திங்கள், 30 ஜூன், 2008

பாடம்12 அளவியல் வெண்பா!

நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.

நேரிசை அளவியல் வெண்பா:-

நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)

காட்டு:-

கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.

(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)

(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)

இன்னிசை அளவியல் வெண்பா!

இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.

1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்

போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.

காட்டு:-

இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.

இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.

கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.

பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.

மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

குறிப்பு:-

1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.

ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா

நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்

ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்

அகரம்.அமுதா

வெள்ளி, 27 ஜூன், 2008

பாடம்11 சிந்தியல் வெண்பா!

மூன்று அடிகளைக் கொண்டது சிந்தியல் வெண்பாவாகும். ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவை:- 1-நேரிசைச் சிந்தியல் வெண்பா 2-இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

1-நேரிசைச் சிந்தியல் வெண்பா:-

முதல் அடியின் முதற்சீரிலும் இரண்டாம் அடியின் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்லும் எதுகையமையப் பாடுவது.

காட்டு:-

நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் எட்டாம் சீர் எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!

ஈரடியும் முக்காலும் ஏற்றுவரின் சிந்தியலாம்;
கூறடி மூன்று(ள்)தனிச் சீர்பெறலே -நேரிசையாம்;
ஊர்க்கிதை ஓதிடுவீர் ஓர்ந்து! -அகரம்.அமுதா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

தனிச்சீர் பெறாமையும் அடியேதுகை பெறாமையும் இன்னிசை வெண்பாவாகும்.

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

இச்சிந்தியலைக்கவனிக்க:- மூன்றடிகளிலும் எதுகை எடுத்து வந்திருப்பினும் தனிச்சொல் பெறாமையால் இன்னிசையானது. (தனிச்சொல் -இரண்டாமடியின் நான்காம் சீரில் எதுகையெடுத்தல். இதை இப்படியும் சொல்லலாம் வெண்பாவின் எட்டாம்சீர் எதுகைபெறாமை)

முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் -பின்புரைப்பேன்
பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!
பாவிற் சிறந்ததுவெண் பா! –பாரதி தாசன்.

இச்சிந்தியலை நன்கு கவனிக்கவும். முதற்சீர் (முன்பு -ன்) -எதுகையெடுத்துவந்து இரண்டாமடியின் முதற்சீரில் (ன்) -எதுகையின்மையால் இன்னிசையானது. மேலும் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையெடுத்து வந்துள்ளது. அப்படிவரின் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

மேலும் முதற்சீரிலும் எட்டாம் சீரிலும் எதுகைபெற்றிருந்தும் ஐந்தாம் சீரில் எதுகை பெறாமையால் இன்னிசையுள் அடங்கிவிடுகிறது. (அனைத்து அடிகளிலும் எதுகையெடுத்து வராதவையும் இன்னிசைச் சிந்தியலேயாகும்.)

மேலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணம் 1,5,8-ம் சீர் எதுகை யெடுத்துவருவது கட்டாய விதி. இவ்விதியை மீறின் அது இன்னிசைச் சிந்தியலில் வைக்கப்படும்.

அகரம்.அமுதா

திங்கள், 23 ஜூன், 2008

பாடம்10 குறள்வெண்பா!

ஒன்றே முக்கால் அடிகள் அதாவது ஏழு சீர்களைக் கொண்டது குறள் வெண்பா!

குறள்வெண்பா எழுதுகிற போழ்து கவனிக்க வேண்டியவை:-

வெண்பாவிற்கு மோனை எதுகைத்தொடைகள் முக்கியம் எனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டதால் நாம் குறிக்கவரும் கருத்தைத் தொடைகள் பொறுத்திக் கூறல் கடினம். ஆதலால் சில விதி தளர்த்தல்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்.

1-குறள்வெண்பாவின் முதல் அடியில் பொழிப்புமோனையோ அல்லது ஒரூஉ மோனையோ அமைந்தால் நலம்.

