சனி, 31 மே, 2008

பாடம்5 அடி!

சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
3-அளவடி
4-நெடிலடி
5-கழிநெடிலடி –என 5வகைப்படும்.

இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி
நாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி
அறுசீர் முதலன கழிநெடி லடியே! -என்பது தொல்காப்பியம்!

நாம் கற்கும் வெண்பாவிற்கு அளவடியும் சிந்தடியும் போதுமானது என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1-அளவடி -ஓர்அடியில் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி எனப்படும். இவ்வளவடி நேரடி எனவும் பெயர் பெறும்.

2-சிந்தடி -ஓர்அடியில் மூன்று சீர்களைப் பெற்று வருவது. இச்சிந்தடி (வெண்பாவில்) வெண்பாவின் ஈற்றடியாக மட்டுமே வரும்.

எ.காட்டு:-

பொன்னைப் பொருளைப் புகழை மதியாமல்
அன்னைத் தமிழை அகமேற்றார்! -முன்னம்
தமிழர் புரிந்த தவத்தால் கிடைத்த
அமிழ்தாம் கலைஞர் அறி!

வந்த மொழிக்கெல்லாம் வாய்வீட்டில் வாழ்வளித்தே
சொந்த மொழிமாளச் சம்மதித்தோம்! -இந்தநிலை
மாற வழிகண்டார் மன்னுபுகழ் மாக்கலைஞர்
சீராள் செம்மொழியாய்ச் செய்து! -அகரம்.அமுதா

இவ்விரு வெண்பாவின் முதல் மூன்று அடிகளும் அளவடியாக வந்தமை காண்க. ஈற்றடியாகிய நான்காம் அடி மூன்றே சீர்களைப் பெற்று சிந்தடியாக வந்தமையையும் காண்க.

குறிப்பு:-

முதல் மூன்றடிகளும் அளவடியாகவும் நான்காமடியாகிய ஈற்றடி சிந்தடியாகவும் வரும். இருவே அனைத்து வெண்பாவிற்கும் உள்ள பொது விதி!

அகரம்.அமுதா

வியாழன், 29 மே, 2008

பாடம் 4 தளை!

சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். அத்தளைகள் 7வகைப் படும். ஆயினும் நம் வெண்பாவிற்கு இரண்டே தளைகள் தான் வேண்டும் என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1 இயற்சீர் வெண்டளை 2 வெண்சீர் வெண்டளை

தளை கொள்ளும்போது நின்றசீர் இன்னசீர் என்றும் (அதாவது) மாச்சீரா? விளச்சீரா? காய்ச்சீரா? என்றும் வரும்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்றும் பார்க்கவேண்டும்.

குறிப்பு:-வருஞ்சீரின் முதலசை நேரசையா? நிரையசையா? என்று பார்க்கவேண்டுமே தவிர வருஞ்சீர் இன்னசீர் என்று பார்க்கவேண்டிய தில்லை.
நின்றசீர்-முதலில் உள்ள சீர்
வருஞ்சீர்-அந்நின்ற சீரோடு வந்து சேரும்சீர்.

எ.காட்டு:-

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதா எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில்அமுதெனவே- நின்றசீர் (அதாவது முதற்சீர்)ஆனவளே- வருஞ்சீர் (அதாவது அடுத்தசீர்)

1.மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவ தியற்சீர் வெண்டளை யாகும்
2.காய்முன் நேர்வருவது வெண்சீர் வெண்டளை
-என்பது தொல்காப்பியம்.

அமுதெனவே -அமு/தென/வே -நிரை/நிரை/நேர் -காய்ச்சீர்.-இக் காய்ச்சீர் முன் நேர் வரவேண்டும் அல்லவா?ஆனவளே- ஆ/னவ/ளே –நேர் நிரை நேர் –முதலசை நேரசை வந்துள்ளதல்லவா?

அடுத்து பாருங்கள். சேய்நான் -சேய்/நான் -நேர்/நேர் என்னும் தேமாமுன் நிரையசை வரவேண்டும் அல்லவா? வரும்சீர் அமுதா -அமு/தா நிரை/நேர் எனவந்து முதலசை நிரையசையானதைக் கவனிக்கவும்.

