல்லா தவர்க்கு! (லா-நெடில்முன் நிரைபு-பிறப்பு)

    3.நெஞ்சேற நின்றான் நிலைத்து! (றான்- நெடில்முன் நிரைபு-பிறப்பு)

    4.சிறுவன் உடையேன் துணை! (யேன்-நெடில்முன் நிரை-மலர்)

    5.ஓதின் புகழ்சால் உணர்வு! (சால்-நெடில்முன் நிரைபு-பிறப்பு)

    6.கற்றறிவு இல்லா உடம்பு! (லா-நெடில்முன் நிரைபு-பிறப்பு)



    ////[சவாலும் இல்லை, தப்பு கண்டுபிடிக்கும் எண்ணமும் (தகுதியும்) இல்லவே இல்லை, தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்]////


    நாம் யாரும் எதையும் தெரிந்துகொண்டபின் இவ்வுலகிற்கு வரவில்லை. வந்தபின்பே தெரிந்துகொண்டோம். கேள்விகள் என்பதே கேட்பதற்குத்தானே!

    பதில் கூற இயலாதவனே கோபம் கொள்வான். நான் கோபப்படுவேனானால் என்னிடம் தங்கள் கேள்விக்குப் பதில் இல்லை என்பது பொருள். வாழ்க. ஐயங்களைக் கேட்கத்தயவகாதீர்கள். ஏனென்றால் உங்களோடு சேர்ந்து நானுமல்லவா கற்றுவருகிறேன்.

    பதிலளிநீக்கு
  49. பாவத்தைப் போக்க மனிதனுக்கு எத்தனையோ
    கூவங்கள் உள்ளவரை ! அன்பை, பணிவை,
    கருணையைச் சொன்ன அறிவுரைகள் எல்லாம்
    நெருப்பில் விழுந்த நிலவு!

    ................

    நன்றி அகரம் அமுதா அவர்களே

    பதிலளிநீக்கு
  50. //ஆகவேதான் இராவணனின் அச்சிறுச்செயலை முதன்மைக் குற்றம் என்ற அளவில் முன்னிலைப்படுத்த அவ்வெண்பாவைப் படைத்தேன்.//

    நல்ல விளக்கம். எனக்கென்னவோ ஜனகர் தான் இதற்கெல்லாம் காரணம் என்று தெரிகின்றது. அவர் கம்மென்று இருந்திருந்தால், சீதையே பிறந்திருக்க மாட்டாள். இராவணனும் கருமை மனம் கொண்டிருக்க மாட்டான்.

    chaos theory காரணமாய் இருக்கலாமோ..?

    பதிலளிநீக்கு
  51. திகழ்! காலம் தாய்த்தி வந்தாலும் புதுமையாக வந்திருக்கிறேர்கள்! (அவ்வளவுப் பொருத்தமாக இல்லையோ? சரி விடுங்க! "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க!)

    பதிலளிநீக்கு
  52. முதற்காரணம் வேண்டுமானால் இராவணனாக இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் இராமனின் மனதில் உண்டாகிய சலனம் தான்.

    கவர்ந்து எடுத்து பல நாள் சிறையில் வைத்ததனால் மட்டுமே நெருப்பில் குதிக்கவில்லை. அறியா சலவைத் தொழிலாளி பேசியதால் மட்டுமே நெருப்பில் குதிக்கவில்லை.

    தர்மசீலனான இராமன் என் கற்பைப் பற்றி சலனப்படுகிறான் என்ற நினைவில் தான் நெருப்பில் குதித்தாள் இல்லையா ?

    ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்: வேறு காரணத்திற்காக இப்படியொரு சலனம் இராமன் உள்ளத்தில் உண்டாகி அவளை சந்தேகித்திருந்தால் குதித்திருப்பாளா இல்லையா ?

    - பட்டிமன்றம் ஆக்கவேண்டாம், இத்துடன் விட்டுவிடுகிறேன்... :-)

    பதிலளிநீக்கு
  53. /(அவ்வளவுப் பொருத்தமாக இல்லையோ? சரி விடுங்க! /

    எனக்கு விளங்கவில்லை

    பதிலளிநீக்கு
  54. ////அவனடிமை கூறியது...

    ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்: வேறு காரணத்திற்காக இப்படியொரு சலனம் இராமன் உள்ளத்தில் உண்டாகி அவளை சந்தேகித்திருந்தால் குதித்திருப்பாளா இல்லையா ?/////


    இப்பொழுது தீயில் குதித்ததற்காக மட்டும் சீதையின் கற்பின்மேல் இராமனுக்கு நம்பிக்கை வந்துவிட்டதா என்ன? இலக்குவன் மூலமாக சீதையைக் காட்டில் கொண்டு சென்று விட்டுவர வைத்தவனல்லவா அவன்.

