திங்கள், 10 மே, 2010

கலிமண்டிலம் -1

ஆசிரிய மண்டிலங்களில் எண்சீர் மண்டிலம் வரை பார்த்தோம். அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட ஆசிரிய மண்டிலங்கள் தற்காலத்தில் பாடப்படவில்லை. அல்லது போற்றப்பட வில்லை எனலாம். ஆதலால் அடுத்த படியாக நாம் கலிமண்டிலம் பற்றி அறிந்துகொள்ளலாம் எனக்கருதுகின்றேன்.

கலிப்பா பற்றி முன்பே படித்திருக்கின்றோம். ஆதலால், நேரடியாக கலிமண்டிலம் பற்றி அறியப்புகலாம்.

கலிமண்டிலம் எழுதுவதற்கான விதிகள்-

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு 1ஆம் சீர் முதல் 4ஆம் சீர் வரை முறையே
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்

4. 2ஆம் 3ஆம் தளைகள் மாமுன் நிறை, விளமுன் நேர் என வெண்டளையாகவும் வரும், மாங்காய்ச்சீரும் அருகிவரும்.

5.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு. (நேரால் தொடங்கும் இவ்வகைப் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்துக்களும், நிரையால் தொடங்கும் பாடலில் 12 எழுத்துக்களும் இருக்கும் என்பதை உணரலாம்.)

6.கூவிளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகிவருவதும் உண்டு.

7.குறில் ஈற்றுமா என்பது குறில் ஒற்று ஈற்று மாவாகவும் வரலாம். அதாவது – ‘காலம்’, ‘மாதம்’, ‘வணக்கம்’ – இவற்றிலுள்ள ‘லம்’, ‘தம்’, ‘கம்’ போன்றவற்றைக் கவனிக்க.

காட்டு

காவி யோகய லோஎனும் கண்ணினைத்
தேவி யோதிரு மங்கையின் செல்வியாள்
பாவி யேனையும் பார்க்குங்கொ லோஎனும்
ஆவி யோயினும் ஆசையின் ஓய்விலாள்.

-கம்பராமாயணம்.

மேலுள்ள பாடலில் மூன்றாமடியின் மூன்றாம் சீரை நோக்குக. ‘பார்க்குங்கொல்’ எனக் காய்ச்சீராக அருகி வரந்துள்ளது.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====

கணவன் வீட்டுளார் காட்டிடும் தீங்கினால்
மனைவி யானநீ மாயநி னைப்பதோ?
உனக்கும் கையிரண் டுள்ளன சொந்தமாய்
நினைத்துப் பாரடி நீஇவண் வாழலாம்!

புலவர் அரங்க. நடராசன்.

இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடியின் முதற்சீர்கள், குறிலொற்று மாவாக வந்துள்ளமையையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிய வெஞ்சமத்(து) ஆருயிர் போகத்தான்
தனியி ருந்த உடலன்ன தையல்பால்.

கம்பராமாயணம்.

மேலுள்ள பாவின் முதலடியின் இரண்டாம் மூன்றாம் சீர்களின் தளையை நோக்குக. 'வந்து முறைமுறை' - மாமுன் நிறை (கருவிளம்) வந்திருக்கிறது. இரண்டாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்ததால் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்திருக்கிறது. அதுபோலு காய்ச்சீர்கள் 3 வந்திருப்பதையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போயுக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.

கம்பராமாயணம்.

இப்பாடலின் நான்காமடியின் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்தமையால் இறுதிச்சீரும் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்ததை நோக்குக.

அகரம் அமுதா

34 கருத்துகள்:

  1. திரு அமுதா அவர்களுக்கு
    மிக்க நன்றி, மிக அருமையான விளக்கத்துடன் அமைந்துள்ளதிப் பாடம்.நன்றி.

    கலி வெண்பா என்பது வெண்பாவின் இலக்கணம் பெற்று 12 அடிகளுக்கு மிக்கதாக வருவது,மண்டிலம் என்பதால் 4 அடிகளாக கலிமண்டிலம் அமைய வேண்டும் அல்லவா.

