சனி, 11 டிசம்பர், 2010

இசைப்பா! 3

இப்பாடத்தில் வேறொரு வகையான இசைப்பாவைப் பற்றி அறியவிருக்கிறோம்.

மறப்பேனா?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

காசி. ஆனந்தன் -மட்டக்களப்பு.

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

இசைப்பா! 2

இப்பாடத்தில் ஒருவகை இசைப்பாவைப் பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
......நீட்டி யழைத்து
......நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
......நிறைப்பது கவிமாலை!
வாசம் பரப்பி
......வண்டை அழைப்பது
......வண்ண மலர்சோலை! -என்னை
......வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
......மதியும் வந்தே
......மங்கல வானெழுதும்! -விண்மீன்
......வாழ்த்திசைப் பண்ணெழுதும்!
சோலை வந்தபின்
......சில்வண் டெல்லாம்
......சொக்கியா நின்றுவிடும்? -பூக்கள்
......வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
......உயர்த்திப் பிடித்த
......உறுவில் மையெழுத்து! -மின்னல்
......ஒளியோ கையெழுத்து!
அருவிக் குழந்தை
......ஆறே மங்கை
......ஆழி மூப்பாகும்! -கரைக்கு 
......அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
......கயமை சமூகம்
......கண்டிடு கவிதையிலே -அவைதான்
......கவிதைகள் என்பவனே!
இயற்கைக் கவிஞன்
......எழுதாக் கவிதைகள்
......எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
......இடுகிறாய் பிடிநெருப்பு!

இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!

தனிச்சொல்லுக்கு முன்னுள்ள சீரும், அதற்கு நேர் கீழ் உள்ள சீரும் இழைபுத்தொடை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், எட்டாம் சீர்கள் மோனை அமைதல் சிறப்பு.

ஒன்றாம் மற்றும் பத்தாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

வியாழன், 25 நவம்பர், 2010

இசைப்பா! 1

நாம் இதுவரைப் பெரும்பாலான பாவகைகளைப் பற்றி அறிந்து, இயற்றி இருக்கின்றோம். இப்பகுதியில் நாம் காண இருப்பது இசைப்பாக்களைப் பற்றி!

ஓர் ஒலி ஒழுங்கிற்குட்பட்டு எழுதும் பாவை இசைப்பா என்றால் அது மிகையாகாது. குறிப்பாக இவ்வகைப் பாக்கள் எழுதும் போது தளைகளைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. ஓசை ஒழுங்கிருந்தால் போதும். சிந்து, நொண்டிச் சிந்து போன்றவை இசைப்பாக்களே!


இப்பகுதியில் மிகவும் எளிமையான முறையில் எழுதப்படும் இசைப்பாடல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மதியுரை!

தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? -அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை -அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது -தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு -நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு! -அகரம் அமுதன்.


இப்பாடல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
 இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,

இயற்சீர் +இயற்சீர் இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

 ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. இப்படியே அனைத்து வரிகளையும் இயற்றுதல் ஒருவகை இசைப்பாவே. முயலுக.

அகரம் அமுதன்

திங்கள், 6 செப்டம்பர், 2010

ஆசிரியர் போற்றுதும்!

இந்த ஆசிரியர் நாளில் நம் வெண்பா வலையிற் பயிலும் அனைவரும் தாங்கள் பயின்ற ஏதேனும் ஒரு பாவடிவில் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை முன்னிருத்தியோ, பொதுப்படையாகவோ ஆசிரியர்களை வாழ்த்திப் பாவடிக்க அழைப்பு விடுக்கின்றேன்.

தங்களுக்கான தலைப்பு - ஆசிரியர் போற்றுதும்

அகரம் அமுதன்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 5

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பிறந்தவர் புகழுற வேண்டின்
இறந்தபின் நிலைபெற வேண்டின்
பிறவுயிர் தம்முயிர் என்றே
அறிந்தவை வாழ்வுறச் செய்வீர்! -புலவர் அரங்க.நடராசன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 4

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பசித்தால் உண்பது நன்றாகும்
பசியா துண்பது நோயாகும்
புசிக்க வாழ்வது பெருந்தீங்கு
புசித்தல் வாழ்வதற் கெனல்நன்றே! -புலவர் அரங்க. நடராசன்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 3

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

நல்லவர் நட்பினை நாடுகவே
அல்லவர் நட்பினை அகலுகவே
வல்லவர் ஆகவே வாழுகவே
இல்லையோர் நன்மையும் இதனினுமே! -புலவர் அரங்க. நடராசன்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 2

ஓரடியில் மூன்று சீர்கள் வரவேண்டும் என்பதை முன்பே அறிவோம்.

