புதன், 31 மார்ச், 2010

இரண்டாம் தலைப்பு : தமிழர் நிலை!

இத் தலைப்பில் ஐவர் எழுதியுள்ளனர்.

1. திரு. அண்ணாமலை
எழுதியவை :

ஆறும் மா"ச்சீர்.

கடாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி

இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?


2. திருவமை உமா எழுதியவை :

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றிப்
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கிவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டுப்
போலியைத் தேடி நின்றார்!

பேச்சிலே தமிழை விட்டார்!
பெயரிலும் தமிழைக் காணோம்!
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்!
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்!
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்!

இன்னும் சில...

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்!
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்!
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்!

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!


3. திரு. அவனடிமை
எழுதியவை :

(மா+மா+காய்)(தேமா/புளிமா + தேமா/புளிமா + தேமாங்காய்/புளிமாங்காய்/கூவிளங்காய்/கருவிளங்காய்)

பாக்கள் புனைந்து படித்திட்டால்
.........பாழும் வயிறு நிரம்பிடுமா?
தேக்கம் மிகுந்த நம்நாட்டில்
.........தேடுஞ் செல்வம் தென்படுமா?
ஊக்கம் உணவும் உறைவிடமும்
.........உருவாக் கிடுமோர் உறுதொழிலும்
ஆக்கம் அளிக்கும் அயல்நாட்டிற்
.........கறிவுத் தமிழர் புலம்பெயர்ந்தார்!

நீக்கம் நெடுநாள் நெடுந்தொலைவு
.........நிலத்தை விட்டுப் பிரிந்தவரின்
நோக்கம் இன்றி நாட்பொழுதில்
.........நுண்மைத் தமிழும் மலிவாகித்
தாக்கம் வேற்று மொழியினத்தால்
.........தனதின் னொலியில் தான்மருவ
நாக்கில் நரம்பின் றித்துவைப்பார்
.........நையப் புடைப்பார் தமிழ்ப்பாரில்!

வீக்கம் பணத்தில் மட்டுமிலை
.........வீணே எழுதும் சொற்களிரலும்!
வாக்கில் வரம்பை நாம்வைத்தால்
.........வாதா டுவதை விட்டுவிட்டுத்
தாக்கா தவரைத் தன்மையுடன்
.........தக்க முறையில் திருத்திடவே
றாக்கா தென்றும் மொழிச்சுவையை
.........அன்பாய் அளித்தால் தமிழுயரும்!

4. திரு.சிக்கிமுக்கி
எழுதியவை :

(விளம் + மா + தேமா)

அன்பெலாம் வறண்ட நெஞ்சம்
அழுக்கெலாம் திரண்ட எண்ணம்
முன்பெலாம் இருந்த மேன்மை
முழுவதும் மறந்த உள்ளம்
தன்னலம் முன்னே நிற்கும்
தமிழினம் அழிவ தற்கும்
முன்துணை நின்ற கீழ்மை
முழுயிழி வதனின் சின்னம்!

ஆற்றுநீர் உரிமை எல்லாம்
அடியுடன் பறிகொ டுத்தும்
ஏற்றமாய்த் தன்கு டும்பம்
இருந்திடும் எண்ணம் ஒன்றே
ஊற்றமாய்த் தங்கும் ஈழ
உடன்பிறப் பழிவ தற்கும்
ஆற்றலாய்த் துணையும் போனான்
ஆமவன் தமிழன் இன்றே!

5. திரு. திகழ்
எழுதிய மண்டிலம் :

மா+மா+மா+மா+
மா+காய்

ஆறு பாய்ந்து செழித்த நிலம்
...அனைத்தும் போயிற்று!
வீறு கொண்டு எழுந்து பெற்ற‌
...வெற்றி போயிற்று!
சிறப்பு மிக்க அருமை பெருமை
...சிதறிப் போயிற்று!
உறங்கிக் கிடந்தால் உயர்வு என்றும்
...உண்டோ தமிழர்க்கு?

மிக்க மகிழ்ச்சி!
அறுசீர் மண்டில வகைகளைப் பயன்படுத்தி எழுதும் பயிற்சி நன்கு பலருக்கும் கைவரப் பெற்றிருக்கிறது.
இனி, இலக்கியங்களைப் படித்தும், அணி வகைகளைப் பயன்படுத்தி எழுதப் பழகியும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்!

