ஞாயிறு, 16 மே, 2010

கலி மண்டிலம்! 2

இப்பாடத்தில் கலிமண்டிலத்தின் இரண்டாம் வகையைப் பற்றி அறியவிருக்கின்றோம். மண்டிலங்களைப் பொருத்தவரை நான்கடிகளே வர வேண்டும் என்பது நாம் அறிந்ததே! இவ்வகை, நான்கடிகளும் ஓரெதுகை பெற்று வர வேண்டும்.

சீரமைப்பு முறையே

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் -இவ்வாரே நான்கடிகளும் அமைய வேண்டும். குறிலீற்றுமா வின் இடத்தில் சிறுபான்மையாக குறில் ஒற்றீற்று மாவாகவும் வரலாம்.

இவ்வகைப் பாவைப் பொருத்த மட்டில் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்

விலங்குகள் யாவுமே விரும்பித் தாம்பெறும்
நிலந்திகழ் குட்டிகள் நாடி உண்டிட
வளந்தரும் தம்மடி மண்டும் பாலினைக்
கலந்ததோர் அன்புடன் ஊட்டக் காண்கிறோம்! --- புலவர் அரங்க. நடராசன்

இப்பாடலை உற்று நோக்குக. முதல் மூன்றடிகளில் மோனை ஒன்றாம் மூன்றாம் சீர்களில் அமைந்திருக்க, நான்காம் அடியில் ஒன்றாம் நான்காம் சீரில் மோனை அமைந்துள்ளது. இவ்வாறும் மோனை அமையலாம்.

மொனை பற்றி நாம் முன்பே அறிந்திருக்கின்றோம்.

முதலிரு சீரிணை, முதலிருந்து ஒன்றிரண்டு
இடையீடு பொழிப்பொரூஉ
ஈறிலி கூழை முதலீ றழலில
மேல்கீழ்க் கெதுவாய் முழுவதும் முற்றே
கடையிரு சீரிணை கடமூன்று கீழை
இடையிரண் டிடைபுனர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இது தொல்காப்பியம் இப்பாவை நன்கு மனதில் வைத்துக்கொண்டால் மோனை, எதுகைகளை எங்கெங்கு அமைக்கலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்துவிடும்.

மலைகளும் மரங்களும் மணிக்கற் பாறையும்
அலைபுனல் நதிகளும் அருவிச் சாரலும்
இலைசெறி பழுவமும் இனிய சூழலும்
நிலைமிகு தடங்களும் இனிது நீங்கினார்! --- கம்பராமாயணம்.

இப்பாவிலும் நான்காம் இடியின் மோனை ஒன்றாம் நான்காம் சீர்களில் அமைவதை நோக்குக.

அகரம் அமுதா

11 கருத்துகள்:

  1. ஆசிரியர் எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் கவனம் எடுத்துச் சரி செய்வாரா..? :)

    பதிலளிநீக்கு
  2. குளிர்நிலா கருமுகில் குருவிக் கூக்குரல்
    தளிரிலை விழுமழை தழுவும் வானெழில்
    களிப்புடை கவிவரி கனிந்த வானவர்
    பொழிலுறத் தமிழ்மொழி போதும் வாழ்விலே.

    முன்னொரு நாளினில் முகத்தை நோக்கிட
    பின்னொரு போதினில் படுக்கை ஆர்த்திட
    தன்னையே தந்தனை; துயரில் மேலுமோர்
    அன்னையாய் ஆகினை அன்பால் காதலி.

    பதிலளிநீக்கு
  3. இரா. வசந்த குமார். சொன்னது…

    //////// ஆசிரியர் எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் கவனம் எடுத்துச் சரி செய்வாரா..? :)//////////



    கண்டிப்பாக. எந்தெந்த இடத்தில் பிழைகள் உள்ளன என்பதைச் சுட்டவும்.

    பதிலளிநீக்கு
  4. சலித்திடும் இளமையிற் தனிமை தாங்கொணா
    வலிதருஞ் சிறையது வாட்டும் முதுமையில்
    கிலியுடன் காப்பகம் கிடக்கும் பெற்றவர்
    மலிவென மறந்திடும் மக்கள் மாந்தரோ?

    பதிலளிநீக்கு
  5. தவறு திருத்தி:

    சலித்திடும் இளமையிற் தனிமை தாங்கொணா
    வலிதரும் முதுமையில் வாட்டும் வெஞ்சிறை
    கிலியுடன் காப்பகம் கிடக்கும் பெற்றவர்
    மலிவென மறந்திடும் மக்கள் மாந்தரோ?

    பதிலளிநீக்கு
  6. வசந்த அவர்களின் இரண்டு பாக்களும் அருமை. அருமை.

    அவனடியாரின் காப்பகத்தில் தவிக்கும் முதியோர் பற்றிய பா அழகாகவும் அருமையாகவும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. neocounter எனப்படும் தளத்தின் ’உலக வருகையாளர்கள் கணக்கம்’ வெண்பா தளத்தின் பக்கவிறக்கத்தை (web page download) தாமதப் படுத்துகிறதய்யா, நீக்கமுடியுமா?

    நியோகணக் கத்தால்வெண் பாத்தளத்தி லோர்சுணக்கம்
    இயைமிகும் நீக்கிவிட் டால்!

    ’அண்மை மறுமொழிக’ளையும் தூக்கிவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
  8. நியோ கணக்ககத்தைத் தூக்கி விடுகின்றேன். அண்மை மறுமொழிகள் கறுப்பு எழுத்தில் தெரிகிறது. அதை வெண்மையாகத் தெரியுமாறு செய்ய முடியவில்லை. ஆதலால்தான் தூக்கி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. //அண்மை மறுமொழிகள் கறுப்பு எழுத்தில் தெரிகிறது. அதை வெண்மையாகத் தெரியுமாறு செய்ய முடியவில்லை. ஆதலால்தான் தூக்கி விட்டேன்.//
    வர்ணத்தை மாற்றமுடியவில்லையானால், அண்மை மறுமொழிகளை திரும்பவும் தர இயலுமா? கருநீலமாக இருந்தாலும், highlight செய்து பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு நல்ல பயந்தரும் பகுதி அய்யா!

    பதிலளிநீக்கு
  10. தனித்திறன் படைத்தவர்கள் தங்கள் நிலைமையையும் மீறி முகத்தில் புன்னகையுடன் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா ? அதை போற்ற ஒரு பா:

    செவிப்பறை யிரண்டிலும் சேதம்; சைகையும்
    குவிந்திடும் அதரமுங் கொண்டு கேட்டனு
    பவித்திடும் பாழிலும் பாசப் புன்னகை
    எவண்பறிப் பாயிவர் இயல்பை ஈசனே?

    பதிலளிநீக்கு
  11. அவனடியாரின் கலிமண்டிலம் அருமை. வாழ்க.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com