மேலும் சில எ.காட்டுக்களைப் பார்ப்போம்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! - அகரம்.அமுதா

சொற்/சிலம்/பம் ஆ/டத் துணிந்/தேன் புடம்/போட்/ட
நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர்
கூவிளங்காய் தேமா புளிமா புளிமாங்காய்

பொற்/சிலம்/பம் போன்/றவ/ளே பூத்/துவா! -மற்/சிலம்/பம்
நேர்/நிரை/நேர் நேர்/நிரை/நேர் நேர்/நிரை -நேர்/நிரை/நேர்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளம் -கூவிளங்காய்

ஆ/டிப் பகை/வளர்க்/கும் ஆ/சை எனக்/கில்/லை
நேர்/நேர் நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்

பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!
தேமா கருவிளங்காய் நாள் -(நாள் வாய்பாடு-வெண்பாவின் ஈற்றில் வந்தமை காண்க)-இவ் எ.காட்டில் இரு இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வந்தமை காண்க.

நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றாமை தளை எனப்படும்.
அதாவது:- நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும் காய்முன் நேரும் வருவது.
இஃதேபோல் சில வெண்பாக்களைப் பிரித்துப் பார்க்கவும்.

அகரம்.அமுதா

புதன், 28 மே, 2008

பாடம்3 சீர்!

இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.

1 ஈரசைச்சீர்

நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.

அவை:-

நேர் நேர் -தேமா
நிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.

நிரை நிரை -கருவிளம்
நேர் நிரை -கூவிளம் இவ்விரண்டுச் சீரும் விளச்சீர் எனப்படும்.

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம்
எனுமிவை நான்கும் ஈரசைச் சீரே!
-தொல்காப்பியம்

2- மூவசைச்சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நான்கினோடும் நேர் நிரை என்னும் இருஅசைகளையும் உழறினால் (பெருக்கினால்) (4x2-8) மூவசைச் சீர்களாகும்.

அவை:-

நேர் நேர் நேர் -தேமாங்காய்
நிரை நேர் நேர் -புளிமாங்காய்
நிரை நிரை நேர் -கருவிளங்காய்
நேர் நிரை நேர் -கூவிளங்காய் -என் நான்கு காய்ச்சீரும்

நேர் நேர் நிரை -தேமாங்கனி
நிரை நேர் நிரை -புளிடாங்கனி
நிரை நிரை நிரை -கருவிளங்கனி
நேர் நிரை நிரை -கூவிளங்கனி -என நான்கு கனிச்சீரும் கிடைக்கும்

குறிப்பு:-

நாம் காணவிருக்கும் வெண்பாப் பாடத்திற்கு மாச்சீர் இரண்டும், விளச்சீர் இரண்டும், காய்ச்சீர் நான்கும் மொத்தம் எட்டு சீர்களே தேவை என்பதால் கனிச்சீரை விட்டுவிடுவோம்.

இங்கே சில சொற்கள் தரப்பட்டுள்ளன. அசைபிரித்துப் பார்க்கவும். ஈரசைச் சீரா மூவசைச் சீரா என்பதையும் கவனிக்கவும்.

1.கணக்கு 2.கூப்பாடு 3.பண்பாடு 4.நல்லிணக்கம் 5.கட்டளை 6.இராக்கோழி 7.தண்ணீர் 8.பு+ம்புகார் 9.பாகற்காய் 10.செந்தமிழ்

குறிப்பு:-

சோல்லின் முதலில் ஐ-வரிசை எழுத்துக்களோ ஔ-வரிசை எழுத்துக்களோ வரின் அவ்வெழுத்துக்களை நெடிலாகத்தான் கொள்ளவேண்டும்.

எ.காட்டு:-

தையல் – தை/ யல் -இச்சொல்லில் ஐகாரம் சொல்முதலில் வருவதால் தை என்னும் எழுத்து நெடிலுக்குரிய இரண்டுமாத்திரைகளோடு வருவதைக் காண்க.