முதல் தலைப்பு : தமிழ்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
மிகவும் சிறப்பாகப் பலரும் மண்டிலப் பாக்கள் எழுதியிருக்கின்றீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
புதிய அன்பரும் கலந்து கொண்டு நன்கு எழுதியிருக்கிறார்.
நம் அகரம் அமுதாவும் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கின்றார்.
ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்தளித்திருக்கின்றேன்.
சில மண்டிலங்களில் சிறு திருத்தம் இருக்கும். எழுதியவர்களுக்கு எளிதில் தெரியும்.

மொத்தத்தில், அனைவரும் நன்றாக எழுதப் பழகியிருப்பது தெரிகிறது.
இங்கு எழுதப்பட்ட பாடல்கள் நூலாக வெளியிடக்கூடிய தகைமை சான்றன என்பதில் ஐயமில்லை.

முதலில், தமிழ் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்துக் கீழே தந்துள்ளேன்.

1.திரு.அகரம் அமுதா எழுதியவை :
விளம் + மா + தேமா = என்ற வாய்ப்பாட்டில் அமைந்த பாடல்!

கிழவியே! கிளியே! நாளும்
கிடந்துநான் கொஞ்ச நாணும்
அழகியே! அமுதே! தேனே!
அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
விழுங்கவும் ஒல்லா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டி னுள்ளும்,
உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
ஏங்கினேன் எங்குச் சென்றாய்?


2.திரு. திகழ் எழுதியவை :
தமிழ் ‍- (இயற்சீர் ஆசிரிய மண்டிலம்)

உயிராய் உடலாய் என்னுள்
...உருவம் கொண்டாய் தமிழே!
செயலாய் சொல்லாய் இருந்து
...என்னை ஆளும் தமிழே!
தாயாய் இறையாய் இருந்து
...என்னைக் காப்பாய் தமிழே!
சேயாய் மகளாய் மீண்டும்
...பிறக்க வேண்டும் தமிழே!

கனவாய் நினைவாய் காணும்
...பொருளாய் எல்லாம் நீயே!
வானாய் மண்ணாய் வணங்கும்
...இறையாய் எல்லாம் நீயே!
பொன்னாய் மணியாய் கிடைக்கும்
...புகழாய் எல்லாம் நீயே!
உன்னை யன்றி வேறு
...யாரு மில்லை தமிழே!

எழுத்து வ‌டிவ‌ம் வேண்டு
...மென்று சொல்லிக் கொண்டு
க‌ழுத்தில் க‌த்தி கொண்டு
...அலையும் கூட்ட‌ம் பெருமை
ப‌ழைமை மிக்க‌ த‌மிழைச்
...சிதைக்கு மிந்த‌ நோக்க‌ம்
செழுமை போக்கச் செய்யும்
...சிறுமை சேர்க்கும் அ‌ன்றோ?

திகழ்,
பூசை செய்ய‌ப் பார்த்தால்
...எங்கே சென்றாய் தாயே
இசையாய்க் கேட்க‌ நுழைந்தால்
...காண‌ வில்லை உன்னை
த‌சையைக் காட்டும் ப‌ட‌த்தில்
...சிதைந்து போனாய் நீயோ
ஓசை யின்றி எங்கே
...ஒளிந்து கொண்டாய் த‌மிழே
-இந்த மண்டிலப்பாவில் நெடிற் கீழ் எதுகையும், குறிற்கீழ் எதுகையும் கலந்து வருகின்றன (பூசை, இசை, தசை, ஓசை)
இவற்றை எல்லா அடிகளிலும் நெடிற்கீழ் எதுகையாகவோ, குறிற்கீழ் எதுகையாகவோ மாற்றிவிடுங்கள்.

3. திரு.அண்ணாமலை எழுதியவை :

விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா

உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

4. திரு.சிக்கிமுக்கி எழுதியவை :
(மா + மா + காய்)

அன்னை மொழியே! அறமுணர்த்தும்
அறிவே, உணர்வே அரும்பண்பே!
முன்னைப் பழமைப் பெருமையுறை
முதல்தாய் மொழியே, செந்தமிழே!
பின்னைத் தமிழர் பேதைமையால்
பெருமை குலைந்த பேரழகே!
உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
உரைத்தார் செம்மொழி நீயென்றே!

