வெள்ளி, 31 ஜூலை, 2009

புதுமையும் எளிமையும்!


எளிமையும் புதுமையும் என்ற முந்தைய பாடத்தில், இக்காலத்தில் எளிமையாகவும் புதுமையாகவும் பாக்கள் புனைந்துவருவதைப்பற்றிப் பார்த்தோம். ஆகையால் எளிமையும் புதுமையும் இக்காலத்திற்குரியது எனக்கருதிவிட வேண்டாம். முற்காலத்தில் செய்த அளவிற்குப் புதுமையும் எளிமையும் இன்றளவும் யாரும் செய்துவிடவில்லை. செய்ததாக வேண்டுமாயின் சொல்லிக்கொள்ளலாம்.

கீழ்வரும் பாடல் வ.உ.சா அவர்களின் அரிய முயற்சியால் தேடிக்கண்டு பிடிக்கப்பட்ட “கிளவித்தெளிவு” என்ற சங்க இலக்கியத்தின் ஒரு பாடலாகும். காண்க.

கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்
மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்
தேனொக்கும் என்றன் திரு!


இப்பாடலில் புரியாத தெரியாத சொல் என்று எதுவும் உள்ளதா? சங்கப்பாடல்களில் இதுபோன்று சொற்களை எளிமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாக்கள் உள்ளன.

உலகறிந்த திருக்குறள் எளிமையான சொற்களைக் கொண்டு தொன்றிய நூலேயாகும்.

அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
--தொடங்கி…
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முழங்கப் பெறின்!
--வரை 1330 பாக்களுள் ஓரிரு நூறு பாக்களே சொற்பொருள் பார்த்துப் படிக்கக் கூடியதாக இருக்கும். மற்றவை அனைத்தும் மிக மிக எளிய சொற்களால் ஆனதே!

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை!


இப்பாவில், இன்னிசை அளபெடையை நீக்கிவிட்டால் ---

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை!


அளபெடை நீக்கப்பட்ட இப்பாட்டைப் பாருங்கள். நாம் இன்று பயன்படுத்துகின்ற அதே சொற்களை அல்லவா அன்று வள்ளுவனும் பயன்படுத்தியிருக்கிறான். இப்படிச் சான்றுகள் நிறைய காட்டிக்கொண்டே செல்லலாம்.

மேற்கண்டவை போன்று எளிமையை மட்டும் செய்துவிட்டுப் புதுமை காணாது விட்டுவிடவில்லை நம்முன்னோர். பற்பல புதுமைகளையும் செய்திருக்கிறார்கள்.

காட்டிற்கு ஒன்று.

செங்கண் கருங்கோட் டெருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம்பாய்ந் –தங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடித்
தவளையும்மேற் கொண்டு வரும்!


ஓர் எருமை நீர்நிலைகளில் திரிந்து பின் கரையேறி வருகிறது. அப்படி வரும்போது அதன் முதுகுப்புறத்தில் குவளை மலர்களும், செங்கயல் மீன்களும், தவளைகளும் இருப்பதாக எருமையைக் கதாநாயகனாக்கிய பாடல்.

அறத்தைப் பாடவும், மக்களின் வாழ்வியல் நெறிகளைப் பாடவும், அரசர்களைப் பாடவும், காப்பியம் பாடவும் பயன்படுத்தப் பட்ட பாக்கள் ஓர் மிகமிக எளிய காட்சியைப் பாடவும் பயன்படுத்தப் பட்டிருப்பது கண்டு வியப்பாகவே உள்ளது. இவைப்போன்ற புதிய முயற்சிகளை அன்றைக்குப் பலரும் ஏற்றுக்கொண்டார்கள். காரணம் எத்துணைப் புதுமையாக எழுதினாலும் அவை, கவிதைகளாக இருந்தமையே. அதாவது பாவோட்டத்திற்கான அனைத்துத் தன்மைகளும் பொருந்தியமையே!

