வியாழன், 25 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4

அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தின் இலக்கணம் :

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து, முதல் ஐந்து சீர்கள் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) ஆறாவது சீர் மாங்காய்ச சீராகவும் ( புளிமாங்காய், தேமாங்காய்-இரண்டில் ஒன்று) அமைந்து வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

பசித்தால் மட்டும் புலியும் பிறவும்
..........பதறக் கொன்றுண்ணும்
பசியாப்போதும் திமிரால் கொல்லும்
..........பரிவொன் றில்லாரே
விசித்துக்கலங்கும் மாந்தர் கண்ணீர்
..........வீணாய்ப் போகாதே
நசிக்கும் ஒருநாள் நன்றாய் இதனை
..........நனவில் கொள்வீரே!

இப்பாடலை எழுதியவர் புதுவைப் புலவர் அரங்க.நடராசனார் ஆவார்.

இந்த வகை அறுசீர் மண்டிலப் பா ஒன்று எழுதிக் காட்டுக.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியமண்டிலம்- 3

அறுசீர் மண்டிலத்தில் அடுத்த வகையைப் பார்ப்போம் :

இவ் வகையில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து காய் + காய் + காய் + காய் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

( காய் என்று குறித்துள்ள இடத்தில் கூவிளங்காய், புளிமாங்காய், தேமாங்காய், கருவிளங்காய் -இவற்றுள் எதுவும் வரலாம்; மா என்று குறித்துள்ள இடத்தில் தேமாவோ புளிமாவோ வரலாம். )

இதன் அமைப்பை 'நான்கு காய், ஒரு மா, தேமா' என்றும் கூறலாம்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
..........தெங்கும் காணோம்!

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
..........பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
..........நன்றோ சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
..........செய்தல் வேண்டும்.

இது பாரதியார் பாடல் என்று நாம் அறிவோம்.


இனி, பாவேந்தர் பாடல் ஒன்று :

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே
..........கவின்செய் முல்லை

அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே
..........அன்பே கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை
..........ஈட ழித்து

வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல
..........வாய்ப தைக்கும்.


எழுதத் தொடங்குக.

முடியுமானால், உவமை போலும் அணி அமைத்து எழுதுக.

வெண்பாவை விட எளிதாக இவ்வகை மண்டிலங்களை எழுத முடியும் எனபதை நீங்களே உணரலாம்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

அறுசீர் மண்டிலம் - 2.

"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்" எனபதைச் சுருக்கமாக 'அறுசீர் மண்டிலம்' என்றும் அழைப்பர்.

அறுசீர் மண்டிலத்தில் அரை அடியில் மா+மா+காய் என்ற சீரமைப்பில் பாடல்கள் எழுதப் பயின்றோம்.

அடுத்த வகை அறுசீர் மண்டிலத்தை மூன்று வகையாக எழுதுகிறோம்.

ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :

(அ). முதல் வகை :

1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.

5.நான்கு அடிகளும் அளவொத்து விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

நீரிடை யுறங்குஞ் சங்கம்
..........நிழலிடை யுறங்கும் மேதி
தாரிடை யுறங்கும் வண்டு
..........தாமரை யுறங்கும் செய்யாள்
தூரிடை யுறங்கும் ஆமை
..........துறையிடை யுறங்கும் இப்பி
போரிடை யுறங்கும் அன்னம்
..........பொழிலிடை யுறங்கும் தோகை.

இது கம்பராமாயணம், நாட்டுப்படலம்- 6. பாடல்

இப் பாடலின் முதல் அரை அடி, நீரிடை யுறங்குஞ் சங்கம் (கூவிளம் +புளிமா + தேமா) என்று அமைந்துள்ளது.
முதலடியின் அடுத்த அரை அடி, நிழலிடை யுறங்கும் மேதி (கருவிளம்+ புளிமா+ தேமா) என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதற்சீர் விளச்சீராகவும் (கருவிளம் அல்லது கூவிளம்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் வருவதைக் காணலாம்.

இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுப் பாடல் :

அங்கவர் அடைப்பின் நீங்கி
. அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
. தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
. செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
. ஏன்வலி யுறுத்தா துள்ளார்? - த.ந.


(ஆ) இரண்டாம் வகை :

இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற் சீர் முதல் வகைப் பாடலில் கூறிய வாறு விளச் சீராக வரும் அல்லது அம் முதற் சீர் மாங்காய்ச் சீராகவும் வரும்.