2-இரண்டாமடியாகிய ஈற்றடியில் பொழிப்புமோனை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம் அவ்வளவே.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி! -அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை நன்கு கவனிக்க. இரண்டாமடியில் கூறவந்த பொருள் கருதி பொழிப்பு மோனை அமையப்பெறாது செந்தொடையான் இயன்றமை காண்க.

குறிப்பு:-

இதனால் பொழிப்பு மோனையின்றியே பாடவேண்டும் என்பதில்லை. பொருட்செறிவு குன்ற வலிந்து மோனை அமைக்கத் தேவையில்லை. அவ்வளவே.

3-முதலடியின் முதற்சீரிலும் இரண்டாமடியின் முதற்சீரிலும் எதுகை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம்.

4-முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரூஉ எதுகை அமையபாடுவது.

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்தன்
குரலோ? இதுயாழோ? கூறு! -அகரம்.அமுதா

இக்குறளை நன்கு கவனிக்க. முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்றமையால் அடியெதுகை அமையாது வந்தமை அறிக.

5-வெண்பாவில் பொதுவாக நேரிசை இன்னிசை என இருவகை உண்டெனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டமையால் இன்னிசை நேரிசை என்னும் பாகுபாடு கிடையாது.

6-மிகுந்த பொருட்செறிவுடன் கூடிய கருத்துக்களை எடுத்துவைக்கும் போது தொடைகள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குறிய னாகச் செயல்! திருக்குறள்.

இக்குறள் வெண்பாவை நோக்குக. முதலடியில் மோனைத்தொடையோ எதுகைத்தொடையோ அமையப்பெறவில்லை. அடியெதுகையும் அமையவில்லை. இரண்டாமடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனைபெற்று இணைமோனை மட்டுமே வந்துள்ளது.

குறிப்பு:-

இவைபோன்று இன்னும் பன்முறைகள் இருப்பினும் தற்காலத்தில் குறள்வெண்பாவிலும் பொழிப்புமோனை அடியெதுகை இரண்டும் அமையப்பாடுவதே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது.

காட்டு:-

சீரடி மூன்றால்பார் தீரஅளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு! -அகரம்.அமுதா

ஆக குறள் வெண்பாவில் மோனை எதுகை அமையப் பாடிவிடின் அளவியல் வெண்பாவில் மோனைஎதுகை அமைத்துப் பாடுவது மிக எளிதாகிவிடும். இப்பாடத்தைப் படிப்போர் குறள்வெண்பாவில் உள்ள சந்துபொந்துகளில் நுழைய முற்படாமல் முடிந்தவரை மோனை எதுகை அமையப்பாட வேண்டுகிறேன்.

அகரம்.அமுதா

செவ்வாய், 17 ஜூன், 2008

பாடம்9 வெண்பா ஓர் அறிமுகம்!


ஓசை:-

பழம் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை என செய்யுலோசை நான்கு வகைப் படும்.

வெண்பாவில் பயின்றுவரும் ஓசை செப்பலோசை. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை ஆகிய இருதளைகளாலும் அமையப்பெருவது செப்பலோசையாகும்.

செப்பலோசை -இருவர் உரையாடல் போன்ற ஓசை!

வெண்பாவும் அதன் இனமும்:-

1-குறள்வெண்பா -இரண்டு அடிகளைக்கொண்டது.
2-சிந்தியல் வெண்பா -மூன்று அடிகளைக்கொண்டது.
3-அளவியல் வெண்பா -நான்கு அடிகளைக்கொண்டது.
4-பஃறொடை வெண்பா -5அடியிலிருந்து 12அடிகளைக்கொண்டது.
5-கலிவெண்பா -12அடிகளுக்கு மேற்பட்ட அடிகளைக்கொண்டது.

-என வெண்பா 5 வகைப்படும்.

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே
ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா
மூவடி முக்கால் அளவியல் வெண்பா
பலவடி முக்கால் பஃறொடை வெண்பா
பஃறொடை மிக்கது கலிவெண் பாவே!

-தொல்காப்பியம்!

வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை:-

வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.

ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.

வெண்பாவின் அளவடிகளில் பொழிப்ப மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.

ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.

