திங்கள், 12 அக்டோபர், 2009

அறிவிப்பு

அன்பார்ந்த தமிழ் உள்ளங்களே!

இந்த வலைப்பதிவில் நீங்கள பின்னூட்டமாக எழுதும் உங்கள் கருத்துரைகளை அகரம் அமுதா அவர்களே வெளியிட வேண்டும்.

அகரம் அமுதா அவர்களைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டபோது, அவர் இணையத் தொடர்பு கொள்ள இயலாத நிலையிலிருப்பதாகத் தெரிவித்தார்.

என்னால் இவ்வலைப்பதிவில் இடுகைகள் மட்டுமே இட இயலும்.
கருத்துரைகளை அவர்தாம் வெளியிட முடியும். எனவே, உங்கள் பின்னூட்டக் கருத்துரைகளை அறிய முடியாத நிலையிருப்பதால் தான், அடுத்த நிலையில், ஆசிரிய மண்டிலங்கள் பற்றி எழுதாமல் இருக்கிறேன்.

பொறுத்தாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த இக்கட்டான நிலைகுறித்து அகரம் அமுதா விரைவில் விளக்கமாக அறிவிப்பு வெளியிடுவார்.

நீங்கள் இதுவரை பொறுமை காத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பன்,
தமிழநம்பி.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அடிமறி மண்டில ஆசிரியப்பா

அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும்.
அடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.
முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள் :

அழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே

ஒழுக்க முடையான் உயர்வ துறுதியே

வழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே

விழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. - புலவர் அரங்க. நடராசனார்.


சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரலை யெனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே. - யாப். காரிகை எடுத்துக்காட்டுப் பாடல்.


அன்பருள் உணர்வே ஆளுக உலகே

இன்பம் பிறர்துயர் இலாதே நீக்கலே

என்றும் நாடுக இனியநற் புகழே

நின்று பெயர்சொலும் நேர்மை உண்மையே. - த.ந.



இனி, அடிமறி மண்டில ஆசிரியப்பா எழுதலாமே.

புதன், 16 செப்டம்பர், 2009

இணைக்குறள் ஆசிரியப்பா

இணைக்குறள் ஆசிரியப்பாவில் ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருக்கும்.

அவற்றுடன், முதல் அடியும் ஈற்றடியும் நாற்சீரடிகளாய் இருக்க, இடையில் உள்ள அடிகளில் பல இருசீரடிகளாகவும் முச்சீரடிகளாகவும் வரும்.
(இயல்பாக, நாற்சீரடிகளும் இடம்பெறும்)

நெற்களம் என்றா நினைத்துப் பார்க்கிறீர்
நெற்களம் அன்றிது நெடுஞ்சாலை.
எங்கள் ஊரார் இங்கேதான்
வைக்கோல் உலர்த்துவார்;
அறுத்த கதிர்களைப்
பரப்பிப் போடுவார்;
ஓடும் ஊர்திகள் உதிர்த்துப் போடும்;
ஓடிப்போய் மீண்டும் உதறிப் போடுவார்.
துள்ளும் துகள்சில
விழுவதும் எழுவதும் என்றும்
வாடிக்கை என்பதால் வருந்துவ திலரே!
- புதுவை அரங்க. நடராசனார்.

புதுப்பா போல் உள்ளதா?

அமைதி சான்ற அறிஞரும் அருமையான பாவலருமாகிய பேராசிரியர்
ம.இலெ.தங்கப்பா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

“தமிழ் யாப்பு வடிவங்களுக்குள் நின்று விடுதலையாகக் கருத்துரைக்க முடியவில்லை என்று கூறுபவர்கட்கு, அப்படி விடுதலையோடு கருத்து உணர்த்த இணைக்குறள் ஆசிரியப்பா இடம் கொடுக்க வல்லது.”

இன்னொரு இணைக்குறள் ஆசிரியப்பா:

இவர்தான் இவ்வலை உரிமையர் சிறப்புறப்
பாடல் பயிற்றுநர்
ஈடாரு மில்லா இனியர்
பண்புறை பாவலர்
தண்ணிய உரையினர்
சிங்கப் பூரில் தங்கி உழைக்குநர்
எங்குசென் றாலும் இன்றமிழ் ஏத்துநர்
ஆமாம்! இவரே அகரம் அமுதா!
தாமறி தமிழைத் தருநர் பிறர்க்கே! – த.ந.

இப்போது எளிதாக இணைக்குறள் ஆசிரியப்பா எழுதலாமே!



செவ்வாய், 8 செப்டம்பர், 2009

நிலைமண்டில ஆசிரியப்பா



நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருப்பதோடு, எல்லா அடியும் அளவொத்து அமைந்திருக்கும்.

இன்னும் விளங்கக் கூறின், நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஈற்றயலடி உட்பட அனைத்து அடிகளும் நாற்சீர் அடிகளாக அமைந்திருக்கும்.

வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்

உள்ளுவ உள்ளி உவர்ப்ப உவர்த்துக்

கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே

யாமுறும் இன்பம் யாவரும் உறவே

நன்கினி துரைத்துப் பொன்கனி போல

இருநிலம் போல இனிதுவாழ் குவமே!

- புலவர் குழந்தை

இனி, அகரம் அமுதா ஐயா குறிப்பிட்டதைப் போன்று தமிழ்த்தாய் குறித்து நிலைமண்டில ஆசிரியப்பா எழுதுவோம்.

தமிழ்த்தாய்க்கோர் அகவற்பா செய்க!

சொன்னயம் படைத்தார்ச் சொல்லினிற் பிறந்து
மன்னர்தங் கொடையால் மாண்புற எழுந்தே
இன்றளவும் குறைவிலா இளமைசார்
அன்னையாஞ் செந்தமிழ் அணங்கைவாழ்த் துவமே!


குறிப்பு:-
தமிழ நம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்கும்வரை, இவ்விடுகையில் தமிழ்த்தாயைப் பற்றி அகவற்பா செய்க என அனைவரையும் அழைக்கிறேன்.

அகரம் அமுதா

சனி, 5 செப்டம்பர், 2009

கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

(தமிழநம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்க காலமாதலால் இடையே ஓர் ஈற்றடி வழங்கப் படுகிறது.)

இக்கிழமைக்கான ஈற்றடி:- கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

அகரம் அமுதா

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

நேரிசை ஆசிரியப்பா எழுதுவோம்


பா வகைகளில் மிக எளிதாக எழுதப்படுவது ஆசிரியப்பாவே.

சுருக்கமாக, ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :

ஆசிரியப்பா குறைந்த அளவு மூன்றடி பெற்று வரும். அதிகமாக ஆயிரம் அடிகள் வரை வரலாம் அதற்கு மேல் வரினும் இழுக்கன்று என்று கூறுவர்.

ஈரசைச் சீர்களும் மூவசைச்சீர்களில் காய்ச்சீர்களும் பெற்று வரும்.

இவற்றில், பொதுவாகக் காய்ச்சீர் அருகி (குறைவாக) வரும்.

கனிச்சீர் வரவே வராது.

பொதுவாக நான்கு சீர் கொண்ட அடியும், அடிதோறும் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்தும் வரும்.

அடி எதுகை பெற்று வரும்; இரண்டடிக்கு ஒருமுறை எதுகை மாறவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; இரண்டு முதல் எத்தனை அடிகளிலும் ஒரே எதுகை வரலாம்.

(ஒன்று மூன்றாம் சீர்களில் எதுகை பெற்று வருதலும் உண்டு)

ஏகாரத்தால் முடிவது சிறப்பு. (ஓ, ஈ, ஆய், என், ஐ என்றும் முடியலாம்)


நேரிசை ஆசிரியப்பாவின் சிறப்பு இலக்கணம்:

ஈற்றயலடி என்றழைக்கப்படும் ஈற்றடிக்கு முன் அடி மூன்று சீர் பெற்று வரும்.
ஏனைய அடிகள் நான்கு சீர் பெற்று வரும்.

இனி, ஒரு நேரிசை ஆசிரியப்பாவைப் பார்ப்போம்:

சிந்தா மணியும் சிலம்பும் சாத்தனார் ----------------- நாற்சீரடி

ந்தமே கலையும் மிழ்த்தாய் ------------------முச்சீரடி (ஈற்றயலடி)

ந்தமார் மேனிக் ணிகலம் ஆமே. ------நாற்சீரடி(ஏகாரத்தால் முடிந்துள்ளது)


பச்சை வண்ணம் - மோனையைக் காட்டுதற்கு
சிவப்பு வண்ணம் - எதுகையைக்காட்டுதற்கு
கருப்பு - ஏகாரம் காட்ட

இன்னொரு பாடல் :

ன்றே போதும் என்றே இராமையால்

நூறு கோடியாய் ஏறி இருக்கிறோம்


ப்பைக் குறைத்தோம் மருத்துவ வலிமையால்

பிப்பைக் குறைக்க விருப்பம் கொளாமையால்

சென்றது சிறப்புறு வளமை

ந்தன பஞ்சமும் றுமையும் இன்றே. - புதுவை அரங்க. நடராசனார்


சிவப்பு வண்ணம் அடி எதுகையைக்காட்டுகிறது.
பச்சை மோனையைக் காட்டுகிறது.

இயன்றவரை மோனை எதுகை அமைத்து எழுதுதல் சிறப்பு

எளிதாக நேரிசை ஆசிரியப்பா எல்லாரும் எழுதலாம்.

ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டு எழுதுங்கள்.

இனி, எழுதுவோம்.

ஆசிரியப்பாவும் அதன் இனமும்! (2)

3.நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் அளவடியாக வரும். அதாவது எல்லா அடிகளும் நான்குசீர்களைக் கொண்டிருக்கும்.

வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்
உள்ளுவ வுள்ளி உவர்ப்ப உவர்த்துக்
கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே
யாமுறு மின்பம் யாவரு முறவே
நன்கினி துரைத்துப் பொன்கனி போல
இருநிலம் புகழ இனிதுவாழ் குவமே!


4.அடிமறி மண்டில ஆசிரியப்பா

இப்பாவில் வரும் எந்த அடியை முதலில் வைத்துப் பொருள்கொண்டாலும் பொருள் மாறுபடாதிருப்பது. அதாவது ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப்பெற்றுவிடுவது.

தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே!
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே!
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே!
ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தங் கடனே!



குறிப்பு:-

அடிகளை முன்னும் பின்னும் மறித்து (மாற்றி) ப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் இப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பாவாகும்.

இனி நாம் பயிற்சிப் பாக்கள் எழுதுவதற்கான பாடங்களை, பாவலர் தமிழநம்பி அவர்கள் பற்பல விளக்கங்களோடு வழங்க வருமாறு வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஆசிரியப்பாவும் அதன் இனமும்! (1)

ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை:-

1.நேரிசை ஆசிரியப்பா
2.இணைக்குறள் ஆசிரியப்பா
3.நிலைமண்டில ஆசிரியப்பா
4.அடிமறிமண்டில ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை:-

1.ஆசிரியத்தாழிசை
2.ஆசிரியத்துறை
3.ஆசிரிய விருத்தம்

வகைகள்:-

1.நேரிசையாசிரியப்பா

ஏல்லா அடிகளும் அளவடியாக வந்து, ஈற்றியலடி சிந்தடியாக வருவது நேரிசையாசிரியப்பாவாகும்.

குறிப்பு:-
ஈற்றியலடி – ஈற்றடிக்கும் முன்னுள்ள அடியாகும்.

காட்டு:-

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறக்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெந் நிலவில்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
–பாரிமகளிர்

இப்பாவின் ஈற்றியலடி சிந்தடியானமையால் நேரிசையாசிரியப்பாவாயிற்று.

2. இணைக்குற ளாசிரியப்பா

நேரிசையாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் வருவது இணைக்குற ளாசிரியப்பாவாகும்.

குறிப்பு:-
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றியலடி சிந்தடியாக வரும் என்பது அறிந்ததே. ஈற்றியலடிமட்டுமல்லாது மற்ற ஓரிரு அடிகள் அல்லது பலவடிகள் சிந்தடியாகவும் குறளடியாகவும் வரின் அது இணைக்குறளாசிரியப்பாவாகும்.

காட்டு:-

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீர்ந்து
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே!


இப்பாவில் முறையே இரண்டாம் மூன்றாம் அடிகள் குறளடிகளாகவும், நான்காம் மற்றும் ஈற்றியலடி சிந்தடியாகவும் வந்து இணைக்குறளாசிரியப்பாவானமை காண்க.

தொடரும்...
அகரம் அமுதா

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அகவற்பா அல்லது ஆசிரியப்பா ஓர் அறிமுகம்!

அகவற்பாவின் ஓசை அகவலோசையாகும். சுருங்கச்சொல்வதென்றால் கூட்டத்தின் மத்தியினின்று உரையாற்றுவது போன்றது. இவ்வகவற் பாவிற்கு மற்றொரு பெயரும் உண்டு. ஆசிரியப்பா என்பதே அதன் மற்றொரு பெயர். நான்கு பாவகைகளுள் முதலில் தோன்றிய பா, ஆசிரிய (அ) அகவற்பாவாகும். ஆசிரியப்பாவின் தோன்றலுக்குப் பிறகே மற்ற பாக்கள் தோற்றங்கண்டன.

அகவற்பா என்றோர் பெயரிருக்க எதற்காக ஆசிரியப்பா என்ற மற்றொரு பெயர் தோன்றிற்று? எனது எண்ணத்தில் தோன்றிய கருத்து இது:-

மனிதன் முதலில் தோன்றினானா? மதம்முதலில் தோன்றியதா? என்றால், மனிதன்தான் முதலில் தோன்றினான் என்பதைப்போல, இலக்கியம் முதலில் தோன்றியதா? இலக்கணம் முதலில் தோன்றியதா? என்றால், இலக்கியமே முதலில் தோன்றியிருக்க முடியும். இலக்கியத்திற்காகவே இலக்கணம் வகுக்கப்பட்டது. இலக்கணம் தோன்றுதற்குமுன் மனிதன் தன் எண்ணங்களை எழுத்துக்களில் சொல்லக்கருதியபோது, அக்கருத்திற்கேற்றாற்போல் வரிவடிவமமைத்துச் சொல்லியிருக்கக்கூடும். பின்னாளில் கூறியவற்றுள் எவை எழுமையான வடிவம் எனக்கருதினானோ, அதனை முதன்மைப்படுத்தி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இலக்கணம் கற்பித்துக்கொண்டபின், முன்பே (இலக்கணம் கற்பிக்கப்படாததற்கு முன்பு) வரையப்பட்ட இலக்கணம் தப்பிய பாக்களை மீண்டும் குற்றம் (ஆசு) நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்ட எழுதமுற்பட்டிருக்கலாம்.

இலக்கணம் கற்பிப்பதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண ஆசுடைய பாக்களை ஒழுங்குபடுத்தவேண்டிப் பின்னாளில் இலக்கண ஆசு இரியப் பாடியிருக்கலாம். அதாவது இலக்கணம் கற்பிக்கப்படுவதற்குமுன்பு எழுதப்பட்ட இலக்கணமற்ற பாக்களை (அல்லது அப்பாக்களின் உள்ளீடுகளை (கருத்துக்களை)) குற்றங்களை நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதமுயன்றிருக்கலாம். அதன்பயனாக, பெயர்க்காரணமாக ஆசிரியப்பா என்ற பெயர் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.

நால்வகைப் பாக்களுள் முன்தோன்றிய பா இது என்பதால் இதன் இலக்கணம் அத்துணைக் கடினமில்லை. மிகமிக எளிது. ஆனால் பாநயத்தோடு எழுதுதல் சற்றே கடினமானதும்கூட. ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிய எனைய எட்டுச்சீர்களும் வரும்.
அவையாவன:- தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.

இருவகை வஞ்சித்தளைகள் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும் வரும். அவையாவன:-

1.மாமுன் +++ நேர் === நேரொன்றாசிரியத்தளை
2.விளமுன் +++ நிரை === நிரையொன்றாசிரியத்தளை

இவ்விரண்டையும் தொல்காப்பியன் கீழ்வருமாறு குறிப்பான்:-

மாமுன் நேரும் விளமுன் நிரையும்
வருவ தாசிரி யத்தளை யாமே!


3.மாமுன் +++ நிரை === இயற்சீர் வெண்டளை
விளமுன் +++ நேர் === இயற்சீர் வெண்டளை

4.காய்முன் +++ நேர் === வெண்சீர் வெண்டளை

5.காய்முன் +++ நிரை === கலித்தளை

நெடிலடியும், கழிநெடிலடியும் அல்லாத ஏனைய மூன்றடிகளே வரும். அதாவது ஓர் அடிக்கு:- இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சீர்களே வரும். அதற்குமேல் மிகா.

ஆசிரியப்பாவின் இறுதிச்சீரின் இறுதியசை:- (ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்) ஆகிய இவற்றிலொன்றைக் கொண்டு இறவேண்டும்.

தொடரும்...
அகரம் அமுதா

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா!

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா, தூங்கிசைச் செப்பலோசை வெணபா அறிந்தோம்.

இனி, ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா அறிந்திடுவோம்.

இதில், ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் வழக்கம்போல் காய்ச்சீரும் வரவேண்டும்.

இறுதிச் சீர் வழக்கம்போல் ஓரசைச் சீர். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கேப் பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

- வாக்குண்டாம்

நீங்கள் விரும்பும் பொருளில், ஒழுகிசைச் செப்பலோசை வெண்பா எழுதுக.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

வெண்பாவிற்கு உரியது செப்பலோசை.

வெண்பாவில் மூன்றசைச்சீர் அதாவது காய்ச்சீர் மட்டும் இடம்பெற்றால், அது
ஏந்திசைச் செப்பலோசை வெண்பா. (எப்போதும் போல் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர்)

ஏந்திசைச் செப்பலோசையில் வெண்பா எழுதினோம்.

அடுத்து, தூங்கிசைச் செப்பலோசை கொண்ட வெண்பா அறிவோம்.

இது, நான்கடிப் பாடல்.

இதில் ஈரசைச்சீர்கள் மட்டுமே இடம்பெறும்.

இயற்சீர் வெண்டளை பெற்று வரும். (மா முன் நிரை, விளம் முன் நேர்)

வழக்கம் போல் நான்காம் அடியின் மூன்றாம் சீர் (இறுதிச்சீர்) ஓரசைச்சீராக இருக்கும்.

எங்கள் இனத்தினர் ஈழத் தமிழரைப்

பொங்கும் சினத்தினால் பூண்டற - எங்கும்

இற்றிடச் செய்யும் இராசபக் சேயுயிர்

வற்றிடும் நன்னாள் வரும்.

- புதுவை சந்தப்பாமணி அரங்க.நடராசனார்

தூங்கிசைச் செப்பலோசை அமைய, விருப்பமான கருத்தை வெளிப்படுத்தும் வெண்பா எழுதுவோம்.

புதன், 12 ஆகஸ்ட், 2009

சொற்பொருள் பின்வரு நிலை அணி


3.சொற்பொருள் பின்வரு நிலை அணி:-

பாவுள் கையாளப்படும் ஒருசொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருமாயின் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

காட்டு:-

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை!


மேலுள்ள பாவில் “துப்பு” எனுஞ்சொல் உணவு எனும் ஒரே பொருளைத் தந்து நின்றமையான் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.

காட்டு:-

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!


மேலுள்ள பாடலை உற்று நோக்குக. சொல் என்ற சொல் பலமுறை வரினும் பொருள் மாறுபடாது ஒரே பொருளைத் தருங்கரணியத்தால் அப்பா “சொற்பொருள் பின்வரு நிலையணி” ஆயிற்று.
மேலுள்ள நிழற்படத்திற்குத் தக்க வெண்பா வரைய அனைவரையும் அழைக்கிறேன்...
அகரம் அமுதா

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா

பெயரைப் பார்த்து மருள வேண்டா!

வெண்பாவிற்கு உரிய ஒசை செப்பலோசை.

இது தெரிந்ததே.

