திங்கள், 28 ஜூலை, 2008

பாடம்16 தலையாகு எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க!

பொதுவாய் வெண்பாவின் அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தாம் மோனைக்கு அடுத்த எழுத்தாகிய எதுகை அமைந்தால் போதும் என்பது விதி. மோனை எதுகை என்பது செய்யுளின் நயத்திற்காகச் செய்யப்படுவது. அந்நயத்தை மேலும் மெருகேற்ற தலையாகெதுகை பயன்படுகிறது.

அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தைத் தவிர பின்வரும் அனைத்து எழுத்துகளும் ஒன்றிவருவதைத் தலையாகு எதுகைஎன்பர். இத்தலையாகு எதுகை செய்யுளின் நயத்தை மென்மேலும் இனிமையாக்கும்.

பொதுவாக மொழிவளமும் ஆளுமையும் தலையாகு எதுகை அமைப்பதற்கு இன்றியமையாததாகிறது. ஆகையால் தலையாகு எதுகை அமைப்பதில் அதிக கவனம் தேவை.

காட்டு:-

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைப்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதலடியின் முதற்சீரும் இரண்டாமடியின் முதற்கடைச் சீர்கள் முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துகள் ஒன்றிவந்தமை காண்க. மேலும் மூன்றாமடியின் முதற்சீரும் நான்காமடியின் முதற்சீரும் அஃதேபோல் ஒன்றிவந்தமை காண்க.

குறிப்பு:-

இவ்வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளை நன்கு கவனிக்கவும். மூன்றாம் நான்காம் அடிகளின் முதற்சீர்கள் மட்டுமல்லாது அதற்கடுத்த சீர்களும் ஒன்றிவந்துள்ளது அல்லவா? அப்படி வருதல் செய்யுளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் அடிதோறும் தலையாகெதுகை நன்கமைந்தமை காண்க.

சொன்முன் னெழுத்தொழிய ஏனை எழுத்தெலாம்
நன்கொத்து நின்று நடந்தால் அதனைத்
தலையா(கு) எதுகையெனச் சாற்று! -அகரம்.அமுதா

இக்கிழமைக்கான ஈற்றடிக்குத் தலையாகு எதுகையை ஓரிடத்திலாவது அமைக்க முயலுக.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உழவின்றி உய்யா(து) உலகு!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

பாடம்15 எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடஇறுதியில் (கீழே) காணலாம்.

பொதுவாக வெண்பாவில் இரண்டடிக்கு ஒரு எதுகையிட்டு எழுதுவது வழக்கம். ஆற்றல் மிக்கவர்கள் வெண்பாவின் அடிதோறும் ஒரே எதுகையைக் கையாண்டு முடிப்பதும் உண்டு. எதுகையைக்கையாண்டு எழுதுவதால் பாடல் இன்னிசையோடு விளங்குவதால் எதுகையைச் சிறப்பிக்க ஓரெதுகை வெண்பா(ஒரு விகர்ப்ப வெண்பா) ஈரெதுகை வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா) என்றும் வகைப்பிரித்து வழங்குவர்.

1-ஓருறழ்ச்சி வெண்பா (ஒரு விகர்ப்ப வெண்பா), (உறழ்ச்சி -வேறுபாடு)

வெண்பாவில் வரும் அடிகள் முழுவதும் ஒரே அடியெதுகையைக் கொண்டு முடியுமானால் அதை ஓருறழ்ச்சி(ஒருவிகர்ப்ப) வெண்பா என்றழைப்பர்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்றல்செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் -சாக்காடு;
சீக்காடு; முட்காடு; தீக்காடு; முக்காடு;
நோக்காடு மற்றரைவேக் காடு! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. அடிதோறும் அமைந்துள்ள எதுகை க்-என்ற ஒரே எழுத்தை எதுகையாகக் கொண்டமைந்தமையால் இவ்வெண்பா ஓரெதுகை(ஒருவிகர்ப்ப) வெண்பா எனப்படும்.

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய்
இரு(ம்)அடிகள் ஒத்த எதுகை -பெறின்அஃதை
ஓருறழ்ச்சி என்றே உணர்! -அகரம்.அமுதா

குறிப்பு:-

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய் - நேரிசை வெண்பாவில் மட்டுமே தனிச்சீரையும் சேர்த்து ஒருறழ்ச்சியா, ஈருறழ்ச்சியா என்பதைக் கணக்கிடவேண்டும். இன்னிசை வெண்பாவெனில் அடிதோறும் வரும் எதுகைகளை மட்டும் மனதில் கொண்டு ஒருறழ்ச்சியா ஈருறழ்ச்சியா எனக் கண்டால் போதும்.