    பதிலளிநீக்கு
  2. ஆசான் அகரம் அமுதா அவர்களே:

    வெண்பாத் தளம் திடீரென்று நீலப் பின்னணியில்! வெண்மையான் எழுத்துகள் படிக்க எளிதாக இருந்தாலும், கருமையான அல்லது கரு நீல எழுத்துக்கள் படிக்க சிறிது பாடாக இருக்கிறதே (உதாரணம் அண்மை மறுமொழிகள்). மாற்ற முடியுமா ?
    மிக்க நன்றி ஐயா!

    நீலப் பின்னணி வெள்ளெழுத் தாலெழில்;
    காலத் தில்பெறும் வெள்ளெழுத் தால்வெளிர்
    நீலத் தில்கருஞ் சொற்களி னால்தளம்
    ஞாலத் தில்படிப் போர்க்கரும் பாடன்றோ!

    பதிலளிநீக்கு
  3. அவனடிமை ஐயா: தமிழ்க்கவிதை தயாராக வைத்திருப்பீர்கள் போல... அருமை அருமை அருமை.

    அகரம் அமுதா அவர்களே: கவர்ச்சியாக இருந்தாலும் பின்னணி சற்று கண்ணையும் உறுத்துதய்யா.

    பதிலளிநீக்கு
  4. அவனடிமை சொன்னது…

    நீலப் பின்னணி வெள்ளெழுத் தாலெழில்;
    காலத் தில்பெறும் வெள்ளெழுத் தால்வெளிர்
    நீலத் தில்கருஞ் சொற்களி னால்தளம்
    ஞாலத் தில்படிப் போர்க்கரும் பாடன்றோ!


    பாடல் அருமை. சிறு மாற்றம் வேண்டி எழுதியுள்ள தங்கள் பாவில் சிறு மாற்றம் வேண்டுகின்றேன்.

    நீலப் பின்னணி வெள்ளெழுத் தாலெழில்;
    காலத் தில்பெறும் வெள்ளெழுத் தால்வெளிர்
    நீலத் தில்கருஞ் சொற்களி னால்தளம்
    ஞாலத் தில்படிப் போர்க்கரும் பாடரோ!

    இறுதிச் சொல்லை மாற்றியுள்ளேன். 'படிப்பார்க்கு அரும் பாடு அரோ' -அரோ என்பது ஓர் அசைச்சொல். அதற்குப் பொருள் கிடையாது. தங்கள் பாவின் இறுதிச்சீர் காய்ச்சீராக வருவதைத் தடுக்கவே அவ்வேற்பாடு.

    தங்கள் வேண்டுகோளுக்கிணங்க மாற்றி வடுகின்றேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  5. உமா சொன்னது…

    மண்டிலம் என்பதால் 4 அடிகளாக கலிமண்டிலம் அமைய வேண்டும் அல்லவா.


    ஆம் உமா அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரை சொன்னது…

    அகரம் அமுதா அவர்களே: கவர்ச்சியாக இருந்தாலும் பின்னணி சற்று கண்ணையும் உறுத்துதய்யா.


    கவர்ச்சியாக இருந்தால் கண்ணை உறுத்தத் தானே செய்யும் அய்யா!

    பதிலளிநீக்கு
  7. பா வகைகளின் இன்ன பா இன்னக் கருத்துக்கு உகந்தது என்பது ஏதாவதுண்டா?
    அதாவது ஒவ்வொரு பாவும் அதன் வாய்ப்பாட்டிற்கேற்ப ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளன.
    நெகிழ்ச்சியான உணர்விற்கு ஒருவகையும் அறிவுறுத்தல் வீரம் போன்ற உணர்விற்கு மற்றொரு வகையும் அமையவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  8. நன்று செய்திட நாடிடு நம்முயிர்
    என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
    இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
    கொண்டுச் சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.

    பதிலளிநீக்கு
  9. //தங்கள் வேண்டுகோளுக்கிணங்க மாற்றி வடுகின்றேன் அய்யா!//

    காய்ச்சீர் பதநீரைக் களைந்தருகும் நீர்சுண்டக்
    காய்ச்சிநீர் கள்ளாக்கி நீர்.