ஆனால் அதே ஐகாரமும் ஔகாரமும் சொல்லின் இடையிலோ கடையிலோ வரின் குறிலுக்கரிய மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். (தன் மாத்திரை அளவினின்றுக் குறைந்துவருவதால் இதனை ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் என்பர்)

எ.காட்டு:-

கையையெடு -கை /யையெ /டு இதில் கை ஓர் அசையாகவும் ‘யையெ’ என்னும் ஈரெழுத்தும் சேர்ந்து ஓர் அசையானதையும் காண்க. (ஔகாரம் சொல்லின் முதலிலன்றி சொல்லின் இடையிலும் கடையிலும் வராது. எனினும் ஔகாரத்திற்கும் பொருந்தும்)

கண்ணுடையார் -கண் ணுடை யார்
புண்ணுடையார் -புண் ணுடை யார்

காடைகௌதாரி -கா /டைகௌ/ தா /ரி என நான்கு அசைகளாக் பிரிந்தமை காண்க. ( ‘டைகௌ’ இவ்விரு நெடிலும் தன் மாத்திரை அளவிலிருந்துக் குறைந்துக் குறிலேபோல் வருவதைக் காண்க.)

இதுபோல் சில சொற்களைப் பிரித்துப்பார்க்கவும்.
1.தேனடை 2.கெண்டைமீன் 3. கொண்டைமுடி 4.கையுறை 5.கைப்பை

3.அசைச்சீர்

நேர் நிரை என்னும் இரண்டசையும் வெண்பாவின் ஈற்றில் தனிச்சீராக வரும். இதை அசைச்சீர் என்பர்.

எ.காட்டு:-

நேர் -நாள்
நிரை -மலர்

கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி
ஊனெடுத்த தேவன் உரு!
-அகரம்.அமுதா

-இவ்வெண்பாவின் ஈற்றுச்சீராகிய உரு -நிரையசையானதைக் காண்க தனியசையாக கவெண்பாவின் ஈற்றில் இச்சொல் வருவதால் அது மலர் என்னும் வாய்பாடெடுத்து வருவதறிக.

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் பார் என்கிற நேரசை வெண்பாவின் ஈற்றில் வருவதால் நாள் வாய்பாடெடுத்து வருவது காண்க.

என்போல் உழந்தார் இடர்?
என்றனுக் கிந்தநிலை ஏன்?
தாய்வழிப் பாட்டனைத் தான்! -இவ்வீற்றடிகளில் வரும் ‘இடர்’ ‘ஏன்’ ‘தான்’ போன்றவை நாள் அல்லது மலர் வாய்பாடெடுத்துவருதல் காண்க.


4.காசு, பிறப்பு!

முன்பு கண்ட நேரசை நிரையசைக் குரிய வாய்பாடாகிய நாள் மலர் என்னும் அசைகளோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்துவந்தால் நாள்- காசாகவும் மலர்- பிறப்பாகவும் மாறும்.

பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசையுகரத்தை நேர்பு என்றும் பிறப்பு என்னும் நிரையசையுகரத்தை நிரைபு என்றும் கொண்டனர்.

வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!
-அகரம்.அமுதா

-இவ் வெண்பாவில் ‘பெரிது’ என்னும் (நிரைபு) பிறப்பு வாய்பாடைக்காண்க.

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!
-அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் நெஞ்சு என்னும் (நேர்பு) காசு வாய்பாடெடுத்தமை காண்க.


நேரசையுகரம் -நேரசையோடு (குசுடுதுபுறு) என்னும் வல்லின உகரம் சேர்ந்தது.
நிரையசையுகரம்- நிரையசையோடு வல்லின உகரம் (குசுடுதுபுறு) சேர்வது.

எ.காட்டு:-

பாடு காது ஊறு தேக்கு- நேரொடு வல்லின உகரம் சேர்ந்து (நேர்பு) காசு வாய்பாடெடுத்தல் காண்க.

கிழடு புணர்ந்து பிணக்கு விறகு நடாத்து நிரையொடு உகரம்சேர்ந்து (நிரைபு) பிறப்பு வாய்பாடெடுத்தல் காண்க.

நாள்மலர் காசு பிறப்பெனும் நான்கும்
வெண்பா வீற்றில் மேவிடுஞ் சீரே.
-தொல்காப்பியம்

குறிப்பு:-

நாள் மலர் என்பன வெண்பாவின் ஈற்றில் அன்றி வேறிடங்களில் வரா. காசு பிறப்பு இவ்விரண்டும்; வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமா எனக் கொள்ளவேண்டும். வெண்பாவின் ஈற்றில் மட்டுமே காசு பிறப்பாக மாறும்.

