வியாழன், 22 ஜனவரி, 2009

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!

கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.

கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினா ராம்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால் பொருள் நுணுகிப்பார்த்தால் "எட்டுத்திசைக்கும் நிகரான தன் கைக்குமேல் நெருப்புச்சட்டியைச் சுமந்து கொண்டு தன் (சிவனின்) வாகனமாகிய அக் காளையின் மேல் எறிப்பயணித்தார் என்பது உண்மைப்பொருள். ஆக இகழ்வதுபோல் புகழ்ந்தமையான் இப்பா வஞ்சப்புகழ்ச்சியாம்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!
-கவிகாளமேகம்.

விளக்கம்:-

கண்ணாக அவதரித்த மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திருமாலின் தங்கையானவள் மதுரை மீனாட்சி. மீனாட்சியானவள் தில்லையில் எழுந்தருளியுள்ள ஆடளுக்கு அரசனான ஈசனுக்கு மனைவியாகி, மக்களெல்லாம் (கைகளைப் பெருக்கல் குறிபோல்)மாற்றித் தலையில் குட்டிக் கொண்டு கும்பிடுதற்கு ஒரு தந்தத்தைஉடைய யானை வடிவிலான விநாயகனைப் பெற்றெடுத்தாள் என்பதாம்.

பாடலின் உட்பொருள் புகழ்பாடுவதாக அமைந்திருப்பினும் மேலோட்டமாகப் பார்க்கையில் இகழ்ந்ததுபோல் தோற்றம்கொண்டமையால் இது வஞ்சப்புகழ்ச்சி யாகும்.

ஒற்று மிகுமிடங்கள்!

21.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் வரின் வலிமிகும்.

காட்டு:-
மாணிக்கத்திற்கு கொடு ---மாணிக்கத்திற்குக் கொடு.
உன்றனுக்கு கொடுத்தான் ---உன்றனுக்குக் கொடுத்தான்
எனக்கு தா --- எனக்குத் தா.

22.நான்காம் வேற்றுமைத் தொகை அஃறினைப்பெயர் முன் வலிமிகும்.

காட்டு:-
கூலி தொழிலாளி ---கூலித்தொழிலாளி.

தாளி பொன் ---தாலிப்பொன்

23.ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறினைப் பெயர் முன் வல்லினம் வந்தால் வலிமிகும். (ஆறாம் வேற்றுமை உருபுகள் ---அது, உடைய)

காட்டு:-

யானை தலை ---யானைத்தலை
கிளி கூடு ---கிளிக்கூடு
வாத்து சிறகு ---வாத்துச்சிறகு.

24.ஏழாம் வேற்றுமை விரியிலும் தொகையிலும் வலிமிகும். (ஏழாம் வேற்றுமை உருபுகள்:- கண், இடம், இல், இடை)

காட்டு:-
குடி பிறந்தார் ---குடிப் பிறந்தார்(குடிக்கண் பிறந்தார் என்பதன் சுறுக்கம்)இதில் கண் என்னும் உருபு மறைந்து வருகிறது.
நல்லாரிடை புக்கு ---நல்லாரிடைப் புக்கு (இதில் இடை என்னும் உருபு வெளிப்படையாதலைக் காண்க).

25.ய, ர, ழ -ஆகிய மெய்யீற்று அஃறினைப் பெயர்களில் வலிமிகும்.

காட்டு:- (யகரம்)
வேய் கிளை ---வேய்க்கிளை.
வேய் தோள் ---வேய்த்தோள்.

(ரகரம்)
தேர் தட்டு ---தேர்த்தட்டு.
கார் கொடை ---கார்க்கொடை.

(ழகரம்)
தாழ் கதவு ---தாழ்க்கதவு.
வீழ் சடை ---வீழ்ச்சடை.

குறிப்பு:- சில இடங்களில் வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினமும் இடமேற்கும் என்பதனை நினைவில் கொள்க.

காட்டு:-
வேய் குழல் ---வேய்ங்குழல்
பாழ் கிணறு ---பாழ்ங்கிணறு
ஆர் கொடு ---ஆர்ங்கொடு

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழர் இடர்!


அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. அமுதா என் எளிய முயற்சி...

    மண்ணை இழந்து மக்களை இழந்து
    தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
    ஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ
    ஈழத் தமிழர் இடர்!

    பதிலளிநீக்கு
  2. திருந்திய வெண்பா!

    மண்ணை இழந்தும்தம் மக்கள் தமையிழந்தும்
    தன்னை இழந்தும் தவிக்கின்றார்! - இன்னமும்
    ஏழேழ் பறப்பிலும் இஃதே தொடர்ந் திடுமோ
    ஈழத் தமிழர் இடர்!

    சும்மா சொல்லக்கூடாது. நல்ல உணர்வுமிக்க கவிதை. அழகாகக் கற்பனை செய்திருக்கிறீர்கள். கவிதை இப்பொழுதுதான் எழுதத் துவங்கியிருக்கிறீர்கள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நாட்பட்ட கவிஞருக்குத் தோன்றும் அழகிய கற்பனைவளம் தங்களிடமும் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு அமுதா... மிக்க நன்றி...

    நம்ம வீட்டுக்கு வரவும் http://thuklak.blogspot.com உங்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்று உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. சென்று பார்வையிட்டேன் வாழ்க! பதிவுகள் அருமை. என்னைப் புகழ்ந்து எழுதியமை கண்ட நாணமுற்றேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    வெண்பா எழுதாலம் வாங்க இன்று இந்தப் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. எனக்கு இலக்கணம் சரியாகத் தெரியாது. வெண்பாவில் சீர் பிரித்தல் என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்பது அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது மற்றும் நிறைய இலக்கணம் உள்ளது கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். சிறு விண்ணப்பம் எழுத்துகள் ஊதா வண்ணத்தில் இருப்பது படிக்க முடியவில்லை அதையும் வெள்ளை எழுத்தாகவோ அல்லது பின்புலத்தி நிறத்தை மாற்றினால் நன்றா இருக்கும்
    mspmurugesan@gmail.com

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com