திங்கள், 27 அக்டோபர், 2008

28. ஏகதேச உருவக அணி!

தொடர்புடைய இருபோருட்களுள் ஒன்றைமட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாம்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று!


பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப் படுத்திவிட்டு பகையை இருளென உருவகம் செய்யாமையால் ஏகதேச உருவக அணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 20 அக்டோபர், 2008

27. உருவக அணி!

உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத்தோன்றா வண்ணம் உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றயுரைத்தல் உருவக அணியாம்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்!

காமக் கடல்- இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்!

காமக் கடும்புனல் - இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்ந்த கதவு!

காமக் கணிச்சி - காமமாகிய கோடரி

இன்பவெள்ளம், கண்கயல், கைமலர், விழிவாள், பல்முத்தம், போன்றவையும் அப்படியே. உவமையெது உவமேயமெது எனத்தோன்றாமையால் உருவகமாயின.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 13 அக்டோபர், 2008

பாடம் 26 இல்பொருள் உவமையணி!

இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாம்.

அன்பகத் தில்லார் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!


பாலையில் நீரின்றிக் காய்ந்து வரண்டுபோன வற்றல் மரம் மீண்டும் தளிர்த்தல் இயற்கையில் நிகழாத ஒன்று. உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு இதனை உவமையாக்கியமையால் இஃது இல்லைபொருள் உவமையணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!


மழலை தன் சிறுகையால் அளாவிய கூழை அமிழ்தினும் இன்சுவை உடையது என்கிறார் வள்ளுவர். அமிழ்து என்பது கற்பனையான பொருள். அமிழ்தினைக் கண்டவர்யார்? உண்டவர்யார்? கூழுக்கு உலகில் இல்லாத அமிழ்தை உவமையாக்கியதால் இல்பொருள் உவமையணியாகும்.

ஆக இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

திங்கள், 6 அக்டோபர், 2008

பாடம் 25 எடுத்துக்காட்டு உவமையணி!

உவமைக்கும் உவமேயத்திற்றும் இடையில் போல போன்று என்ற பொருள்தரும் உவமையுருபுகள் தொகைநிலையில் வருவதே எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!

உவமானம்:-

நுகர்வதால் அனிச்சமலர் வாடிவிடும்.

உவமேயம்:-

விருந்து படைக்கையில் நம்முகத்தில் சிறுகுறி தென்படினும் விருந்தினர் முகம் வாடிவிடும். போல, அதுபோல என்பன போன்ற உவமையுருபுகள் தொகை நிலையாதல் காண்க.


பகல்வெல்லும் கூகையைக் காகம் இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

உவமானம்:-

வலியில் குறைவலிபடைத்த காகமும் பகல்வேளையில் வலிபடைத்த கூகையை எளிதில் வென்றுவிடும்.

உவமேயம்:-

இவ்விகலாகக் கருதும் மன்னவன் தன்பகைமுடிக்க வேளைகருதிச் செயல்பட வேண்டும். உவமையுருபு தொகைநிலை.


துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் -அன்புள்ளாய்!
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் ஆதவன்
காயில் இருக்கும் கனி!

உவமானம்:-

1.சூழ்ந்துள்ள இருள் சூரியன் தோன்றக் கெடும்.2.இன்சுவை பொருந்திய கனியானது துவர்ப்பும் புளிப்பும் கூடிய காயில் ஒளிந்துகிடக்கிறது.

உவமேயம்:-

துன்பம் வருதல் கண்டு மயங்காதே. அதையோர் பொருட்டாக் கருதாக்கால் மறைந்துவிடும். அதுபோல உவமையுருபு தொகைநலையாதல் காண்க.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கருவிழி இல்லாத கண்!"

அகரம்.அமுதா