வெள்ளி, 31 ஜூலை, 2009

புதுமையும் எளிமையும்!


எளிமையும் புதுமையும் என்ற முந்தைய பாடத்தில், இக்காலத்தில் எளிமையாகவும் புதுமையாகவும் பாக்கள் புனைந்துவருவதைப்பற்றிப் பார்த்தோம். ஆகையால் எளிமையும் புதுமையும் இக்காலத்திற்குரியது எனக்கருதிவிட வேண்டாம். முற்காலத்தில் செய்த அளவிற்குப் புதுமையும் எளிமையும் இன்றளவும் யாரும் செய்துவிடவில்லை. செய்ததாக வேண்டுமாயின் சொல்லிக்கொள்ளலாம்.

கீழ்வரும் பாடல் வ.உ.சா அவர்களின் அரிய முயற்சியால் தேடிக்கண்டு பிடிக்கப்பட்ட “கிளவித்தெளிவு” என்ற சங்க இலக்கியத்தின் ஒரு பாடலாகும். காண்க.

கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்
மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்
தேனொக்கும் என்றன் திரு!


இப்பாடலில் புரியாத தெரியாத சொல் என்று எதுவும் உள்ளதா? சங்கப்பாடல்களில் இதுபோன்று சொற்களை எளிமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாக்கள் உள்ளன.

உலகறிந்த திருக்குறள் எளிமையான சொற்களைக் கொண்டு தொன்றிய நூலேயாகும்.

அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
--தொடங்கி…
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முழங்கப் பெறின்!
--வரை 1330 பாக்களுள் ஓரிரு நூறு பாக்களே சொற்பொருள் பார்த்துப் படிக்கக் கூடியதாக இருக்கும். மற்றவை அனைத்தும் மிக மிக எளிய சொற்களால் ஆனதே!

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை!


இப்பாவில், இன்னிசை அளபெடையை நீக்கிவிட்டால் ---

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை!


அளபெடை நீக்கப்பட்ட இப்பாட்டைப் பாருங்கள். நாம் இன்று பயன்படுத்துகின்ற அதே சொற்களை அல்லவா அன்று வள்ளுவனும் பயன்படுத்தியிருக்கிறான். இப்படிச் சான்றுகள் நிறைய காட்டிக்கொண்டே செல்லலாம்.

மேற்கண்டவை போன்று எளிமையை மட்டும் செய்துவிட்டுப் புதுமை காணாது விட்டுவிடவில்லை நம்முன்னோர். பற்பல புதுமைகளையும் செய்திருக்கிறார்கள்.

காட்டிற்கு ஒன்று.

செங்கண் கருங்கோட் டெருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம்பாய்ந் –தங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடித்
தவளையும்மேற் கொண்டு வரும்!


ஓர் எருமை நீர்நிலைகளில் திரிந்து பின் கரையேறி வருகிறது. அப்படி வரும்போது அதன் முதுகுப்புறத்தில் குவளை மலர்களும், செங்கயல் மீன்களும், தவளைகளும் இருப்பதாக எருமையைக் கதாநாயகனாக்கிய பாடல்.

அறத்தைப் பாடவும், மக்களின் வாழ்வியல் நெறிகளைப் பாடவும், அரசர்களைப் பாடவும், காப்பியம் பாடவும் பயன்படுத்தப் பட்ட பாக்கள் ஓர் மிகமிக எளிய காட்சியைப் பாடவும் பயன்படுத்தப் பட்டிருப்பது கண்டு வியப்பாகவே உள்ளது. இவைப்போன்ற புதிய முயற்சிகளை அன்றைக்குப் பலரும் ஏற்றுக்கொண்டார்கள். காரணம் எத்துணைப் புதுமையாக எழுதினாலும் அவை, கவிதைகளாக இருந்தமையே. அதாவது பாவோட்டத்திற்கான அனைத்துத் தன்மைகளும் பொருந்தியமையே!

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டு
ஒன்பது பத்துப்பதி னொன்றுபன்னி –ரெண்டுபதி
மூன்றுபதி நான்குபதி ஐந்துபதி னாறுபதி
னேழ்பதி னெட்டுபத்தொன் பது!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட்ட பாடல் பொருளற்ற ஆனால் பலரையும் வியக்கவைக்கும் ஆற்றலுள்ள பாடல்களின் ஒன்று.

அவ்வையாரின் அனைத்துப் பாடல்களும் புதுமையும், எளிமையும் நிறைந்ததே.

அணுவைத் துளைத்தேழ் கடலை புகுத்திக்
குறுகத் தறித்த குறள்!
–என்றெழுதி விஞ்ஞானத்தாலும் அன்று கண்டறியப்படாத அணுவைத் தன்பாட்டில் வைத்துப் புதுமை படைக்க முடிந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!