அகரம்.அமுதா

திங்கள், 26 மே, 2008

பாடம்2 அசை!

முதற்பாடத்தில் பார்த்த ‘குறில்’ ‘நெடில்’ ‘ ஒற்று’ ஆகிய மூவகை எழுத்துக்களால் ஆவது அசை. அவ்வசை நேரசை நிரையசை என இருவகைப்படும்.

வாய்பாடு - எழுத்து - அசை
க - குறில் - நேர்
கல் - குறிலொற்று - நேர்
கா - நெடில் - நேர்
காண் - நெடிலொற்று - நேர்

கட - குறிலிணை -நிரை
கடல் - குறிலிணை ஒற்று -நிரை
தடா - குறிநெடில் - நிரை
தடால் -குறிநெடிலொற்று - நிரை

மேற்காணும் குறில் நெடில் ஒற்று என்ற மூவகை எழுத்துக்களால் ஆனவை குறில்
குறிலொற்று
குறிலிணை
குறிலிணைஒற்று

குறிநெடில்
குறிநெடிலொற்று
நெடில்
நெடிலொற்று --- ஆகியவை.

இக்து -
க -குறில் 95க்கும் -எடுத்துக்காட்டு
கா -நெடில் 133 க்கும் -எடுத்துக்காட்டு
ல் -ஒற்று 19 க்கும் -எடுத்துக்காட்டு

விளக்கம் :-
புகைவண்டியிலும் மோட்டார் வண்டியிலும் சிறுவர்களுக்கு மதிப்பின்மை போல (பணம் இன்றி பயணம் செய்வதைப் போல ) யாப்பிலக்கணத்தில் ஒற்றுக்களுக்கு மதிப்பில்லை.

‘கல்’ என்பதில் உள்ள ‘ல்’-க்கு மதிப்பில்லாதது போல ‘ஈர்க்’ என்பதில் உள்ள ‘ர்க்’ -க்கும் (இரண்டு ஒற்றுக்கும்) மதிப்பில்லை.

ஓரெழுத்தால் ஆகிய அசை நேரசை.
ஈரெழுத்தால் ஆகிய அசை நிரையசை.

நேர் -தனி .
நேரசை –தனியசை.
நிரை –இணை.
நிரையசை –இணையசை.

குறிலே நெடிலே குறிலிணை குறிநெடில்
தனித்தும்ஒற் றேடுத்தும் வரின்நேர் நிரைஎனும்
அசையாம் அவைநாள் மலர்வாய் பாடே.

எ.காட்டு
அசை வாய்ப்பாடு
நேர் - நாள்
நிரை - மலர்

நேரசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் நாள் வாய்பாடு.
நிறையசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் மலர் வாய்பாடு.


எ.காட்டு
சொல் -அசை -வாய்பாடு
க -நேர் -நாள்
கண் -நேர் -நாள்
கா -நேர் -நாள்
காண் -நேர் -நாள்

கட -நிரை -மலர்
கடல் -நிரை -மலர்
படா -நிரை -மலர்
படார் -நிரை -மலர்

குறிப்பு:-
நேரசைக்குரிய நான்கு எழுத்துக்களையும் நிரையசைக்குரிய நான்கு எழுத்துக் களையும் நன்கு மனனம் செய்க.
எ.காட்டு.
காடு கா / டு -நேர் /நேர்
வாழ்க வாழ் /க -நேர் / நேர்
பனங்கள் பனங் /கள் -நிரை /நேர்
நிலாக்குறி நிலாக் /குறி நிரை /நிரை
நண்டு நண் /டு நேர் /நேர்

இப்படிப் பல சொற்களையும் எழுதிப் பயிற்சி செய்யவும்.

‘திருக்குறள்’ ‘கருவாடு’ ‘மணப்பாறை’ ‘தொல்காப்பியம்’ இவற்றை அசை பிரித்துக் காட்டுக.

குறிப்பு:-
‘க’ என்னும் குறில் நேரசை எனப்படினும் தனிக்குறில் முதலில் நேரசை ஆகாது. பின்வரும் குறிலை அல்லது நெடிலைச் சேர்த்துக்கொண்டு குறிலிணையாகவோ குறிநெடிலாகவோ வரும்.