    இருப்பின் தங்களது கூற்றில் உண்மையுள்ளமை அறிந்து பொருட்குற்றம் நிலைந்த பாப்புனைந்தமைக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  55. பொருட்செறிவு சற்றே மெலிந்துள்ள தென்றே
    பொருட்சொல்ல வந்தேன் அய்யா - கருவில்
    பொருட்குற்ற மில்லை பொருட்படுத் தாதீர்
    வருந்தாது வானைத் தொடும்.

    பதிலளிநீக்கு
  56. அகரம் அய்யா:
    ஐயம் தெளிவு படுத்தியதற்கு நன்றி. 'நெடில்-முன் - நிரை' (என் மனத்திலுள்ள) பிரச்சனைக்கு காரணமில்லை என்று தெரிந்துகொண்டேன்.

    ஆனால் இன்னமும் அந்த ஈற்றடியில் ஓசை நயம் கொஞ்சம் உதைப்பது போல் தோன்றுகிறது. சரியாக சொல்லத் தெரியவில்லை. முயன்று பார்க்கிறேன்:

    நீங்கள் கொடுத்துள்ள காட்டுகளில் 2, 3, 5 & 6 நான்கும் பிறப்போடு முடிகின்றன.
    [on another note: பிறப்போடு முடிவதா ? இறப்போடல்லவா முடியவேண்டும்? ;-) ].
    இவற்றை மட்டும் சிறிது ஆழமாகப் பார்த்தேன்.

    இந்த நான்கிலும் 14'ம் சீர் முறையே 'இல்லா', 'நின்றான்', 'புகழ்சால்', 'இல்லா' என்று வருகிறது.

    காட்டுகள் 2, 3, 6 இல் 14'ம் சீர் (தேமா) ஈரசையில் 'நேர்'-உடன் தொடங்குகிறது, ஆனால் காட்டு ஐந்தில் 'புகழ்சால்' என்று (புளிமா) ஈரசையில் 'நிரை'யுடன் தொடங்குகிறது.

    அதனால் உங்கள் காட்டுகளிலேயே ஐந்தாவதான
    "ஓதின் புகழ்சால் உணர்வு!" தான்
    உங்கள் பாடத்தின் ஈற்றடி
    "நெருப்பில் விழுந்தாள் நிலவு" க்கு
    மிக பொருத்தமான ஒப்பு என்று எனக்கு தோன்றுகிறது.

    இந்த இரண்டிலும் 14'ம் சீர் நிரையுடன் ('புகழ்', 'விழுந்' என்று) தொடங்கி அதைத் தொடர்ந்து 15ம் சீரான ஈற்றுச்சீரும் a) நிரையுடன் ('உணர்', 'நில' என்று) தொடங்கி, b) ஈரசைச் சீராகவும் இருப்பதினால் தான் சந்தத்தில் (punch line போல உள்ள ஈற்றடியின் மொத்த சப்தத்தில் ஒரு) தொய்வு உண்டாக்குகிறதோ என்று ஒரு சந்தேகம்....

    அதனால் இப்படி ஏதாவது மரபு ஈற்றுச்சீர் விதி இருக்குமோ:
    ஒன்று 14'ம் சீர் 'நேரில்' தொடங்கி (உங்கள் எ-கா 2, 3, 6) 15'ம் சீர் ஈரசை பிறப்பாகலாம். இல்லை 14'ம் சீர் 'நிரையில்' தொடங்கி, 15'ம் சீர் ஓரிசை 'மலரா'கலாம் ?

    அதனால் தான் இரண்டையும் இப்படி மாற்றினால், பஞ்ச் கொஞ்சம் கூடுவது போல் தோன்றுகிறது:

    "ஓதின் புகழ்சால் உணர்!" (ஈற்றடியின் பொருள் போய்விட்டது)
    "நெருப்பில் விழுந்தாள் நிலா"

    விளக்கத்திற்கு நன்றி. ஆங்கில வழிக் கல்வியில் ஒரு பாடமே தமிழ் என்ற நிலைமையில் அதையும் சரியாக படிக்காததனால் வந்த குழப்பமிது என்று அறிவேன். அதனால் தான் மனத்துள் இப்படி ஒரு எண்ணம்:

    ஐயம் திரிபற கற்குமுன் பாடினால்
    நையப் புடைப்பா ரவர். [ :-) ]

    மீண்டும் நன்றி கூறி, இந்த இடுகையில் இதையே என்னுடைய கடைசி மறுமொழியாக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  57. தளை திருத்தம்:

    பொருட்செறிவு சற்றே மெலிந்துள்ள தென்றே
    பொருட்சொல்ல லுற்றேன் தலைவா* - கருவில்
    பொருட்குற்ற மில்லை பொருட்படுத் தாதீர்
    வருந்தாது வானைத் தொடும்.