2-ஈருறழ்ச்சி வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா)

இரண்டடிக்கு ஓரெதுகை என்ற விகிதத்தில் வெவ்வேறு எதுகைகளைக் கொண்டுவருவது ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போற்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதல் இரண்டடியில் ண் -எதுகையாகவும் அடுத்த இரண்டடிகளுக்கு த் -எதுகையாகவும் வந்தமையால் இவ்வெண்பா ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

குறிப்பு:-

ஈருறழ்ச்சி வெண்பா என்பது சிந்தியல் அளவியல் (நேரிசை, இன்னிசை) வெண்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பஃறொடை மற்றும் கலிவெண்பாக்களில் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓருறழ்ச்சி வருமானால் அதை பல உறழ்ச்சி (பலவிகர்ப்பம்) என்பதே சரியாகும்.

வருமடிகள் நான்காய் வளரும்வெண் பாவில்
இருவடிகட் கோரெதுகை ஏற்று -வரின்அஃதை
ஈருறழ்ச்சி என்றே இயம்பு! -அகரம்.அமுதா

ஈற்றடி வழங்கும் நேரம்:-

திரு முகவை மைந்தன் இராம்குமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார்:- கற்பனைத் திறத்தையும் புலமைத்திறத்தையும் காட்டுவதற்காக ஈற்றடி வழங்குவதை விட்டுவிட்டு அன்றாடம் நாட்டில் நடந்தேறும் முகன்மை நிகழ்வுகளை வெண்பாவாக்கும் விதமாக ஈற்றடி வழங்கலாம் அல்லவா? என்றார்.

அவர் கூற்று எனக்கும் சரிஎன்றே பட்டது. நீங்களே ஒரு நிகழ்வைச் சொல்லுங்களேன் என்றேன்.

அணுவாற்றல் ஒப்பந்தம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் ஈற்றடி வழங்கலாமே என்றார்.

ஈற்றடி உண்டேல் இயம்பு! என்றேன் நான். அவர் நல்கிய ஈற்றடிகள் இதோ:-

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அணுவாற்றல் வேண்டும் அறி!

நாம் இவ்விடம் இரண்டு ஈற்றடிகளைப் பதிவு செய்கிறோம். அமெரிக்காவுடன் அணுஒப்பந்தம் நல்லதே எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டும் அறி!'' என்ற ஈற்றடிக்கும் வேண்டாம் எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டாம் அகற்று'' என்ற ஈற்றடிகளுக்கும் வெண்பா வடிக்க வாரீர் வாரீர் என வரவேற்கிறேன்.

அகரம்.அமுதா

திங்கள், 14 ஜூலை, 2008

பாடம்14 ஓசை!

இவ்வார ஈற்றடியைக் காண்பதற்குமுன் வெண்பாவின் ஓசை வகைகளைக் காண்போம்.

வெண்பா செப்பலோசையை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அச்செப்பலோசையின் உட்பிரிவாக "ஏந்திசைச் செப்பலோசை", "தூங்கிசைச் செப்பலோசை", "ஒழுகிசைச் செப்பலோசை" என மூன்று வகையுள்ளது.

1-ஏந்திசைச் செப்பலோசை:-

முழுக்க முழுக்க வெண்சீர் வெண்டளையான் இயன்ற வெண்பா ஏந்திசைச் செப்பலோசையாகும். (ஈற்றுசீர் கணக்கில் கொள்ளக்கூடாது ஆதலால் ஈற்றுச்சீரொழிய ஏனைய 14-சீர்களும் வெண்சீர் வெண்டளை கொள்ளுமாயின் அவ்வெண்பாவின் ஓசையை ஏந்திசைச் செப்பலோசை என் நம் பழம்புலவர்கள் வகைபிரித்துள்ளனர்)

பட்டுப்போல் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள் -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டுக் காணாதக் கால்! -அகரம்.அமுதா

செத்துவிடப் போகின்றாய் சேர்ந்தவர்கள் உன்னுடலை
மொய்த்துவிடப் போகின்றாய் மொய்த்தாலும் சற்றழுவார்
சுட்டுவிடப் போகின்றார் சூழ்நிலைக்குத் தக்கனவாய்
நட்டமென்ன வாழ்ந்துவிடு நன்கு! -புரட்சி தாசன்

குறிப்பு!