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டு
ஒன்பது பத்துப்பதி னொன்றுபன்னி –ரெண்டுபதி
மூன்றுபதி நான்குபதி ஐந்துபதி னாறுபதி
னேழ்பதி னெட்டுபத்தொன் பது!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட்ட பாடல் பொருளற்ற ஆனால் பலரையும் வியக்கவைக்கும் ஆற்றலுள்ள பாடல்களின் ஒன்று.

அவ்வையாரின் அனைத்துப் பாடல்களும் புதுமையும், எளிமையும் நிறைந்ததே.

அணுவைத் துளைத்தேழ் கடலை புகுத்திக்
குறுகத் தறித்த குறள்!
–என்றெழுதி விஞ்ஞானத்தாலும் அன்று கண்டறியப்படாத அணுவைத் தன்பாட்டில் வைத்துப் புதுமை படைக்க முடிந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!

ஆக, புதுமையும், எளிமையும் இக்காலத்திற்கே உரியதல்ல. அது தொன்றுதொட்டு வருவது. நாம் எத்துணைப் புதுமை, எளிமை செய்யப்புகுந்தாலும் மரபின் தன்மை மாறாமலும், தமிழின் கட்டுக்கோப்பைச் சிதைக்காமலும் எழுதிவருவோமாயின் அதுவே மிகப்பெரிய புரட்சிதான். புரட்சிக்கவி எனப் பெயரெடுத்த பாரதி தாசன்கூட தமிழ் இலக்கணத்திற்கும், தமிழ்மரபிற்கும் உட்பட்டே தனது புரட்சிகரமான கருத்துக்களை வழங்கினார்.

ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்.
மேலுள்ள படத்திற்குப் பொருத்தமான வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இன்னல் அகலும் இனி!


அகரம் அமுதா

என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (2)


சென்ற இடுகையில் பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் (மேலுள்ள) குறுங்கவிதையை வெண்பாவாக்க முயலுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். உடன்பிறப்புக்கள் யாரும் அப்பணியைச் செய்ய முன்வரவில்லை. கரணியம் யான்றியேன்.

கவிஞர்கள் யாரும் முன்வராக் கரணியத்தால் அப்பணி என்தலைமேல் ஏறிக்கொண்டதால், மனதில் பெரும் அச்சம் தொற்றிக்கொண்டது. “இப்பணியைச் செவ்வனே என்னால் செய்துமுடிக்க முடியுமா?” என்று.

எனினும் முயன்றுபார்த்தேன். அப்பாவைப் பார்க்குமுன் ஓர் தெளிவு:-

பொதுவாக புதுக்கவிதைகள் தோன்றுவதற்கும், தோன்றிப் பெருவளர்ச்சிக் காண்பதற்கும் முழுமுதற் கரணியம் ஒப்பனை இன்மை எனலாம். எதையும் சுற்றிவளைத்துச் சொல்லாது, அம்புபொல் நேரடியாகத் தைக்க வேண்டும் என்பதே புதுக்கவிதையாளர்களின் போற்குரல்.

இப்படிப் போற்குரல் எழுந்தகாலத்தில் மரபுக்கவிதை தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. புதுக்கவிதையாளர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை ஓரளவிற்கு நிறைவு செய்தும் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவுசெய்ய வில்லை. கரணியம் யாதெனில் மென்மேலும் மரபை எளிமைப் படுத்தும்போழ்து அதன் மூலத்தன்மை கெட்டுவிடுகிறது. அதனை உணர்ந்தமையால் ஓரளவிற்கு எளிமைப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டனர் எனலாம்.

சரி. மேலுள்ள குறுங்கவிதைக்கான வெண்பாவைக் காணும் முன்னம் மேலும் ஓர் விளக்கம்:-

பொதுவாக ஓர் வடிவத்தில் உள்ள கவிதையை அல்லது ஓர் மொழியில் உள்ள கவிதையை, வடிவ மாற்றமோ, மொழிமாற்றமோ செய்யும் போது, மாற்றம் செய்யப்படுவதன் மூலவடிவம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பதிவுசெய்யாது, மாற்றம் செய்பவர் தனது கருத்தையும் இடையிடையே ஏற்றுவதால் மூலத்தன்மைக் கெட்டு வேறோர் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறது.