ஆக, புதுமையும், எளிமையும் இக்காலத்திற்கே உரியதல்ல. அது தொன்றுதொட்டு வருவது. நாம் எத்துணைப் புதுமை, எளிமை செய்யப்புகுந்தாலும் மரபின் தன்மை மாறாமலும், தமிழின் கட்டுக்கோப்பைச் சிதைக்காமலும் எழுதிவருவோமாயின் அதுவே மிகப்பெரிய புரட்சிதான். புரட்சிக்கவி எனப் பெயரெடுத்த பாரதி தாசன்கூட தமிழ் இலக்கணத்திற்கும், தமிழ்மரபிற்கும் உட்பட்டே தனது புரட்சிகரமான கருத்துக்களை வழங்கினார்.

ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்.
மேலுள்ள படத்திற்குப் பொருத்தமான வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இன்னல் அகலும் இனி!


அகரம் அமுதா

21 கருத்துகள்:

  1. /
    ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்./

    கண்டிப்பாக‌

    பதிலளிநீக்கு
  2. /கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
    கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்
    மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்
    தேனொக்கும் என்றன் திரு!/

    அகராதியைத் தேடி
    அலைய வேண்டாம் என்பதை
    வெண்பாவின் வரிகள் ஒவ்வொன்றும்
    விளக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வருக திகழ்! நிழற்படத்திற்கும், ஈற்றடிக்கும் பாவெழுத முயல்க!

    பதிலளிநீக்கு
  4. அமுதா - நீவீர்:

    புரியும்படி பாடல் புனைவீர் தமிழை
    அறியும்படி இட்டீ ரிடுகை.

    உங்கள் மரபுத்தமிழ் வளர்க்கும் பணி வளர வாழ்த்துக்கள்.

    கிளவித்தெளிவு பாடலில்:

    //கண்ணினால் மானொக்கும்// - சரி
    //சாயல் மயிலொக்கும்// - சரி
    //நன்மொழியால் தேனொக்கும்// - சரி
    //என்றன் திரு!// - அப்படின்னா என்ன ?
    'என் உருவம்'ன்னா?

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அவனடிமையாரே!

    /////என்றன் திரு!// - அப்படின்னா என்ன ?
    'என் உருவம்'ன்னா?/////


    இவ்விடத்தில் உருவம் என்ற பொருளையே தந்துநிற்கிறது. அல்லது இப்படியும் கொள்ளலாமோ?

    நாம் மரியாதைக்காக மற்றவரை அழைக்கும் போது, "திரு. அவனடிமை அவர்கள், திரு. திகழ் அவர்கள்" என்றழைப்பதைப் போல, தனது உயிர் எதிரில் நடந்துவருவதைப் பார்த்து அவ்வுருவின் மீதுள்ள மதிப்பால், மரியாதையாக அழைக்கிறானோ!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பதிவு.

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தடவில், பக்திப்பா தடை எதுவும் இல்லையே ?

    இதோ ஒரு நிரை, அதன் ஈற்றுச் சொல்லில் தொடங்கிய ஒரு நேர்;

    கருத்தில் புதுமை பெரிதாக இல்லையென்றாலும், எளிமையாக எழுத எண்ணி, நம் உண்மையான (தமிழ்த்) தலைவனுக்கு சமர்ப்பணம் (உங்கள் 'பாழ்' ஈற்றடியை சிறிது மாற்றி) செய்கிறேன்:

    தமிழுக் கிறைவன் முருகன் திருவாய்
    அமுதினுக் குண்டோ மரணம் -- குமரனை
    நாவில் நவின்று நினைந்திருப் போர்க்கவன்
    பாவும் தமிழுமினிப் பாம்.

    இனிப்பாய் அவன்திரு நாமம் இருந்திட
    உன்னிப்போர் உள்ளில் உவகை சுறக்கும்
    மின்னல்போல் மாயை முடிவாய் மறைந்திட
    இன்னல் அகலும் இனி.

    பதிலளிநீக்கு
  8. ////அவனடிமை கூறியது...

    உங்கள் தடவில், பக்திப்பா தடை எதுவும் இல்லையே ?/////

    மடையுண்டோ வங்க வளர்கடற்கு? சந்த
    நடையுண்டோ செய்யும் நவீன கவிக்கு?
    தொடையுண்டோ பூத்த புதுக்கவியில்? இங்குத்
    தடையுண்டோ பக்திசொலத் தான்?


    ////பாவும் தமிழுமினிப் பாம்.//////

    அட... அட...

    அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
    நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்.




    இருபாட் டியற்றி இயம்பினீர் இன்பம்
    தருபாட்டீ தென்பேன் துணிந்து!