வெண்பாவைப் பொருத்தவரை இன்னிசையை வழங்கக் கூடிய சீர் காய்ச்சீரே ஆகும் என்பது பழம் புலவர்களின் கூற்று. வெண்பாவின் சில இடங்களில் ஓசை நன்கமையப் பெறுவதற்காக அளபெடையைக் கையாள்வர். தளை தட்டாவிடத்து அளபெடுத்தலால் அவ்வளபெடையை இன்னிசையளபெடை என்பர். கவனிக்க:-

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை! திருக்குறள்

கெடுப்பதும் எனக்கொள்கினும் தளைதட்டாதாயினும் செய்யுளின் ஓசை நன்கமையப்பெற வேண்டும் என்பதற்காக உயிர் அளபெடுத்து வந்தது.

2-தூங்கிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.

பூட்டிய வீட்டில் புகையிலைக் குஞ்சிகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன -ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்! -பாடலாசிரியர் கபிலன்

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! -இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்! -அகரம். அமுதா

குறிப்பு:-

இம்முறை சற்றே கடினமானது என்பதால் இம்முறையைப் பலரும் கையாள்வதில்லை. (புதிதாய் வெண்பா எழுதுபவர்கள் யாரும் இம்முறையைக் கையாள வேண்டாம். பொருட்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.)

3-ஒழுகிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்துவரின் அவ்வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலோசை ஆகும்.

காதல் புரிகின்ற காதலரோ(டு) ஒப்பிடுங்கால்
காதல் கவிதைகளே காசினியில் ஏராளம்
ஆதலினால் அஃதை அகற்றிக் குமுகாயப்
பேதமையைப் பாசெய் பெரிது! -அகரம்.அமுதா

நண்பர்களே! வெண்பாவில் பயின்றுவரும் செப்பலோசையின் உட்பிரிவுகளைக் கண்டோம். இம்மூன்றுவகைகளிலும் பயிற்சி மேற்கொண்டு பாடல் இயற்றிப் பார்க்கவும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கண்ணுற்றே நன்நெறியைக் காண்!"

ஏந்திசைச் செப்பலோசை அமையுமாறு அனைவரையும் பாடஅழைக்கிறேன்.

அகரம். அமுதா

திங்கள், 7 ஜூலை, 2008

ஈற்றடிக்கு வெண்பா எழுது!

அன்பன்என் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை; -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!

என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்!

நாம், இவ்வெண்பாப் பகுதியைத் தொடங்கி நடத்திவருவதன் நோக்கம் வெண்பா பயில இயற்ற வேண்டும் என்னும் விருப்பமிருந்தும் இலக்கணம் அறியாக் காரணத்தால் தங்கள் கனவு நிறைவேறாதிருக்கும் வலைப்பதிவர்களுக்கு வெண்பா பயிலவும் இயற்றவும் இலகுதமிழில் வேற்றுமொழி கலவா வெல்தமிழில் பயிற்றுவிப்பதே.

மரபை அறியும் மனமுடை யோர்க்காய்க்
குறையில்வெண் பாவைக் குறிப்பாய் -அறியத்
தருவ(து) அவாஎன் றனுக்கு!

விரித்தேன் வலையை விழும்மீன்என் றல்ல;
விரும்பித் தமிழை விரைந்தே -பருகும்
வலைப்பதி வாளர்க்காய் வந்து!

நம் "வெண்பா எழுதலாம் வாங்க!" வலைக்கு வந்துசெல்லும் அன்பர்களுக்கும் இனி வரவிருக்கும் அன்பர்களுக்கும் ஓர் நற்செய்தி! சற்றேறக் குறைய நம் வெண்பாப் பாடம் முடிவடையும் நிலையில் உள்ளது.

வெண்பாவின் இலக்கணத்தைக் கற்றுக்கொண்ட நாம் இனிவரும் பாடங்களில் வெண்பாவின் நுணுக்கங்கள் பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

அவற்றைப் பாடமாகத் தருவதில் எப்பயனும் இல்லை. பாடமாகக் கொடுக்கப்படினும் அவ்வளவு எளிதில் மனதில் பதியாதாதலால் ஒவ்வொரு நுண்ணிய உட்பிரிவையும் விளக்கும் பாடத்துடன் அதுசார்ந்த ஈற்றடியையும் அப்பாடத்துடன் இணைக்கலாம் எனக்கருதுகிறேன்.