எ.காட்டு:-
வணக்கம் வணக் /கம் -நிரை /நேர்
விடாமல் விடா /மல் -நிரை -நேர்
அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர்

வணக்கம் என்பதில் ‘வ’ என்னும் ‘ண’ என்னும் குறிளுடன் சேர்ந்து குறிலிணையாக வந்தமை காண்க.

குறிப்பு:-
நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.

எ.காட்டு:-
மாரி மா /ரி நேர் /நேர்
வாழ்க வாழ் /க நேர் /நேர்

‘மா’ என்னும் நெடிலுக்குப் பின்னுள்ள ‘ரி’ என்னும் குறிலும் ‘வாழ்’ என்னும் நெட்டொற்றுக்குப் பின்னுள்ள ‘க’ என்னும் குறிலும் நேரசை ஆவதைக் காண்க.

குறில் குறிலொற்று நெடில் நேடிலொற்று என்னும் நான்கும் நேரசை.

குறிலிணை குறிலிணையொற்று குறிநெடில் குறிநெடிலொற்று என்னும் நான்கும் நிரையசை எனக் காண்க.

இப்படியே சிலப்பல சொற்களைப் பிரித்துப் பார்க்க.
மிண்டும் காண்போம்.

அகரம்.அமுதா

பாடம்1. எழுத்து

நாம் காணவிருப்பது வெண்பாவிற்கான இலக்கணம் என்பதால் நேரடியாக உறுப்பியலுக்குச் செல்வது நன்று. செய்யுள் உறுப்புக்கள் மொத்தம் ஆறுவகைப் படும்.

அவை:-

1-எழுத்து
2-அசை
3- சீர்
4-தளை
5-அடி
6-தொடை என்பவையே அவ்வாறும்.

எழுத்தசை சிர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்.

இச் சூத்திரத்தை நன்கு மனனம் செய்யவும்.

எழுத்து.

12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)

18 மெய்யெழுத்துக்கள் (க் முதல் ன் வரை)

216 உயிர்மெய்யெழுத்துக்கள் (க முதல் னௌ வரை)

1 ஆய்தம் (ஃ)

ஆக தமிழ் எழுத்துக்கள் 247

உயிரெழுத்துக்களில்-

அ இ உ எ ஒ -இவை ஐந்தும் குறில்
ஆ ஈ ஊ ஏ ஐ ஊ ஔ -இவை ஏழும் நெடில்.

18-மெய்யோடும் 5-உயிர்க்குறிலும் சேர்வதால் 90 உயிர்க்குறில் ஆகும். இத்துடன் 5-உயிரும் சேர்ந்தால் 95உயிர்க்குறில் ஆகும்.

18-மெய்யோடும் 7-உயிர்நேடிலும் சேர்ந்தால் 126உயிர்நேடிலாக மாறும். அத்தோடு 7-உயிர்நேடிலும் சேர்த்தால் 133-உயிர்நெடில் ஆகும்.

மெய்யெழுத்துக்கள் 18-ம் ஆய்தம் ஒன்றும் (19)-ஒற்றுக்கள் ஆகும்.
செய்யுள் இலக்கணத்தில் எழுத்துக்களை குறில் நெடில் ஒற்று எனும் மூன்று வகையாகப் பிரிப்பர்.

இனி அடுத்தவாரம் அசையைப் பற்றிப் பார்ப்போமா? வணக்கம்.

அகரம்.அமுதா

அறிமுகம்!

தோழர்களே! தோழிகளே!

வெண்பா எழுதலாம் வாங்க! பகுதியில் தமிழ்ப் பாவடிவங்களிலேயே தலைசிறந்த அழகான புரிந்துகொண்டால் பாடுதற் கெளிய அதேவேளையில் இலக்கணம் அறிந்த பெரும் பாவலர்களையும் மண்ணைக் கவ்வச் செய்துவிடும் ஆற்றல் படைத்த வெண்பாவைக் கற்க விருக்கிறோம்.

முதலில் வெண்பா என்றால் என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழின் தொன்மையையும் சற்றே பார்ப்போம்!

வெண்பா என்றால் வெள்ளைப் பாவேன்றும், கள்ளங்கபட மற்ற பாவேன்றும், குற்றமற்ற பாவேன்றும், தூய்மையான பாவேன்றும், பொருளற்ற பாவேன்றும் பொருள் கொள்ளலாம்.

