திங்கள், 22 டிசம்பர், 2008

33.வேற்றுப்பொருள் வைப்பணி!

கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாம்.

பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!

பொருள்:-



வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெருவர் என்பது உலகறிநந்த பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை)எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள்.

ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.

ஒற்றுமிகுமிடங்கள்!

16.இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ

கண்ணனை திட்டினேன் - கண்ணனைத்திட்டினேன்.

கந்தனை பார்த்தேன் -கந்தனைப்பார்த்தேன்.

விலக்கம்:-
உருபுதெரிய எழுதுவது வேற்றுமைவிரி எனப்படும். உருபு மறைய எழுதுவது வேற்றுமைத்தொகையாகும்.

காட்டு:-

வீடு கட்டினேன் -வேற்றுமைத் தொகை
வீட்டைக் கட்டினேன் -வேற்றுமைவிரி

17.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிக அருகி சிறுபான்மையாக வலிமிகும்.

காட்டு:-

மக பெற்றான் -மகப்பெற்றான். மகவைப் பெற்றான் என வேற்றுமைவிரியிலும் தொகையிலும் வலிமிகுந்தது காண்க.

பாட்டு கேட்டான் -பாட்டுக் கேட்டான். பாட்டைக் கேட்டான்
பூ தொடுத்தான் -பூத்தொடுத்தான். பூவைத்தொடுத்தான்.

18.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன் வலிமிகும்.

காட்டு:-

தயிர்ப்பானை -தயிரை உடைய பானை எனப்பொருள்படும். இத்தொடரில் தயிரை எனும்பொழுது "ஐ" உருபும் "உடைய" என்ற பயனும் உருசேரத்தொக்கி வருவதால் இஃது உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.

சொறி தவளை -சொறித்தவளை
சென்னை கடற்கரை -சென்னைக் கடற்கரை

19.மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகும்.

சுறா பாயப்பட்டான் -சுறாப்பாயப்பட்டான். இத்தொடரில் சுறாவால் பாயப்பட்டான் என்பது பொருள். ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபு தொகையில் உள்ளது.

20.மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும்.

பட்டு துணி -பட்டுத்துணி. பட்டினால் நெய்த துணி என்பது பொருள். ஆல் எனும் உருபும் நெய்த எனும் பயனும் தொகையாதலால் வலிமிகுந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நங்கைக்கு நாணம் நயம்!

அகரம்.அமுதா

திங்கள், 15 டிசம்பர், 2008

32.வேற்றுமையணி!

இருபொருள்களின் ஒற்றுமையைக் கூறியபின் அவற்றை வேற்றுமைப் படுத்திக் கூறுவது வேற்றுமையணியாம்.

காட்டு:-
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு!


தீபட்டால் பிறரது உடலில் புண்ஏற்படும். அதுபோலவே நாவும் பிறரைச் சொல்லால் சுடும். சுடும்தன்மையால் தீயும் நாவும் ஒருதன்மையுடையதே. ஆயினும் தீவடு ஆறிவிடும். நாவடு ஆறா.

தீ மற்றும் நாவின் செயல்கள் ஒருதன்மையதே யாயினும் அதனால் விளையும் வினைகளில் மாறுபாடுடையமையால் இவ்வணி வேற்றுமையணியாம்.


வலிமிகும் இடங்கள்!

11.நெடில்தொடர் உயிர்த்தொடர் குற்றியலுகரங்களின் அடுத்து டற சொற்கள் இரட்டித்தால் வலிமிகும்.

காட்டு:-
வீடு பாடம் -வீட்டுப்பாடம்
காடு புலி –காட்டுப்புலி
மாறு கருவி –மாற்றுக்கருவி
சோறு பயல் -சோற்றுப்பயல்

குறிப்பு:-
இதில் மெல்லினத்திற்கும் இடையினத்திற்கும் முன்னால் சொற்கள் இருக்குமானால் வலிமிகா.

காட்டு:-
எருது மாடு –எருத்துமாடு
நாடு மரம் நாட்டுமரம்
வீடு நாய் -வீட்டுநாய்

12.அகர இகர ஆய் போய் முதலிய வினையெச்சங்களை அடுத்தும் வலிமிகும்.

காட்டு:-
வர போனார் –வரப்போனார்.
விளக்கம்:- ர் அ-ர இது அகர வினையெச்சம் என நினைவிற் கொள்க.

