சனி, 22 மே, 2010

கலிமண்டிலம்! 3

நான்கடிகள் கொண்ட பாடல் முறையே – குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். ஒன்றாம் மூன்றாம் சீர்களின் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்கள்!

ஒழுக்கம் என்பதை உரியின் மேலதாய்
வழுக்கல் இன்றியே காத்து வாழ்பவர்
தழைக்கும் ஓர்புகழ் தாங்கு வாரவர்
இழுக்கம் ஏற்படின் ஈவர் தம்முயிர்! --- புலவர் அரங்க. நடராசன்

நெஞ்சில் மாசினை நிறைத்து வைத்திடல்
நஞ்சைப் பாலினில் நயந்து சேர்ப்பதாம்
நெஞ்சில் நல்லதே நிறைந்து நிற்பதால்
எஞ்சும் இன்பினுக் கெல்லை இல்லையே! --- அகரம் அமுதா

உன்னில் மிக்கவர் ஊரில் ஆயிரம்
உன்னை மேலென உள்ளல் தப்படா!
எண்ணிப் பார்த்திடின் யாரும் யார்க்குமே
சின்ன வர்இலர் சிந்தித் துய்கவே! --- அகரம் அமுதா

அகரம் அமுதா

8 கருத்துகள்:

  1. ஒழுக்கம் என்பது உளதிங் கேட்டிலே
    இழுக்கும் இன்றெமக் கேற்பு; எம்மினங்
    கொழிக்கும் கள்ளவோட் டாலின் றுங்களை
    அழிக்கும் கட்சியே ஆளுங் கட்சியாம்.

    பதிலளிநீக்கு
  2. அவனடிமை சொன்னது…

    ஒழுக்கம் என்பது உளதிங் கேட்டிலே
    இழுக்கும் இன்றெமக் கேற்பு; எம்மினங்
    கொழிக்கும் கள்ளவோட் டாலின் றுங்களை
    அழிக்கும் கட்சியே ஆளுங் கட்சியாம்.


    அவனடியாரின் இச்சொற்கள் அனைத்தும் உண்மை. என்ன செய்வது. இன்றைய ஆட்சியர் எதையும் செய்து ஆட்சியைப் பிடிக்க வல்லாராக உள்ளனர். திருடர்கள் எனத் தெரிந்தபின்பும் நாட்டை அவர்கள் கைகளில் அல்லவா வழங்கியிருக்கின்றோம்!!!!

    பதிலளிநீக்கு
  3. மா புளிமா புளிமா புளிமா

    அஞ்சா மனமும் அயரா துழைப்பும்
    வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா
    நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய்
    மஞ்சே சிவனார் மனதாள் உமையே!

    குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம்.

    சொல்லில் நல்லறம் சூழ தீயதைக்
    கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச்
    செல்ல வாழ்விலே சிறப்பும் செல்வமும்
    நல்ல யாவையும் நாடி ஏய்துமே!

    பதிலளிநீக்கு
  4. கலிமண் டிலத்தில் புலியாய் அறத்தை
    சலியா தறைந்தா ருமா.

    பதிலளிநீக்கு
  5. மா + புளிமா + புளிமா + புளிமா

    நின்றாய்; இருந்தாய்; கிடந்தாய்; இலங்கை
    சென்றாய்; அரக்கர் செருக்கை, அகந்தை
    வென்றாய். நுரையுள் கரையில் தமிழைக்
    கொன்றார். இராமா, உறங்கு தியோநீ?

    பதிலளிநீக்கு
  6. உமா சொன்னது…

    சொல்லில் நல்லறம் சூழ தீயதைக்
    கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழி
    செல்ல வாழ்விலே சிறப்பும் செல்வமும்
    நல்ல யாவையும் நாடி ஏய்துமே!

    அருமை.

    பதிலளிநீக்கு
  7. இரா. வசந்த குமார். சொன்னது…

    மா + புளிமா + புளிமா + புளிமா

    நின்றாய்; இருந்தாய்; கிடந்தாய்; இலங்கை
    சென்றாய்; அரக்கர் செருக்கை, அகந்தை
    வென்றாய். நுரையுள் கரையில் தமிழைக்
    கொன்றார். இராமா, உறங்கு தியோநீ?

    பாடல் அருமை வசந்தாரே! யார் அந்த அரக்கர்கள்? இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறின் இப்பொழுது அவர்கள் எங்கே?

    பதிலளிநீக்கு
  8. அவனடிமை சொன்னது…

    கலிமண் டிலத்தில் புலியாய் அறத்தை
    சலியா தறைந்தா ருமா.



    'அவனடிமை' செய்யும் அருங்குறட் பாவால்
    அவரடிமை ஆனவன் நான்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com