குறிப்பு:-

நாம் அடுத்தடுத்த பாடத்தில் 5வகை வெண்பாக்களைப் பற்றியும் தனித்தனியாக அறிய விருக்கிறோம். ஆகையால் கண்ணில் படும் வெண்பாக்களையெல்லாம் இதுவரை நாம் கற்ற இலக்கணத்தின் படி இருக்கிறதா? என்பதை உற்று நோக்குக! ஐயமிருப்பின் கேள்விகளைக் கேட்கத் தயங்காதீர்கள்.

நாளும் ஓர் வெண்பா வீதம் மனனம் செய்வீர்களே யானால் வெண்பா எழுதுவது மிக இலகுவாகி விடும்.

பொருட்செறிவுமிக்க அழகிய வெண்பா தருகிறேன். முடிந்தவரை படித்து மனனம் செய்யவும்.
மனனவெண்பா!

அறம்தகளி; ஆன்ற பொருள்திரி; இன்பு
சிறந்தநெய்; செஞ்சொல்தீ; தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு! -நப்பாலனார்.

அகரம்.அமுதா

சனி, 14 ஜூன், 2008

பாடம்8 வினாவிடை!

நமது அருமைத் தோழர் ஜுவா அவர்கள் நமது பாடம்7- தொடைச் சிறப்பைப் படித்துவிட்டுப் பின்னூட்டில் சில கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தார். பின் சற்று நேரத்தில் (உறழ்ச்சித் தொடையைப் படித்துவிட்டு) அதில் பல கேள்விகளுக்கு உறழ்ச்சித் தொடையிலேயே பதிலிருப்பதாகவும் மீண்டும் ஓர் பின்னூட்டிட்டிருந்தார்.

அவருக்குப் புரிந்திருப்பினும் அக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு:-

1-ஒன்றாம் மூன்றாம் சீரினை (பொழிப்பு மோனை) மோனைத் தொடையாக ஒத்து நோக்குவதைப் போல இரண்டாம் மற்றம் நான்காம் சீர்களையும் நோக்கலாமா?

ஆம். முதல் மூன்றாம் சீர்களில் மோனையமையாதக்கால் முதலிரு சீரிலோ அல்லது முதல் மற்றும் நான்காம் சீரிலோ மோனை அமையலாம். முதல் மற்றும் நான்காம் சீர்களில் மோனையமையப் பெறின் அதைப் “பின்மோனை” என்பர்.

2-குறிப்பிட்ட சில உயிர்மெய்யெழுத்துக்களைத் தவிர இதர எழுத்துக்களுக்கு இனம் கிடையாதா?

ம-வ த-ச ஞ-ந வைத்தவிர மற்ற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு வந்த எழுத்துக்களே மோனையாக அமையவேண்டும். ஆயினும் அவ்வுயிர்மெய் (எதுகை விதியிலுள்ளதைப் போல) குறிலுக்குக் குறிலோ நெடிலுக்கு நெடிலோ வரவேண்டும் என்ற அவசியமில்லை.

எ.காட்டு:-க-என்ற எழுத்து மோனையாக அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். உயிரினமான (அஆஐஒள) ஆகிய எழுத்துக்களோடு புணர்ந்துவந்த (அதாவது) க கா கை கௌ இவற்றிலொன்றே மோனையாக அமைய வேண்டும். மாறாக -விற்கு மோனையாக கி-யோ கூ-வோ அமையக்கூடாது.

மோனையாகிய -விற்கு மோனையாக க கா கை கௌ இவற்றிலொன்றை மோனையாக அமைக்கமுடியவில்லையா? குழப்பமில்லை. அதற்கும் நம் பெரியோர்கள் வழிவகை செய்திருக்கிறார்கள். -என்பது வல்லின எழுத்தல்லவா? ஆக வல்லின எழுத்துக்களாகிய க ச ட த ப ற -இவற்றுள் க ச த ப இவை நான்கும் சொல்லின் முதலில் வருமல்லவா? -விற்கு மோனையாக (ச சா சை சௌ த தா தை தௌ ப பா பை பௌ) இவற்றை மோனையாக அமைக்கலாம். இதற்கு வல்லினமோனை என்று பெயர். (இதுவே மெல்லினம் மற்றும் இடையின எழுத்துக்களுக்கும் பொருந்தும்)

3-ஒரு சீரை ஈரசைச் சீராகப் பிரிப்பதா அல்லது மூவசைச் சீராகப்பிரிப்பதா என்பதை முடிவுசெய்ய இந்த தொடைகள் கைகொடுக்கும் போலத் தெரிகிறது. சரியா?