இம்முறையில் எழுதப்புகுவது முழுக்க முழுக்க தவறேயாகும். இக் குற்றச் சாட்டிற்குக் காட்டாக மேலுள்ள குறுங்கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.

அவனடிமை அவர்கள் முந்தைய இடுகையின் மறுமொழியில் உரைத்தமைப்போல, பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதே “செய்திகளால் கடவுளாக்கப் பட்டவனை வரலாறு மனிதனாக்கும்” கவிதை வரிகளாகும்.

இவ்வரிகளை, பேருயிரி (மகாத்மா) என அழைக்கப்படுகிற காந்திக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இந்துமத தலைவர் எனச்சொல்லித்திரிகிற சங்கராச்சாரியாருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். முத்தமிழ் அறிஞன் எனத் தன்னைச் சொல்லித்திரிபவருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழினத் தலைவர் எனத்திரிவோருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன்? எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் பொருத்துப் பார்த்துக்கொள்ளும் படியான வரிகளே மேலுள்ளவை. (கவிஞர் எண்ணிச் செய்தது ஈழத்தலைவனை மனதில் எண்ணியே என்பதறிக)

இக்குறுங்கவிதைக்குப் பொருளுரைக்கப் புகுவோர், எக்கருத்தோடு அக்கவிதையைத் தொடர்பு படுத்துகிறார்களோ, அக்கருத்துக்குள் அக்கவிதை முடங்கிவிடுகிறது. பிரிதொருவன் பொருளுரைக்கப் புகும் போது, அவன் உரைக்கப் புகும் கருத்து என்கிற கட்டத்துக்கள் அடைப்பட்டுவிடுகிறது. இப்படிப் பற்பல கருத்துக்களோடு தொடர்புபட, இக்குறுங்கவிதை விளங்குவதற்குக் கரணியம் எக்கருத்தையும் வெளிப்படையாகப் பேசாது, பொதுப்படையாகப் பேசுகின்ற அத்தன்மையே!

இக்கவிதையை வெண்பா என்ற வடிவத்தில் திணிக்கும் போது, ஓர் குறிப்பிட்ட கருத்தை முதன்மைப் படுத்தி, அக்கருத்து வெளிப்படையாதல் போல் வெண்பா வார்ப்போமாயின், மூலக்கவிதையின் நேரடித் தரவிறக்கமாகாது. ஆக, மூலக்கவிதை பேசப் புகும் பொதுத்தன்மையை அப்படியே உள்வாங்கின் கொண்டு, வடிக்க விருக்கும் வெண்பாவும் பொதுத்தன்மை பேசுவதாக அமைவதே சாலச் சிறந்தது எனும் கட்டளையை மனதிற் பிறப்பித்துக் கொண்டு, பிறகே வடிவ மாற்றம் செய்யப் புகுந்தேன். குறிப்பாக புதுக்கவிதை வெறுத்தொதுக்கும் ஒப்பனை என்ற அணியை அகற்றிவிட்டு, மூலகவிஞன் எச்சொற்களைப் பெய்து கவிதை செய்தானோ? அச்சொற்களைக் கொண்டே வடிவமாற்றம் செய்வதே முறைமை எனப்பட்டதாலும், அதுவே புதுக்கவிதையாளர்களையும் மரபை விரும்ப வழிவகுக்கும் என்பதாலும் எனது மொழிநடையைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு மூலகவிஞனின் சொற்களைக் கொண்டே வெண்பா என்ற வடிவத்திற்குள் நுழைக்க முற்றட்டிருக்கிறேன்.

மீண்டும் மேலுள்ள குறுங்கவிதையைப் படித்தபின் கீழுள்ள குறள் வெண்பாவைக் காணவும்:-

வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
துறைஇறையாய்ச் செய்தவ னை!