இறுதிச்சீர் தவிர்த்த ஏனைய சீர்கள் மூவசைச் சீர்களாக அமைந்த
வெண்பா ஏந்திசைச் செப்பலோசை உடைய வெண்பா ஆகும்.

(வெண்பாவின் மூவசைச்சீர் காய்ச்சீர் என்பது தெரியும் தானே!)

ஈழத்தில் சிங்களவர் எந்தமிழ மக்களையே

போழ்கின்ற புன்செயலின் கேடடக்கி - வாழ்வளிக்க

எண்ணாநம் நாடாள்வோர் ஏதேதோ கூறுகின்றார்

கண்ணாகக் கொள்ளவில்லை காண்.

-சந்தப்பாமணி புலவர் அரங்க.நடராசன்.

இன்னிசை வெண்பாவாகவோ நேரிசை வெண்பாவாகவோ ஏந்திசைச் செப்பலோசையில் ஒரு வெண்பா எழுதலாமே!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பொருள்பின்வரு நிலையணி!

இற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!

முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-

வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!


வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.

இரண்டாவதாக:-

புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.

மூன்றாவதாக:-

திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!

நான்காவதாக:-

வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.


2.பொருள்பின்வரு நிலையணி:-

ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.

காட்டு:-

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!


மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.

இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)


அகரம் அமுதா

புதன், 5 ஆகஸ்ட், 2009

இன்னிசை வெண்பா!



இந்த முறை ஓர் எளிதான வெண்பா எழுதலாம்.

இது நான்கடிப் பாடல்.

இரண்டாமடியில் தனிச்சொல் வராது.

நான்கடிகளும் ஓர் எதுகை ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) பெற்றும் வரலாம்; முதல் இரண்டடிகள் ஓர் எதுகையுடனும், பின் இரண்டடிகள் வேறு எதுகையுடனும் வரலாம்.

வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
( நினைவுக்கு : காய் முன் நேர், மா முன் நிரை, விளம் மின் நேர்)

இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அமைந்த பாடலை இன்னிசை வெண்பா என்பர்.


எல்லாம் இழந்துவிட் டேதிலியாய் நிற்பவர்க்கு

நல்லோர் கொடையாக நல்கும் பொருள்களை

வல்லாண்மை யாக மறுத்துத் திருப்புகின்ற

பொல்லானே மண்மேடாய்ப் போ.


இந்தப்பாடல் புதுச்சேரிப் புலவர் அரங்க.நடராசனார் எழுதியது.
இப்பாடலில் நான்கடிகளும் ஓர் எதுகை ( 'ல்' ) அமைந்துள்ளது.

இப்போது, நீங்களும் உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த ஓர் இன்னிசை வெண்பா எழுதலாமே!


தமிழநம்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சொல்பின்வரு நிலையணி!

1.சொல்பின்வரு நிலையணி:-

ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு!
–அகரம் அமுதா-

மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை) ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.

இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)

அகரம் அமுதா

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பின்வரு நிலையணி!

.......... .... .... .. .... ... ... ... ... ... ... ... .. மலேசிய பேச்சாளர் பாண்டித்துரை --- அகரம் அமுதா
.
அணிவகைகளைப் பற்றி நிறையவே நான் முந்தைய பாடங்களிற் பார்த்திருக்கிறோம் ஆயினும், அவ்வவ்வணிகளுக் கேற்றாற்போல் பாப்புனைந்தோமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது வெண்பா எழுதலாம் வலையின் நோக்கம், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப் படுத்துவதும், முன்பிருந்தே எழுதுபவர்களை மென்மேலும் மெருகேற்றுவதுமேயாகும்.

அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.

அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!

இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.

1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.

இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.

இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.

இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!

அகரம் அமுதா

வெள்ளி, 31 ஜூலை, 2009

புதுமையும் எளிமையும்!


எளிமையும் புதுமையும் என்ற முந்தைய பாடத்தில், இக்காலத்தில் எளிமையாகவும் புதுமையாகவும் பாக்கள் புனைந்துவருவதைப்பற்றிப் பார்த்தோம். ஆகையால் எளிமையும் புதுமையும் இக்காலத்திற்குரியது எனக்கருதிவிட வேண்டாம். முற்காலத்தில் செய்த அளவிற்குப் புதுமையும் எளிமையும் இன்றளவும் யாரும் செய்துவிடவில்லை. செய்ததாக வேண்டுமாயின் சொல்லிக்கொள்ளலாம்.

கீழ்வரும் பாடல் வ.உ.சா அவர்களின் அரிய முயற்சியால் தேடிக்கண்டு பிடிக்கப்பட்ட “கிளவித்தெளிவு” என்ற சங்க இலக்கியத்தின் ஒரு பாடலாகும். காண்க.

கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர்
கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால்
மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால்
தேனொக்கும் என்றன் திரு!


இப்பாடலில் புரியாத தெரியாத சொல் என்று எதுவும் உள்ளதா? சங்கப்பாடல்களில் இதுபோன்று சொற்களை எளிமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாக்கள் உள்ளன.

உலகறிந்த திருக்குறள் எளிமையான சொற்களைக் கொண்டு தொன்றிய நூலேயாகும்.

அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
--தொடங்கி…
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முழங்கப் பெறின்!
--வரை 1330 பாக்களுள் ஓரிரு நூறு பாக்களே சொற்பொருள் பார்த்துப் படிக்கக் கூடியதாக இருக்கும். மற்றவை அனைத்தும் மிக மிக எளிய சொற்களால் ஆனதே!

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை!


இப்பாவில், இன்னிசை அளபெடையை நீக்கிவிட்டால் ---

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை!


அளபெடை நீக்கப்பட்ட இப்பாட்டைப் பாருங்கள். நாம் இன்று பயன்படுத்துகின்ற அதே சொற்களை அல்லவா அன்று வள்ளுவனும் பயன்படுத்தியிருக்கிறான். இப்படிச் சான்றுகள் நிறைய காட்டிக்கொண்டே செல்லலாம்.

மேற்கண்டவை போன்று எளிமையை மட்டும் செய்துவிட்டுப் புதுமை காணாது விட்டுவிடவில்லை நம்முன்னோர். பற்பல புதுமைகளையும் செய்திருக்கிறார்கள்.

காட்டிற்கு ஒன்று.

செங்கண் கருங்கோட் டெருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம்பாய்ந் –தங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடித்
தவளையும்மேற் கொண்டு வரும்!


ஓர் எருமை நீர்நிலைகளில் திரிந்து பின் கரையேறி வருகிறது. அப்படி வரும்போது அதன் முதுகுப்புறத்தில் குவளை மலர்களும், செங்கயல் மீன்களும், தவளைகளும் இருப்பதாக எருமையைக் கதாநாயகனாக்கிய பாடல்.

அறத்தைப் பாடவும், மக்களின் வாழ்வியல் நெறிகளைப் பாடவும், அரசர்களைப் பாடவும், காப்பியம் பாடவும் பயன்படுத்தப் பட்ட பாக்கள் ஓர் மிகமிக எளிய காட்சியைப் பாடவும் பயன்படுத்தப் பட்டிருப்பது கண்டு வியப்பாகவே உள்ளது. இவைப்போன்ற புதிய முயற்சிகளை அன்றைக்குப் பலரும் ஏற்றுக்கொண்டார்கள். காரணம் எத்துணைப் புதுமையாக எழுதினாலும் அவை, கவிதைகளாக இருந்தமையே. அதாவது பாவோட்டத்திற்கான அனைத்துத் தன்மைகளும் பொருந்தியமையே!

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டு
ஒன்பது பத்துப்பதி னொன்றுபன்னி –ரெண்டுபதி
மூன்றுபதி நான்குபதி ஐந்துபதி னாறுபதி
னேழ்பதி னெட்டுபத்தொன் பது!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட்ட பாடல் பொருளற்ற ஆனால் பலரையும் வியக்கவைக்கும் ஆற்றலுள்ள பாடல்களின் ஒன்று.

அவ்வையாரின் அனைத்துப் பாடல்களும் புதுமையும், எளிமையும் நிறைந்ததே.

அணுவைத் துளைத்தேழ் கடலை புகுத்திக்
குறுகத் தறித்த குறள்!
–என்றெழுதி விஞ்ஞானத்தாலும் அன்று கண்டறியப்படாத அணுவைத் தன்பாட்டில் வைத்துப் புதுமை படைக்க முடிந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!

ஆக, புதுமையும், எளிமையும் இக்காலத்திற்கே உரியதல்ல. அது தொன்றுதொட்டு வருவது. நாம் எத்துணைப் புதுமை, எளிமை செய்யப்புகுந்தாலும் மரபின் தன்மை மாறாமலும், தமிழின் கட்டுக்கோப்பைச் சிதைக்காமலும் எழுதிவருவோமாயின் அதுவே மிகப்பெரிய புரட்சிதான். புரட்சிக்கவி எனப் பெயரெடுத்த பாரதி தாசன்கூட தமிழ் இலக்கணத்திற்கும், தமிழ்மரபிற்கும் உட்பட்டே தனது புரட்சிகரமான கருத்துக்களை வழங்கினார்.

ஆகவே! நண்பர்களே! புதுமைசெய்யப் புறப்படுங்கள், எளிமைசெய்ய எழுந்திருங்கள் அதுபோது தமிழ்மரபு சிதையா வண்ணம் அதை நிகழ்த்தப் புறப்படுங்கள்.
மேலுள்ள படத்திற்குப் பொருத்தமான வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இன்னல் அகலும் இனி!


அகரம் அமுதா

என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (2)


சென்ற இடுகையில் பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் (மேலுள்ள) குறுங்கவிதையை வெண்பாவாக்க முயலுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். உடன்பிறப்புக்கள் யாரும் அப்பணியைச் செய்ய முன்வரவில்லை. கரணியம் யான்றியேன்.

கவிஞர்கள் யாரும் முன்வராக் கரணியத்தால் அப்பணி என்தலைமேல் ஏறிக்கொண்டதால், மனதில் பெரும் அச்சம் தொற்றிக்கொண்டது. “இப்பணியைச் செவ்வனே என்னால் செய்துமுடிக்க முடியுமா?” என்று.