அதாவது, அரைஅடியில் முதற்சீர் விளச்சீர் அல்லது மாங்காய்ச்சீர் (கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய் நான்கில் ஒன்று) இரண்டாம் சீர் மாச்சீர் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமா பெற்று வரும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

தண்டலை மயில்கள் ஆடத்
..........தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
..........குவளைக்கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
..........தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
..........மருதம்வீற் றிருக்கு மாதோ.. - கம்பராநாட்டுப். 4.

இப்பாடலில் 'கொண்டல்கள்', 'மருதம்வீற்' ஆகிய முதற்சீர்கள் இரண்டும் மாங்காய்ச் சீர்களாவும் பிற முதற்சீர்கள் விளச்சீர்களாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்.

(இ) மூன்றாம் வகை :

இவ்வகைப் பாடலில், அரை அடியில், முதற்சீர் மாங்காய்ச் சீராகவும் ( தேமாங்காய் அல்லது புளிமாங்காய்) இரண்டாம் சீர் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் தேமாவாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
..........இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
..........துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
..........மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
..........கால்வண்ணம் இங்குக் கண்டேன் - கம்பரா. அகலிகை.24.

பொறுமையாக, ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றாக மூன்று வகையிலும்
அறுசீர் மண்டிலங்கள் எழுதத் தொடங்குக.

ஐயங்கள் இருப்பின் தயங்காது கேட்க.

ஓர் அரைஅடி எழுதிவிட்டால், பிறகு எளிதில் முழுப்பாடலும் எழுதிவிடலாம்.

எழுதத் தொடங்குக.

குறள் தாழிசை!

குறள் வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசையாகும். அச்செப்பலோசையிலிருந்து மாறுபட்ட வேறு தளைகளைக் கொண்டு அமைவது குறள் தாழிசையாகும். அதாவது மாமுன் நிரையசைக்குப் பதிலாக நேரசையே அமைதல், நிரையசையைத் தொடர்ந்து நேரசைக்குப் பதிலாக நிரையசையே அமைதல், காய்முன் நிரையமைதல் அல்லது வெண்பாவிற்கு முற்றிலும் வேறுபட்ட கனிச்சீர் வருதல் போன்ற இவையாவும் குறள் வெண்பாவில் அமைந்துவரின் அதைக் குறள் தாழிசை என்பர். அதாவது குறளின் இசையிலிந்து தாழ்ந்து ஒலிப்பதால் தாழிசை ஆயிற்று.

ஒருவனுக்(கு) ஒருத்தியென்ற ஒப்பில் மொழியைக்
கருத்தில் நிறுத்திநெறி காண்!

ஒருவனுக் + கொருத்தியென்ற

ஊர்தியை ஓட்டுகையில் ஒருவரொடும் பேசாதே!
நேர்ச்சிக்கு வழிகோளாய் நீ!

ஓட்டுகையில் + ஒருவரொடும், நேர்ச்சிக்கு + வழிகோளாய்

விரைவாய்த் துள்ளுந்தை ஓட்டுதல் நேர்ச்சிக்(கு)
இரையாக்கும் நம்மையெளி தில்!

விரைவாய்த் + துள்ளுந்தை

குறள் வெண்பாவிலிருந்து சிதைந்த வடிவிலான குறள் தாழிசைகளைப் படைக்க வருவீராக.

அகரம் அமுதா

திங்கள், 8 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்-1

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்குவகைப் பாக்கள் உள்ளன என்று முன்பே அறிந்துள்ளோம்.

இந் நான்குவகைப் பாக்களுக்கும் பாவினங்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக, ஆசிரியப்பாவின் பாவினங்கள் ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய மண்டிலம் என்பன ஆகும்.

எல்லாவகைப் பாவினங்களையும் ஒப்பிடுகையில், அதிகமாக எழுதப்படுவன ஆசிரிய மண்டிலங்களே ஆகும்.

ஆசிரிய மண்டிலம், ஆசிரிய விருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆறு சீர்களும் அதற்கும் மேலான சீர்களும் பெற்றுவரும் அடி, கழிநெடிலடி என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம்.

கழிநெடிலடி நான்கு அளவொத்து வருவது ஆசிரிய மண்டிலமாகும்.

ஆசிரிய மண்டிலங்களை ஒவ்வொன்றாக எழுதப் பழகுவோம்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.

1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.

5.நான்கு அடிகளும் அளவொத்து மா + மா + காய், மா+ மா+ காய் என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

ஆசிரிய மண்டிலம் எழுதுதல் மிகவும் எளிதாகும்.