மேலுள்ள வெண்பாவை மூலக்கவிதையின் பொதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு, அப்பொதுத்தன்மையினின்று விலகாமல், வடிவமாற்றம் செய்ய வேண்டும் என்கிற அக்கறையால் எதுகை மோனை பொன்றவற்றை விட்டுச் சற்றே விலகியும் வந்துள்ளேன். இருப்பினும் ஓரளவேனும் வெண்பாவின் தன்மை கெடாது தோற்றங்காட்டுவதால் யாவருக்கும் விருந்தாக்கியிருக்கிறேன்.

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையின் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு மேலும் ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டுச் சென்றுவிட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் கோ. கண்ணன் ஆவார்.

இக் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- பாவும் தமிழுமினிப் பாழ்!


அகரம் அமுதா

செவ்வாய், 28 ஜூலை, 2009

என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (1)

இணைய இதழாகிய கீற்று.காமில் அறிவுமதி அவர்களின் "என்றும் நிகழ்காலம்" என்ற தலைப்பிலான ஓர் குறுங்கவிதையைப் படிக்க நேர்ந்தது! வியந்தேன், வியந்தேன், வியந்துகொண்டே இருக்கிறேன். இதன் பொருளை நன்குணர்ந்து வெண்பாவில் வழங்க யாவரையும் வேண்டுகிறேன்.


அகரம் அமுதா

சனி, 25 ஜூலை, 2009

ஈயூர இல்லை இடம்!

அடுத்த பாடத்தை இன்னும் இரு நாட்களின் தருகிறேன். அதற்குமுன் ஓர் ஈற்றடி. சவுக்கடியார், "சொல்லே மிகவும் சுடும்" என்ற ஈற்றடிக்குச் செய்தளித்த பாப்போல இன்றைய நாட்டு நடப்போடு பொறுத்திப்பார்த்து எழுத வேண்டுகிறேன்.

இனி வரும் பாடங்களில் ஒரு நிழற்படம் அல்லது குறும்படம் வழங்கப்படும். அவற்றிற்கும் பொறுத்தமான பாவடிக்க வேண்டுகிறேன்.இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈயூர இல்லை இடம்!

அகரம் அமுதா

செவ்வாய், 21 ஜூலை, 2009

எளிமையும், புதுமையும்!

பாரதிக்குப் பின் வெண்பாவில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணராய்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நால்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். ---நாலடியார்---

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்கு கொக்கொக்க கைக்கைக்கு
காக்கைக்குக் கைக்கைக்கா கா! ---கவி காளமேகம்---

என்றெல்லாம் எழுதிவந்த காலத்தில்…

எமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் –உமைக்கினிய
மைந்தன் கணநாதன் வாழ்விப்பான் நற்குடியை
சிந்தையே இம்மூன்றும் செய்! ---பாரதி---

தன்மேனி மாசுகளைத் தான்கண்டு நீக்கிவிடக்
கண்ணாடி உன்முகத்திற் கண்விழிக்கும் –உண்மையம்மா!
விண்ணில் குளிக்க விதியில்லை என்றேஉன்
கண்ணில் குளிக்கும் கடல்! ---கவிப்பேரரசு வைரமுத்து---

புதுமைப்பித்தன் காலத்தில் ஓர் புதுமை நிகழ்ந்தது. நிகழ்த்தியவன் புதுமைப்பித்தனே! எளிமையான பல வெண்பாக்கள் செய்திருக்கிறான். அவற்றிலொன்று…

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணாள முன்னாக் கசக்குதா? –அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா(ள்)
போயேன் தொலைஞ்சிப்போ யேன்! ---புதுமைப்பித்தன்---


இதற்குப்பிறகு, தொடர் வண்டியின் பெட்டிகளைப்போல பலரும் எளிமையான வெண்பாக்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்…