    பதிலளிநீக்கு
  10. //
    நன்று செய்திட நாடிடு நம்முயிர்
    என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
    இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
    கொண்டுச் சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்
    //

    நாலுவரிக் கலிமண்டிலம் நன்றாக இருக்கிறது உமா அவர்களே. வேண்டா ஒற்றுகளையும், ஒரே கருத்தை ஒரு முறைக்கு மேல் கூறுவதையும் தவிர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

    ’நன்றுநன் றென்றுஞ்செய்’ நாள்கெடு வைத்திட்டீர்
    நன்றுந மன்நினைவூட் டி.

    பதிலளிநீக்கு
  11. உமா சொன்னது…

    /////பா வகைகளின் இன்ன பா இன்னக் கருத்துக்கு உகந்தது என்பது ஏதாவதுண்டா?
    அதாவது ஒவ்வொரு பாவும் அதன் வாய்ப்பாட்டிற்கேற்ப ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளன.
    நெகிழ்ச்சியான உணர்விற்கு ஒருவகையும் அறிவுறுத்தல் வீரம் போன்ற உணர்விற்கு மற்றொரு வகையும் அமையவேண்டுமா?//////

    அப்படியெல்லாம் கிடையாது. பொதுவாக அக்காலத்தில் நீதி நூல்கள் பெரும்பாலும் வெண்பா வடிவிலேயே அமைத்தனர். (காட்டு- திருக்குறள், நாலடியார்)

    காதல் மற்றும் வீரத்தைப்பாட பெரும்பாலும் அகவற் பாவைக் கையிலெடுத்தனர். (காட்டு- அகநானூறு, புறநானூறு)

    முற்காலத்தில் குறிஞ்சி நிலத்திலுள்ள பாவலர் முல்லை நிலப் பொருட்களைப் பற்றிப் பாடமாட்டார், பாடக்கூடாது. அவரவர், அவரவர் சார்ந்த நிலப் பொருட்களையே பெரும்பாலும் பாடினர். காரணம் அக்காலத்தில் இக்காலத்தில் உள்ளது போல தொலைத்தொடர்புகள் இல்லை. கால் நடையாகவே செல்ல வேண்டும். ஆதலால் பிற நிலப் பொருட்களைப் பாடுவதைத் தவிர்த்தனர்.

    அதன் பிறகு எழுந்த பார்ப்பனிய வல்லாதிக்கத்தினர் நால்வகை வர்ணத்தவருக்கும் நால்வகைப் பாவைப் (அகவல், கலி, வஞ்சி, வெண்பா) பிரித்தனர். அதில் பார்ப்பனியர்களுக்கு வெண்பா உரியது.

    காட்டுக்குச் சொல்ல வேண்டும் என்றால், இன்று நானறிந்து சிங்கப்பூரில் ஒரு பார்ப்பனியர், (அவர்பெயர் வெண்பா இக்குவனம்)வெண்பாவைத் தவிர வேறு பாவகையிற் பாடல் இயற்றியதே கிடையாது. அதன் காரணம் பார்ப்பனியருக்கு உரித்தான வெண்பாவில் மட்டுமே நான் பாவியற்றுவேன் என்னும் அவரின் கொள்கையறிந்தபோது அதிர்ந்தே போனேன். எவனுடைய பாவிற்கு எவன் உரிமை கொண்டாடுவது? எனக் கொதித்தேன். அதைவிடுங்கள்.

    இந்த கருத்தை இந்த பாவில்தான் சொல்ல வேண்டும் என்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. தங்கள் கருத்துக்கேற்ப பாவடிவம் அமைந்துவிடும் அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  12. அவனடிமை சொன்னது…

    ////காய்ச்சீர் பதநீரைக் களைந்தருகும் நீர்சுண்டக்
    காய்ச்சிநீர் கள்ளாக்கி நீர்.////

    காய்ச்சீர் பதநீரைக் களைந்தருகும் நீர்சுண்டக்
    காய்ச்சீர் கள்ளாக்கா தீர்!

    கள்ளால் பலகுடியும் காசினியில் கெட்டழிதல்
    நல்லதோ சொல்வீர் நயந்து!

    பதிலளிநீக்கு
  13. உமா அவர்களின் நன்று செய்திடு, அதையும் இன்றே செய்திடு பா அருமை. அருமை.