    பதிலளிநீக்கு
  9. அகரம் அமுதா அவர்களே!
    பாராட்டுகள்!
    நிறைய பேரை வெண்பா எழுத வைத்திருக்கிறீர்கள்!

    அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்... என்று பாடலில் முதலடி இறுதிச்சீர் வரும் என்று எனக்கு நினைவு. சரிபார்த்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  10. வருக! தமிழ நம்பி அவர்களே! தங்கள்வருகை மகிழ்வளிக்கிறது. சொற்பிழையைப் பொறுத்தருள்க. திருத்திக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  11. தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
    உன்னை யிருத்திய 'ஆடி'போ யிற்றேசிறு
    மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
    இன்னல் அகலும் இனி.

    பதிலளிநீக்கு
  12. சிறப்பு! வியக்க வைக்கிறீர்கள் உமா அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. முடமாக்கும் நம்பிக்கை எல்லாம் உயர்வின்
    தடைக்கற்க ளாகும் ! அறிவைத் துணையாக்கொண்(டு)
    என்றும் எதிலும்நாம் இங்கே செய‌ல்புரிந்தால்
    இன்னல் அகலும் இனி!
    -----------

    நன்றி அகரம் அமுதா அவர்களே

    பதிலளிநீக்கு
  14. நம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்த்துக்கள் திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  15. எண்ணிச் செயல்முடிக்கும் ஏற்றம் பெருகுவதால்
    பன்னித் தமிழெழுதிப் பண்பழிவான் –என்முன்னே
    கன்னல் தனித்தமிழ்நூல் காட்சிக் கிருப்பதனால்
    இன்னல் அகலும் இனி!

    பாட்டுத் தமிழறிந்து பண்பாட்டுச் சீரறிந்து
    கேட்டுக் குழைத்திருந்த கீழறிவு –ஆற்றுப்பா
    எண்ணி எழுத இளைஞர் எழுவதனால்
    இன்னல் அகலும் இனி!

    பதிலளிநீக்கு
  16. சொடக்கைத் திறந்தால் சுடரும் விளக்கில்
    வடக்கின் மொழிபடிக்க வைத்தார் –குடத்தேனில்
    நன்னீர்போல் நஞ்சிட்ட நாடகத்தை நாமறிந்தால்
    இன்னல் அகலும் இனி!

    ஆற்றல் அருளரசே! அன்னைத் தமிழனங்கை
    ஏற்றும் இனவுணர்வின் ஏந்தலே! –கூற்றுதைக்க
    எண்ணும் மரபுப்பா இன்பம் கொடுப்பதனால்
    இன்னல் அகலும் இனி!

    பதிலளிநீக்கு
  17. கத்தும் கடல்நீரைக் காச்சிச் சுருக்கிவிட்டால்
    முத்துப் பரல்பொல் முறுவலிக்கும் –புத்தமுதாய்
    உண்ணத் தரும்பாவில் உண்மைத் தமிழிருந்தால்
    இன்னல் அகலும் இனி!

    பதிலளிநீக்கு
  18. புகைப் படத்திற்கான வெண்பா.

    மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
    வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
    இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும்
    மரமும் நிழலை மறுத்து.

    பதிலளிநீக்கு
  19. //உமா கூறியது...
    புகைப் படத்திற்கான வெண்பா.
    மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
    வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
    இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
    மரமும் நிழலை மறுத்து.
    //

    மனதைத் தொடும் வண்ணம் பாவிசைத்தீர். நன்றி.

    பாதிக்கப்பட்ட அப்பாவி அகதிகள் வானத்தைப் பார்த்து கேட்பது போல ஒரு கற்பனை:

    வெடித்திடும் குண்டு மழைபொழிய வானே
    மடியில்வி மானங்கள் தாங்கிக் - கெடுத்தாய்
    மடிபவர் கூக்குரல் உன்னருகில் எட்டிப்
    பிடிக்குதோ எங்களின் ஓலம் ?


    * 'பிடிக்குதோ' என்பதை 'விரும்புகிறாயோ (வானமே)' என்றும் 'உன்னைத் தொட்டதோ' என்றும் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  20. அவனடியாருக்கு! அத்துயரத்தைத் துய்ப்பவனுக்கே அதன் வலிபுரியும், அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

    வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்க!

    பதிலளிநீக்கு
  21. வெடித்திடும் குண்டு மழைபொழிய வானே
    மடியில்வி மானங்கள் தாங்கிக் - கெடுத்தாய்
    மடிபவர் கூக்குரல் உன்னருகில் எட்டிப்
    பிடிக்குதோ எங்களின் ஓலம் ?

    ஐயா, வாழ்த்துக்கு மிக்க நன்றி,மிக அருமை உங்கள் பா.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com