உலாவ சொன்னான் -உலாவச்சொன்னான்
தேட சொன்னேன் -தேடச்சொன்னேன்.

வாடி போனான் -வாடிப்போனான்.

ட் இ-டி இது இகர வினையெச்சமென்பதை நினைவிற்கொள்க.

கூறி சென்றான் -கூறிச்சென்றான்
கூடி செல்வோம் -கூடிச்செல்வோம்.

ஆய் எனமுடியும் வினையெச்சத்தை அடுத்து வலிமிகும்.

வந்ததாய் சொல் -வந்ததாய்ச்சொல்.
பரிவாய் பார் –பரிவாய்ப்பார்.

பரிவு ஆய் பார்-ஆய் வருமிடங்களில் வலிமிகுவதைக் காண்க.

போய் என்னும் வினையெச்சத்தின் பின்னும் வலிமிகும்.

போய் சொல் -போய்ச்சொல்
போய் பார் –போய்ப்பார்.

13.எட்டு பத்து என்னும் எண்ணுப்பெயரை அடுத்து வரும் சொற்களின் வலிமிகும்.

காட்டு:-
பத்து பாட்டு –பத்துப்பாட்டு.
எட்டு தொகை –எட்டுத்தொகை.

14. ண்டு ந்து ம்பு எனவரும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வலிமிகும்.

காட்டு:-
குண்டு பையன் -குண்டுப்பையன்.
தண்டு கீரை –தண்டுக்கீரை
உணர்ந்து பார் –உணர்ந்துப்பார்.
நடந்து செல் -நடந்துச்செல்
பாம்பு பல் -பாம்புப்பல்.

15. ஒரெழுத்தொருமொழி அஃறிணைப் பெயர்மென் வல்லினம் வந்தால் வலிமிகும்.

காட்டு:-
ஆ சொல் -ஆச்சொல்
கோ பாய்ந்தது –கோப்பாய்ந்தது.
ஈ கடித்தது -ஈக்கடித்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி: - தண்ணென மாறும் தழல்!

ஆகரம்.அமுதா

திங்கள், 8 டிசம்பர், 2008

31.பிறிது மொழிதல் அணி!

உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!


உவமானம்:-
மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியே யாயினும் இறகினை அளவிற்கு அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சும்முறிந்துவிடும்.

உவமேயம்:-
எத்துணை வலிமையான போற்படையை உடைய மன்னனாக இருப்பினும் எதிரிகளை வென்றுவிடலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாகப் போர்நடத்துவானாயின் அது அவனுக்குத் தோல்வியிலேயே முடியும்.

பாடலில் உவமானம் குறிப்பிடப்பட்டு உவமேயம் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!

உவமானம்:-
எலிகளான பகை கூடிக் கடல்போல் ஒலியெழுப்பினாலும் என்ன தீமை உண்டாகும்? பாம்பானது மூச்சுவிட்ட அளவில் அவையெல்லாம் அழிந்துவிடும்.

உவமேயம்:-
நெஞ்சுரமற்ற போற்பயிற்சியற்ற பெரும்படையானது திரண்டு வந்து போரிடினும் நெஞ்சுரம் மிக்க சிறுபடையிடம் தோற்றழிந்துவிடும்.


சிறப்புப்பாடம் - ஒற்று மிகுமிடங்கள்!

6) அத்துணை இத்துணை எத்துணை- எனவரும் அளவுகுறிக்கும் சொல்லுடன் கூடிய சுட்டுவினாக்களின் முன்னம் வலிமிகும்;

காட்டு:-
அத்துணை +பெரியது – அத்துணைப்பெரியது
இத்துணை +சிறியது - இத்துணைச்சிறியது
எத்துணை +செலவு – எத்துணைச்செலவு

7) என இனி ஆக போல விட ஆய் மற்ற மற்றை – போன்ற அகர இகர ஐகார ஈற்று வினை எச்சங்களின் பின் வலிமிகும்.