கீழ்காணும் பாவிற்கான தளைகள்

தேமா + கூவிளம் + கூவிளம்

உண்மை என்றொரு பண்பினை
ஒண்மை யாகநாம் கொண்டிடின்
வெண்மை அகு(ம்)நம் உள்ளமே
மண்ணில் வாழலாம் மன்னியே! -புலவர் அரங்க. நடராசன்

திங்கள், 26 ஜூலை, 2010

வஞ்சி மண்டிலம்! 1

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு நான்கடிகள் அமைந்தது ஒரு பாடல். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தால் முடிதல் வேண்டும் என்பது கட்டாயமில்லை. அமைந்தால் நன்று.

இவ்வாறு அமைந்துள்ள பாடலை வஞ்சி மண்டிலம் என்று வழங்குவர். ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்கும் என்று பொதுப்படக் கூறினாலும் சீரமைப்பால் வஞ்சிமண்டிலம் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒருவகை-


தேமா + தேமா + கூவிளம் என்ற வாய்பாட்டால் இயன்றது.

அன்பு கொண்டு வாழ்வதால்
துன்பம் நீங்கி உய்யலாம்
இன்பம் உண்டு மண்ணினில்
என்றும் இஃதோர் உண்மையே!

திங்கள், 21 ஜூன், 2010

கலிமண்டிலம்! 7

நான்கடிகள் கொண்ட பாடல்.

சீரமைப்பு முறையே- காய் + காய் + காய் + காய்

நான்கடிகளும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமையுமாறு வருதல் வேண்டும்.

இவ்வகைப் பாவைத் தரவுக் கொச்சகக் கலிப்பா என்று வழங்குவதும் உண்டு.

காட்டுப்பா

சீராரும் ஓர்மகனே! தேசுடைய என்மகனே!
பாராள வந்தவனே! பாசத்தின் பைங்கொடியே!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!
ஆராரோ! ஆராரோ! ஆராரோ! ஆராரோ!

தீராத சாதிகளைத் தீர்க்கஉரு வானவனே!
பேராத மதவெறியைப் பேர்க்கவந்த மாவீரா!
வாராத ஒற்றுமையை வரவழைக்க வந்தவனே!
போராடுங் கண்மூடப் பொன்னேநீ கண்ணுறங்கு!

தாய்மொழியைக் காக்கவந்த தன்மானப் போராளா!
தாயழிவைப் போக்கஒரு தண்டெடுக்குந் தலைமகனே!
தாயகத்தைச் சீராக்கத் தயங்காத பகுத்தறிவால்
தாயமுதப் பாலருந்தித் தங்கமக னேஉறங்கு!
புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதன்

புதன், 9 ஜூன், 2010

கலிமண்டிலம்! 6

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகளைக் கொண்ட பாடல்.
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.

காட்டுப்பா

இலவயம் இன்றி எப்பொருள் இன்று
விலைகொளும் பொருளாய் விற்கிறார் கடையில்?
அலைந்திடும் மாந்தர் அவாவினைக் கண்டு
மலிந்தன காணீர் மாசுடைப் பொருளே! --- புலவர் அரங்க. நடராசன்

ஓம்புக மனதை ஓம்புக உடலை
ஓம்புக அறிவை ஓம்புவ தாலே
தீம்புகள் அனுகா! திருவதே தொடரும்
நாம்நலம் பெற்றால் நலம்பெறும் நாடே! --- அகரம் அமுதன்

ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்
பையந டந்து பெற்றதன் மகவைக்
கையினில் ஏந்திக் களித்திருப் பாளே! --- அகரம் அமுதன்

வெள்ளி, 4 ஜூன், 2010

கலிமண்டிலம்! 5

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகள் அமைந்த பாடல்.
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.

காட்டுப்பா

சிவந்தெழு கதிரவன் சிதறிடும் ஒளியில்
நிவந்தெழுங் கடலலை நிகழ்த்திடும் சதிரில்
உவந்திசை எழுப்பிடும் ஒலிக்குயில் அலகில்
கவர்ந்திருந் தொளிருவாள் கவியெனும் அழகே! --- புலவர் அரங்க. நடராசன்.