    *வலைப்பதிவுக்கு தலைவரல்லவா நீங்கள்*

    பதிலளிநீக்கு
  58. அய்யா! அவனடிமையார் அவர்களுக்கு! தங்கள் அய்யத்தைத் தீர்க்கச் சுற்றிவளைத்து ஈற்றடியை எல்லாம் சான்று காட்டிக் குழப்பிவிட்டேன் என நினைக்கிறேன். அதற்கான தங்களின் இவ்விடுகைக்கான இறுதி மறுமொழியையும் பார்த்தேன். மகிழ்ச்சி.

    இறுதியாக சிறு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அருள்கூர்ந்து கவனிக்கவும்.



    "நெருப்பில் விழுந்தாள் நிலவு" இவ்வீற்றடி எனது. இதை....

    "நெருப்பில் விழுந்தாள் நிலா!" எனும்போதே ஓசை பொருந்துகிறது. நிலவு எனும்போது தொய்வடைவதுபோல் தோன்றுவதாக உரைத்திருந்தீர்கள், நன்று.

    சிறு விளக்கத்தை மட்டும் வைக்கிறேன்.


    நிலா என்ற சொல்லையும், நிலவு என்ற சொல்லையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

    மாத்திரை அளவுப்படிப் பார்த்தால் "நிலா" -வுக்கும் 3 மாத்திரைகளே. "நிலவு" -க்கும் மூன்று மாத்திரைகளே! ஆக மாத்திரையின் அளவு மாறாதபோது ஓசை எவ்விதத்தில் தொய்வடையும்? தொய்வடையாது என்பது என் சிற்றறிவுக்கெட்டிய முடிவு.. முடிவுகளின்மாற்றம் நிகழ்வது இயல்பே!

    எனக்கு முற்றிலும் இசையறிவு என்பதே கிடையாது. நான் உரைக்கப்புகுந்தது தளைகளின் துணைகொண்டும் மாத்திரைகளின் அளவைக்கொண்டுமே!

    பதிலளிநீக்கு
  59. இரும்படிக்கு இடத்தில் ஈக்கு வேலை இல்லைதான்... எனினும் என் எளிய முயற்சி....

    ஐயன் இராகவன் தன்னிலை குறுகத்
    தையலவள் கற்பினை ஐயுறவே ~ கையோடு
    வெறுப்பிலே சினங் கொண்டு ஆங்கே
    நெருப்பில் விழுந்ததோர் நிலவு !!


    பிரிவினைத் தூண்டியே பிறன்மனை தேடிடும்
    சிறுமதியோர் வந்திறங்கி வாலாட்ட‌ ~ பரங்கியர்க்குக்
    கலக்கம் கொடுத்த‌ எம்கவி பாரதியோ
    நிலவில் பிறந்த நெருப்பு !!

    பதிலளிநீக்கு
  60. /////தளை திருத்தம்:

    பொருட்செறிவு சற்றே மெலிந்துள்ள தென்றே
    பொருட்சொல்ல லுற்றேன் தலைவா* - கருவில்
    பொருட்குற்ற மில்லை பொருட்படுத் தாதீர்
    வருந்தாது வானைத் தொடும்.

    *வலைப்பதிவுக்கு தலைவரல்லவா நீங்கள்*//////



    அவனடிமையார் அவர்களுக்கு! தெம்பூடும் விதமாக அமைத்தெழுதி அளித்த பாவிற்காகத் தங்களுக்கென் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

    இவ்வலையைப் பொருத்தவரை, தலைவர் தொண்டர் என்று யாரும் கிடையாது. நான் பாடமும் ஈற்றடிகளும் வழங்குகிறேன் என்பதைத்தவிர இவ்வலையில் உங்களைப்போன்றோர் அளவிற்கு எதையும் குறிபிடும் படியாகச் செய்துவிட வில்லை. ஆதலால் உங்களுள் நானும் ஒருவனே!