காட்டு:-
நன்றென +சொன்னாள் - நன்றெனச்சொன்னாள்
இனி +செல் - இனிச்செல்
அவனாக +பேசினான் - அவனாகப் பேசினான்
புலிபோல +பாய்ந்தான் - புலிபோலப் பாய்ந்தான்
நஞ்சைவிட +கொடியது – நஞ்சைவிடக்கொடியது
போவதாய் +சொன்னான் - போவதாய்ச்சொன்னான்
உருவமற்ற +கதை – உருவமற்றக்கதை
மற்றை +பொருள் - மற்றைப்பொருள்

8) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வலிமிகும்
காட்டு:-
அறியா +பிள்ளை – அறியாப்பிள்ளை
காணா +பொருள் - காணாப்பொருள்
(குறிப்பு:- காணாத அறியாத த- ஈறுகெட்டது)

9) வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துவரும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வலிப் புணர்ச்சியிலும் வலிமிகும்.

காட்டு:-
வேற்றுமைப்புணர்ச்சி:-
மாட்டின் +கொம்பு - இன் உருபு கெட்டு மாட்டுக்கொம்பு எனவரும்.
கொக்குத்தலை – கொக்கின் +தலை
ஆட்டின் +காம்பு –ஆட்டுக்காம்பு

அல்வலிப் புணர்ச்சி:-
பருப்பு +உடைய +சட்டி –என்பது பருப்புச்சட்டி எனவரும்
காய்கறிக்கடை – கய்கறிகளை உடைய கடை
கிழக்குத்திசை –கிழக்காகியதிசை

க்கு ச்சு ட்டு த்து ப்பு ற்று –என வல்லினம் இரட்டுறும் சொற்களையடுத்து வரும் கசதப எழுத்துகளையுடைய வினைச்சொற்களின் முன்வலிமிகும்.

செத்து +போ – செத்துப்போ
கற்று +தா – கற்றுத்தா
விட்டு +தா – விட்டுத்தா
இச்சு +தா - இச்சுத்தா
ஏற்று +கொள் - ஏற்றுக்கொள்

10) தனிக்குறிலைச் சார்ந்து வரும் முற்றியலுகரத்தின் பின் வலிமிகும்;

காட்டு:-
திரு +குறள் - திருக்குறள்
திரு +புகழ் - திருப்புகழ்
தெரு +கோடி – தெருக்கோடி

இக்கிழமைக்கான ஈற்றடி:- வன்முறையை வேரறுப்போம் வா!

அகரம்.அமுதா

செவ்வாய், 2 டிசம்பர், 2008

30. தற்குறிப்பேற்றணி!

உலகில் நிகழும் இயல்பான நிகழ்வைக் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் குறிப்பிடுவதே தற்குறிப்பேற்றணியாம்.

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!


பொருள்:- இவளுடைய மையுண்ட கண்களுக்கு இருவகையான பார்வைத்தன்மைகள் உண்டு. ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.

கண்கள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை. அதில் பார்வை என்பது இன்றியமையாதது. அப்பார்வை நோய்செய்வதாயும் நோய்க்கு மருந்தாவதாயும் உரைப்பது தற்குறிப்பேற்றணி வகையாகும்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்!


பொருள்:- அனிச்சம் பூவும் அன்னப்பறவையின் இறகும் பெண்ணின் தாள்களுக்கு முள்ளுடன் கூடிய நெருஞ்சிப் பழம் போல வருத்தும்.

பெண்ணின் தாள்கள் மென்மை பொருந்தியவையே. ஆயினும் அனிச்சமும் அன்னத்தின் இறகும் அதனினும் மென்மை வாய்ந்தன என்று யாவரும் அறிவர். ஆயினும் கவிஞன் இயற்கைக்கு மாறாக தன்குறிப்பை ஏற்றி உரைக்கிறார்.

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு -நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு!

பொருள்:-அவளின் நுண்ணிய இடையானது பருத்துயர்ந்த அவளது இளங்கொங்கைகளை முற்றவும் சுமந்து நிற்கும் வலிமையுடையது ஆகமாட்டாதென்று அவளுடைய காலிலே விளங்கும் நூபுரங்கள் புதிய தேன் அலம்பிக் கொண்டிருக்கும் நீண்ட கூந்தலுடைய அவளின் இருகழல்களிலும் தாழ்ந்து கிடந்து எந்நோரமும் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கும்.