களிதரும் மதுவெனக் கரங்கொளும் எவரும்
ஒளியிழந் தறிவினொ டுடலமும் மெலிய
நளிமிகுந் துழளுவர் நவைவழி நகர்வர்
விளிவினில் நமனிடம் விழைகுவர் மடிந்தே!

குணங்கெடும், குடிகெடும் குடியினை விரும்பாய்;
பணங்கொடுத் தழிவெனும் படுகுழி விழுவாய்;
மனைதனை, மகவினை மனத்தினில் நினைந்தால்
துணையென மதுவினைத் தொடர்ந்திட ஒணுமோ? --- அகரம் அமுதன்

சனி, 29 மே, 2010

கலிமண்டிலம்! 4

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா

4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.

5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது குறிலொற்றெடுத்தும் வரலாம்.

காட்டுப் பாடல்கள்!

வரும்புண் டரம்வா ளியின்மார் புருவிப்
பெரும்புண் திறவா வகையே ருதிநீ
இடும்புண் டநீர்மீள் கினுமென் னுழையில்
கரும்புண் டசொல்மீள் கிலள்கா ணுதியால்! --- கம்பரா...

செஞ்சே வகனார் நிலைநீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வனதே வதைகாள்
அஞ்சேல் எனநல் குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிபோ உரையீர்! --- கம்பரா...

அகரம் அமுதா

செவ்வாய், 25 மே, 2010

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2

(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

1. அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

2. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. 1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அல்லது 1 ஆம் 7 ஆம் சீர்களில் மோனை அமையலாம்.

4. தேமா, புளிமா ஆகிய மாச்சீர்கள் இரண்டும், தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய மாங்காய்ச்சீர்கள் இரண்டும் மட்டுமே இப்பாவில் பெற்றுவரும். இதில் தேமாங்காய் அடியின் முதற்சீரில் மட்டுமே வரும். இடையில் எங்கும் வராது.

5. சீர்கள் முறையே—
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா

(அல்லது)

தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா

6. இவ்வகைப்பா முழுக்க முழுக்க வெண்டளையான் இயன்றது என்பதறிக.

7. 1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம். 2ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் சீர்கள் கட்டாயம் இயற்சீர்களாகவே (தேமா, புளிமா) வர வேண்டும்.

8. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு. இல்லையாயினும் குறையில்லை.

காட்டுப் பாடல்கள்!

புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன்
உரைபொய் எனாது புலர்வாள்
ன்சொற் கடந்து மடமங்கை ஏவ
நிலைதேர வந்த ருளே
ன்சொற் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு னியே
ன்சொற் கடந்து மனமும் தளர்ந்த
ளவீரன் வந்த இயல்பே! --- கம்பரா…

பச்சை - மோனையைக் குறிக்கிறது.
மஞ்சல் - காய்ச்சீர்களைக் குறிக்கிறது.

அகரம் அமுதா

சனி, 22 மே, 2010

கலிமண்டிலம்! 3

நான்கடிகள் கொண்ட பாடல் முறையே – குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம். ஒன்றாம் மூன்றாம் சீர்களின் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்கள்!

ஒழுக்கம் என்பதை உரியின் மேலதாய்
வழுக்கல் இன்றியே காத்து வாழ்பவர்
தழைக்கும் ஓர்புகழ் தாங்கு வாரவர்
இழுக்கம் ஏற்படின் ஈவர் தம்முயிர்! --- புலவர் அரங்க. நடராசன்

நெஞ்சில் மாசினை நிறைத்து வைத்திடல்
நஞ்சைப் பாலினில் நயந்து சேர்ப்பதாம்
நெஞ்சில் நல்லதே நிறைந்து நிற்பதால்
எஞ்சும் இன்பினுக் கெல்லை இல்லையே! --- அகரம் அமுதா

உன்னில் மிக்கவர் ஊரில் ஆயிரம்
உன்னை மேலென உள்ளல் தப்படா!
எண்ணிப் பார்த்திடின் யாரும் யார்க்குமே
சின்ன வர்இலர் சிந்தித் துய்கவே! --- அகரம் அமுதா

அகரம் அமுதா

ஞாயிறு, 16 மே, 2010

கலி மண்டிலம்! 2

இப்பாடத்தில் கலிமண்டிலத்தின் இரண்டாம் வகையைப் பற்றி அறியவிருக்கின்றோம். மண்டிலங்களைப் பொருத்தவரை நான்கடிகளே வர வேண்டும் என்பது நாம் அறிந்ததே! இவ்வகை, நான்கடிகளும் ஓரெதுகை பெற்று வர வேண்டும்.