இங்கிலீஸ்ல பத்து தமிழில் இருவது
விஞ்ஞானத் தில்கணக்கில் எவ்வேயாம் –அஞ்சி
புவியியலில் ஆறு வரலாறில் எண்டா!
எவன்டாடே வாத்தி ஒனக்கு? ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


எம்பிள்ளை வர்ரச்சே தாங்கதவைச் சாத்தனுமா?
எம்பிள்ளை பிச்சையா கேக்கவந்ததான்? –எம்பிள்ளை
குந்த இடமில்லே? பிளாக்கண்ட்ஒய்ட் டீவிக்கே
இந்தஜென்பம் ஏதுக் கடீ! ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் –அங்கங்கே
சிங்கி யடிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்! ---தஞ்சை இனியன்---

வள்ளுவன் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கின்றார் ஏனென்றால் –உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்! ---சுஜாதா---


இப்படிப் பற்பலரைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் வழியில் அடியேனும், (ஆயினும் சற்றே மாறுபட்ட கோணத்தில்) பற்பல முயற்சிகளைச் செய்துபார்த்திருக்கிறேன். அவற்றுள் சில…

நாம் அனைவரும் அன்றாடம் பேருந்தில் பயணிப்பது தவிற்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்ட நெரிசல் வேறு. நடத்துனர்களின் ஆளுமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பயணிகளை ஆடுமாடுகள் எனக்கருதி இங்குநகர், அங்குநகர் என வறுத்தடுத்தவிடுவர். இச்சூழலை மனத்திற் கொண்டு எழுந்தவையே பின்வரும் இருவெண்பாக்கள்.

கண்டக்டர்:-
இந்தாப்பா! பஸ்ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!?
வந்துட்டான் என்உசுர வாங்கன்னே –அஞ்சிருவா
சீட்டுக்குச் சில்லைரைய நீட்டாம நூறுருவா
நோட்டெடுத்து நீட்டறியா நீ?!

பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோத்துநான் அங்கநின்னா –சேட்டையக்
காட்டுற; அங்கயிங்க ஓட்டுற; நோட்டுதந்தா
நீட்டுற; சில்லரைக்கே சீட்டு?

தேநீரைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரர்கள் குடிக்கிறார்களோ இல்லையோ அதுதெரியாது. ஆனால் தமிழனால் காலையில் தேநீர் குடிக்காமல் காலைக்கடன்களைக் கழிக்கவே முடியாது என்றாகி விட்டது. ஊருக்கு ஊர் தெருவிற்குத் தெரு தேநீர்கடைகள் முளைத்துப் புற்றீசல்கள் போல் பெருகி விட்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் நானுரைப்பதன் உண்மைப் புரியும்.

அதுவும் நம்மீர்களில் தேநீர் அருந்திக்கொண்டே செய்திதாள்களை நோட்டமிடுவது கண்கூடு. இச்சூழலைப் பாட முனைந்ததைப் பாருங்களேன்…

கஸ்டமர்:-
டிக்யாஷன் இல்லாமல் டீயொன்னு போடப்பா!
பக்காவாப் போட்டாப் பணமுண்டு –அக்கவுண்டில்
கேக்கிறதா எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டின்னா
சாக்கடைக்குப் போய்டுஞ் சரி!

கடைக்காரன்:-
டீக்கடைப் பெஞ்சிலும் டிக்கியப் பார்க்பண்ணி
பாக்கிவெச்சிப் பால்டீயாக் கேக்குற –போக்கிடம்
வேறின்றிப் பேப்பருல வெச்சக்கண் வாங்காம
ஆறிடம்ஆர் டர்போடு றே!?

இன்றைக்கு அறிவுரை சொல்லாத ஆளே கிடையாது. இதனைக் கருத்திற் கொண்டு எழுந்தது பின்வரும் வெண்பா…

எம்.ஏ படிச்சதுக்(கு) ஏத்தவேல வேணுமுன்னு
சும்மாத் திரிஞ்சா சுகப்படுமா? –பம்மாத்துக்
காட்டாம கைக்குக் கிடைச்சவேலை பாத்தாத்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!


