வெள்ளி, 23 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 3

அடிதோறும் எட்டுச்சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அரையடி சீரமைப்பு முறையே = குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா –என்று அமைந்திருக்க வேண்டும். அடுத்த அரையடியும் அவ்வாரே அமைந்திருக்க வேண்டும்.

குறிலீற்றுமா என்பது, குறில் ஒற்று ஈற்றுமாவாகவும் வரலாம்.

இவ்வாறான நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவர வேண்டும்.

1,5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒழிந்து போனது பரிசெனும் சீட்டு
ஒழிந்து போனது பஞ்சையர் துயரம்
பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம்
பிடுங்கி வாழ்ந்தனர் பரிசெனும் சீட்டால்
கழிந்த நாட்களில் கள்வரைப் போலக்
கவர்ந்த செல்வமோ கணக்கில வாகும்
விழுந்த ஏழையர் வாழ்வெலாம் உயர
விதித்த ஓர்தடைக் கொப்புயர் வுண்டொ?

--- புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதா

சனி, 17 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 2

அடிதோறும் எட்டு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அறையடி முறையே காய் + காய் + காய் + மா என அமைந்திருக்க வேண்டும். அடுத்த அறையடியும் அப்படியே அமைந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறாக நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.


காட்டு!

அருகமர்ந்து தன்மனையாள் அகம்விரும்பி நல்ல
அறுசுவையும் நிறைஉணவை அருங்கணவர்க் கூட்ட
விருப்பின்றிச் செல்வத்துச் செருக்கேறி நின்று
வெறுத்தாற்போல் முன்கவளம் உணமறுத்துப் பின்னர்
அருந்தியவர் பிறிதோர்நாள் பெருவறியர் ஆகி
அயலார்முன் போய்உணவை இரந்துண்பார் அஃதால்
பெருஞ்செல்வம் நிலைத்ததெனக் கருத்தினிலே எண்ணிப்
பேணுகின்ற நற்றன்மை உடையதன்று காண்பீர்!

--- கவிமாமணி இறையரசன்.

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!


இவ்வாரான இலக்கண அமைப்பில் "பிளாஸ்டிக்கு" என்ற தலைப்பில் பாவியற்ற வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

புதன், 14 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்!

அவனடியார் சொன்னது…

////”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” ////

அவனடியாரின் இச்சொல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எண்ணிப்பார்ப்போமானால் சிறிது காலங்களாக அவர் உரைத்துள்ளதுபோல் குறிப்பிட்ட சில தலைப்புகளிலேயே பாவியற்றி வருகின்றோம் என்பது உண்மையே! கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழநம்பி அவர்கள் நான்கு தலைப்புகள் வழங்கிய போது, இறை சார்ந்த தலைப்பொன்றை வழங்க வேண்டினேன். காரணம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நித்யானந்தாவின் அந்தரங்க கூத்துகளின் வெளிப்பாடும் ஒர் காரணமாகும். இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. நான் கருதியிருந்தேன். ஆயினும் அப்பொழுது எனக்கு மிகுந்த பணிகள் இருந்தமையால் அத்தலைப்பிற்கு என்னால் பாவியற்ற முடியவில்லை.

சென்ற பாடத்தில் நாம் கற்ற எண்சீர் மண்டில வகையில் இப்பொழுது நித்யானந்தா சார்ந்த பாவை இயற்றி அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலத்தில் பாவியற்ற வேண்டுகின்றேன்.

அகரம் அமுதா

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 1

ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.

கண்ணன்பால் மிகவன்பால் வேலைக் காரி
கையிற்பால் செம்போடு தெருவில் சென்றாள்
திண்ணன்பால் வாங்கென்றான் கரிய னும்பால்
தீங்கற்ற பாலேயென் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
சீயென்பாள் நில்லாதீர் போவீர் அப்பால்
கண்ணன்பால் தான்கொண்ட களிப்பால் அன்னார்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்!

---பாரதி தாசன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!

---உலக நாதன்

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்!
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே!
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே! மானே!

---விவேக சிந்தாமணி.

இம்முறையிற் பாப்புனைய வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

திங்கள், 5 ஏப்ரல், 2010

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.

அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,

எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.

எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.

1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.


விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா =இதுவே நாம் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாடு.

காட்டு-

­வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே

வண்டமிழ் பேசிடும் மக்கள்

பையகம் நஞ்சைப் பதுக்கிடும் பாம்பாய்ப்

பண்பினில் சூழ்ச்சியை வைத்துப்

பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்

புகழ்நிலம் அற்றனர் இன்றோ

கையக நிலமும் காடையர் பரிக்கக்

கவினழிந் திடர்பல உற்றார்!


நாவலந் திவு நம்மவர் வாழ்ந்த

நன்னிலம் ‘இந்தியா’ ஆச்சு

தீவெனத் திகழும் இலங்கைநன் னாடும்

சிங்கள தேயமாய்ப் போச்சு

பாவளங் கொழித்த பசுந்தமிழ் ஆட்சி

பாரினில் எங்கனும் இல்லை

நாவலம் படைத்த நற்றமிழ் மக்கள்

நலிவகல் நாளு(ம்)வந் திடுமோ?


