திங்கள், 26 ஜனவரி, 2009

35.நிரல் நிறையணி!

பெயரையோ வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அவ்வரிசை படக் கூறுவது நிரல் நிறை அணியாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!


விளக்கம்:-
இப்பாட்டில் அன்பையும் அறனையும் ஒரு வரிசையிற்படுத்தி அதே வரிசைப்படி, பண்பையும் பயனையும் நிறுத்திப் பாடப்பட்டுள்ளமையான் இப்பா நிரல் நிறை அணியாகும்.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து!


விளக்கம்:-
நோய் மற்றும் பசலையைத் தந்து அதற்கு மாறாக தோற்றத்தையும் நாணத்தையும் பெற்றுக்கொண்டதாக வரிசைபடுத்தப் பட்டுள்ளமையான் நிரல்நிறை அணியாகும்.

ஒற்றுமிகு மிடங்கள்!

26.சில வினையெச்சங்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
கண்டென களித்தான் ---கண்டெனக் களித்தான்
காணா களித்தான் ---காணாக்களித்தான்
காண களிப்புறும் ---காணக்களிப்புறும்
தேடி கண்டேன் ---தேடிக்கண்டேன்.

ஒற்றுமிகுமிடங்கள் முற்றிற்று. அடுத்த பாடத்திலிருந்து ஒற்றுமிகா இடங்களைக் காண்போம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழா எழு!


அகரம்.அமுதா

வியாழன், 22 ஜனவரி, 2009

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!

கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.

கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினா ராம்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால் பொருள் நுணுகிப்பார்த்தால் "எட்டுத்திசைக்கும் நிகரான தன் கைக்குமேல் நெருப்புச்சட்டியைச் சுமந்து கொண்டு தன் (சிவனின்) வாகனமாகிய அக் காளையின் மேல் எறிப்பயணித்தார் என்பது உண்மைப்பொருள். ஆக இகழ்வதுபோல் புகழ்ந்தமையான் இப்பா வஞ்சப்புகழ்ச்சியாம்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

கண்ணாக அவதரித்த மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திருமாலின் தங்கையானவள் மதுரை மீனாட்சி. மீனாட்சியானவள் தில்லையில் எழுந்தருளியுள்ள ஆடளுக்கு அரசனான ஈசனுக்கு மனைவியாகி, மக்களெல்லாம் (கைகளைப் பெருக்கல் குறிபோல்)மாற்றித் தலையில் குட்டிக் கொண்டு கும்பிடுதற்கு ஒரு தந்தத்தைஉடைய யானை வடிவிலான விநாயகனைப் பெற்றெடுத்தாள் என்பதாம்.

பாடலின் உட்பொருள் புகழ்பாடுவதாக அமைந்திருப்பினும் மேலோட்டமாகப் பார்க்கையில் இகழ்ந்ததுபோல் தோற்றம்கொண்டமையால் இது வஞ்சப்புகழ்ச்சி யாகும்.

ஒற்று மிகுமிடங்கள்!

21.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் வரின் வலிமிகும்.

காட்டு:-
மாணிக்கத்திற்கு கொடு ---மாணிக்கத்திற்குக் கொடு.
உன்றனுக்கு கொடுத்தான் ---உன்றனுக்குக் கொடுத்தான்
எனக்கு தா --- எனக்குத் தா.

22.நான்காம் வேற்றுமைத் தொகை அஃறினைப்பெயர் முன் வலிமிகும்.

காட்டு:-
கூலி தொழிலாளி ---கூலித்தொழிலாளி.

தாளி பொன் ---தாலிப்பொன்

23.ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறினைப் பெயர் முன் வல்லினம் வந்தால் வலிமிகும். (ஆறாம் வேற்றுமை உருபுகள் ---அது, உடைய)

காட்டு:-

யானை தலை ---யானைத்தலை
கிளி கூடு ---கிளிக்கூடு
வாத்து சிறகு ---வாத்துச்சிறகு.

24.ஏழாம் வேற்றுமை விரியிலும் தொகையிலும் வலிமிகும். (ஏழாம் வேற்றுமை உருபுகள்:- கண், இடம், இல், இடை)

காட்டு:-
குடி பிறந்தார் ---குடிப் பிறந்தார்(குடிக்கண் பிறந்தார் என்பதன் சுறுக்கம்)இதில் கண் என்னும் உருபு மறைந்து வருகிறது.
நல்லாரிடை புக்கு ---நல்லாரிடைப் புக்கு (இதில் இடை என்னும் உருபு வெளிப்படையாதலைக் காண்க).

25.ய, ர, ழ -ஆகிய மெய்யீற்று அஃறினைப் பெயர்களில் வலிமிகும்.

காட்டு:- (யகரம்)
வேய் கிளை ---வேய்க்கிளை.
வேய் தோள் ---வேய்த்தோள்.

(ரகரம்)
தேர் தட்டு ---தேர்த்தட்டு.
கார் கொடை ---கார்க்கொடை.

(ழகரம்)
தாழ் கதவு ---தாழ்க்கதவு.
வீழ் சடை ---வீழ்ச்சடை.

குறிப்பு:- சில இடங்களில் வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினமும் இடமேற்கும் என்பதனை நினைவில் கொள்க.

காட்டு:-
வேய் குழல் ---வேய்ங்குழல்
பாழ் கிணறு ---பாழ்ங்கிணறு
ஆர் கொடு ---ஆர்ங்கொடு

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழர் இடர்!


அகரம்.அமுதா