மேலும் வெண்பாவிற்கு உரிய வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை ஆகிய வெண்+தளைகளால் ஆனதாலும் வெண்பா எனுன் பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம்.

வெண்பாவை வெண்+பா எனப் பிரித்தால் வெள்ளைப் பா என்றாகும் அல்லவா?

வெண்மை தூய்மைக்கு உவமை அல்லவா?
வெண்மை சமாதானத்திற்கு உவமை அல்லவா?
வெண்மை ஒன்றுமற்றதுபோல் தோன்றும் ஆனால் எழு நிறங்களும் அடங்கிய ஓர் நிறமல்லவா?
வெண்மை கள்ளங்கபடம் அற்ற தல்லவா? (கள்ளங்கபடமற்ற மனதை வெள்ளை மனம் என்கிறோமே!)

இப்படி பல பொருளை வெண்பா என்னும் ஒரு சொல் தருமென்றால் வெண்பாவால் எழுத முடியாத நிகழ்வும் கருத்தும் இருக்க முடியுமா?

(வெண்பா என்ற சொல்லுக்கு வேறு பொருளும் இருப்பதாகக் கருதினால் பின்னூட்டில் தெரியப் படுத்தலாம்)

தொன்மை!

உலக மொழிகளுள் தமிழ்மொழியே முதன்மையான மொழியாகும். காரணம் இதன் இயல்பும் எளிமையும் இனிமையுமே ஆகும். தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இயல்பான ஒலியுடையவை. இவ்வெழுத்துக்கள் தனித்தும் சொல்லின் கண்ணும் ஒரே தன்மையாக ஒலிக்கும் இயல்புடையவை. தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையில் புணர்ந்து சொன்னயமும் பொருள் நயமும் ஓசை நயமும் பயக்குந்தன்மை தமிழ் எழுத்துகளுக்கே உரிய தனித்தன்மை ஆகும்.

தமிழ்மொழி மிக எளிதில் பேசவும் எழுதவும் படுவது. நிரம்பிய இலக்கியச் செல்வமுடையது. முற்ற முடிந்த திண்ணிய இலக்கண வரம்புடையது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்தது.

பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்போருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும்
கவிம்மலையா ளமுந்துளுவும்
உன்னுதிரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவயக்
கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!


என மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியந்து பாடியிருக்கிறார் என்றால் தமிழின் இனிமையிப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிற உயரியக் கருத்துக்களைத் தன்னகத்தே தேக்கி அதைக் காலங்காலமாக உலகுக்கு வழங்கிவரும் உயரிய ஆற்றல் படைத்தமொழி நம் செந்தமிழ் ஒன்றே!

நடை!
நம் தமிழில் செய்யுள் நடை உரை நடை என இருவகை உண்டு.
பழங்காலம் தொட்டு இவ்விரு நடை எழுதும் தமிழில் பயின்று வந்தன.

உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது சிலப்பதிகாரம். இவ்விரு நடையும் தமிழுக்கு இருகண் போன்றவை.

இவ்விரு நடையில் சிலவகை எழுத்தில் பலவகைப் பொருளை எண்வகைச் சுவையும் ததும்ப சொல்லணி பொருள் அணி என்னும் இருவகை அணிகலத்துடன் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஆழமுடைத்தாதல் முதலிய அழகுமிளிற கருத்தைக் கவரும் கற்பனைச் செறிவுடன் அமைத்துக் கூற ஏற்ற இடம் செய்யுள் ஆகும்.

தொல்தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும் அவை வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆகும்.

வெண்பா ஒழிய மற்ற முன்று பாவகைகளிலும் விருத்தப் பாக்கள் இடைக்காலத்தில் தோன்றின. சிந்து மற்றும் வண்ணப்பாக்களும் இடைக்காலத்தில்தான் தோன்றின.

பாவகைகளிலேயே  இளமையான பிற பாக்களுக்குறிய தளைகள் இடம்பெறாது நடைபோடுகிற ஆற்றல்வாய்ந்த வெண்பாவையே இப்பகுதியில் நாம் கற்கவிருக்கிறோம்.

அகரம்.அமுதா