ஒப்பில் கழக இலக்கியமும்
உலகிற் சிறந்த முப்பாலும்
துப்பில் திகட்டா பாவியங்கள்
சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!
தப்புத் திருத்தித் தருங்கம்பன்
தகைசால் பாவும் பெருங்கதையும்
செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்
திருவாந் தமிழே வாழியவே!


5.திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்:
(மா - மா - காய்.)

தோழி எனக்கு வளைநகருந்
தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
ஆழி அளவில் மகிழ்வோதீ
அதுவுங் குளிரும் துயரோவுந்
தாழி நிறைத்த கவிகொஞ்சம்
தாவி எடுத்து அமைதியுற,
வாழி என்றும் வான்புகழ
வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!


6. திருவமை.உமா எழுதியவை :
குற்லீற்று மா+ விளம்+ மா
விளம் +விளம்+ மா

பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்

சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே!
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!

அவனடிமை ஐயாவின் பாடல் இரண்டாம் தலைப்பில் வருகின்றது.


வெள்ளி, 19 மார்ச், 2010

அறுசீர் மண்டிலம் எழுதுவோம்!

அன்பார்ந்த வலையுலக நட்புள்ளங்களுக்கு,

அகரம் அமுதா அவர்களின் அறிவிப்பின்படி கீழ்க்காணும் நான்கு தலைப்புகளில் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுதுமாறு கேட்டுக்கொள் கின்றேன்.

1. தமிழ்

2. தமிழர் நிலை

3. இயற்கையின் இனிமை

4. இறைவழிபாடு

ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு அல்லது மூன்று மண்டிலப் பாக்கள் இருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு தலைப்பிலேனும் எழுதுங்கள். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் எழுதுவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஒரு தலைப்பில் எழுதப்படும் மண்டிலங்கள் இரண்டானாலும் மூன்றானாலும் அவை ஒரே வகையினவாக இருக்க வேண்டும்.

ஒருதலைப்பில் எழுதப் பயன்படுத்திய அறுசீர் மண்டில வகையை இன்னொரு தலைப்பில் எழுதப் பயன்படுத்த வேண்டா.

மற்ற விளக்கங்கள் அ.அ. அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறே.

29-3-2010க்குள் எழுதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எழுதத் தொடங்குக.

திங்கள், 15 மார்ச், 2010

பயிலுநர்க் கோர் அன்பான அறிவிப்பு!

வெண்பா எழுதலாம் வாங்க’ – வலையின் அன்பான பயிலுநர்க்கு அமுதனின் வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாவலர் தமிழநம்பி அய்யா அவர்கள் வழங்கிவரும் அறுசீர் ஆசிரிய மண்டிலங்களைக் கற்று, நல்ல பயிற்சி பெற்றுள்ளோம். பயிற்சி பெற்றால் மட்டும் போதுமா? தேர்ச்சி அடைந்த நிறைவு வேண்டுமல்லவா!

ஆதலால், பயின்ற 7-வகையான அறுசீர் மண்டிலங்களில் ஏதேனும் ஒரு வகையைக் கொண்டு, கொடுக்கப்படும் தலைப்புக்குப் பாக்கள் புனையுமாறு கேட்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றிற்று. பாவலர் அவர்களும் அவ் வெனது எண்ணத்திற்கு இசைவு தெரிவித்தார்.

மொத்தம் மூன்று தலைப்புகள் வழங்கப்படும். தலைப்புகளைப் பாவலர் அவர்களே முடிவு செய்வார். நாம் வெகு சிலரே இத் தளத்தில் உள்ளமையால், ஒருவர் ஒரு தலைப்புக்குத்தான் எழுத வேண்டும் என்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. ஒருவரே மூன்றுதலைப்புகளிலும் கூட பாவியற்றலாம்.

பாத் தேர்விற் பங்கு பெறுவதற்கான நெறிமுறைகள் :-

1.பாடங்களாக வழங்கப்பட்டுள்ள 7-வகை அறுசீர் மண்டிலத்தில் ஏதேனும் ஒருவகையைக் கொண்டு பாப்புனைய வேண்டும்.

2. நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறுசீர் மண்டிலத்தில் எழுதப்படும் பா இரண்டு மண்டிலங்களுக்குக் குறையாமலும், 3 மண்டிலங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். (4 அடிகளைக் கொண்டது ஒரு மண்டிலம் என்று பயிலுநர் அனைவருக்கும் தெரியும்)

3. எதுகை மோனை பற்றி முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதால், எதுகை, மோனை பிறழாமல் எழுதுதல் வேண்டும்.

4. தேவையான இடங்களில் தளை சரியாக இருக்க வேண்டும்.

5. அதிகமாகச் சொற்களைப் பிரித்து எழுதாமல் (வகையுளி) இயன்றவரை ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு அமைத்தல் சிறப்பு.

6.தலைப்புகள் வழங்கப்படும் நாளிலிருந்து 10 நாட்களுக்குள்
பாக்களை வழங்கிட வேண்டும்.

7.ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் பாக்கள் புனைபவர்கள், ஒரே வகையான மண்டிலத்தைக் கொண்டு பாக்கள் புனையக்கூடாது. ஒரு தலைப்புக்குக் கையாண்ட மண்டிலத்தை, அடுத்த தலைப்புக்கு எழுதும் போதும் கையாளாமல் (கொடுக்கப்பட்டுள்ள 7 வகைகளுள்) வேறு மண்டிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

8. இதில் தேர்ந்தவர் தேராதவர் என்ற நிலைகளில்லை. எல்லாரும் தேர்ந்தே இதுவரை மண்டிலங்களை அருமையாக எழுதியிருக்கிறார்கள். ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னால் எப்படி எழுதுகிறோம் என்று தம்மைத்தாமே மதிப்பிட்டுக் கொள்ளவே இந்த ஏற்பாடு.

இந்த அறிவிப்பு குறித்துப் பயிலுநர் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

அகரம் அமுதா

திங்கள், 8 மார்ச், 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 7

அடுத்து, இயற்சீரால் (ஈரசைச் சீரால்) அமையும் அறுசீர் மண்டிலங்கள் எழுதப் பழகுவோம்.

இயற்சீரால் அமையும் அறுசீர் மண்டிலங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

அ. முதல்வகை :

இவ் வகையில் -

1. பாடல் முழுதும் ஈரசைச் சீர்களே வரவேண்டும்.
விளச் சீர்கள் வருமிடங்களில் மாங்காய்ச் சீர்கள் அருகி வரலாம்.

2. அரையடி ஈற்றுச் சீரும் (3ஆம் சீர்) அடியீற்றுச் சீரும் (6ஆம்சீர்) மாச் சீராக (தேமா அல்லது புளிமா) அமைந்திருக்க வேண்டும்.

3. ஒவ்வோர் அரை அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
( அரையடி இறுதியும் அடுத்த அரையடி முதலும் இணையும் இடத்தில் வெண்டளை வரவேண்டிய கட்டாயம் இல்லை.)

3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

உன்னை யுகப்பன் குயிலே
.....உன்துணைத் தோழியு மாவன்
பொன்னை யழித்தநன் மேனிப்
.....புகழிற் றிகழு மழகன்
மன்னன் பரிமிசை வந்த

......வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன்
.....சீர்ப்புயங் கன்வரக் கூவாய்! - திருவாசகம் (குயிற் பத்து)

ஆ. இரண்டாம் வகை :


1. ஓரடியில் உள்ள ஆறு சீர்களும் மாச்சீர்களாகவே அமைந்திருக்க வேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.

5. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

எடுத்துக்காட்டுப் பாடல் :

கருநா டகத்தார் செயலால்

.....கடற்கா விரியும் வறண்டு

ஒருவாய்த் தண்ணீர் இன்றி

.....உலர்ந்து தளர்ந்து போனாள்

திருவாழ் நிலங்கள் காய்ந்து

.....சீரும் சிறப்பும் மாறிக்

கரிந்த புல்லும் சருகும்

.....காணக் கண்கள் கூசும்.

இனி, இரண்டு வகையிலும் எழுதிப் பழகுவோம்.