எளிமையாக எழுதப்புகும் அதே வேளையில் கவிதைக்கான நயம் குன்றாது செழுங்கற்பனையேற்றிப் பாட மறந்துவிடக்கூடாது. அதற்காகவே மேலே பல காட்டுக்களை வழங்கினேன். புதுமையாக வெண்பாப்படைக்க விரும்புவோர் யாவரும் தான் கண்ட காட்சியையோ? நிகழ்ச்சியையோ? எதைவேண்டுமானாலும் கவிதையாக்கலாம். இருப்பினும் அவை இறுதியில் கவிதையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலம் கணக்கில் வைத்துக்கொள்ளாமல் விட்டுவிடும்.

புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா!
சூழும் பகைவற்குச் சொல்! ---வைரமுத்து---

வெண்பா வடிவத்தில் எழுதுவதால் மட்டுமே அவையாவும் கவிதையாகிவிடாது. இறுதியில் கவிதைக்குறிய நயத்துடன் இருக்க வேண்டும். இதனை மனத்தில் இறுத்திக்கொண்டு புதிய புதிய துறைசார்ந்த, பொருள் சார்ந்த வெண்பாக்களைத்தீட்ட முற்படுவோமாக.

இக்கிழமைக்கான புதிய முயற்சி:-
குறும்படம் ஒன்று காண நேர்ந்தது. பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோனேன். இக்குறும்படத்தில் இறுதியில் காட்டப்படும் இருவிழிகள் என்னச்சொல்ல விழைகின்றன என்பதை வெண்பாவாக்க வேண்டுகிறேன். குறும்படம் பார்க்க இங்குத்தட்டவும்!

இக்கிழமைக்காண ஈற்றடிகள்:- “நெருப்பில் விழுந்த நிலவு!” அல்லது, “நிலவில் பிறந்த நெருப்பு!”


அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

சொல்லிலக்கணம் - I

நம் வலைப்பதிவுக்கு வெண்பா எழுத வந்தவர்கள் சிலருடைய வெண்பாக்கள் அவர்கள் எழுதியபடி தளை சரியாக இருந்தும் பிழை திருத்தப்பட்டதற்குக் காரணம் அவைகளில் புணர்ச்சி சரியாக அமையாதது தான்.

அதனால் நீங்கள் இப்பொழுது முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது புணர்ச்சி விதிகளே. புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வதற்கு முன் சொல்லிலக்கணத்தைக் கற்றுக் கொண்டால் சில புணர்ச்சி விதிகளைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். இவைகள் பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் இவைகளைக் கற்றுக் கொண்ட பிறகே புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வது நலம். அதனால் நாம் முதலில் சொல்லிலக்கணத்தைப் பார்ப்போம்.

1. திணை
 • மக்களைக் குறிப்பது உயர்திணை - எ. டு. அவன், தேவி, அவள், கண்ணன்.
 • மக்களைத் தவிர்த்து மற்றவைகளைக் குறிப்பது அஃறிணை.

2. பால் (Gender)
 • ஆணைக் குறிப்பது ஆண்பால். - அவன்
 • பெண்ணைக் குறிப்பது பெண்பால். - அவள்
 • ஒருவன், ஒருத்திக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். - அவர்கள்
 • அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன்பால். - அது, மரம்
 • அஃறிணையில் பல பொருட்களைக் குறிப்பது பலவின்பால். - மரங்கள்
3. எண்
 • ஒன்றைக் குறிப்பது ஒருமை (singular) - வீடு
 • ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை (Plural) - வீடுகள்

4. இடம்
 • பேசுபவனைக் குறிப்பது தன்மை (First person) - நான்
 • பேசுபவனக்கு எதிரில் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை (Second person) - நீ, நீங்கள்.
 • இவ்விருவரையும் தவிர்த்த மற்றவர்களைக் குறிப்பது படர்க்கை (Third person) - அவர்கள்.
5. காலம்
 • நிகழ்காலம் (Present tense) - வருகிறான்
 • இறந்த காலம் (Past tense) - வந்தான்
 • எதிர்காலம் (Future tense) - வருவான்