    பதிலளிநீக்கு
  61. /////பிரிவினைத் தூண்டியே பிறன்மனை தேடிடும்
    சிறுமதியோர் வந்திறங்கி வாலாட்ட‌ ~ பரங்கியர்க்குக்
    கலக்கம் கொடுத்த‌ எம்கவி பாரதியோ
    நிலவில் பிறந்த நெருப்பு !!/////



    மகேஷ் அவர்களுக்கு இருவெண்பாக்களும் அருமை. இருப்பினும் தளைகள் தட்டுகின்றன. இடையில் சில காலங்கள் எழுதாமையால் தளைகளை மறந்துவிட்டீர்கள் எனக்கருதுகிறேன்.

    மேற்கண்ட தங்கள் வெண்பாவில் தங்கள் அனுமதியோடு தளைகளைச் சரிசெய்ய விரும்புகிறேன்.

    பிரிவினைத் தூண்டிப் பிறன்மனை தேடும்
    சிறுமதியோர் வந்திறங்கி வாலாட்ட‌ ~ பரங்கியர்க்குக்
    கலக்கம் கொடுத்த‌எம் மாகவி பாரதியே
    நிலவில் பிறந்த நெருப்பு !!


    ஓரளவே திருத்தியிருக்கிறேன், "வாலாட்ட பரங்கியர்க்குக் கலக்கம்" இம்மூன்றிடங்களும் தளை தட்டுகின்றன. இனி வரும் பாடல்களில் தளை தட்டாமல் எழுத வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  62. ....../(அவ்வளவுப் பொருத்தமாக இல்லையோ? சரி விடுங்க! /

    எனக்கு விளங்கவில்லை.....


    திகழுக்கு!

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறீங்க -என்பதைத்தான் தமிழ்ப்படுத்த முனைந்து அது பொருத்த மாக இல்லையோ? சரி விடுங்க! (ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் என்பதைச் சொல்லாமல் ) லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க! என மறுமொழியிட்டேன்.

    பதிலளிநீக்கு
  63. அகரம் அமுதா அவர்களே: 'தலைவா' என்றால் கோபப்படுவீர்களோ என்றுதான் அடிக்குறிப்பில், வலையின் தலை என்று சொன்னேன். வாக்கு மீறியிருந்தால் மன்னிக்கவும்.

    மஹேஷ் அவர்களே - கலக்கிட்டீங்க ; அபாரமான உங்கள் கருத்தும் கற்பனையும் ப்ரமாதம்.

    கூடியமட்டும் உங்கள் சொற்களையே தட்டி தளைகளை சரி செய்ய முயற்சித்தேன். இரண்டாவது ஈற்றடியை பொருள் மாறாமல் சிறிது மாற்றவேண்டியிருந்தது. அனுமதி இல்லாமல் மாற்றியது முறை மீறல் தான். இருந்தாலும், உங்கள் கவிதைகளின் கருத்துச் செறிவு ஈர்த்துவிட்டது.

    ஐயன் இராகவன் தன்னிலை தாழ்ந்திட்டுத்
    தையலவள் கற்பினை ஐயுறவே ~ மெய்யாய்
    வெறுப்பில் சினங்கொண்ட வைதேகி ஆங்கே
    நெருப்பில் விழுந்த நிலவு !!


    பிரிவினை தூண்டிப் பிறன்மனை தேடும்
    சிறுமதியா லிந்தியரை சீண்டும் ~ பரங்கியர்க்குத்
    தண்டமிழில் தண்டனை தந்தவெம் பாரதி
    தண்ணிலவில் பூத்த நெருப்பு !!
    ****************************

    அமுதா அவர்களே: 'தையலவள்'ஐ எப்படி பிரிப்பது ? தை+ய+லவள் (தேமாங்கனி) என்றா இல்லை தைய + லவள் (கரு-விளம்) என்றா ? முன்னால் சொல்வது போல் பிரித்தால் கனிச்சீராகிடுமே, அது வெண்பாவில் வரலாமா ? கருவிளம் (நிரை-நிரை) என்று கொண்டால் 'தாழ்ந்து தையலவள்' என்று வரலாமா?