எனினும் முயன்றுபார்த்தேன். அப்பாவைப் பார்க்குமுன் ஓர் தெளிவு:-

பொதுவாக புதுக்கவிதைகள் தோன்றுவதற்கும், தோன்றிப் பெருவளர்ச்சிக் காண்பதற்கும் முழுமுதற் கரணியம் ஒப்பனை இன்மை எனலாம். எதையும் சுற்றிவளைத்துச் சொல்லாது, அம்புபொல் நேரடியாகத் தைக்க வேண்டும் என்பதே புதுக்கவிதையாளர்களின் போற்குரல்.

இப்படிப் போற்குரல் எழுந்தகாலத்தில் மரபுக்கவிதை தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. புதுக்கவிதையாளர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை ஓரளவிற்கு நிறைவு செய்தும் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவுசெய்ய வில்லை. கரணியம் யாதெனில் மென்மேலும் மரபை எளிமைப் படுத்தும்போழ்து அதன் மூலத்தன்மை கெட்டுவிடுகிறது. அதனை உணர்ந்தமையால் ஓரளவிற்கு எளிமைப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டனர் எனலாம்.

சரி. மேலுள்ள குறுங்கவிதைக்கான வெண்பாவைக் காணும் முன்னம் மேலும் ஓர் விளக்கம்:-

பொதுவாக ஓர் வடிவத்தில் உள்ள கவிதையை அல்லது ஓர் மொழியில் உள்ள கவிதையை, வடிவ மாற்றமோ, மொழிமாற்றமோ செய்யும் போது, மாற்றம் செய்யப்படுவதன் மூலவடிவம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பதிவுசெய்யாது, மாற்றம் செய்பவர் தனது கருத்தையும் இடையிடையே ஏற்றுவதால் மூலத்தன்மைக் கெட்டு வேறோர் தோற்றத்தைக் கொண்டுவிடுகிறது.

இம்முறையில் எழுதப்புகுவது முழுக்க முழுக்க தவறேயாகும். இக் குற்றச் சாட்டிற்குக் காட்டாக மேலுள்ள குறுங்கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.

அவனடிமை அவர்கள் முந்தைய இடுகையின் மறுமொழியில் உரைத்தமைப்போல, பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதே “செய்திகளால் கடவுளாக்கப் பட்டவனை வரலாறு மனிதனாக்கும்” கவிதை வரிகளாகும்.

இவ்வரிகளை, பேருயிரி (மகாத்மா) என அழைக்கப்படுகிற காந்திக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இந்துமத தலைவர் எனச்சொல்லித்திரிகிற சங்கராச்சாரியாருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். முத்தமிழ் அறிஞன் எனத் தன்னைச் சொல்லித்திரிபவருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். தமிழினத் தலைவர் எனத்திரிவோருக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன்? எனக்கும், உங்களுக்கும், நம் அனைவருக்கும் பொருத்துப் பார்த்துக்கொள்ளும் படியான வரிகளே மேலுள்ளவை. (கவிஞர் எண்ணிச் செய்தது ஈழத்தலைவனை மனதில் எண்ணியே என்பதறிக)

இக்குறுங்கவிதைக்குப் பொருளுரைக்கப் புகுவோர், எக்கருத்தோடு அக்கவிதையைத் தொடர்பு படுத்துகிறார்களோ, அக்கருத்துக்குள் அக்கவிதை முடங்கிவிடுகிறது. பிரிதொருவன் பொருளுரைக்கப் புகும் போது, அவன் உரைக்கப் புகும் கருத்து என்கிற கட்டத்துக்கள் அடைப்பட்டுவிடுகிறது. இப்படிப் பற்பல கருத்துக்களோடு தொடர்புபட, இக்குறுங்கவிதை விளங்குவதற்குக் கரணியம் எக்கருத்தையும் வெளிப்படையாகப் பேசாது, பொதுப்படையாகப் பேசுகின்ற அத்தன்மையே!

இக்கவிதையை வெண்பா என்ற வடிவத்தில் திணிக்கும் போது, ஓர் குறிப்பிட்ட கருத்தை முதன்மைப் படுத்தி, அக்கருத்து வெளிப்படையாதல் போல் வெண்பா வார்ப்போமாயின், மூலக்கவிதையின் நேரடித் தரவிறக்கமாகாது. ஆக, மூலக்கவிதை பேசப் புகும் பொதுத்தன்மையை அப்படியே உள்வாங்கின் கொண்டு, வடிக்க விருக்கும் வெண்பாவும் பொதுத்தன்மை பேசுவதாக அமைவதே சாலச் சிறந்தது எனும் கட்டளையை மனதிற் பிறப்பித்துக் கொண்டு, பிறகே வடிவ மாற்றம் செய்யப் புகுந்தேன். குறிப்பாக புதுக்கவிதை வெறுத்தொதுக்கும் ஒப்பனை என்ற அணியை அகற்றிவிட்டு, மூலகவிஞன் எச்சொற்களைப் பெய்து கவிதை செய்தானோ? அச்சொற்களைக் கொண்டே வடிவமாற்றம் செய்வதே முறைமை எனப்பட்டதாலும், அதுவே புதுக்கவிதையாளர்களையும் மரபை விரும்ப வழிவகுக்கும் என்பதாலும் எனது மொழிநடையைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு மூலகவிஞனின் சொற்களைக் கொண்டே வெண்பா என்ற வடிவத்திற்குள் நுழைக்க முற்றட்டிருக்கிறேன்.

மீண்டும் மேலுள்ள குறுங்கவிதையைப் படித்தபின் கீழுள்ள குறள் வெண்பாவைக் காணவும்:-

வரலாறு மாற்றும் மனிதனாய்; செய்தித்
துறைஇறையாய்ச் செய்தவ னை!


மேலுள்ள வெண்பாவை மூலக்கவிதையின் பொதுத்தன்மையைத் தனதாக்கிக் கொண்டு, அப்பொதுத்தன்மையினின்று விலகாமல், வடிவமாற்றம் செய்ய வேண்டும் என்கிற அக்கறையால் எதுகை மோனை பொன்றவற்றை விட்டுச் சற்றே விலகியும் வந்துள்ளேன். இருப்பினும் ஓரளவேனும் வெண்பாவின் தன்மை கெடாது தோற்றங்காட்டுவதால் யாவருக்கும் விருந்தாக்கியிருக்கிறேன்.

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையின் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு மேலும் ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டுச் சென்றுவிட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் கோ. கண்ணன் ஆவார்.

இக் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- பாவும் தமிழுமினிப் பாழ்!


அகரம் அமுதா

செவ்வாய், 28 ஜூலை, 2009

என்றும் நிகழ்காலம் எங்கள் எதிர்காலம்! (1)

இணைய இதழாகிய கீற்று.காமில் அறிவுமதி அவர்களின் "என்றும் நிகழ்காலம்" என்ற தலைப்பிலான ஓர் குறுங்கவிதையைப் படிக்க நேர்ந்தது! வியந்தேன், வியந்தேன், வியந்துகொண்டே இருக்கிறேன். இதன் பொருளை நன்குணர்ந்து வெண்பாவில் வழங்க யாவரையும் வேண்டுகிறேன்.


அகரம் அமுதா

சனி, 25 ஜூலை, 2009

ஈயூர இல்லை இடம்!

அடுத்த பாடத்தை இன்னும் இரு நாட்களின் தருகிறேன். அதற்குமுன் ஓர் ஈற்றடி. சவுக்கடியார், "சொல்லே மிகவும் சுடும்" என்ற ஈற்றடிக்குச் செய்தளித்த பாப்போல இன்றைய நாட்டு நடப்போடு பொறுத்திப்பார்த்து எழுத வேண்டுகிறேன்.

இனி வரும் பாடங்களில் ஒரு நிழற்படம் அல்லது குறும்படம் வழங்கப்படும். அவற்றிற்கும் பொறுத்தமான பாவடிக்க வேண்டுகிறேன்.



இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈயூர இல்லை இடம்!

அகரம் அமுதா

செவ்வாய், 21 ஜூலை, 2009

எளிமையும், புதுமையும்!

பாரதிக்குப் பின் வெண்பாவில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணராய்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நால்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். ---நாலடியார்---

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்கு கொக்கொக்க கைக்கைக்கு
காக்கைக்குக் கைக்கைக்கா கா! ---கவி காளமேகம்---

என்றெல்லாம் எழுதிவந்த காலத்தில்…

எமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் –உமைக்கினிய
மைந்தன் கணநாதன் வாழ்விப்பான் நற்குடியை
சிந்தையே இம்மூன்றும் செய்! ---பாரதி---

தன்மேனி மாசுகளைத் தான்கண்டு நீக்கிவிடக்
கண்ணாடி உன்முகத்திற் கண்விழிக்கும் –உண்மையம்மா!
விண்ணில் குளிக்க விதியில்லை என்றேஉன்
கண்ணில் குளிக்கும் கடல்! ---கவிப்பேரரசு வைரமுத்து---

புதுமைப்பித்தன் காலத்தில் ஓர் புதுமை நிகழ்ந்தது. நிகழ்த்தியவன் புதுமைப்பித்தனே! எளிமையான பல வெண்பாக்கள் செய்திருக்கிறான். அவற்றிலொன்று…

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணாள முன்னாக் கசக்குதா? –அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா(ள்)
போயேன் தொலைஞ்சிப்போ யேன்! ---புதுமைப்பித்தன்---


இதற்குப்பிறகு, தொடர் வண்டியின் பெட்டிகளைப்போல பலரும் எளிமையான வெண்பாக்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்…

இங்கிலீஸ்ல பத்து தமிழில் இருவது
விஞ்ஞானத் தில்கணக்கில் எவ்வேயாம் –அஞ்சி
புவியியலில் ஆறு வரலாறில் எண்டா!
எவன்டாடே வாத்தி ஒனக்கு? ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


எம்பிள்ளை வர்ரச்சே தாங்கதவைச் சாத்தனுமா?
எம்பிள்ளை பிச்சையா கேக்கவந்ததான்? –எம்பிள்ளை
குந்த இடமில்லே? பிளாக்கண்ட்ஒய்ட் டீவிக்கே
இந்தஜென்பம் ஏதுக் கடீ! ---ஆகாசம்பட்டு சேஷாசலம்---


பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் –அங்கங்கே
சிங்கி யடிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்! ---தஞ்சை இனியன்---

வள்ளுவன் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கின்றார் ஏனென்றால் –உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்! ---சுஜாதா---


இப்படிப் பற்பலரைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் வழியில் அடியேனும், (ஆயினும் சற்றே மாறுபட்ட கோணத்தில்) பற்பல முயற்சிகளைச் செய்துபார்த்திருக்கிறேன். அவற்றுள் சில…

நாம் அனைவரும் அன்றாடம் பேருந்தில் பயணிப்பது தவிற்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்ட நெரிசல் வேறு. நடத்துனர்களின் ஆளுமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பயணிகளை ஆடுமாடுகள் எனக்கருதி இங்குநகர், அங்குநகர் என வறுத்தடுத்தவிடுவர். இச்சூழலை மனத்திற் கொண்டு எழுந்தவையே பின்வரும் இருவெண்பாக்கள்.