சீரமைப்பு முறையே

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் -இவ்வாரே நான்கடிகளும் அமைய வேண்டும். குறிலீற்றுமா வின் இடத்தில் சிறுபான்மையாக குறில் ஒற்றீற்று மாவாகவும் வரலாம்.

இவ்வகைப் பாவைப் பொருத்த மட்டில் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

காட்டுப் பாடல்

விலங்குகள் யாவுமே விரும்பித் தாம்பெறும்
நிலந்திகழ் குட்டிகள் நாடி உண்டிட
வளந்தரும் தம்மடி மண்டும் பாலினைக்
கலந்ததோர் அன்புடன் ஊட்டக் காண்கிறோம்! --- புலவர் அரங்க. நடராசன்

இப்பாடலை உற்று நோக்குக. முதல் மூன்றடிகளில் மோனை ஒன்றாம் மூன்றாம் சீர்களில் அமைந்திருக்க, நான்காம் அடியில் ஒன்றாம் நான்காம் சீரில் மோனை அமைந்துள்ளது. இவ்வாறும் மோனை அமையலாம்.

மொனை பற்றி நாம் முன்பே அறிந்திருக்கின்றோம்.

முதலிரு சீரிணை, முதலிருந்து ஒன்றிரண்டு
இடையீடு பொழிப்பொரூஉ
ஈறிலி கூழை முதலீ றழலில
மேல்கீழ்க் கெதுவாய் முழுவதும் முற்றே
கடையிரு சீரிணை கடமூன்று கீழை
இடையிரண் டிடைபுனர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இது தொல்காப்பியம் இப்பாவை நன்கு மனதில் வைத்துக்கொண்டால் மோனை, எதுகைகளை எங்கெங்கு அமைக்கலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்துவிடும்.

மலைகளும் மரங்களும் மணிக்கற் பாறையும்
அலைபுனல் நதிகளும் அருவிச் சாரலும்
இலைசெறி பழுவமும் இனிய சூழலும்
நிலைமிகு தடங்களும் இனிது நீங்கினார்! --- கம்பராமாயணம்.

இப்பாவிலும் நான்காம் இடியின் மோனை ஒன்றாம் நான்காம் சீர்களில் அமைவதை நோக்குக.

அகரம் அமுதா

திங்கள், 10 மே, 2010

கலிமண்டிலம் -1

ஆசிரிய மண்டிலங்களில் எண்சீர் மண்டிலம் வரை பார்த்தோம். அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட ஆசிரிய மண்டிலங்கள் தற்காலத்தில் பாடப்படவில்லை. அல்லது போற்றப்பட வில்லை எனலாம். ஆதலால் அடுத்த படியாக நாம் கலிமண்டிலம் பற்றி அறிந்துகொள்ளலாம் எனக்கருதுகின்றேன்.

கலிப்பா பற்றி முன்பே படித்திருக்கின்றோம். ஆதலால், நேரடியாக கலிமண்டிலம் பற்றி அறியப்புகலாம்.

கலிமண்டிலம் எழுதுவதற்கான விதிகள்-

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.

2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.சீரமைப்பு 1ஆம் சீர் முதல் 4ஆம் சீர் வரை முறையே
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்

4. 2ஆம் 3ஆம் தளைகள் மாமுன் நிறை, விளமுன் நேர் என வெண்டளையாகவும் வரும், மாங்காய்ச்சீரும் அருகிவரும்.

5.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு. (நேரால் தொடங்கும் இவ்வகைப் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்துக்களும், நிரையால் தொடங்கும் பாடலில் 12 எழுத்துக்களும் இருக்கும் என்பதை உணரலாம்.)

6.கூவிளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகிவருவதும் உண்டு.