    உமா அவர்களுக்கு அவ்வையாரின் நேரொத்த அகவையாகி விட்டதோ? பெரும்பாலும் நீதிக்கருத்துக்களையும், மருகன் பாக்களையும் விரும்பிச் செய்கின்றாரே!

    பதிலளிநீக்கு
  14. உருவம் நாநென் றுழல்பவ னுய்வுற
    உருகும் உள்ள முனதடி மைக்கருள்
    முறுவ லோமுட வன்விழைந் தானென
    திருவண் ணாமலை யுண்டதேன் பண்டமே!

    பதிலளிநீக்கு
  15. தேடிப் பெற்றதோர் செல்வமும் நீரைப்போல்
    ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
    வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
    நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.

    பதிலளிநீக்கு
  16. அவனடிமையாருக்கு வணக்கம். மிக்க நன்றியும். என் பாக்களில் ஒற்றுப் பிழைகள் மலிவது வருந்தத்தக்கதே. பா எழுத அலுவலகத்தில் [யாருடனும் அரட்டை அடிக்கமாட்டேன் என்பதால்????] சற்று நேரம் கிடைக்கும். ஆனால் இலக்கணம் அறிய வீட்டில் கடமையும் வேலையும் சற்றே இடையூராக உள்ளன. முயன்று சரிசெய்துக் கொள்கிறேன். எடுத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. திரு.அமுதா அவர்களுக்கு,
    தங்களின் நிறைவான விளக்கத்திற்கு நன்றி. [ஆனாலும் பார்ப்பனியர்களை ரொம்பத் திட்டாதீர்கள். பாரதியும் பார்ப்பனர் தானே? பாரதி தாசனுக்கு இனம் தடையாக இல்லையே அவன் மேல் பற்று வைக்க. வள்ளுவனை போற்ற பாரதிக்கும் இனம் தடையாக இல்லையே. அறியாதவர் செய்யும் தவறுக்காக பார்ப்பன இனத்தையே திட்டலாமா? எனக்கும் வலிக்குமே!]

    //உமா அவர்களுக்கு அவ்வையாரின் நேரொத்த அகவையாகி விட்டதோ?// ஆஹா இப்படியெல்லாம் கலாய்த்தால் எப்படி. ஆசான் சொல்லியிருக்கிறாறே என்று நாலடியாரை அச்செடுத்து முடிந்தப்போது படித்து அதிலிருந்து சில கருத்துக்களை பாவாக்க முயன்றிருக்கிறேன். வடிவம் கைவர வேண்டும் என்பதால் எளிய கருத்துகளை எழுத பழகுகிறேன். அப்படியும் அவனடிமையார் சொன்னது போல் இன்னும் நிறைய அறியவேண்டும் என்பதையும் அறிகிறேன். அப்படியிருக்க இது சரியா? போகட்டும் அவ்வையார் கோபித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  18. //காய்ச்சீர் பதநீரைக் களைந்தருகும் நீர்சுண்டக்
    காய்ச்சீர் கள்ளாக்கா தீர்!

    கள்ளால் பலகுடியும் காசினியில் கெட்டழிதல்
    நல்லதோ சொல்வீர் நயந்து!//

    நான் சொல்ல வந்தது:
    ”காய்ச்சீர் பதநீரைக் களைந்தருகும் நீர்சுண்டக்
    காய்ச்சிநீர் கள்ளாக்கி நீர்.”
    =
    காய்ச்சீர் (எனும்) பத(மாகிய) நீரை களைந்து அருகும் (குறையும்) நீர் சுண்டக்
    காய்ச்சி (’பாடரோ’ என்கிற ஒலியில் குறைந்த கூவிளமாக்கி முன்பே பதித்த பாவை) நீர் (மயக்கந்தரும்) கள்ளாக்கிநீர்.

    ஒருவேளை இப்பொருள் சரியாக வரவில்லையாதலால், ’கள் காய்ச்சச் சொல்கிறேன்’ என்று கொண்டீரோ? பதநீரும், கள்ளும் குடிக்கக் கல்லாததால் காய்ச்சும் முறையும் எனக்குத் தெரியாது. :-)

    கள்ளைக் கவியுவமை காட்டிடினும் கொள்வாரோ
    கள்ளக் குடிப்பழக் கம்.