இல்லை. சீர்களைப் பிரிப்பதற்குப் பெரிதும் துணையாயிருப்பது ஒற்றுக்களே!

எ.காட்டு:-
காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நேர்நிரைநேர்

காலத்தின் மாற்றம் ஏற்கத்தக்கது –என்றெழுதினால் தளை தட்டும்.

ஆகையால் அப்படிப் பிரித்து எழுதியுள்ளேன். இதையே:-

காலத்தின் மாற்றமேற்கத் தக்க தென்பதனால்
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நேர்நிரைநேர்

இதில் பாருங்கள் மூன்றாம்சீர் வரை தளைதட்டவில்லை.மேலும் கா-விற்குப் பொழிப்பு மோனையாக -வந்து வல்லின மோனையானமை காண்க. நான்காம் சீர் மாமுன் நேர் வந்துத் தளைதட்டுகிறது. ஆகையால்தான் “மாற்றமேற் கத்தக்க” என்று பிரித்தெழுதியுள்ளேன் என்பதறிக.

4-உயிரெழுத்துக்களில் இனமோனை நன்றாகப் புரிகிறது. ம-வ மற்றும் த-ச கூட்டணி ஒரே ஓசைநயம் இல்லாததுபோல் இருக்கிறதே?

ஆம். ஒத்த ஓசை இல்லைதான்.

5-முதல்சீரையும் இரண்டாம் சீரையும் ஏன் மோனைத்தொடையாக ஒத்துக்கொள்வதில்லை. “தங்கச் சொம்பு” “சந்தம் தங்கும்” போன்றவை மோனைத்தொடைகள் இல்லையா?

ஆம். பார்க்கலாம். இதற்கு முன் இணைமோனை என்று பெயர். “சந்தம் தங்கும்” என்பது சரி. “தங்கச் சொம்பு” என்பதில் மோனையில்லை. -என்ற அகரப் புணர்ச்சிக்கு சொ-என்ற ஒகரப் புணர்ச்சி எப்படி மோனையாகும். மாறாக தங்கக் காசு என்று வருமானால் சரியே. ஏனென்றால் -வுக்கு மோனையாக கா-என்ற வல்லினமோனை வருகிறதல்லவா?

அகரம்.அமுதா

ஞாயிறு, 8 ஜூன், 2008

பாடம்7 தொடைச் சிறப்பு!

1-மோனைத்தொடை:-

முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.

இனவெழுத்துகள்:-

1-உயிர்:-
அஆஐஒள -ஓரினம்
இஈஎஏ -ஓரினம்
உஊஒஓ -ஓரினம்

2-மெய்:-
ஞ்-ந் -ஓரினம்
ம்-வ் -ஓரினம்
த்-ச் -ஓரினம்

அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோ
டூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்
தோகாய் கிளையெழுத்தாச் சொல்!

இவ்வெண்பாவை நன்கு மனனம் செய்யவும்.

மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வராதல்லவா? ஆகையால் மேற்கூறிய மெய்களை (ஞ்ந்ம்வ்த்ச்) உயிர்மெய்களாகக் கொள்ளவும்.ஞநமவதச -என்னும் ஆறு எழுத்துக்களல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவேதான் வரவேண்டும்.மெய்யெழுத்துக்கள் இனமாக வருவதோடு அம்மெய்யெழுத்துக்களின் மேல் ஏறிய உயிர்களும் அஆஐஒள –என இனமாகவே வரவேண்டும். மாறி வரக்கூடாது.

எ.காட்டு:-

மிழ்க்குடியைப் பாரறியத் க்க வழிகண்(டு)
மிழ்தினிய முப்பால் ளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்து செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் மூன்றாமடியில் தே-என்ற மோனைக்கு செ-என்ற இனமோனை வந்தமை காண்க. மற்றவரிகளில் அதற்கதுவே வந்தமையும் காண்க.