குறிப்பு : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலங்களில் இக்காலத்தில் வழங்குவன நாம் படித்த ஏழு வகைகளே. வேறு வகைகள் பல இருந்தன வேனும், அவை கம்பர் காலத்திற்கு முன்னரே இறந்தன. கம்பர் காலத்தில் வழங்கிய மண்டிலங்களையே நம் முன்னோர், ஆயிர மாண்டுகளாக் கையாண்டு வந்தனராதலால், அவர்கள் சென்ற வழியில் செல்வதே மரபு.

வெள்ளி, 5 மார்ச், 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 6

அடுத்த வகை அறுசீர் மண்டிலம், ஓரடியில்

குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா

என்று அமைந்து வரும் வகையாகும்.

இம் மண்டிலப் பாவில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித் தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து வரும். முதற் சீர் குறில் ஈற்று மாச் சீராக வரும்.
இரண்டு, நான்கு, ஐந்தாம் சீர்கள் விளச் சீர்களாக அமையும்.
மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மாச் சீராக வரும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

எடுத்துக்ககாட்டுப் பாடலைப் பார்ப்போம்:

நீல வண்டறை கொன்றை
.....நேரிழை மங்கையொர் திங்கள்
சால வாளர வங்கள்
.....தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலு ளானைக்
.....காவுடை யாதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
.....எம்மையு மாளுடை யாரே. – சுந்தரர் தேவாரம்.

இன்னொரு எளிய பாடல் :

கொடிய பிணிஎது என்றால்
.....குலைவுற நடுக்கிடும் பசியே
மிடியி னால்வரும் பசியால்
.....வீழ்ந்திடும் உயிர்களுக் களவோ?
ஒடியும் உயிர்களும் நம்போல்
.....உயர்வுள உயிரென எண்ணி
முடியும் மட்டிலும் உதவ
.....முன்வரல் உயர்தவம் அன்றோ!
-அரங்க.நடராசனார்

இவ் வகை அறுசீர் மண்டிலம் எழுதலாமே!

செவ்வாய், 2 மார்ச், 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 5

அடுத்த வகை மண்டிலம் 'குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' வகையாகும்.

இம்மண்டிலப் பாவில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து வரும்.
முதற் சீர் குறில் ஈற்று மாச்சீராக வரும்.
இரண்டாம் சீர் கூவிளச் சீராக அமையும்.
மூன்று நான்கு ஐந்தாம் சீர்கள் விளச்சீர்களாக வரும்.
கடைசிச் சீர் மாங்காய்ச் சீராக வரும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

தயங்கவோ தளரவோ வேண்டா.

ஓர் எடுத்துக்ககாட்டுப் பாடலைப் புரிந்து கொண்டால், எளிதில் எழுதலாம்.

வாட கைக்கென வீடுகொ டுத்திடல்
..........வழக்கெனக் கண்டுள்ளோம்
வாட கைக்கென ஊர்திகள் விட்டதில்
.........வாழ்ந்திடும் வழக்குண்டு
வாட கைக்கென நூலகம் வைப்பதும்
..........வந்தது சிலநாளாய்
வாட கைக்கிளம் பெண்டிரை விட்டுயிர்
..........வாழ்வதும் வாழ்வாமோ?

இப் பாடலில், முதற்சீராக வாட என்ற சொல்லே நான்கடிகளிலும் வந்துள்ளது. இப்படியும் வரலாம்; ஓரடியில் வாட என்றும் மற்ற அடிகளில் முதற்சீராகக்
கூட, பாட, ஓட, தேட, நாட என வெவ்வேறு சொற்கள் அமைத்தும் பாடலாம்.

'வாட' என்பதில் '' குறில்; ஆகவே, வாட என்பது குறில் ஈற்று மாச்சீர்.

அடுத்து வந்த கைக்கென கூவிளம்.

வீடுகொ, டுத்திடல், வழக்கென - மூன்றும் விளச்சீர்கள்

கண்டுள்ளோம் - மாங்காய்ச்சீர்.

நான்கடிகளும் இவ்வாறே அமைந்துள்ளன.

இப்பாடலை எழுதியவர் புதுவைப் பாவலர் அரங்க.நடராசன் ஐயா அவர்கள்.


இன்னொரு பாடல் :

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையென்
..........மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
..........சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
..........நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
.........கேட்கவுங் கில்லேனே. - ( திருவாசகம் -37)

தயங்காது எழுதத் தொடங்குக. எளிமையாகவும் அழகாகவும் எழுதுக.