7.குறில் ஈற்றுமா என்பது குறில் ஒற்று ஈற்று மாவாகவும் வரலாம். அதாவது – ‘காலம்’, ‘மாதம்’, ‘வணக்கம்’ – இவற்றிலுள்ள ‘லம்’, ‘தம்’, ‘கம்’ போன்றவற்றைக் கவனிக்க.

காட்டு

காவி யோகய லோஎனும் கண்ணினைத்
தேவி யோதிரு மங்கையின் செல்வியாள்
பாவி யேனையும் பார்க்குங்கொ லோஎனும்
ஆவி யோயினும் ஆசையின் ஓய்விலாள்.

-கம்பராமாயணம்.

மேலுள்ள பாடலில் மூன்றாமடியின் மூன்றாம் சீரை நோக்குக. ‘பார்க்குங்கொல்’ எனக் காய்ச்சீராக அருகி வரந்துள்ளது.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====

கணவன் வீட்டுளார் காட்டிடும் தீங்கினால்
மனைவி யானநீ மாயநி னைப்பதோ?
உனக்கும் கையிரண் டுள்ளன சொந்தமாய்
நினைத்துப் பாரடி நீஇவண் வாழலாம்!

புலவர் அரங்க. நடராசன்.

இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடியின் முதற்சீர்கள், குறிலொற்று மாவாக வந்துள்ளமையையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிய வெஞ்சமத்(து) ஆருயிர் போகத்தான்
தனியி ருந்த உடலன்ன தையல்பால்.

கம்பராமாயணம்.

மேலுள்ள பாவின் முதலடியின் இரண்டாம் மூன்றாம் சீர்களின் தளையை நோக்குக. 'வந்து முறைமுறை' - மாமுன் நிறை (கருவிளம்) வந்திருக்கிறது. இரண்டாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்ததால் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்திருக்கிறது. அதுபோலு காய்ச்சீர்கள் 3 வந்திருப்பதையும் நோக்குக.

==== ==== ==== ==== ==== ====
==== ==== ==== ==== ==== ====


விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போயுக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.

கம்பராமாயணம்.

இப்பாடலின் நான்காமடியின் மூன்றாம் சீர் கூவிளமாக அமையாமல் தேமாவாக அமைந்தமையால் இறுதிச்சீரும் கூவிளமாக அமையாமல் கருவிளமாக அமைந்ததை நோக்குக.

அகரம் அமுதா

வெள்ளி, 7 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்போர் மின்னஞ்சலிலும் தங்களது கவிதைகளை அனுப்பி வைக்க

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவையில் ஜூன் 23-ம் தேதி தொடங்கவுள்ள, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3.2 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.


கவிதைகளை அனுப்ப வயது வரம்பு கிடையாது. ஒரு பக்க அளவில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். கவிதை, மரபுக் கவிதையாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.


கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தபால் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவோர் மே 20-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் முகவரி: ul​ag​al​aviy​ak​avith​aipotti​@gm​ail.com,​​ pothu​ar​ang​am@ gm​ail.com​


இவ்வாய்ப்பை அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன். நன்றிகள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 3

அடிதோறும் எட்டுச்சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அரையடி சீரமைப்பு முறையே = குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா –என்று அமைந்திருக்க வேண்டும். அடுத்த அரையடியும் அவ்வாரே அமைந்திருக்க வேண்டும்.

குறிலீற்றுமா என்பது, குறில் ஒற்று ஈற்றுமாவாகவும் வரலாம்.

இவ்வாறான நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவர வேண்டும்.

1,5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒழிந்து போனது பரிசெனும் சீட்டு
ஒழிந்து போனது பஞ்சையர் துயரம்
பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம்
பிடுங்கி வாழ்ந்தனர் பரிசெனும் சீட்டால்
கழிந்த நாட்களில் கள்வரைப் போலக்
கவர்ந்த செல்வமோ கணக்கில வாகும்
விழுந்த ஏழையர் வாழ்வெலாம் உயர
விதித்த ஓர்தடைக் கொப்புயர் வுண்டொ?

--- புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதா

சனி, 17 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 2

அடிதோறும் எட்டு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அறையடி முறையே காய் + காய் + காய் + மா என அமைந்திருக்க வேண்டும். அடுத்த அறையடியும் அப்படியே அமைந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறாக நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.


காட்டு!