    பதிலளிநீக்கு
  19. ஓர் ஐயம்.

    ஓரடியின் இரண்டாம் சீர் தேமாவாக வர , மாமுன் நிரை வந்து தளைதட்டாது அமைய வேண்டுமானால் மூன்றாம் சீர் கருவிளமாக அமையலாம் அல்லவா.

    ஓரடியின் இரண்டாம் சீர் கூவிளத்திற்கு பதிலாக தேமாவரும் படியும் அமைக்கலாம் என்றாகிறது. அப்படியாயின் இரண்டாம் சீரில் புளிமா அல்லது கருவிளம் அல்லது காய்ச்சீராக அமைக்கலாமா?
    இரண்டாம் சீர் என்றில்லாமல் 3,4ம் சீர்களிலும் புளிமா அமைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  20. புலவர் பெருமக்கள் திகழ், சவுக்கடி, வசந்த், அப்பாதுரை, அண்ணாமலை இவர்கள் எல்லாம் எங்கே?

    பதிலளிநீக்கு
  21. செயல்கள் நீசெய சோம்பியாய் யானினி
    அயலென் றாயுல கத்தினில் மௌனியாய்
    இயலி சையறி வற்றவோர் மூடனாய்
    மயிலை நாதனின் மைந்தனே ஆக்குவாய்!

    பதிலளிநீக்கு
  22. உமா சொன்னது…

    /// திரு.அமுதா அவர்களுக்கு,
    தங்களின் நிறைவான விளக்கத்திற்கு நன்றி. [ஆனாலும் பார்ப்பனியர்களை ரொம்பத் திட்டாதீர்கள். ////



    ஆரியர்கள் பலரும் தீந்தமிழை நீஷமொழி எனக் கேளி பேசும்போது திட்டாமல் எப்படி இருப்பது. இருப்பினும் திருஞான சம்பந்தர் முதற்கொண்டு பல ஆரியர்கள் தமிழுக்குப் பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள். இருப்பினும் சங்கராச்சாரியார் போன்றவர்கள் திருஞான சம்பந்தரை திராவிடக் குஞ்சு எனக் கேளி பேசுவதை அறிவீரா? தப்பித்தவறி தமிழுக்கு பூணூலார் எவரும் நன்மை செய்துவிட்டால் அவரைக் கேளி சேய்வதும் பூணூலார்களின் வழக்கமே!

    /////அறியாதவர் செய்யும் தவறுக்காக பார்ப்பன இனத்தையே திட்டலாமா? எனக்கும் வலிக்குமே!]/////

    ????. ஓரளவிற்கு விளங்குகின்றது. இதுபோன்ற திட்டல்களை இனிவரும் காலங்களில் முற்றாகத் தவிர்த்து விடுகின்றேன். பிழைசெய்திருப்பின் பொறுத்தருள்க. நன்றி.

    (ஆஃகா... இந்தப் பெண்கிட்ட தமிழகத்தில் மழையில்லாது போகட்டும்ணு சொல்லி வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா?)

    பதிலளிநீக்கு
  23. அவனடிமை சொன்னது…

    உருவம் நானென் றுழல்பவ னுய்வுற
    உருகும் உள்ள முனதடி மைக்கருள்
    முறுவ லோமுட வன்விழைந் தானென
    திருவண் ணாமலை யுண்டதேன் பண்டமே!


    அவனடியாரின் பாடல் அருமை. சொற்களைச் சுவைபட அமைத்திருக்கின்றீர்கள். வாழ்க.

    பதிலளிநீக்கு
  24. தேடிப் பெற்றதோர் செல்வமும் நீரைப்போல்
    ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
    வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
    நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.



    உமா அவர்களின் இப்பாடல் அழகுற அமைந்துள்ளது. கொண்ட பொருளைப் பிறர்க்குப் கொடுக்கச் சொல்லும் பாங்கு அருமை.

    'தேடிப் பெற்றதோர் செல்வமும்' - செல்வமும் என உம்மையை இட்டிருப்பதால் வேறு எவை எவை எல்லாம் நீரைப்போல் ஓடிடும்???? அவற்றைப் பற்றி உமா அவர்கள் குறிப்பிட வில்லையே! நீரைப்போல் நில்லாது ஓடுவது செல்வமும் ஆகும் என்றால், இன்னும் பலவும் நீரைப்போல் நில்லாது ஓடும் என்றல்லவா பொருள்!