ரச்சில் ன்றி ழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சால் தாக்கிக் குலைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதல் ஓரடியைத் தவிர மற்ற மூன்றடிகளும் அதற்கதுவே மோனையாக வந்தமை காண்க.முதல்வரியில் ஓஊஉ-என இனமோனைகள் அமைந்தமை காண்க.இரண்டாமடியில் கூ-என்ற மோனைக்கு கு-குறில் மோனையாக அமைதலும் காண்க.

ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே
நன்றாய்ப் பெருமைபல நல்குதலால்; -என்றும்
மனிதர் ஒருசிலர்க்கே வாய்க்கும் வகையால்
தனம்குணம்ஒன் றென்றால் தகும்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் ஒஒஒஉ எனமோனை(உ-இனமோனை) எடுத்தமை காண்க.

இரண்டாமடியில் 'நந' மூன்றாமடியில் 'மவா' நான்காமடியில் 'தத'-என மோனை எடுத்தமை காண்க.

குறிப்பு:-

யா-என்கிற ஓரெழுத்து மட்டும் பல இனவெழுத்துக்களோடு சோடிசேரும். யா-வின் இனவெழுத்துக்கள் அஆஐஒள இஈஎஏஒ ஆகிய உயிர் எழுத்துக்களோடு மட்டுமே இனவெழுத்தாக யா-வரும்.

யானையோடு வீழ்ந்தான் அவன். இவ்வடியில் யா-அ என இனமோனை அமைதல் காண்க.

2-எதுகைத்தொடை:-

எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய்யெழுத்தாயின் வேறு உயிரெழுத்துக்கள் புணர்ந்த உயிர்மெய்கள் வரலாம். இனவெழுத்துத் தான் வரவேண்டும் என்பதில்லை. ஆனால் நெடிலுக்கு நெடிலும் குறிலுக்குக் குறிலும் தான் வரவேண்டும்.

காத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாத்தை யாள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும்.முதல் இரண்டடியின் முதல் சீர்களில் எதுகை ல,ல எனவருவதும் இரண்டாமடியின் நான்காம் சீரில் லு என்று வேற்று உயிர்ப்புணர்ச்சியோடு கூடி எதுகையாக வந்தமை காண்க.

மூன்றாம் நான்காம் அடிகளின் முதல் சீர்களில் எதுகை ணி,ணை என வந்தமை காண்க. ண் என்ற மெய் மாறாமலும் ண்-ஓடு புணரும் உயிர் மட்டுமே மாறியும் வந்துள்ளது.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனிக்கவும்:-

முதல் இரண்டடியில் ற்-எதுகையாகவும் மூன்றாம் நான்காம் அடிகளில் டி-எதுகையாகவும் வந்தமை. இப்படி அதற்கதே வருதல் சாலச் சிறப்பு.

எழுமீற்றுச் சீர்க்கே எழிலார்ப்பா தன்னைப்
பழுதின்றிப் பாடுகிற பண்போ -டொழுக்க
விழுப்பத்தில் தேர்ந்து விளங்கும்நம் வெண்பாக்
குழுமத்தில் வந்து குதி! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் எல்லா எதுகைகளும் ழு-வாக வந்தமை காண்க.

3-உறழ்ச்சித் தொடை:-

இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல்- முதற்றொடையாகும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் உறழ்ச்சித்தொடையாகும்.

இவ்வுறழ்ச்சித்தொடையை அளவடியிலேயே கொள்ளவேண்டும். அளவடி -நான்குசீர்களைக்கொண்டது.

முதற்றொடை:-அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது.1-அடிமோனை 2-அடியெதுகை 3-அடிமுரண் 4-அடியிழைபு 5-அடியளபெடை என்பன.

குறிப்பு:-அடிமோனையும் இழைபுத்தொடையும் நாம் காணும் வெண்பாவிற்குத் தேவையற்றது என்பதை நினைவிற் கொள்க.