கண்டக்டர்:-
இந்தாப்பா! பஸ்ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!?
வந்துட்டான் என்உசுர வாங்கன்னே –அஞ்சிருவா
சீட்டுக்குச் சில்லைரைய நீட்டாம நூறுருவா
நோட்டெடுத்து நீட்டறியா நீ?!

பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோத்துநான் அங்கநின்னா –சேட்டையக்
காட்டுற; அங்கயிங்க ஓட்டுற; நோட்டுதந்தா
நீட்டுற; சில்லரைக்கே சீட்டு?

தேநீரைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரர்கள் குடிக்கிறார்களோ இல்லையோ அதுதெரியாது. ஆனால் தமிழனால் காலையில் தேநீர் குடிக்காமல் காலைக்கடன்களைக் கழிக்கவே முடியாது என்றாகி விட்டது. ஊருக்கு ஊர் தெருவிற்குத் தெரு தேநீர்கடைகள் முளைத்துப் புற்றீசல்கள் போல் பெருகி விட்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் நானுரைப்பதன் உண்மைப் புரியும்.

அதுவும் நம்மீர்களில் தேநீர் அருந்திக்கொண்டே செய்திதாள்களை நோட்டமிடுவது கண்கூடு. இச்சூழலைப் பாட முனைந்ததைப் பாருங்களேன்…

கஸ்டமர்:-
டிக்யாஷன் இல்லாமல் டீயொன்னு போடப்பா!
பக்காவாப் போட்டாப் பணமுண்டு –அக்கவுண்டில்
கேக்கிறதா எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டின்னா
சாக்கடைக்குப் போய்டுஞ் சரி!

கடைக்காரன்:-
டீக்கடைப் பெஞ்சிலும் டிக்கியப் பார்க்பண்ணி
பாக்கிவெச்சிப் பால்டீயாக் கேக்குற –போக்கிடம்
வேறின்றிப் பேப்பருல வெச்சக்கண் வாங்காம
ஆறிடம்ஆர் டர்போடு றே!?

இன்றைக்கு அறிவுரை சொல்லாத ஆளே கிடையாது. இதனைக் கருத்திற் கொண்டு எழுந்தது பின்வரும் வெண்பா…

எம்.ஏ படிச்சதுக்(கு) ஏத்தவேல வேணுமுன்னு
சும்மாத் திரிஞ்சா சுகப்படுமா? –பம்மாத்துக்
காட்டாம கைக்குக் கிடைச்சவேலை பாத்தாத்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!


எளிமையாக எழுதப்புகும் அதே வேளையில் கவிதைக்கான நயம் குன்றாது செழுங்கற்பனையேற்றிப் பாட மறந்துவிடக்கூடாது. அதற்காகவே மேலே பல காட்டுக்களை வழங்கினேன். புதுமையாக வெண்பாப்படைக்க விரும்புவோர் யாவரும் தான் கண்ட காட்சியையோ? நிகழ்ச்சியையோ? எதைவேண்டுமானாலும் கவிதையாக்கலாம். இருப்பினும் அவை இறுதியில் கவிதையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலம் கணக்கில் வைத்துக்கொள்ளாமல் விட்டுவிடும்.

புதுக்கவிதை என்றும் புகழ்மற பென்றும்
குதிக்கிற திங்குரெண்டு கூட்டம் –எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா!
சூழும் பகைவற்குச் சொல்! ---வைரமுத்து---

வெண்பா வடிவத்தில் எழுதுவதால் மட்டுமே அவையாவும் கவிதையாகிவிடாது. இறுதியில் கவிதைக்குறிய நயத்துடன் இருக்க வேண்டும். இதனை மனத்தில் இறுத்திக்கொண்டு புதிய புதிய துறைசார்ந்த, பொருள் சார்ந்த வெண்பாக்களைத்தீட்ட முற்படுவோமாக.

இக்கிழமைக்கான புதிய முயற்சி:-
குறும்படம் ஒன்று காண நேர்ந்தது. பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோனேன். இக்குறும்படத்தில் இறுதியில் காட்டப்படும் இருவிழிகள் என்னச்சொல்ல விழைகின்றன என்பதை வெண்பாவாக்க வேண்டுகிறேன். குறும்படம் பார்க்க இங்குத்தட்டவும்!

இக்கிழமைக்காண ஈற்றடிகள்:- “நெருப்பில் விழுந்த நிலவு!” அல்லது, “நிலவில் பிறந்த நெருப்பு!”


அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

சொல்லிலக்கணம் - I

நம் வலைப்பதிவுக்கு வெண்பா எழுத வந்தவர்கள் சிலருடைய வெண்பாக்கள் அவர்கள் எழுதியபடி தளை சரியாக இருந்தும் பிழை திருத்தப்பட்டதற்குக் காரணம் அவைகளில் புணர்ச்சி சரியாக அமையாதது தான்.

அதனால் நீங்கள் இப்பொழுது முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது புணர்ச்சி விதிகளே. புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வதற்கு முன் சொல்லிலக்கணத்தைக் கற்றுக் கொண்டால் சில புணர்ச்சி விதிகளைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். இவைகள் பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் இவைகளைக் கற்றுக் கொண்ட பிறகே புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வது நலம். அதனால் நாம் முதலில் சொல்லிலக்கணத்தைப் பார்ப்போம்.

1. திணை
  • மக்களைக் குறிப்பது உயர்திணை - எ. டு. அவன், தேவி, அவள், கண்ணன்.
  • மக்களைத் தவிர்த்து மற்றவைகளைக் குறிப்பது அஃறிணை.

2. பால் (Gender)
  • ஆணைக் குறிப்பது ஆண்பால். - அவன்
  • பெண்ணைக் குறிப்பது பெண்பால். - அவள்
  • ஒருவன், ஒருத்திக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். - அவர்கள்
  • அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன்பால். - அது, மரம்
  • அஃறிணையில் பல பொருட்களைக் குறிப்பது பலவின்பால். - மரங்கள்
3. எண்
  • ஒன்றைக் குறிப்பது ஒருமை (singular) - வீடு
  • ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை (Plural) - வீடுகள்

4. இடம்
  • பேசுபவனைக் குறிப்பது தன்மை (First person) - நான்
  • பேசுபவனக்கு எதிரில் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை (Second person) - நீ, நீங்கள்.
  • இவ்விருவரையும் தவிர்த்த மற்றவர்களைக் குறிப்பது படர்க்கை (Third person) - அவர்கள்.
5. காலம்
  • நிகழ்காலம் (Present tense) - வருகிறான்
  • இறந்த காலம் (Past tense) - வந்தான்
  • எதிர்காலம் (Future tense) - வருவான்

6.
பெயர்ச்சொல் (Noun)
  • பொருட்களைக் குறிப்பது பொருட்பெயர் - தேர், கதவு.
  • இடத்தைக் குறிப்பது இடப்பெயர் - சென்னை.
  • காலத்தைக் குறிப்பது காலப்பெயர் - சித்திரை, இரவு.
  • முழுப் பொருளின் ஒரு பகுதியைக் குறிப்பது சினைப்பெயர்- வால், கை.
  • பண்பினைக் குறிப்பது பண்புப்பெயர் அல்லது குணப்பெயர் - செம்மை, நீளம்.
  • தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற் பெயர்- பெறுதல், கெடுதல், கொள்ளுதல், இடர்ப்படுதல்.

7.
முதனிலைத் தொழிற் பெயர்
  • தொழிற் பெயர் முழுமையாக வராமல் பகுதி மட்டும் நின்று பொருள் தருவது முதனிலைத் தொழிற் பெயர் - பெறு, கெடு, கொள், இடர்ப்படு.
8. முதனிலை திரிந்த தொழிற் பெயர்
  • தொழிற்பெயரின் முதனிலை திரிந்து வேறு சொல்லாகி அதே தொழிற்பெயரின்பொருளைத் தருவது முதனிலை திரிந்த தொழிற் பெயர் - பேறு, கேடு, கோள், இடர்ப்பாடு.

9.
வினையாலணையும் பெயர்
  • ஒரு வினைச்சொல் வினையையும் வினையைச் செய்பவனையும் குறித்துபெயர்ச்சொல்லாக வருவது வினையாலணையும்பெயர் - விடுத்தோன், படித்தோன்.

10.
வினைச்சொல் (Verb)
  • ஒரு செயலையும் அந்த செயலின் காலத்தையும் குறிப்பது வினைச்சொல் - படித்தான்.

11.
பெயரெச்சம் (Adjective)
  • பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரச்சம் - நட்ட நடவு, பார்த்த பார்வை.(எச்சம் என்பது முடிவு பெறாத ஒரு சொல் - நட்ட, பார்த்த.)

12.
வினையெச்சம் (Adverb)
  • வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் - வந்து போனான், நடந்துவந்தான்.
-------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து ஈற்றடியே தந்து கொண்டிருக்காமல் கொஞ்சம் புதுமைகள் புகுத்துவோம் என்றார் அகரம். அமுதா. அதனால் இந்த முறை ஈற்றடிக்கு பதிலாக வெண்பாவிற்கான கருப்பொருளை மட்டும் தருகிறேன்.