இம்முறையில் பாக்கள் புனைந்து வருக என அனைவரையும் அழைக்கிறேன்.


அகரம் அமுதா


வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நான்காம் தலைப்பு : இறை வழிபாடு!

இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார்
எழுதிய மண்டிலம்.

(காய் + காய் + காய் + காய் +
மா + தேமா)

நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

2. திருவமை. உமா
எழுதியவை :

மா மா காய்
மா மா காய்

கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!

மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்காப் புகழைத் தான்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக்
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு

மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

கண்ணா அருள்வாயா?

குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை நேராய்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்

பாதையாம் கீதையைத் தந்தாய்

குன்றைக் குடையெனப் பிடித்துக்

கோபியர் குலத்தைநீ காத்தாய்

நன்று நினைப்பவர் நாடும்

நன்னிலை ஏய்திடச் செய்தாய்

என்று என்னுளே கருவாய்

என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?


(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்)

பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப்
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!

நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!


3. திரு. அவனடிமை
எழுதியவை :

குறுலீற்று மா+விளம்+மா+
விளம்+விளம்+மா

ஆன்ம உலகினுக் கரசர்
.......ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
உன்னுள் உருக்குலை யாதோர்
.......உணர்வினைக் காட்டுவே னென்பார்
உந்தன் உடல்பிணி யைத்தன்
.......உருக்கிடும் இசையினால் நீக்கி
உன்னுள் மூச்சிலே உயிரின்
.......உண்மையை உணர்ந்திடு வென்பார்!

ஏங்கும் சீடரும் மடமும்
.......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
பொன்னும் பெயருடன் பகட்டும்
.......பூவைய ரைப்புலன் புணர
கன்னம் தடவிடும் கணிகை
.......கனிவுடன் பணிவிடை புரிவாள்
இன்னும் பலயில வசமாய்
.......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்!

அங்கி அறிவிழந் தோமென்
.......றரண்டுநா மழுதிட வேண்டா
இங்கிவ் வினவொளி மறைக்க
.......ஈசலா னந்தருக் காகா
தெங்கும் எப்பொரு ளுள்ளும்
.......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
குன்றின் மேல்விளக் குலகின்
.......குறைகளும் அவன்திரு வருளே!

மா + மா + காய்
மா + மா + காய்

ஆன்மீ கத்தில் அரசாள
....ஆண்ட வன்போல் அவர்வந்தே
உன்னுள் உறையும் உருக்குலையா
....உணர்வே நானென் றுரைத்திடுவார்
எண்சாண் உடலிற் பிணிகளையும்
....இல்லா தாக்க இசைதொடுத்து
உன்மூச் சினைச்சீ ராக்கிடென
....உனக்கே உரைப்பார் அறிவுரையாய்!

ஏங்கும் சீடர் கூட்டணியும்
....ஏய்க்கும கூட்டம் பின்வரவும்
பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
....பெண்மை அழகும் புலன்புணர
கன்னம் தடவும் கணிகையுடன்
....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
இன்னும் இதுபோல் இலவசசிற்
....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

அங்கி அறிவோ டிழந்தோமென்
....றரண்டு நாமும் அழவேண்டாம்
கங்குல் இனப்பே ரொளியின்முன்
....கலையும் ஈசற் கூட்டமிது
என்றும் எங்கும் எவரிடமும்
....எரியும் ஒளியே எமதிறைவன்
குன்றின் மேலே விளக்கவந்தான்
....குறையும் அவன்பே ரருளன்றோ!

(காய்+காய்+காய்+காய்+
மா+தேமா)

நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
நாடில் ஒன்றே
நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
ஞாலந் தன்னில்
நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
நாம்காண் தோற்றம்
மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
மரமே யன்றோ!

நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
நலமே நல்கும்
உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
ஒன்றாய்க் காணும்
நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
நாணித் தோடும்
ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
ஒளிர்வா யன்பே!

4. திரு. திகழ்
எழுதியவை :

மா+மா+காய்
மா+மா+காய்

உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
பொன்னால் க‌ல்லால் உருவான‌
...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே!

காவி உடுத்த சாமிக்கு
...எதற்குக் காசு பணமெல்லாம்
கூவி அழைத்து விற்பாரே
...கூறு போட்டு ஆண்டவனைப்
பாவி யாக்க பார்ப்பாரே
...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
ஆவி அடங்கும் முன்னாலே
...ஆசை செய்யும் ஆட்டமடா!

5. திரு. அண்ணாமலை
எழுதியவை :

மா+ மா+ காய்
+மா+மா+காய்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமையாக மண்டிலங்கள் எழுதிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாக்குகின்றோம்.

அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.

-------------------------------------------------------------------------------------------

வியாழன், 1 ஏப்ரல், 2010

மூன்றாம் தலைப்பு : இயற்கையின் இனிமை!

இத் தலைப்பிலும் ஐவர் மண்டிலங்கள் எழுதியுள்ளனர்.