உறழ்ச்சித்தொடை:-

1இணை 2பொழிப்பு 3ஒரூவு 4கூழை 5மேற்கெதுவாய் 6கீழ்க்கெதுவாய் 7முற்று 8கடையிணை 9கடைக்கூழை 10இடைப்புணர் 11பின் -எனப் பதினொரு வகைப்படும்.

எ.காட்டு:- மோனை:-

உறழ்ச்சித்தொடை ஓரடியிலுள்ள நான்கு சீர்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.

1-இணைமோன -(1-2)முதல் இரண்டு சீர்களில் மோனை எடுத்து வருவது (சீர்-சொல்)

2-பொழிப்புமோனை -(1-3)முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை
அமைவது. (பொதுவாக வெண்பாவில் பொழிப்பு மோனையைப் பயன் படுத்தியே பாடப்படுகின்றன என்பதைக் கண்டறிக)

3-ஒரூவுமோனை -(1-4) முதல் மற்றும் நான்காம் சீர் மோனை எடுத்தல்.

4-கூழைமோனை -(1-2-3) முதல் மூன்று சீர்களில் மோனை வருவது.

5-மேற்கெதுவாய் மோனை -(1-3-4) இரண்டாம்சீர் ஒழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் மோனை அமைவது.

6-கீழ்க்கெதுவாய் -(1-2-4) மூன்றாம் சீர் ஒழிந்த ஏனைய சீர்களிலும் மோனை அமைவது.

7-முற்றுமோனை -(1-2-3-4) நான்கு சீர்களிலும் மோனை அமைந்து வருவது.

8-கடையிணை மோனை -(3-4) மூன்றாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

9-கடைக்கூழைமோனை -(2-3-4) முதற்சீரொந்த ஏனை மூன்றுசீர்களில் மோனை வருவது.

10-இடைப்புணர்மோனை -(2-3) இரண்டாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைவது.

11-பின்மோனை –(2-4) இரண்டாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

குறிப்பு:-
இவ்வாறே ஏனை எதுகை முதலிய நான்கு தொடைகட்குங் கண்டுகொள்க.

முதலிரு சீரிணை முதலிருந் தொன்றிரண்
டிடையீடு பொழிப்பொரூஉ ஈறிலி கூழை
முதலீ றயலில மேல்கீழ்க் கெதுவாய்
முழுவது முற்றே கடையிரு சீரிணை
கடைமூன்று கூழை இடையிரண் டிடைப்புணர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இப்பாடலை நன்றாக மனனம் செய்க.

குறிப்பு:-

வெண்பாவைப் பொருத்த வரை பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடை அமையப்பெறும். சிறுபான்மையாக எதுகை வரும்.

புத்துரதன் புத்திரனின் சத்துருவின் மித்திரனின்
பத்தினியின் கால்வாங்கித் தேய்.

இக் குறட்பாவில் த் முற்றெதுகையாக வந்தமை காண்க. ஓரடியில் எதுகை பெற்றுவருவதை யாரும் அதிகம் பாடுவதில்லை. மோனை அமையாத விடத்து எதுகையமையச் செய்வார்கள்.

அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் டி-என்ற எதுகை பொழிப்பெதுகையாக வந்தமை காண்க.

குறிப்பு:-வெண்பாவில் மோனையைப் பொருத்த வரை உறழ்ச்சி மோனை இன்றியமையாதது. எதுகை அடியெதுகை எடுத்து வருதல் நலம்.

அகரம்.அமுதா

சனி, 7 ஜூன், 2008

பாடம்6 தொடை!


அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.

அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.
அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதற்றொடை ஐந்து வகைப்படும்.

அவை:-
1-மோனைத்தொடை
2-எதுகைத்தொடை
3-முரண்தொடை
4-இழைபுத்தொடை
5-அளபெடைத்தொடை

மோனை யெதுகை முரணியை யளபெடை
எனுமிவை யைந்தும் முதற்றொடை யாமே! -என்பது தொல்காப்பியம்.

1-மோமைத்தொடை

இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து அல்லது ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்.

