சனி, 11 டிசம்பர், 2010

இசைப்பா! 3

இப்பாடத்தில் வேறொரு வகையான இசைப்பாவைப் பற்றி அறியவிருக்கிறோம்.

மறப்பேனா?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

காசி. ஆனந்தன் -மட்டக்களப்பு.

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

இசைப்பா! 2

இப்பாடத்தில் ஒருவகை இசைப்பாவைப் பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
......நீட்டி யழைத்து
......நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
......நிறைப்பது கவிமாலை!
வாசம் பரப்பி
......வண்டை அழைப்பது
......வண்ண மலர்சோலை! -என்னை
......வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
......மதியும் வந்தே
......மங்கல வானெழுதும்! -விண்மீன்
......வாழ்த்திசைப் பண்ணெழுதும்!
சோலை வந்தபின்
......சில்வண் டெல்லாம்
......சொக்கியா நின்றுவிடும்? -பூக்கள்
......வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
......உயர்த்திப் பிடித்த
......உறுவில் மையெழுத்து! -மின்னல்
......ஒளியோ கையெழுத்து!
அருவிக் குழந்தை
......ஆறே மங்கை
......ஆழி மூப்பாகும்! -கரைக்கு 
......அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
......கயமை சமூகம்
......கண்டிடு கவிதையிலே -அவைதான்
......கவிதைகள் என்பவனே!
இயற்கைக் கவிஞன்
......எழுதாக் கவிதைகள்
......எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
......இடுகிறாய் பிடிநெருப்பு!

இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!

தனிச்சொல்லுக்கு முன்னுள்ள சீரும், அதற்கு நேர் கீழ் உள்ள சீரும் இழைபுத்தொடை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், எட்டாம் சீர்கள் மோனை அமைதல் சிறப்பு.

ஒன்றாம் மற்றும் பத்தாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.