    ஆக இப்படி மாற்றலாமா?


    தேடிப் பெற்றதோர் செல்வம்தண் ணீரென

    பதிலளிநீக்கு
  25. ////காய்ச்சீர் (எனும்) பத(மாகிய) நீரை களைந்து அருகும் (குறையும்) நீர் சுண்டக்
    காய்ச்சி (’பாடரோ’ என்கிற ஒலியில் குறைந்த கூவிளமாக்கி முன்பே பதித்த பாவை) நீர் (மயக்கந்தரும்) கள்ளாக்கிநீர்.

    ஒருவேளை இப்பொருள் சரியாக வரவில்லையாதலால், ’கள் காய்ச்சச் சொல்கிறேன்’ என்று கொண்டீரோ?/////////


    அவனடியாரின் பாவின் பொருள் உணர்ந்தே எழுதினேன். கள் என்கின்ற சொல் வந்தமையால் நானும் நகைச்சுவையாக சொல் விளையாட்டு விளையாடினேன் அவ்வளவே! பெரிதாகக் கொள்ள வேண்டாம் அய்யா

    பதிலளிநீக்கு
  26. உமா சொன்னது…

    ஓர் ஐயம்.

    /////ஓரடியின் இரண்டாம் சீர் தேமாவாக வர , மாமுன் நிரை வந்து தளைதட்டாது அமைய வேண்டுமானால் மூன்றாம் சீர் கருவிளமாக அமையலாம் அல்லவா./////////

    ஓரடியின் இரண்டாம் சீர் தேமாவாக வர, மாமுன் நிரை வந்து தளைதட்டாமல் அமைய வேண்டுமானால் மூன்றாம் சீர் கண்டிப்பாக கருவிளமாகத்தான் அமைய வேண்டும்.

    ///////ஓரடியின் இரண்டாம் சீர் கூவிளத்திற்கு பதிலாக தேமாவரும் படியும் அமைக்கலாம் என்றாகிறது. அப்படியாயின் இரண்டாம் சீரில் புளிமா அல்லது கருவிளம் அல்லது காய்ச்சீராக அமைக்கலாமா?//////

    கண்டிப்பாக கூடாது.(காய்ச்சீர் மட்டும் அமையலாம்) கூவிளம் அல்லது தேமாவாக, அல்லது காய்ச்சீர் மட்டுமே அமைய வேண்டும். முதல் சீர் மட்டுமே குறிலை ஈற்றாகக் கொண்ட புளிமாவாகவோ, தேமாவாகவோ அமையலாம்.

    //////இரண்டாம் சீர் என்றில்லாமல் 3,4ம் சீர்களிலும் புளிமா அமைக்கலாமா?.////////

    இப்பாவைப் பொருத்தவரை முதல் சீரைத் தவிர மற்ற சீர்களில் புளிமா அமையாது. 2,3,4 ஆம் சீர்கள் கூவிளமாக அமையவேண்டும். அல்லது தேமாவாக அமைந்தால் அடுத்த சீர் கருவிளமாக அமைய வேண்டும். அல்லது காய்ச்சீர் அருகி வரும். காய்முன் நேர்தான் அமைய வேண்டும் ஆதலால் இரண்டாம் சீர் காய்ச்சீர் என்றால் மூன்றாம் சீர் கூவிளம் அல்லது தேமாவாக அமைய வேண்டும். மாமுன் விளம் வரும் என்பது தாங்கள் அறிந்ததே.

    பதிலளிநீக்கு
  27. அவனடிமை சொன்னது…

    ///// புலவர் பெருமக்கள் திகழ், சவுக்கடி, வசந்த், அப்பாதுரை, அண்ணாமலை இவர்கள் எல்லாம் எங்கே? //////

    நானும் கேட்கின்றேன். எங்கே? எங்கே? எங்கே?

    பதிலளிநீக்கு
  28. காலை வேளை கடற்கரைச் சாலையில்
    காலை வீசி கருத்துட னேநட
    காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே
    காளைப் போல்பலம் கைவரக் காணுவை.