இக்கிழமைக்கான கருப்பொருள் - "வானம்" அல்லது "மேகங்கள்"

கவிதைக்கு பொய் அழகு என்பதும் உண்மை தானே. வானத்தையும் பல வித கற்பனைகளுக்குள் கொண்டு வரலாம்.

எ. டு.

வெண்ணிலவின் பிம்பத்தைத் தொட்டுவிட்ட மோகத்தால்
அந்நிலவின் மேனியையும் தொட்டுவிடும் பித்தமுற்று
நீலக் கடல்விரித்த நீளலைக ளேவானிற்
கோலமுகிற் கூட்டமெனக் காண்.
-இராஜகுரு


இராஜகுரு

வெள்ளி, 10 ஜூலை, 2009

சொல்லே மிகவும் சுடும்!

இக்கிழமைக்கான ஈற்றடி - சொல்லே மிகவும் சுடும்!

அகரம் அமுதா

புதன், 8 ஜூலை, 2009

காண வருமாங் கனி!

இக்கிழமைக்கான ஈற்றடி:- காண வருமாங் கனி!

அகரம் அமுதா

வெள்ளி, 26 ஜூன், 2009

ஈற்றெடுப்பு!

பொதுவாக, பண்டு புலவர்கள் பாக்களுள் பற்பல ஆய்வு முயற்சிகளைச் செய்து பார்த்ததுண்டு. அவற்றுள் ஒன்றே ஈற்றெடுப்பு. 'அதென்ன ஈற்றெடுப்பு?' என்கிறீர்களா? இதைத்தான் வடமொழியாளர்கள் 'அந்தாதி' என்கின்றனர்.

இவ் 'அந்தாதி' என்ற வடமொழிப் பெயருக்கு என்ன தமிழ்ப் பெயர் அமைக்கலாம் என முகவை மகனாரோடு ஆய்வுரை நிகழ்த்தியபோது 'அடிதொடர்' என்ற பெயர் 'அந்தாதி' என்ற வட சொல்லிற்கு நேர்ப்பொருளாக அமையும். ஆக 'அடி தொடர்' எனப் பெயர் சூட்டிவிடலாம் என்றார். மேலும் பற்பல சோற்களைப் பொறுத்திப் பார்த்தோம். அவற்றில் குறிப்பிடத் தக்கவை - 'அடிதொடர், அடிமுதல், அடிமுதலி போன்றவை.

இருப்பினும் அடி என்கின்ற சொல் 'வரி' -அதாவது பாவின் ஓரடியைக் குறிக்கும் ஆதலால் பாவின் இறுதிச்சொல்லைக் குறிப்பதற்கு 'ஈறு' அல்லது 'ஈற்றுச்சொல்' என வழங்கப் படுவதறிந்து நானும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்களும் எண்ணிப்பார்த்து அலவலாவியபோது 'ஈற்று முதலி' அல்லது ஈற்றெடுப்பு' என அழைப்பதே சாலச்சிறந்ததாகும் எனவும், அது நேரடி வடமொழியின் மொழிபெயற்பாக இல்லாமல் முழுக்க முழுக்க தமிழுக்குறிய சொல்லாட்சியாக அமையும் எனமுடிவெடுத்து அமைக்கப் பட்டதே 'ஈற்றெடுப்பு; (அ) ஈறுமுதலி) என்னும் இப்பெயர்கள்.

இதன் இலக்கணத்தைப் பார்ப்போம். வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறை போன்றவற்றில் இம்முறையைப் பின்பற்றி எழுதுவதுண்டு. எழுதப்படும் பாடலின் இறுதிச்சீரை, தொடரும் பாடலின் முதற்சீராக அமைத்தெழுதுதல் ஈற்றெடுப்பாகும்.

காட்டுகள்-

யாவர்க்கும் நல்லாளா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! -ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து.

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்ந்து
வாழும் இனமாய் வகைசெய்தாய்! -பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்ந்தாய் எழுந்து.

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற் குரியோய்! -அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு.

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழ புகுந்தேன் அணைந்து. ---அகரம் அமுதா ---

முதற் பாவின் ஈற்றுச்சீராகிய 'தாழ்தல்' எனும் பொருளுடைய, 'தாழ்ந்து' எனுஞ்சொல் இரண்டாம் வெண்பாவின் முதல் சொல்லாய் வந்து நின்றமை நோக்குக. இப்படி நிலைப்பாடலின் இறுதிச் சொல்லும் வரும் பாடலின் முதற்சொல்லும் ஒன்றாதல் 'ஈற்றெடுப்பு' ஆகும். மேலும் நிலைப்பாடலின் இறுதி சொல் மட்டுமன்றி, இறுதிச்சீரின் முதல் எழுத்தோ அல்லது இறுதி எழுத்தோ, ஒன்றப்பாடுவதும் ஈற்றெடுப்பே ஆகும்.

காட்டுகள் -

தவறுணர்ந்து பேணத் தலைப்படு; தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!

புட்டிப்பால் ஆகும் பிரவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!


மேலிரண்டுப் பாடல்களும் தமிழைச் சீரழிக்கும் நோக்கில் மொழிக்கலப்புச் செய்வோரையும் தமிழைப் பேணாரையும் சாடி நான் எழுதிய ஈற்றெடுப்பின் இடைப்பட்ட இரண்டுப் பாடல்கள். அவற்றை உற்று நோக்குக. 'இயம்பு' என்ற முதல் குறளின் ஈற்றுச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய 'பு' அடுத்த பாடலின் முதல் சொல்லின் முதல் எழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்குக.

கடிது தமிழென்பார் கண்ணிலார்; தேடிப்
படித்தயலைக் காப்பார் ரிந்து!

படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!


இவ்விரு பாடல்களை நோக்குக. முதற்பாடலின் ஈற்றுச்சீரின் மதலெழுத்து வரும்பாடலின் முதலெழுத்தாகி ஈற்றெடுப்பானதை நோக்கவும்.

இவ்வகையின் ஈற்றெடுப்பை முயன்று பார்க்குமாறு வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி - எழுத்துப் பிழைநீக் கியன்று!

அகரம் அமுதா

சனி, 20 ஜூன், 2009

ஐகாரக் குறுக்கம்

வாசகர்களுக்கு வணக்கம்,

வெண்பா எழுதலாம் வாங்க வலைப்பதிவில் நண்பர் திரு. அகரம் அமுதா அவர்களுடன் இனி நானும் இணைகிறேன்.

இவ்வலைப்பதிவில் என் முதல் பதிவு...

வெண்பாவின் ஈற்றடியைத் தந்திட வித்தளத்திற்
கன்புடனே என்னை யழைத்தமைக் காயல்ல
இன்டமிழின் வெண்பாச் சுவையதனை எந்தமிழர்

நன்கறியச் செய்தமைக்காய் ஞாலமுள மட்டும்
சிகரங்கள் தொட்டே சிறந்தோங்கி வாழ்க
அகரம் அமுதாப் புகழ்.
-இராஜகுரு.


"ஐ" என்பது நெடில் எழுத்தே. மாத்திரை அளவில் சொன்னால் 2 மாத்திரை.
ஆனால் ஐகாரம் எல்லா இடங்களிலும் நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலேயே ஒலிப்பதில்லை.

ஐகாரம் சொல்லின் இடையிலும் முடிவிலும் வரும் பொழுது நெடிலெழுதுக்குண்டான 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து குறிலெழுதுக்குண்டான 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் முதலில் வரும்பொழுது 1 1/2 மாத்திரை அளவு ஒளிக்கு. "ஐ" என்று தனித்து ஒலிக்கும் போதே 2 மாத்திரை அளவு ஒலிக்கும்.

இது தெரியாதவர்கள் ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களை தவறாக அசை பிரித்து வெண்பாவையும் தவறாக எழுதக்கூடும்.

அதனால், ஐகாரத்தை இடையில் கொண்ட சொற்களில் ஐகாரத்தை குறிலாகவே கொண்டு அசை பிரிக்க வேண்டும்.

எ.கா


1. அகந்தையினால் - அகந் / தையி / னால் ('அகந் / தை / யினால்' என்பது தவறு)
2. அருமையினால் - அரு /மையி /னால் ('அரு / மை / யினால்' என்பது தவறு)

இந்த இரண்டு சொற்களிலுமே ஐகாரம் குறுகுவதை நன்கு கவனிக்கலாம்.

'அகந்தையினால்' என்பதற்கும் 'அகந்தயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.
'அருமையினால்' என்பதற்கும் 'அருமயினால்' என்பதற்கும் உச்சரிப்பு ஒன்றே.

இதன் காரணம் ஐகாரம் குறுகுவதே .

ஆக, அசை பிரித்தல் என்பது எழுத்துகளைச் சார்ந்ததல்ல. எழுத்துகளின் கோர்வையினால் எழுகின்ற ஓசையைச் சார்ந்தது.

நாம் இங்கு எடுத்துக்காட்டாக பார்த்த இரண்டு சொற்களுமே ஒரு சரித்திரத்தையே சொல்லக்கூடிய இரண்டு வெண்பாக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
அவை,

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

ஆண்டி லிளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சினைப் பயல்.
-மகாகவி பாரதி

இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இலக்கியத்தில் உண்டு.

முத்துக்
கவிப்பந்தல் முன்னே நிழல்போடப்
பித்தக் கவிதைகளைப் பேசுகிறேன் - முத்தமிழே!
பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சென்பேன்; என்பாடல்

வெள்ளைக் கனவின் விரிப்பு.
-கவிப்பேரரசு வைரமுத்து

பெற்றெடுத்தப் பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு.

-இராஜகுரு

இக்கிழமைக்கான ஈற்றடி - "மனம்மயக்கும் மாயத் தமிழ்"

இராஜகுரு

ஞாயிறு, 10 மே, 2009

உய்வதும் வாழ்வா உணர்

இக்கிமைக்கான ஈற்றடி:- "உய்வதும் வாழ்வா உணர்!"

சனி, 9 மே, 2009

தண்ணென மாறும் தழல்!

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தண்ணென மாறும் தழல்!"

செவ்வாய், 5 மே, 2009

வெப்பம் உயரும் உலகு!

