திங்கள், 26 மே, 2008

பாடம்2 அசை!

முதற்பாடத்தில் பார்த்த ‘குறில்’ ‘நெடில்’ ‘ ஒற்று’ ஆகிய மூவகை எழுத்துக்களால் ஆவது அசை. அவ்வசை நேரசை நிரையசை என இருவகைப்படும்.

வாய்பாடு - எழுத்து - அசை
க - குறில் - நேர்
கல் - குறிலொற்று - நேர்
கா - நெடில் - நேர்
காண் - நெடிலொற்று - நேர்

கட - குறிலிணை -நிரை
கடல் - குறிலிணை ஒற்று -நிரை
தடா - குறிநெடில் - நிரை
தடால் -குறிநெடிலொற்று - நிரை

மேற்காணும் குறில் நெடில் ஒற்று என்ற மூவகை எழுத்துக்களால் ஆனவை குறில்
குறிலொற்று
குறிலிணை
குறிலிணைஒற்று

குறிநெடில்
குறிநெடிலொற்று
நெடில்
நெடிலொற்று --- ஆகியவை.

இக்து -
க -குறில் 95க்கும் -எடுத்துக்காட்டு
கா -நெடில் 133 க்கும் -எடுத்துக்காட்டு
ல் -ஒற்று 19 க்கும் -எடுத்துக்காட்டு

விளக்கம் :-
புகைவண்டியிலும் மோட்டார் வண்டியிலும் சிறுவர்களுக்கு மதிப்பின்மை போல (பணம் இன்றி பயணம் செய்வதைப் போல ) யாப்பிலக்கணத்தில் ஒற்றுக்களுக்கு மதிப்பில்லை.

‘கல்’ என்பதில் உள்ள ‘ல்’-க்கு மதிப்பில்லாதது போல ‘ஈர்க்’ என்பதில் உள்ள ‘ர்க்’ -க்கும் (இரண்டு ஒற்றுக்கும்) மதிப்பில்லை.

ஓரெழுத்தால் ஆகிய அசை நேரசை.
ஈரெழுத்தால் ஆகிய அசை நிரையசை.

நேர் -தனி .
நேரசை –தனியசை.
நிரை –இணை.
நிரையசை –இணையசை.

குறிலே நெடிலே குறிலிணை குறிநெடில்
தனித்தும்ஒற் றேடுத்தும் வரின்நேர் நிரைஎனும்
அசையாம் அவைநாள் மலர்வாய் பாடே.

எ.காட்டு
அசை வாய்ப்பாடு
நேர் - நாள்
நிரை - மலர்

நேரசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் நாள் வாய்பாடு.
நிறையசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் மலர் வாய்பாடு.


எ.காட்டு
சொல் -அசை -வாய்பாடு
க -நேர் -நாள்
கண் -நேர் -நாள்
கா -நேர் -நாள்
காண் -நேர் -நாள்

கட -நிரை -மலர்
கடல் -நிரை -மலர்
படா -நிரை -மலர்
படார் -நிரை -மலர்

குறிப்பு:-
நேரசைக்குரிய நான்கு எழுத்துக்களையும் நிரையசைக்குரிய நான்கு எழுத்துக் களையும் நன்கு மனனம் செய்க.
எ.காட்டு.
காடு கா / டு -நேர் /நேர்
வாழ்க வாழ் /க -நேர் / நேர்
பனங்கள் பனங் /கள் -நிரை /நேர்
நிலாக்குறி நிலாக் /குறி நிரை /நிரை
நண்டு நண் /டு நேர் /நேர்

இப்படிப் பல சொற்களையும் எழுதிப் பயிற்சி செய்யவும்.

‘திருக்குறள்’ ‘கருவாடு’ ‘மணப்பாறை’ ‘தொல்காப்பியம்’ இவற்றை அசை பிரித்துக் காட்டுக.

குறிப்பு:-
‘க’ என்னும் குறில் நேரசை எனப்படினும் தனிக்குறில் முதலில் நேரசை ஆகாது. பின்வரும் குறிலை அல்லது நெடிலைச் சேர்த்துக்கொண்டு குறிலிணையாகவோ குறிநெடிலாகவோ வரும்.

எ.காட்டு:-
வணக்கம் வணக் /கம் -நிரை /நேர்
விடாமல் விடா /மல் -நிரை -நேர்
அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர்

வணக்கம் என்பதில் ‘வ’ என்னும் ‘ண’ என்னும் குறிளுடன் சேர்ந்து குறிலிணையாக வந்தமை காண்க.

குறிப்பு:-
நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.

எ.காட்டு:-
மாரி மா /ரி நேர் /நேர்
வாழ்க வாழ் /க நேர் /நேர்

‘மா’ என்னும் நெடிலுக்குப் பின்னுள்ள ‘ரி’ என்னும் குறிலும் ‘வாழ்’ என்னும் நெட்டொற்றுக்குப் பின்னுள்ள ‘க’ என்னும் குறிலும் நேரசை ஆவதைக் காண்க.

குறில் குறிலொற்று நெடில் நேடிலொற்று என்னும் நான்கும் நேரசை.

குறிலிணை குறிலிணையொற்று குறிநெடில் குறிநெடிலொற்று என்னும் நான்கும் நிரையசை எனக் காண்க.

இப்படியே சிலப்பல சொற்களைப் பிரித்துப் பார்க்க.
மிண்டும் காண்போம்.

அகரம்.அமுதா

12 கருத்துகள்:

 1. எனக்கு இது புரியல அமுதா....