அருகமர்ந்து தன்மனையாள் அகம்விரும்பி நல்ல
அறுசுவையும் நிறைஉணவை அருங்கணவர்க் கூட்ட
விருப்பின்றிச் செல்வத்துச் செருக்கேறி நின்று
வெறுத்தாற்போல் முன்கவளம் உணமறுத்துப் பின்னர்
அருந்தியவர் பிறிதோர்நாள் பெருவறியர் ஆகி
அயலார்முன் போய்உணவை இரந்துண்பார் அஃதால்
பெருஞ்செல்வம் நிலைத்ததெனக் கருத்தினிலே எண்ணிப்
பேணுகின்ற நற்றன்மை உடையதன்று காண்பீர்!

--- கவிமாமணி இறையரசன்.

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!


இவ்வாரான இலக்கண அமைப்பில் "பிளாஸ்டிக்கு" என்ற தலைப்பில் பாவியற்ற வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

புதன், 14 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்!

அவனடியார் சொன்னது…

////”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” ////

அவனடியாரின் இச்சொல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எண்ணிப்பார்ப்போமானால் சிறிது காலங்களாக அவர் உரைத்துள்ளதுபோல் குறிப்பிட்ட சில தலைப்புகளிலேயே பாவியற்றி வருகின்றோம் என்பது உண்மையே! கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழநம்பி அவர்கள் நான்கு தலைப்புகள் வழங்கிய போது, இறை சார்ந்த தலைப்பொன்றை வழங்க வேண்டினேன். காரணம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நித்யானந்தாவின் அந்தரங்க கூத்துகளின் வெளிப்பாடும் ஒர் காரணமாகும். இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. நான் கருதியிருந்தேன். ஆயினும் அப்பொழுது எனக்கு மிகுந்த பணிகள் இருந்தமையால் அத்தலைப்பிற்கு என்னால் பாவியற்ற முடியவில்லை.

சென்ற பாடத்தில் நாம் கற்ற எண்சீர் மண்டில வகையில் இப்பொழுது நித்யானந்தா சார்ந்த பாவை இயற்றி அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலத்தில் பாவியற்ற வேண்டுகின்றேன்.

அகரம் அமுதா

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 1

ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.

கண்ணன்பால் மிகவன்பால் வேலைக் காரி
கையிற்பால் செம்போடு தெருவில் சென்றாள்
திண்ணன்பால் வாங்கென்றான் கரிய னும்பால்
தீங்கற்ற பாலேயென் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
சீயென்பாள் நில்லாதீர் போவீர் அப்பால்
கண்ணன்பால் தான்கொண்ட களிப்பால் அன்னார்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்!

---பாரதி தாசன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!

---உலக நாதன்

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்!
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே!
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே! மானே!

---விவேக சிந்தாமணி.

இம்முறையிற் பாப்புனைய வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

திங்கள், 5 ஏப்ரல், 2010

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.

அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,

எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.

எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.

1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.


விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா =இதுவே நாம் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாடு.

காட்டு-

­வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே

வண்டமிழ் பேசிடும் மக்கள்

பையகம் நஞ்சைப் பதுக்கிடும் பாம்பாய்ப்

பண்பினில் சூழ்ச்சியை வைத்துப்

பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்

புகழ்நிலம் அற்றனர் இன்றோ

கையக நிலமும் காடையர் பரிக்கக்

கவினழிந் திடர்பல உற்றார்!


நாவலந் திவு நம்மவர் வாழ்ந்த

நன்னிலம் ‘இந்தியா’ ஆச்சு

தீவெனத் திகழும் இலங்கைநன் னாடும்

சிங்கள தேயமாய்ப் போச்சு

பாவளங் கொழித்த பசுந்தமிழ் ஆட்சி

பாரினில் எங்கனும் இல்லை

நாவலம் படைத்த நற்றமிழ் மக்கள்

நலிவகல் நாளு(ம்)வந் திடுமோ?


இம்முறையில் பாக்கள் புனைந்து வருக என அனைவரையும் அழைக்கிறேன்.


அகரம் அமுதா


வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நான்காம் தலைப்பு : இறை வழிபாடு!

இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார்
எழுதிய மண்டிலம்.

(காய் + காய் + காய் + காய் +
மா + தேமா)

நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

2. திருவமை. உமா
எழுதியவை :

மா மா காய்
மா மா காய்

கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!

மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்காப் புகழைத் தான்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக்
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு

மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

கண்ணா அருள்வாயா?

குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை நேராய்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்

பாதையாம் கீதையைத் தந்தாய்

குன்றைக் குடையெனப் பிடித்துக்

கோபியர் குலத்தைநீ காத்தாய்

நன்று நினைப்பவர் நாடும்

நன்னிலை ஏய்திடச் செய்தாய்

என்று என்னுளே கருவாய்

என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?


(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்)

பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப்
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!

நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!


3. திரு. அவனடிமை
எழுதியவை :

குறுலீற்று மா+விளம்+மா+
விளம்+விளம்+மா

ஆன்ம உலகினுக் கரசர்
.......ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
உன்னுள் உருக்குலை யாதோர்
.......உணர்வினைக் காட்டுவே னென்பார்
உந்தன் உடல்பிணி யைத்தன்
.......உருக்கிடும் இசையினால் நீக்கி
உன்னுள் மூச்சிலே உயிரின்
.......உண்மையை உணர்ந்திடு வென்பார்!

ஏங்கும் சீடரும் மடமும்
.......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
பொன்னும் பெயருடன் பகட்டும்
.......பூவைய ரைப்புலன் புணர
கன்னம் தடவிடும் கணிகை
.......கனிவுடன் பணிவிடை புரிவாள்
இன்னும் பலயில வசமாய்
.......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்!

அங்கி அறிவிழந் தோமென்
.......றரண்டுநா மழுதிட வேண்டா
இங்கிவ் வினவொளி மறைக்க
.......ஈசலா னந்தருக் காகா
தெங்கும் எப்பொரு ளுள்ளும்
.......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
குன்றின் மேல்விளக் குலகின்
.......குறைகளும் அவன்திரு வருளே!

மா + மா + காய்
மா + மா + காய்

ஆன்மீ கத்தில் அரசாள
....ஆண்ட வன்போல் அவர்வந்தே
உன்னுள் உறையும் உருக்குலையா
....உணர்வே நானென் றுரைத்திடுவார்
எண்சாண் உடலிற் பிணிகளையும்
....இல்லா தாக்க இசைதொடுத்து
உன்மூச் சினைச்சீ ராக்கிடென
....உனக்கே உரைப்பார் அறிவுரையாய்!

ஏங்கும் சீடர் கூட்டணியும்
....ஏய்க்கும கூட்டம் பின்வரவும்
பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
....பெண்மை அழகும் புலன்புணர
கன்னம் தடவும் கணிகையுடன்
....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
இன்னும் இதுபோல் இலவசசிற்
....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

அங்கி அறிவோ டிழந்தோமென்
....றரண்டு நாமும் அழவேண்டாம்
கங்குல் இனப்பே ரொளியின்முன்
....கலையும் ஈசற் கூட்டமிது
என்றும் எங்கும் எவரிடமும்
....எரியும் ஒளியே எமதிறைவன்
குன்றின் மேலே விளக்கவந்தான்
....குறையும் அவன்பே ரருளன்றோ!

(காய்+காய்+காய்+காய்+
மா+தேமா)

நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
நாடில் ஒன்றே
நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
ஞாலந் தன்னில்
நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
நாம்காண் தோற்றம்
மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
மரமே யன்றோ!

நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
நலமே நல்கும்
உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
ஒன்றாய்க் காணும்
நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
நாணித் தோடும்
ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
ஒளிர்வா யன்பே!

4. திரு. திகழ்
எழுதியவை :

மா+மா+காய்
மா+மா+காய்

உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
பொன்னால் க‌ல்லால் உருவான‌
...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே!

காவி உடுத்த சாமிக்கு
...எதற்குக் காசு பணமெல்லாம்
கூவி அழைத்து விற்பாரே
...கூறு போட்டு ஆண்டவனைப்
பாவி யாக்க பார்ப்பாரே
...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
ஆவி அடங்கும் முன்னாலே
...ஆசை செய்யும் ஆட்டமடா!

5. திரு. அண்ணாமலை
எழுதியவை :

மா+ மா+ காய்
+மா+மா+காய்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமையாக மண்டிலங்கள் எழுதிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாக்குகின்றோம்.

அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.

-------------------------------------------------------------------------------------------