இக்கிழமைக்கான ஈற்றடி: "வெப்பம் உயரும் உலகு!"

வியாழன், 26 மார்ச், 2009

முடியடி!

வெண்பாக்களைப் பலவாராக வகைபிரித்து எழுதித் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துபவர்கள் உண்டு. வெண்பாவிற்குள் புதிய புதிய நுணுக்கங்களைக் கையாள போந்தாரும் உண்டு. அந்த வகையில் இப்பாடத்தில் முடியடி பற்றிப் பார்ப்போம்.

அதென்ன முடியடி?

தலையில் சூடும் மகுடத்தை முடி என்கிறோம் அல்லவா. அதுபோல பாதத்தை அடி என்கிறோம் அல்லவா. மேலாக அமைந்திருப்பது முடி. இறுதியாக அமைந்திருப்பது அடி அதாவது பாதம்.

இங்கே, வெண்பாவின் தலைச்சொல்லாகிய முடியும் ஈற்றுச் சீராகிய அடியும் ஒன்றி நிற்பது முடியடி எனப்படும்.


அதாவது வெண்பாவின் துவக்கச் சொல்லைகிய முதற்சொல்லையே இறுதிச் சொல்லாகவும் (ஈற்றுச் சீராக)கொண்டு முடிப்பதற்குப் பெயர் முடிஅடி என்பர்.

காட்டு:-

பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாந் தமிழைப் பிடி!
அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை உற்று நோக்குக. குறளின் துவக்க அசையாகிய "பிடி" எனும் அசையே ஈற்றடியன் ஈற்றுச்சீராகப் பெற்றமையால் இக்குறள் "முடிஅடி" வகையாகும்.

மலரென்னும் மேனி வயலைநான் மேய
மலர்ந்திட்டாள் வாடா மலர்!


முடியும்; முயன்றால் முடியும்; முயன்றே
முடியோ டடியை முடி!


இக்கிழமைக்கான ஈற்றடி:- கூட்டணி யாருடனோ கூறு!


அகரம் அமுதா

புதன், 4 மார்ச், 2009

38 விளாங்காய்!

பொதுவாக வெண்பா எழுதும் நம்மில்பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எழுதிவிடுகிறார்கள். புதிதாக வெண்பா எழுதுபவர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது.

அதென்ன விளாங்காய்? அசைபிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா?

ஈரசைச்சீர்கள்:-

நேர்நேர் -தேமா
நிரைநேர் -புளிமா
நிரைநிரை -கருவிளம்
நேர்நிரை -கூவிளம்

மூவசைச்சீர்கள்:-

நேர்நேர்நேர் -தேமாங்காய்
நிரைநேர்நேர் -புளிமாங்காய்
நிரைநிரைநேர் -கருவிளங்காய்
நேர்நிரைநேர் -கூவிளங்காய்


வெண்பாவைப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர்களே இயன்றுவரும் என்பது யாவரும் அறிந்ததே.

பூவரசு -இச்சொல்லைப் பிரித்துப்பார்ப்போம்.

பூ/ அர/ சு -நேர் நிரை நேர் -கூவிளங்காய் (பூ -நெடில், அர -குறிலிணை, சு -குறில்) ஆக இணைந்து கூவிளங்காயாயிற்று.

சொன்னதாரோ -இச்சொல்லை அசைபிரிக்கும் போதும் நாம் "சொன்/ னதா/ ரோ" -நேர் நிரை நேர் -கூவிளங்காய் என்றே அசைபிரிக்கிறோம். (சொன் -குறிலொற்று, னதா -குறிநெடில், ரோ -நெடில்) ஆக கூவிளங்காய் என்றாயிற்று.

முன்னோர் வழங்கும் முறைப்படியும் அசைபிரிக்கும் வாய்பாட்டுப் படியும் "சொன்னதாரோ"
எனுஞ்சொல்லைக் கூவிளமாகக் கொள்வதே சரி.

ஆயினும் வெண்பாவிற்குள், "சொன்னதாரோ" என்பனபோன்ற சொற்கள் (நடுவசை குறிநெடிலாக அமைவது) பெரும்பகுதி வராது தவிற்பதே நன்று.

காய்ச்சீராக அமைந்த ஒருசொல்லின் நடு அசை "குறிநெடிலாக" அமைவதை விளாங்காய் என்கிறோம்.

காட்டுகள் சில:-

சன்/னலோ/ரம் -கூவிளாங்காய்
மங்/கலா/ன -கூவிளாங்காய்
வெத்/துவே/ட்டாய் -கூவிளாங்காய்


சரி. விளாங்காயாக அமைந்தசீர் ஏன் வெண்பாவில் வரக்கூடாது? இப்படியொரு கேள்வியெழுவதும் இயல்பே. காரணம் என்னவென்றால் வெண்பாவில் காய்ச்சீர் இயல்பாக, அதாவது நடுஅசை "குறிலிணை"யாக அமைகிறபோது எழும் ஓசையும் அதே நடுஅசை "குறிநெடி"லாக அமையும்போது எழும் ஓசையும் மாறுபட்டவை. அசைப்படி பார்த்தால் இரண்டும் கருவிளங்காய் அல்லது கூவிளங்காய்ச்சீர்களே. ஆயினும் ஓசைஅடிப்படையில் விளாங்காயாக அமையும் சீர் வெண்பாவின் ஒசையை மணித்துளிநேரம் (நிமிடநேரம்) நீட்டித்து வெண்பாவிற் குறிய இயல்போசையைக் கெடுத்துவிடுவதாக நம் முன்னோர்கள் கருதுகிறார்கள்.

யானறிந்த எந்த மரபிலக்கியங்களிலும் விளாங்காய்ச்சீர் அமைத்து எழுந்த வெண்பாக்களை நான் இதுவரைக் கண்டதில்லை.

கீழ்வரும் தஞ்சை இனியனின் வெண்பாவை வாய்விட்டு ஓசையோடு படித்துப் பாருங்கள்.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் -அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்!
-தஞ்சை இனியன்

இரண்டாமடியின் முதற்சீரும், இரண்டாம் சீரும் ஓசை அடிப்படையில் நீள்வதைத்தங்களால் உணர முடிகிறதா?

மங்/கலா/ன ஆ/டைபோ/தும் - இவ்விரு சொற்களும் காய்ச்சீருக்குறிய ஓசையைச் சற்றே கூட்டிக்காட்டுகிறதல்லவா?

ஆகவே இவ்விரு சொற்களும் அவ்வெண்பாவிற்குறிய இயல்போசையைக் கெடுத்துவிடுகின்றன. ஆகவே நடுஅசை குறிநெடிலாக அமைப்பதைத் தவிர்க்கவும்.

சிலவேளைகளில் விளாங்காய்ச்சீராக அமைவதைத் தவிர்க்கமுடியாததாகிவிடுமானால் முடிந்த வரை வகையுளிசெய்தாவது (விளாங்காயாக வருஞ்சொல்லின் மூன்றாவது அசையைப் பிரித்து அடுத்த சொல்லொடு இணைத்துவிடுவது) வெண்பா ஆக்குவதே சிறந்த வழியாம்.

கீழுள்ள எனது வெண்பாவைப் பாருங்கள்:-

வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!
-அகரம் அமுதா

முதலடியின் மூன்றாம் சீர் "வெத்துவேட்டாய்" கூவிளாய்காய்ச் சீராக வந்துள்ளது.

எனது மற்றொரு வேண்பாவில்...

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!


நான்காம் அடியின் இரண்டாம் சீரைக் கவனியுங்கள். "பேர்சுதாகர்" என வந்து ஓசை நீள்கிறது. ஆகையால் இவ்விளாங்காயைத் தவிர்ப்பதற்காக ஈற்றடியை இப்படி மாற்றினேன்,

"பருவமியற் பேர்சுதா கர்!"

குறிப்பு:- வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "ஊருக்(கு) உழைத்தல் உயர்வு!"


அகரம் அமுதா

திங்கள், 9 பிப்ரவரி, 2009

37.இரட்டுற மொழிதல் அணி!

ஒருசொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருவது இறட்டுற மொழிதல் ஆகும்.

காட்டு:-

மேகமும், கணினியும்!

பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

இப்பாடல் மழைமேகத்திற்கும், கணினிக்கும் உள்ள பொதுத்தன்மைகளைக் குறிப்பிட்டு ஆகையால் இவையிரண்டும் ஒன்றே என்று வரையப்பட்டுள்ளது காண்க.



யானையும், நெற்றாளும்!

கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடுதலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

இருபொருளைத் தொடர்புபடுத்துப் பேசுவன யாவும் இரட்டுற மொழிதல் அணியாகும்.


ஒற்றுமிகா இடங்கள்!

5.நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின் வலிமிகா. (உருபு –கு)

பொன்னி கணவன் -பொன்னிகணவன் (பொன்னிக்குக் கணவன்)
அரச குரு –அரசகுரு (அரசருக்குக் குரு)

6.ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வலி மாகா. (உருபு –அது, உடைய)

அரசி சிலம்பு –அரசிசிலம்பு (அரசியுடைய சிலம்பு)
தோழி பை –தோழிபை (தோழியுடைய பை)

7.ஏழாம் வேற்றுமைத் தொகையில் சில இடங்களில் வலிமிகா. (உருபு -இல், கண், இடம்.)

வாய் பாடு –வாய்பாடு (வாயில்பாடு)

8.எழுவாய்த்தொடரில் வலிமிகா.

கோழி கூவிற்று –கோழிகூவிற்று
புலி தாவிற்று –புலிதாவிற்றி.

குறிப்பு:-எது கூவிற்று? எது கத்திற்று? என்ற வினாவால் வரும் விடை கோழி, புலி எனவரும். இப்படி வந்தால் அது எழுவாயாம். எழுவாயுடன் கூவிற்று தாவிற்று என வினைச்சொல் வல்லெழுத்தில் தொடங்கினாலும் வலிமிகா.

9.ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வலிமிகா.

அவனோடு போனாள் -அவனோடுபோனாள்
கந்தனோடு பேசினேன் -கந்தனோடுபேசினேன்.