    பதிலளிநீக்கு
  29. தணப்பு போதலும் தாயிடம் நோதலும்
    கணப்பு சேர்தலும் காரிருள் காய்தலும்
    வனப்பு தீர்தலும் வாலிபக் காதலி
    நினைப்பில் நேருதடி மேனியும் வாடுதடி!

    அணைத்து ஆதுரம் ஆவலாய்ப் பேசிட
    கனைத்துக் காலொலித்துக் காதுகள் கூசிடச்
    சினைத்த வார்த்தைகள் சீண்டலாய் வாரிட
    நனைத்த நாணத்தை நெஞ்சில்சேர் ஊறிட!

    முத்தம் மோதகம்; மோதிய போதெலாம்
    யுத்தம் தீராது, யாவுமே நீகொடு.
    புத்தம் பூச்செடி பூசையின் தேரடி
    பித்தம் ஏறுதடி பீடுடைத் தேவியால்.

    பதிலளிநீக்கு
  30. //கவர்ச்சியாக இருந்தால் கண்ணை உறுத்தத் தானே செய்யும் அய்யா!//

    சபாஷ்!

    பதிலளிநீக்கு
  31. காலை வேளை கடற்கரைச் சாலையில்
    காலை வீசிக் கருத்துட னேநட
    காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே
    காளை போல்பலம் கைவரக் காணுவை.


    உமா அவர்களிம் பா அருமை. அருமை. வாழ்க.

    பதிலளிநீக்கு
  32. இரா. வசந்த குமார். சொன்னது…

    தணப்பு போதலும் தாயிடம் நோதலும்
    கணப்பு சேர்தலும் காரிருள் காய்தலும்
    வனப்பு தீர்தலும் வாலிபக் காதலி
    நினைப்பில் நேருதடி மேனியும் வாடுதடி!

    அணைத்து ஆதுரம் ஆவலாய்ப் பேசிட
    கனைத்துக் காலொலித்துக் காதுகள் கூசிடச்
    சினைத்த வார்த்தைகள் சீண்டலாய் வாரிட
    நனைத்த நாணத்தை நெஞ்சில்சேர் ஊறிட!

    முத்தம் மோதகம்; மோதிய போதெலாம்
    யுத்தம் தீராது, யாவுமே நீகொடு.
    புத்தம் பூச்செடி பூசையின் தேரடி
    பித்தம் ஏறுதடி பீடுடைத் தேவியால்.


    வருக வசந்த். பாக்கள் அருமை. அருமை.

    இரண்டாம் பாவின் முதலடி தளை தட்டுகின்றது.

    காண்க.

    அணைத்து +++ ஆதுரம் ஆவலாய்ப் பேசிட

    மூன்றாம் பாடலின் முதற்சீருக்கு என்ன பொருள்.

    புத்தம் பூச்செடி ?????

    புத்தம் புதிது, புத்தம் புது என சேர்த்துப் பயன் படுத்தினால்தான் பொருள்படும்.

    பதிலளிநீக்கு
  33. அப்பா துரையாரே!
    பாவோடு வருவீரே!

    பதிலளிநீக்கு
  34. //இரண்டாம் பாவின் முதலடி தளை தட்டுகின்றது.

    புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம் தானே..?

    //மூன்றாம் பாடலின் முதற்சீருக்கு என்ன பொருள்

    மோதகம் என்பது வேழத்தின் மதநீர் ஒழுகும் பகுதி. உன்மத்தத்தைத் தூண்டும் முத்தமும் அதைப் போன்ற ஒன்று தானே என்று சொல்லப் பார்க்கிறேன்.

    //புத்தம் பூச்செடி ?????

    //புத்தம் புதிது, புத்தம் புது என சேர்த்துப் பயன் படுத்தினால்தான் பொருள்படும்.

    ஓ.கே. மாற்றிடுவோம்.

    முத்தம் மோதகம்; மோதிய போதெலாம்
    யுத்தம் தீராது. யாவுமே நீகொடு.
    சித்தம் நீயுள சீர்மிகு சீதனம்
    பித்தம் பீறிடும் பீடுடைத் தேவியால்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com