பெண்கள் நடந்து செல்கையில் நீண்ட நெடிய கூந்தல் இடையின் பின்புறத்தில் ஆடிஅசைவது இயல்பே. அக்காட்சியைக் கண்ட கவிஞன் கொங்கைகளின் சுமைதாங்காமல் இடைநுடங்குவதாகக் கால்கொலுசினிடம் புலம்புகிறது என்று தன்குறிப்பை ஏற்றிப் பாடுகிறான். ஆதலால் இப்பாடல் தற்குறிப்பேற்றணி வகையாம்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலைத் தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.


பொருள்:- மல்லிகை அரும்புகளையே வெண்சங்காக எண்ணிக் கொண்டு வண்டினம் ஊதிஊதி முழக்குகின்றனவாம். சிறந்த கரும்பினாலான வில்லை உடைய மன்மதன் தன் மலர்க்கணைகளை ஆராயந்து எடுத்துவந்து தன்னைப் பற்றிய உண்மையினைப் பேணுதற்குத் தொடங்கினான். இப்படியாக முல்லை மலர்என்னும் மென்மையான மாலையானது தோளிலே கிடந்து அசைய புல்லிய மாலைப்பொழுதானது அசைந்து நடந்து வந்தது.

அந்தியின் வருகையை ஓர் பேரூர்வலமாக (ராஜபவனி) கவிஞன் உயர்த்திக் (உயர்வுநவிற்சி அணி) கூறியிருப்பதோடு வண்டானது இயல்பாக அமர்ந்து தேனெடுப்பதை மலரை சங்காக எண்ணிக்கொண்டு ஊதி முயங்குகின்றது என்று தன்குறிப்பை ஏற்றிக் கூறியமையால் தற்குறிப்பேற்றணியாகும்.

சிறப்புப் பாடம்! வலிமிகுமிடங்கள்

குறிப்பு:- சங்கர் இராஜகுரு போன்ற நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி இச்சிறப்புப் பாடத்தைத் தருகிறேன்.

சொல்லியங்களைப் பிழையின்றி அமைக்க முகாமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள் வலிமிகுமிடங்கள் மற்றும் வலிமிகாவிடங்கள் ஆகியவை அடங்கும். இப்பாடத்தில் வலிமிகுமிடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வலி என்பது வல்லெழுத்துகளாம். அவ் வல்லெழுத்துகள் எங்கெல்லாம் மிகுந்து வரும் என்பதை அறிந்து எழுதப்பழகுவோம்.

சற்றேறக் குறைய வலிமிகுமிடங்கள் இருபத்தாறு அல்லது இருபத்தேழு இடங்களாகும். அவ்விடங்களை அறிவோம்.

1) அ இ உ - என்னும் சுட்டெழுத்துகளின் முன் வலிமிகும்.

காட்டு:-
அ+பையன் - அப்பையன்
இ+ பொருள் - இப்பொருள்
உ+ பக்கம் - உப்பக்கம்

2) அந்த இந்த உந்த என்னும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அந்த+ பூனை - அந்தப்பூனை
இந்த + பை - இந்தப்பை
உந்த+ பக்கம் - உந்தப்பக்கம்.

3) எ-என்ற வினா எழுத்தின் முன்னும் எந்த- என்ற வினா இடைச்சொல்லின் முன்னும் வலி மிகும்.

காட்டு:-
எ+ பொழுது - எப்பொழுது
எந்த +திசை - எந்தத்திசை

4) அங்கு இங்கு எங்கு ஆங்கு ஈங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு -எனும் இடப்பொருள் உணர்த்தும் மென்தொடர் குற்றியல் உகர இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அங்கு + போ - அங்குப்போ
இங்கு + தா - இங்குத்தா
எங்கு + கொடுத்தாய் - எங்குக்கொடுத்தாய்
ஆங்கு + பார் - ஆங்குப்பார்
ஈங்கு + செய் - ஈங்குச் செய்
யாண்கு + பேசினான் - யாண்குப்பேசினான்
ஆண்டு + தாவினான் - ஆண்டுத்தாவினான்
ஈண்டு + கூடினர் - ஈண்டுக் கூடினர்
யாண்டு + சென்றான் - யாண்டுச்சென்றான்.

5) அப்படி இப்படி எப்படி எனும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அப்படி + சொல் - அப்படிச்சொல்
இப்படி + கூறு - இப்படிக்கூறு
எப்படி + தந்தாய் - எப்படித்தந்தாய்

இக்கிழமைக்கான ஈற்றடி:- பூவைமேல் எத்தனை பூ!

அகரம்.அமுதா