இனி, எடுத்துக்காட்டுப் பாடல் :


வெய்யிற் கேற்ற நிழலுண்டு
..........வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
..........கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
..........தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
..........வாழும் சொர்க்கம் வேறுண்டா?

இது, கவிமணி எழுதிய உமர்கய்யாம் பாடல்.

இப் பாடலின் முதல் அடி,

வெய்யிற் கேற்ற நிழலுண்டு (தேமா+தேமா+புளிமாங்காய்) என்றும்
வீசும் தென்றல் காற்றுண்டு (தேமா+தேமா+தேமாங்காய்) என்றும் இரண்டு அரை அடிகளாய் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதலிரண்டு சீர்களும் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் காய்ச்சீராகவும் ( நான்கு வகைக் காய்ச்சீர்களுள் ஒன்று) வருவதைக் காணலாம்.

முதல் அரை அடி எழுதிவிட்டீர்களானால் அதை வைத்தே பாடலை எழுதி முடித்து விடலாம்.

கன்னற் சாறே, கனியமுதே!
கருத்தில் இனிக்கும் தமிழமுதே!
என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்த
இனிய மகளாய் வந்தவளே!
உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!
ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!
இன்னா கொடுமை இவ்வுலகில்
இல்லா தாக்க எழுவாயே!

- இது த.ந.வின் பாடல்.


எழுதத் தொடங்குங்கள்.

எந்த ஐயம் எழுந்தாலும் எத்தனை முறையும் தயங்காது கேளுங்கள்.

விடையளிக்கக் காத்திருக்கிறோம்.

வெள்ளொத் தாழிசை!

நாம் இதற்குமுன் வெண்பாக்களின் பற்பல வடிவங்களையும், கூறுகளையும் பார்த்திருக்கிறோம். குறிப்பாக சிந்தியல் வெண்பாவைப் பற்றியும் பார்த்திருக்கிறோம்.

சிந்தியல் வெண்பாக்கள் மூன்று சேர்ந்து ஒரே பொருளைத் தாங்கிவரின் அதனை வெள்ளொத் தாழிசை என்பர். ஒரு கருத்தை அடியொற்றி மூன்று சிந்தியல் பாக்கள் புனைதலே வெள்ளொத் தாழிசை எனவும் கொள்ளலாம்.

காட்டு:-

வெள்ளொத் தாழிசை!

இனப்பகைவன் ஆனான் இரண்டக நெஞ்சன்
மனக்கரவு பேணும் வகையால் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

பிணக்கிப் பிரிந்தான் பிழைபட வாழ்ந்தான்
இணக்கம் இரண்டகரோ டென்னும் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

தனக்குவகை வேண்டியே தப்பின் வழிநின்(று)
இனமழிப்பைக் கண்டின் புறலால் அருளன்
தனக்குவமை இல்லா தவன்!

அருளன் -விநாயகமூர்த்தி முரளீதரன் என்னும் கருணா

இவ்வகையில், வெள்ளொத் தாழிசையிலான பாக்களைப் புனைய வருவீராக....

அகரம் அமுதா

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அழைப்புப் பா!

காட்சிக் கெளியர்; கவினுறு மொழியர்;
மாட்சித் தமிழே மனதை
ஆட்சி புரியும் அறிஞர்; தமிழின
மீட்சிக் கெழுதும்
வீச்சுடை பாவலர்;
திண்ணியர்; உண்மையர்;
தண்ணிழல் சொரியும் தருவாம்
தமிழ நம்பியின்
தமிழை நம்பிநாம்
பாக்கள் புனையப் புகுந்தோம் எம்மை
ஆக்கல் அவர்தங் கடனே
பொருளுடை இடுகைகள் புனைந்தே
அருளுடை அவர்வந் தருவிருந் தளிக்கவே!


அகரம் அமுதா

ஒத்துழைப்பை நல்குக!

மதிப்பிற்குரிய வலைஞர்களுக்கு...

எனது இடப்பெயர்வால் சிறிதுகாலம் தடைப்பட்டிருந்த 'வெண்பா எழுதலாம் வாங்க' வலையின் இடுகைகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து தொய்வின்றி வெளியிடப்படும் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன். முன்னர் வழங்கியதைப்போல் தங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் இனிவரும் காலங்களிலும் வழங்க இருகை கூப்பி வேண்டிக்கொள்கின்றேன். நன்றி.

அகரம் அமுதா