10.ஐந்தாம் வேற்றுமை உருபுகளை அடுத்து வலிமிகா. (உருபு -இருந்து, நின்று)

மரத்திலிருந்து குதித்தான் -மரத்திலிருந்துகுதித்தான்
கையினின்று பறித்தேன் -கையினின்றுபறித்தேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெஞ்சு பொறுக்குதிலை யே!


அகரம்.அமுதா

திங்கள், 2 பிப்ரவரி, 2009

36.மடக்கணி!

ஒருமுறை வந்த சொற்களோ, சொற்றொடரோ மீண்டும் வந்து வேறுபொருளைத் தருவது மடக்கணியாகும்.

காட்டு:-

பாலும் புளிக்கப் பழம்கசக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலும்இப்
பாலும் இடம்பெயராப் பார்வையென் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!
–அகரம்.அமுதா

விளக்கம்:-
இவ்வெண்பாவை உற்றுநொக்குக. பால் எனும் ஒற்றைச் சொல் மீண்டும் மீண்டும் வந்தாலும் வேறு பொருளைத் தாங்கி நிற்றல் காண்க. முதலடியிலுல்ல பால் ஆவின்பாலையும், இரண்டாமடியின் முதற்சீராகிய பால் -மீது எனும் பொருள்படுவதாகவும் (வேறெதன் பாலும் -வேறெதன் மீதும்) இரண்டாமடியின் தனிச்சீரும் மூன்றாமடியின் முதற்சீருமாகிய பால் எனுஞ்சொல் பக்கங்களைக் குறிப்பனவாயும் (அப்பாலும் இப்பாலும் -அப்பக்கமும் இப்பக்கமும்) நான்காமடியின் முதற்சீராகிய பால் இனத்தைக் குறிப்பதாயும் (பெண்பால் -பெண்ணினம்) அமைந்தமை காண்க.

வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்
கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ!
–கவிகாளமேகம்.

விளக்கம்:-
மூன்றாமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது காலின் அடிப்பகுதியையும் நான்காமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது தயிர்கடையும் மத்தால் அடிப்பதையும் குறிக்கிறது. ஆக இருவேறு பொருளைக்கொண்ட ஒரே சொற்றொடர் என்பதால் மடக்கணியாயிற்று.

பாண்டியன்தா ரானேன் பசலைமுலைப் பாலானேன்
ஆண்டிகையில் ஏந்திய ஒன்றானேன் -வேண்டியபோ(து)
உள்ளங்கைத் தேனானேன் ஓர்மதலைப் பூத்ததன்பின்
உள்ளங்கைத் தேன்நான் உனக்கு!


விளக்கம்:-
மூன்றாமடியிலுள்ள உள்ளங்கைத் தேன் என்பது உள்ளங்கையில் ஏந்திய இன்சுவை பொருந்திய தேனையும் நான்காமடியிலுள்ள உள்ளங்கைத்தேன் என்பது உள்ளம் கைத்தேன் எனவும் (உள்ளத்திற்கு ஒவ்வாமல் ஆகிவிட்டேன்) இருவேறு பொருள்களைக் கொண்டது.

ஒற்றுமிகா இடங்கள்!

1.அது, இது, எது, அவை, இவை, எவை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு –என வரும் சொற்றொடர்களை அடுத்து வலிமிகா.

காட்டு:-
அது சென்றது ---அதுசென்றது
அவை கண்டன ---அவைகண்டன
அவ்வளது தொல்லை ---அவ்வளவுதொல்லை
அவ்வாறு சொன்னான் ---அவ்வாறுசொன்னான்.

2.படி, உடைய, ஒரு, இரு, சில, பல –ஆகிய சொற்களைஅடுத்து வலிமிகா.

காட்டு:-
அப்படி செய் ---அப்படிசெய்
என்னுடைய பேனா ---என்னுடைய பேனா
சில கன்றுகள் ---சிலகன்றுகள்
பல பாடங்கள் ---பலபாடங்கள்
இரு கை ---இருகை (இதில் க்-கைச் சேர்த்தால் அமர்வதற்குறிய நாற்காலியைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகிவிடும். கவனம்தேவை.)

3.உம்மைத் தொகையில் வலிமிகா.

காட்டு:-
செடி கொடி ---செடிகொடி (செடியும் கொடியும்)
குட்டை குளம் ---குட்டைகுளம் (குட்டையும் குளமும்)

குறிப்பு:-
இராப்பகல், ஏற்றத்தாழ்வு, போன்ற சில சொற்களில் சொல்நயத்திற்காக வலிமிகும் என்பதை அறிக.

4.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகா. (உருபு-ஐ)

காட்டு:-
வீடு கட்டினேன் ---வீடுகட்டினேன் (வீடுடைக்கட்டினேன்)
கிணறு தோண்டினான் --- கிணறுதோண்டினான் (கிணற்றைத் தோண்டினான்)

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

அகரம்.அமுதா

திங்கள், 26 ஜனவரி, 2009

35.நிரல் நிறையணி!

பெயரையோ வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அவ்வரிசை படக் கூறுவது நிரல் நிறை அணியாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!


விளக்கம்:-
இப்பாட்டில் அன்பையும் அறனையும் ஒரு வரிசையிற்படுத்தி அதே வரிசைப்படி, பண்பையும் பயனையும் நிறுத்திப் பாடப்பட்டுள்ளமையான் இப்பா நிரல் நிறை அணியாகும்.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து!


விளக்கம்:-
நோய் மற்றும் பசலையைத் தந்து அதற்கு மாறாக தோற்றத்தையும் நாணத்தையும் பெற்றுக்கொண்டதாக வரிசைபடுத்தப் பட்டுள்ளமையான் நிரல்நிறை அணியாகும்.

ஒற்றுமிகு மிடங்கள்!

26.சில வினையெச்சங்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
கண்டென களித்தான் ---கண்டெனக் களித்தான்
காணா களித்தான் ---காணாக்களித்தான்
காண களிப்புறும் ---காணக்களிப்புறும்
தேடி கண்டேன் ---தேடிக்கண்டேன்.

ஒற்றுமிகுமிடங்கள் முற்றிற்று. அடுத்த பாடத்திலிருந்து ஒற்றுமிகா இடங்களைக் காண்போம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழா எழு!


அகரம்.அமுதா

வியாழன், 22 ஜனவரி, 2009

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!

கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.

கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினா ராம்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால் பொருள் நுணுகிப்பார்த்தால் "எட்டுத்திசைக்கும் நிகரான தன் கைக்குமேல் நெருப்புச்சட்டியைச் சுமந்து கொண்டு தன் (சிவனின்) வாகனமாகிய அக் காளையின் மேல் எறிப்பயணித்தார் என்பது உண்மைப்பொருள். ஆக இகழ்வதுபோல் புகழ்ந்தமையான் இப்பா வஞ்சப்புகழ்ச்சியாம்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

கண்ணாக அவதரித்த மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திருமாலின் தங்கையானவள் மதுரை மீனாட்சி. மீனாட்சியானவள் தில்லையில் எழுந்தருளியுள்ள ஆடளுக்கு அரசனான ஈசனுக்கு மனைவியாகி, மக்களெல்லாம் (கைகளைப் பெருக்கல் குறிபோல்)மாற்றித் தலையில் குட்டிக் கொண்டு கும்பிடுதற்கு ஒரு தந்தத்தைஉடைய யானை வடிவிலான விநாயகனைப் பெற்றெடுத்தாள் என்பதாம்.

பாடலின் உட்பொருள் புகழ்பாடுவதாக அமைந்திருப்பினும் மேலோட்டமாகப் பார்க்கையில் இகழ்ந்ததுபோல் தோற்றம்கொண்டமையால் இது வஞ்சப்புகழ்ச்சி யாகும்.

ஒற்று மிகுமிடங்கள்!

21.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் வரின் வலிமிகும்.

காட்டு:-
மாணிக்கத்திற்கு கொடு ---மாணிக்கத்திற்குக் கொடு.
உன்றனுக்கு கொடுத்தான் ---உன்றனுக்குக் கொடுத்தான்
எனக்கு தா --- எனக்குத் தா.

22.நான்காம் வேற்றுமைத் தொகை அஃறினைப்பெயர் முன் வலிமிகும்.

காட்டு:-
கூலி தொழிலாளி ---கூலித்தொழிலாளி.

தாளி பொன் ---தாலிப்பொன்

23.ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறினைப் பெயர் முன் வல்லினம் வந்தால் வலிமிகும். (ஆறாம் வேற்றுமை உருபுகள் ---அது, உடைய)

காட்டு:-

யானை தலை ---யானைத்தலை
கிளி கூடு ---கிளிக்கூடு
வாத்து சிறகு ---வாத்துச்சிறகு.

24.ஏழாம் வேற்றுமை விரியிலும் தொகையிலும் வலிமிகும். (ஏழாம் வேற்றுமை உருபுகள்:- கண், இடம், இல், இடை)

காட்டு:-
குடி பிறந்தார் ---குடிப் பிறந்தார்(குடிக்கண் பிறந்தார் என்பதன் சுறுக்கம்)இதில் கண் என்னும் உருபு மறைந்து வருகிறது.
நல்லாரிடை புக்கு ---நல்லாரிடைப் புக்கு (இதில் இடை என்னும் உருபு வெளிப்படையாதலைக் காண்க).

25.ய, ர, ழ -ஆகிய மெய்யீற்று அஃறினைப் பெயர்களில் வலிமிகும்.

காட்டு:- (யகரம்)
வேய் கிளை ---வேய்க்கிளை.
வேய் தோள் ---வேய்த்தோள்.

(ரகரம்)
தேர் தட்டு ---தேர்த்தட்டு.
கார் கொடை ---கார்க்கொடை.

(ழகரம்)
தாழ் கதவு ---தாழ்க்கதவு.
வீழ் சடை ---வீழ்ச்சடை.

குறிப்பு:- சில இடங்களில் வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினமும் இடமேற்கும் என்பதனை நினைவில் கொள்க.

காட்டு:-
வேய் குழல் ---வேய்ங்குழல்
பாழ் கிணறு ---பாழ்ங்கிணறு
ஆர் கொடு ---ஆர்ங்கொடு

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழர் இடர்!


அகரம்.அமுதா