1. திருவமை. உமா எழுதியவை :

(மா மா மா மா மா காய்)

மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்!

சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

(‘வேனில்தான்’ அல்லது ‘வேனிற்றான்’ என்று எழுதுவதே சரி; ‘வேனிற் தான்’ – என்று வராது.)


காற்று

இயற் சீராலானது வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்!
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினைத் தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!

சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

2.திரு. இரா.வசந்தகுமார் எழுதியவை :

(விளம் - மா - தேமா & காய் - மா - தேமா)

தடவிடக் குளிரும் தென்றல்
தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
படர்ந்திட மணக்கும் பாகல்
பழுத்திடச் சிவக்கும் கொய்யா
தடங்களில் பதியும் தாரை
தணிந்திட புகையும் சாம்பல்
கடந்திடக் கனக்கும் காட்சி
கனிந்திடக் கழலும் ஞானம்

மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
மறைந்திடச் சிவக்கும் மாலை
உலர்ந்திட இனிக்கும் இச்சை
உகுத்திட மயக்கும் ஓசை
தளர்த்திடத் தடுக்கும் கைகள்
தயங்கிட நடுங்கும் மேனி
வளர்ந்திட குறுகும் தூரம்
வழங்கிடக் குறையும் பாரம்

வெண்ணொலித்த மின்னல் கோடு
வேகவைத்த கன்னல் சாறு
மண்ணொளித்த கடலை வாசம்
மழையிறக்கும் வானின் அம்பு
தண்ணென்று தாவும் ஆறு
தமிழிலொரு குயிலாய்க் கூறு
விண்கீழ்மேல் தனிமை இல்லை
வியப்பேன்நான் இனிமை கொள்ளை.


3. திரு.திகழ்
எழுதியவை :

( விளம்+மா+தேமா)

தழுவிடும் தென்றல் துள்ளிக்
...குதித்திடும் வண்ண மீன்கள்
அழகுமான் குளிக்கத் தூண்டும்
...அருவிகள் மின்னும் விண்மீன்
எழில்தரும் பச்சைப் புற்கள்
...மணம்தரும் வண்ணப் பூக்கள்,
மழைதரும் மேகம் இன்னும்
...எத்த‌னை ய‌ம்மா சொல்ல!‌

எத்த‌னை கோடி இன்ப‌ம்...
காண‌க்க‌ண் கோடி வேண்டும்
பித்த‌னாய் நானும் ஆனேன்
...இய‌ற்கையின் அழ‌கைக் க‌ண்டு
ச‌த்த‌மாய்ச் சொல்ல‌ வேண்டும்...
இறைவ‌னின் புக‌ழை என்றும்
சுத்த‌மாய் வைத்துக் கொள்வோம்...
சுற்றிடும் உலகைக் கொஞ்ச‌ம்!


4. திரு.அப்பாதுரை எழுதியவை :

விண்ணக மின்னல் போலே
வீசிளந் தென்றல் போலே
கண்களில் நிற்கும் பெண்ணே
காதல்செய் வோமா என்றேன்
மண்ணுக்குள் ஆண்கள் மேலே
மங்கையெற் காசை யில்லை
பெண்ணுக்குள் காதல் தேடும்
பெண்ணிவ ளறிவீ ரென்றாள்!

தங்கத்தை வைரம் சேரும்
தாமரையை வண்டே நாடும்
இங்கிவையி யற்கை அஃதே
இனிமையு மாகு மென்றேன்
கடலுக்குள் கங்கை கூடிக்
கலப்பதி யற்கை யாயின்
மங்கையரை மங்கை நாடி
மகிழ்வதுமி யற்கை யென்றாள்!


அன்பார்ந்த அப்பாதுரை அவர்களுக்கு,
இயற்கையோ டியைந்த வாழ்க்கையே இனிமை தருவது; இயற்கை யிகந்த வாழ்க்கை இன்னல் தருவதே!
பண்டைத் தமிழர் இயற்கையோ டியைந்த வாழ்க்கையையே தேர்ந்தனர்; வாழ்ந்தனர்.
பிறரிடமிருந்து நாம் ஏற்பது நல்லவையாக மட்டுமே இருக்கட்டுமே! இன்னல் தருவதாக இருக்க வேண்டாவே!
வள்ளுவர் அறியாத பாலறிவா? முப்பால் உணர்த்தாத காமத்துப் பாலா?
எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அவனடிமை ஐயாவின்,


பாலியல் பொல்லாங்கே அப்பா துரைப்பாவின்
பாலியல் பாவிற்றுப் பார்.

- என்ற கவலை ஞாயமானதே.

5. திரு. அண்ணாமலை எழுதியவை :

குறிலீற்றுமா + விளம் + மா+விளம் + விளம் + மா

அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!

அருமையான பாடல்களை இயற்றிய பாவலர்க்கு நன்றி.
சில பாடல்கள் மோனை அமையா துள்ளன.
மோனை பற்றி மீண்டும் ஒருமுறை படித்து, மோனை அமைத்துப் பாடல் எழுதப் பயிலல் சிறப்பு.
நன்றி.