முதலெழுத் தொன்றுதல் மோனையாகும் -தொல்காப்பியம்

குறிப்பு:-

அடிகளில் வரும்மோனை அடிமோனை எனப்படும். ஓரடியிலுள்ள சீர்களில் வரும் மோனை சீர்மோனை எனப்படும்.

அடிமோனை:-

டித்தேன் அடடாவோ! பாக்களொவ் வொன்றுமொரு
டித்தேன் எனச்சொல்வேன் பண்பாய் -அடிநான்கில்
சீரேழும் ஒன்றும்பின் சீரேழும் ஒன்றிவர
நூரேழில் மூன்றில்லா நூல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதலடியின் முதலெழுத்தாகிய -வும் இரண்டாமடியின் முதல்எழுத்தாகிய -வும் ஒன்றி வருவதால் (ஒன்றிவருதல்-ஓரெழுத்தாதல்) இது அடிமோனை எனப்படும்.

சீர்மோனை:-

ரும்புவி யாங்கும் ருமிலக்கி யத்தில்
திருக்குறட்போ லுண்டோ திரு? ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் வந்துள்ள இஇ ஓரடியிலும் திதி ஓரடியிலும் வந்தமையால் இவை சீர் மோனை எனப்படும்.

2-எதுகைத்தொடை:-

இரண்டாமெழுத்தொன்றுதல் எதுகையாமே! -தொல்காப்பியம்.

அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ட்டிப் படைத்தே அறிவழிக்கும் -கூட்டினையே
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ? ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலிரண்டு அடிகளின் முதற்சீலரில் இரண்டாமெழுத்து ' ட்' என்றே வந்திருத்தல் எதுகை.மூன்றாம்நான்காம் அடிகளின் முதற்சீர்களின் இரண்டாமெழுத்தும் 'யி' ஒன்றிவந்து அவையும் எதுகையானது காண்க.

3-முரண்தொடை:-

முரணத் தொடுத்தல் முரண்தொடை யாமே –தொல்காப்பியம்

முரணுதல் -மாறுபடுதல். மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை எனப்படும்.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை
மண்தேடும் தாளின் அடி! ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் விண்xமண் என்பது முரண்தொடையாகும்.

குறிப்பு:-

மேல் கீழ்வெண்மை கருமைநீளம் குட்டை -இப்படி எதிர்மறையாக வரும் சொற்கள் முரண்தொடை எனப்படும்.

4-இழைபுத்தொடை:-

குறிப்பு:-இழைபுத்தொடை நமது வெண்பாவில் இடம்பெறாது என்ற காரணத்தால் இழைபுத்தொடைக்கான பாடம் தவிர்க்கப் படுகிறது.

5-அளபெடைத்தொடை:-

அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே! -தொல்காப்பியம்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்! ---திருக்குறள்

'கடாஅ, படாஅ' என்று அளபெடுத்ததால் இது அளபெடைத்தொடையாகும்.

குறிப்பு:-

செய்யுளின் ஓசை நயத்துக்காகவும் தளை தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஓர் சீரில் வருகிற நெடில் எழுத்தை அந்நெடில் தோன்றுவதற்குக் காரணமான உயிர்நெடிலின் இனமான குறிலை அந்நெடிலோடு இணைத்துக்கொள்வது அளபெடையாகும். அளபெடுக்கும்போது நெடில் மட்டுமே அளபெடுத்து வரும். குறில் அளபெடுக்காது.

எ.காட்டு:-

கடா -இச்சொல்லின் நெடிலெழுத்தாகிய 'டா' தோன்றக்காரணடான உயிரெழுத்து ஆ. ஆவின் குறில் அ அல்லவா? இக்குறிலை 'டா' வென்னும் நெடிலுக்குப் பின் சேர்த்துக்கொள்வது அளபெடை எனப்படும். கடாஅ என்று வந்தமை காண்க.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மலர்! -திருக்குறள்

இக்குறளில் ஓதல் எனும் சொல் அளபெடுத்து ஓஒதல் என வந்தமை காண்க.

ஓதல் வேண்டும் என்றுவந்தால் வெண்பா விதிப்படி தளை தட்டும் அல்லவா? ஆகையால் அளபெடுத்தமை அறிக.

அகரம்.அமுதா