  மாரி மா /ரி நேர் /நேர்

  மாரி என்பதை ஒரே வார்த்தையாக கொண்டு நிரை என்று சொல்லக் கூடதா???
  நான் அப்படித்தான் இது வரை புரிந்து வைத்திருக்கிரேன்....

  பதிலளிநீக்கு
 2. நந்து!
  முதலெழுத்து நெடிலாக இருந்தால் அதை ஓர் அசையாகக் கொள்ளவேண்டும் என்பது விதி. அப்படியானால் வரும் எழுத்து அடுத்த அசையல்லவா? ஆக
  மாரி - நேர் நேர் - தேமா! புரிந்ததா? மீண்டும் மீண்டும் இப்பாடத்தைப் (புரிந்துக் கொள்கின்ற வரை) படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. நிலாக்குறி நிலாக் /கரி நிரை /நிரை


  இது கொஞ்சம் இடிக்கிறது. எழுத்து பிழையா?

  பதிலளிநீக்கு
 4. ஆம் விக்னேஷ்வர். தட்டச்சில் பிழையேற்பட்டுவிட்டது. சுட்டியமைக்கு நன்றி. தொடர்ந்து பாடத்தைப் படித்து வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. திருக்குறள்= திருக்/குறள்= நிரை/நிரை
  கருவாடு= கரு/வாடு= நிரை/நிரை
  மணப்பாறை=மணப்/பாறை=நிரை/நிரை
  தொல்காப்பியம்=தொல்/காப்/பியம்=நேர்/நேர்/நிரை

  சரியா?

  பதிலளிநீக்கு
 6. திருக்குறள் திருக்/குறள் நிரை/நிரை இதைச் சரியாக எழுதியுள்ளீர்கள்.

  கருவாடு= கரு/வா/டு நிரை/நேர்//நேர்
  மணப்பாறை மணப்/பா/றை நிரை/நேர்/நேர்
  தொல்காப்பியம் தொல்/காப்/பியம் நேர்/நேர்/ நிரை இதையும் சரியாய் எழுதியுள்ளீர்கள்.

  கருவாடு என்ற சொல்லை அசை பிரிக்கும் போது 'கரு' நிரை எனப்பிரிக்கிறீர்கள் அடுத்த அசை நெடிலில் தொடங்குகிறது அல்லவா? நெடிலுக்கு இரண்டு மாத்திரை. ஆதலால் 'வா' என்ற நெடில் தனியசையாகி நேர் வாய்பாடாகிவிடும். அடுத்து 'டு' தனியெழுத்தாக இருப்பதால் அதுவும் நேரசையானது. இதுபோல் மற்றவற்றிற்கும் பிரித்துப் பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்!

  எனக்கு கொஞ்சம் நேர்பு, நிரைபு பற்றி சொல்ல முடியுமா? இதுவரை என்னுடைய புரிதலை கீழ்க்காணுங்கள்!

  காத்திடுமி டரினில்!

  இந்த வரியில் டரினில் என்பதை டரி|னில் - நிரை | நேர் - நிரைபு என்று எடுத்துக்கொள்ளலாமா?

  இதுவே நிரை | நிரை என்று வந்தால் என்ன செய்வது?

  மேலும்,
  இது போன்று "நேர் | நேர்" மற்றும் "நேர் | நிரை" -க்கும் விளக்கம் தர முடியுமா?

  பதிலளிநீக்கு
 8. மதிப்புமிகு அகரம்.அமுதா அவர்களுக்கு...

  தங்களின் பதிவுகள் அருமை,

  இன்றுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்..


  இரண்டாவது பாடம் முடிந்தது...
  அனால்
  வாய்ப்பாட்டில்
  நாள் மலர் காசு மூன்றும் படித்ததாக நினைவு...
  விளக்க முடியுமா...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 9. அன்புமிகு இரவுப்பறவை அவர்களுக்கு! தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் வினாவிற்கான விடை அடுத்த பாடத்தில் உள்ளது. காண்க. தொடர்ந்து வருக. ஆதரவு தருக.

  பதிலளிநீக்கு
 10. அமுதா - உங்கள் பாடங்களை இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு பள்ளி நினைவுகள் வந்தது. நன்றி .. பயனுள்ளதாக இருக்கிறது,

  ஒரு சந்தேகம்

  அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர் - இதற்கு பதில்
  அலுவலகம் அலு /வ/ ல /கம் -நிரை /நேர்/நேர்/நேர் - இப்படி பிரிப்பது தவறா?

  விதி : நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.

  இது ரெண்டும் தான் நேரசை காண விதியா? விளக்கவும்

  பதிலளிநீக்கு
 11. இராகவன் அவர்களுக்கென் வணக்கங்கள்.!

  //// அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர் - இதற்கு பதில்
  அலுவலகம் அலு /வ/ ல /கம் -நிரை /நேர்/நேர்/நேர் - இப்படி பிரிப்பது தவறா? /////


  கண்டிப்பாக தவறேயாகும். அலு/வ/ல/கம் -எனப்பிரிக்க முடிகிறபோது "அ/லு/வ/ல/கம் - என்றும் பிரிக்க இடமிருக்கிறதல்லவா?

  மாத்திரை அளவுகளை அறிந்துகொண்டீர்களாயின் இதுபோன்ற கேள்விகள் எழாது. அலு/வல/கம் -எனப்பிரிப்பதே விதிமுறைப்படி சரியாகும்.


  ///// விதி : நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.

  இது ரெண்டும் தான் நேரசை காண விதியா? விளக்கவும் //////


  ஆம். வேறுவிதியிருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. மகிழ்ச்சி இதை எப்படி பிரிப்பது

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com