6.
பெயர்ச்சொல் (Noun)
 • பொருட்களைக் குறிப்பது பொருட்பெயர் - தேர், கதவு.
 • இடத்தைக் குறிப்பது இடப்பெயர் - சென்னை.
 • காலத்தைக் குறிப்பது காலப்பெயர் - சித்திரை, இரவு.
 • முழுப் பொருளின் ஒரு பகுதியைக் குறிப்பது சினைப்பெயர்- வால், கை.
 • பண்பினைக் குறிப்பது பண்புப்பெயர் அல்லது குணப்பெயர் - செம்மை, நீளம்.
 • தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற் பெயர்- பெறுதல், கெடுதல், கொள்ளுதல், இடர்ப்படுதல்.

7.
முதனிலைத் தொழிற் பெயர்
 • தொழிற் பெயர் முழுமையாக வராமல் பகுதி மட்டும் நின்று பொருள் தருவது முதனிலைத் தொழிற் பெயர் - பெறு, கெடு, கொள், இடர்ப்படு.
8. முதனிலை திரிந்த தொழிற் பெயர்
 • தொழிற்பெயரின் முதனிலை திரிந்து வேறு சொல்லாகி அதே தொழிற்பெயரின்பொருளைத் தருவது முதனிலை திரிந்த தொழிற் பெயர் - பேறு, கேடு, கோள், இடர்ப்பாடு.

9.
வினையாலணையும் பெயர்
 • ஒரு வினைச்சொல் வினையையும் வினையைச் செய்பவனையும் குறித்துபெயர்ச்சொல்லாக வருவது வினையாலணையும்பெயர் - விடுத்தோன், படித்தோன்.

10.
வினைச்சொல் (Verb)
 • ஒரு செயலையும் அந்த செயலின் காலத்தையும் குறிப்பது வினைச்சொல் - படித்தான்.

11.
பெயரெச்சம் (Adjective)
 • பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரச்சம் - நட்ட நடவு, பார்த்த பார்வை.(எச்சம் என்பது முடிவு பெறாத ஒரு சொல் - நட்ட, பார்த்த.)

12.
வினையெச்சம் (Adverb)
 • வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் - வந்து போனான், நடந்துவந்தான்.
-------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து ஈற்றடியே தந்து கொண்டிருக்காமல் கொஞ்சம் புதுமைகள் புகுத்துவோம் என்றார் அகரம். அமுதா. அதனால் இந்த முறை ஈற்றடிக்கு பதிலாக வெண்பாவிற்கான கருப்பொருளை மட்டும் தருகிறேன்.

இக்கிழமைக்கான கருப்பொருள் - "வானம்" அல்லது "மேகங்கள்"

கவிதைக்கு பொய் அழகு என்பதும் உண்மை தானே. வானத்தையும் பல வித கற்பனைகளுக்குள் கொண்டு வரலாம்.

எ. டு.

வெண்ணிலவின் பிம்பத்தைத் தொட்டுவிட்ட மோகத்தால்
அந்நிலவின் மேனியையும் தொட்டுவிடும் பித்தமுற்று
நீலக் கடல்விரித்த நீளலைக ளேவானிற்
கோலமுகிற் கூட்டமெனக் காண்.
-இராஜகுரு


இராஜகுரு

வெள்ளி, 10 ஜூலை, 2009

சொல்லே மிகவும் சுடும்!

இக்கிழமைக்கான ஈற்றடி - சொல்லே மிகவும் சுடும்!

அகரம் அமுதா

புதன், 8 ஜூலை, 2009

காண வருமாங் கனி!

இக்கிழமைக்கான ஈற்றடி:- காண வருமாங் கனி!

அகரம் அமுதா