நான் அளிக்கும் நுட்பங்களை அவ்வீற்றடி கொண்டு நீங்கள் வெண்பாவாக்கும் போழ்து எளிதில் மனதில் பதிவதாயிருக்கும் எனக்கருதுகிறேன். இதற்கத் தங்களின் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.

"வெண்பா எழுதலாம் வாங்க" எனும்என்றன்
பண்பாய நல்வலையில் பங்கேற்க -நண்ப!உமை
அன்போ டழைத்தேன்; அழைப்புத் தனைஏற்றே
என்னீற் றடிக்குவெண்பா ஈ!

ஈற்றடிக்கு வெண்பா இயற்றும் விளையாட்டை
ஏற்று நடாத்துகிறேன் என்வலையில் -பாற்றொடுக்க
வாரீர் அலைகடலாய் வந்தேஉம் ஆதரவைத்
தாரீர் எனஅழைத்தேன் தாழ்ந்து!

வெண்பா எழுதத் துவங்கும் புதிதில் எதையெழுதுவது? எப்படி எழுதுவது? அப்படியே எழுதத்துவங்கினும் வெண்பா எழுத அதிகநேரம் பிடிப்பதோடு பொருட்சிதைவும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற குழப்பங்களைத் தவிற்கவும் புதுப்புதுக் கருத்துக்களைக் கையாள எற்றவகையிலும் தங்களுக்கு எளிமைபடுத்தவே நாம் இப்பகுதியைத் துவங்கியிருக்கிறோம்.இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வாரீர். ஆதரவு தாரீர்.

பாவிற் சிறந்தவெண் பாவின் தளையறிந்தே
தாவின்றித் தீட்டத் தலைப்படுவோம் -கூவி
வருகவென் றார்ப்பரித்தேன்; வந்தா தரிப்பீர்;
வருந்தகையார் எல்லாரும் வந்து!

நாம் வெவ்வேறாயினும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்ததில்லை எனினும் நாம் ஒருமுகமாய்ச் செயல் படுவதால் நம் எழுத்துக்களில் நாளடைவில் சொற்சுவையும் பொருட்சுவையும் அமையப்பெருதலைக் கண்கூடாகக் காணலாம். நம் சொல்லாட்சியில் பாவுள் பொருளாட்சி செய்தலைக் காண்போம். நாம் என்பதே நன்மை.

நானென் றுரைத்தோர் நளிவுற்றுச் சீரயிந்துப்
போன திசையறியோம் பொய்யில்லை; -நானற்ற
நாமன்றோ நன்மை நவில்!

ஊற்றெடுக்கும் கற்பனையை ஒண்டமிழின் பாவகையுள்
ஏற்றமுறும் வெண்பாவில் ஏற்றிவைப்போம் -ஆற்றலுறும்
ஈற்றடியை யானளிப்பேன் ஈற்றடிக் கேற்றபடி
சாற்றிடுவீர் அன்பனெனைச் சார்ந்து!

இசைமிகு இன்றமிழில் ஏறார் நடைசெய்
வசையில்வெண் பாக்கள் வடித்து -நசையறு
நாற்றிசைக்கும் நம்புகழை நாமெடுத்துச் செல்வோம்என்
ஈற்றடிக்கு வெண்பா எழுது!

ஈற்றடியை வழங்குவதற்குமுன் வெண்பாவில் இடம்பெற வேண்டிய அடிப்படைத் தகுதிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் நலம் எனக்கருதுகிறேன்.

1-ஓரடிக்குள் மோனை நன்கமையப் பெறுதல்.
(பொழிப்புமோனை அமைத்தல் நன்று. அது முடியாத போது இணைமோனையோ ஒரூஉ மோனையோ அமைக்கலாம்) மேலும் மோனையைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

2-அடிதோறும் எதுகை அமைத்தல்.
(1,5,8-ம் சீர்களில் ஒத்த எதுகையும் 9மற்றும் 13-ம் சீர்களில் ஒத்த எதுகையும் அமைதல் வேண்டும்) எதுகையைப் பற்றி அறிய இங்கு சுட்டவும்.

3-அளவியல் வெண்பாவிற்கு மொத்தம் 15சீர்கள் வரும். ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு நிறப்புதல் வேண்டும்.

4-நேரிசை வெண்பா எனில் கட்டாயம் எதுகை எடுத்த தனிச்சீர் அமையப்பெறுதல் வேண்டும்.

5-இன்னிசை வெண்பா எனில் தனிச்சீர் ஒழிய அடிதோறும் எதுகை யமைத்தல் வேண்டும். (பெருவாரியாகத் தற்காலத்தில் இன்னிசை வெண்பாவில் இம்முறையையே கையாள்கிறார்கள்.)