    மிகவும் கேள்வி கேட்கும் மாணாக்கனை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  64. /பிரிவினைத் தூண்டியே பிறன்மனை தேடிடும்
    சிறுமதியோர் வந்திறங்கி வாலாட்ட‌ ~ பரங்கியர்க்குக்
    கலக்கம் கொடுத்த‌ எம்கவி பாரதியோ
    நிலவில் பிறந்த நெருப்பு !!/

    அருமையான கருத்து

    பதிலளிநீக்கு
  65. மகேஷ் அவர்களின் பாவை மிகப் பொறுமையாக, அதேவேளையில் ஆழமாகவும் தளைநீக்கித்தந்திருக்கிறார் அவனடிமை அவர்கள், அவனடிமை அவர்களுக்கென் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


    ////அமுதா அவர்களே: 'தையலவள்'ஐ எப்படி பிரிப்பது ? தை+ய+லவள் (தேமாங்கனி) என்றா இல்லை தைய + லவள் (கரு-விளம்) என்றா ? முன்னால் சொல்வது போல் பிரித்தால் கனிச்சீராகிடுமே, அது வெண்பாவில் வரலாமா ? கருவிளம் (நிரை-நிரை) என்று கொண்டால் 'தாழ்ந்து தையலவள்' என்று வரலாமா?/////


    அவனடிமையார் அவர்களுக்கு! சொல்லின் முதலில் ஐகாரம் வரின் இருமாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்காது. ஆக தை -ஓரசையாகும் அதுத்தடுத்த எழுத்துக்கள் குறில், குறிலாக இருப்பினும் குறிநெடிலாக இருப்பினும் நிரையே!

    காட்டு:-

    தையலவள் = தை+யல+வள் ==நேர்நிரைநேர் -கூவிளங்காய்

    ////மிகவும் கேள்வி கேட்கும் மாணாக்கனை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.../////


    நிறைய கேளுங்கள் அய்யா! எனக்குத்தெரியவில்லையாயின் எனதாசானிடமாவது கேட்டு உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  66. குறும்படத்திற்கு

    கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயிறு
    எட்டுமோ யென்மனதை யிவ்வாடை ஒட்ட
    எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்
    மனதிலுள் ளதேக்கறுப் பு.

    பதிலளிநீக்கு
  67. வெண்பா அருமை. அருமை!

    நேரிசை யாக நிகரிலா வெண்பாவை
    நேரிழையே! ஈந்தாய் நெறிதமிழில்-பேரிசையும்
    பெற்றுநீ வாழ்கவெனப் பேரவா கொண்டார்ப்பேன்
    நற்றமிழ்போல் வாழ்க நயந்து!


    ////கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)
    எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட
    எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்
    மனதிலுள்ள தேகறுப் பு.////

    மனத்திலுள்ள தேகறுப் பு! -ஏகாரத்தின்முன் வலி மிகா!

    பதிலளிநீக்கு
  68. கடல்கடந்து வந்த கதிராய் விளைந்தான்
    உடல்குறுகி ஓங்கி ஒளிந்தான்; -தடுப்போர்
    உறுப்பை அறுத்த ஒருமறவன் எல்லோன்
    நெருப்பில் விழுந்த நிலவு!

    தான்பெற்ற பிள்ளைகள் தன்மான மில்லாமல்
    கூன்பெற்று வாழுங் குணங்கண்டு -மான்போல்
    வெறுப்பில் தமிழன்னை வேற்றுமொழிப் பாட்டு
    நெருப்பில் விழுந்த நிலவு!

    பதிலளிநீக்கு
  69. பெயருந் தமிழில்லை; பேசும் மொழியில்
    உயிராந் தமிழில்லை உண்மை! -பயிலும்
    விருப்பால்லாக் கீழ்மை வெறிகண்டு நல்லார்
    நெருப்பில் விழுந்த நிலவு!

    எச்சில் அமுதமென் றெண்ணிப் பிறமொழியை
    அச்சேற்றி விற்பார் அணிவளர -நச்சுப்
    பருப்பைக் கடைந்து பரிமாறுந் தமிழே
    நெருப்பில் விழுந்த நிலவு!

    பதிலளிநீக்கு
  70. மற்றொருவர் நட்ட மரத்தில் பதியமிட்டு
    நற்றமிழில் இட்டு நலமென்றால் -பற்றி
    அறுப்புக் கிழுத்துவரும் ஆடாகும் தமிழே
    நெருப்பில் விழுந்த நிலவு!

    பதிலளிநீக்கு
  71. பாத்தென்றல் முருகடியாரின் பாக்கள் அருமை.வணக்கத்துடன் உமா. [பெயர் உங்களை ஆணாக காட்டுகிறது.]

    பதிலளிநீக்கு
  72. உமா அவர்களே! பாத்தென்றல் முருகடியான் அவர்கள் எனது ஆசானன்றோ! முன்பே பல இடங்களிற் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேனே! மறந்துவிட்டீர்களா?

    தங்கள் பாராட்டை அவரிடம் சேர்ப்பித்துவிடுகிறேன். நன்றிகள்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com