மேற்கூறிய வெண்பாவிற்கான விதிமுறைகளை மனதில் ஏற்றிக்கொண்டு நம் வெண்பா எழுதலாம் வாங்க எனும் ஆடுதளத்தில் புகுந்து விளையாடிக் கலக்குவீர்களாக!

விளையாட்டைத் துவங்குமுன் தங்கள் அனைவரின் சார்பாகவும் தமிழ்வணக்கமும், கணபதி வணக்கமும் செய்துவடுகிறேன்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தோம்; புடம்பொட்டப்
பொற்சிலை போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எமக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்போம் பார்!


கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்க(ல்)விளை யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது!


சரி. கணபதியையும் வணங்கியாகி விட்டது. இப்பொழுது வெண்பா விளையாட்டைத் துவங்குவோமா?

உமக்கான ஈற்றடி:- "வெண்பா விரித்தேன் விரைந்து!" -கலக்குங்க-

அகரம்.அமுதா

வியாழன், 3 ஜூலை, 2008

பாடம்13 பஃறொடை மற்றும் கலிவெண்பா!


பஃறொடை வெண்பா:-

பஃறொடை வெண்பாவிலும் நேரிசை இன்னிசை என இருவகையுண்டு. பல தொடைகளாலும் ஆனமையால் பல்தொடை எனும்பேர் பெற்றுப் புணர்ச்சியின் காரணமாய் பஃறொடை வெண்பாவானது. இது நான்கடிகளுக்கு மிகுந்தும் பன்னிரண்டடிகளுக்கு மிகாமலும் வரும். பன்னிரண்டடிகளுக்கு மிகுமாயின் அது கலிவெண்பாவாகிவிடும்.

நேரிசைப் பஃறொடை வெண்பா:-

அளவடி வெண்பாவில் நாம்கண்டது போன்றுதான் எதுகையமைப்பு. ஒவ்வொரு இரண்டடிகளுக்கும் ஒரு தனிச்சீர் பெற்று வரும்.

காட்டு:-

ஆய்ந்தறிந்து கல்லதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் -தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்மனையால்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் -நெல்லிருக்கக்
கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்று!

நன்கு நோக்கவும். இரண்டடிகளுக்கு ஒருமுறை தனிச்சீர் பெற்றுவந்தமையால் இது நேரிசைப் பஃறொடை வெண்பா.

இன்னிசைப் பஃறொடை வெண்பா:-

இன்னிசைப் பஃறொடை பலவாறாய் வரும்.

1-அடியெதுகை பெறாமல் வரும்.
2-தனியெதுகை பெறாமல் வரும்.
3-எல்லா அடிகளிலும் தனிச்சீர் பெற்றுவரும்.
4-சிலஅடிகளில் தனிச்சீர் பெற்றம் பெறாமலும் வரும்.
5-சில அடிகளில் அடியெதுகை பெற்றும் பெறாமலும் வரும்.

இப்படிப் பலவாறாய்க் கூறலாம். ஆக இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனிச்சீர் பெறா பஃறொடை இன்னிசைப் பஃறொடையாகும்.

காட்டு:-

வையகம் எல்லாம் கழனியாம் -வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் -செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு –வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -சாறற்ற
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -கட்டியுள்
தானேற்ற மான சக்கரை –மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்!

அடிதோறும் எதுகை பெற்று இன்னிசையானமைகாண்க.

கலிவெண்பா:-

கலிவெண்பாவிலும் நேரிசைக் கலிவெண்பா இன்னிசைக் கலிவெண்பா என இருவகையுண்டு. பஃறொடை மிக்கது கலிவெண்பா ஆகும். அதாவது பன்னிரண்டடிகளுக்கு மிக்கது. பன்னிரண்டடிகளுக்கு மேல் எத்தனை அடிகாறும் வேண்டுமானாலும் செல்லலாம். வரையறை என்பதில்லை.

நேரிசைக் கலிவெண்பா:-

மற்ற நேரிசைவெண்பாக்களுக்குப் பார்த்த விதியே இதற்கும் பொருந்தும். இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனியெதுகை பெற்றுவரும்.

இன்னிசைக் கலிவெண்பா:-

நேரிசை வெண்பாவின் விதியாகிய இரண்டடிக்கோர் தனியெதுகை எடுத்தலை மீறிவிடின் அது இன்னிசைக் கலிவெண்பாவாகிவிடும்.

அகரம்.அமுதா