திங்கள், 9 பிப்ரவரி, 2009

37.இரட்டுற மொழிதல் அணி!

ஒருசொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருவது இறட்டுற மொழிதல் ஆகும்.

காட்டு:-

மேகமும், கணினியும்!

பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

இப்பாடல் மழைமேகத்திற்கும், கணினிக்கும் உள்ள பொதுத்தன்மைகளைக் குறிப்பிட்டு ஆகையால் இவையிரண்டும் ஒன்றே என்று வரையப்பட்டுள்ளது காண்க.



யானையும், நெற்றாளும்!

கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடுதலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

இருபொருளைத் தொடர்புபடுத்துப் பேசுவன யாவும் இரட்டுற மொழிதல் அணியாகும்.


ஒற்றுமிகா இடங்கள்!

5.நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின் வலிமிகா. (உருபு –கு)

பொன்னி கணவன் -பொன்னிகணவன் (பொன்னிக்குக் கணவன்)
அரச குரு –அரசகுரு (அரசருக்குக் குரு)

6.ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வலி மாகா. (உருபு –அது, உடைய)

அரசி சிலம்பு –அரசிசிலம்பு (அரசியுடைய சிலம்பு)
தோழி பை –தோழிபை (தோழியுடைய பை)

7.ஏழாம் வேற்றுமைத் தொகையில் சில இடங்களில் வலிமிகா. (உருபு -இல், கண், இடம்.)

வாய் பாடு –வாய்பாடு (வாயில்பாடு)

8.எழுவாய்த்தொடரில் வலிமிகா.

கோழி கூவிற்று –கோழிகூவிற்று
புலி தாவிற்று –புலிதாவிற்றி.

குறிப்பு:-எது கூவிற்று? எது கத்திற்று? என்ற வினாவால் வரும் விடை கோழி, புலி எனவரும். இப்படி வந்தால் அது எழுவாயாம். எழுவாயுடன் கூவிற்று தாவிற்று என வினைச்சொல் வல்லெழுத்தில் தொடங்கினாலும் வலிமிகா.

9.ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வலிமிகா.

அவனோடு போனாள் -அவனோடுபோனாள்
கந்தனோடு பேசினேன் -கந்தனோடுபேசினேன்.

10.ஐந்தாம் வேற்றுமை உருபுகளை அடுத்து வலிமிகா. (உருபு -இருந்து, நின்று)

மரத்திலிருந்து குதித்தான் -மரத்திலிருந்துகுதித்தான்
கையினின்று பறித்தேன் -கையினின்றுபறித்தேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெஞ்சு பொறுக்குதிலை யே!


அகரம்.அமுதா

திங்கள், 2 பிப்ரவரி, 2009

36.மடக்கணி!

ஒருமுறை வந்த சொற்களோ, சொற்றொடரோ மீண்டும் வந்து வேறுபொருளைத் தருவது மடக்கணியாகும்.

காட்டு:-

பாலும் புளிக்கப் பழம்கசக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலும்இப்
பாலும் இடம்பெயராப் பார்வையென் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!
–அகரம்.அமுதா

விளக்கம்:-
இவ்வெண்பாவை உற்றுநொக்குக. பால் எனும் ஒற்றைச் சொல் மீண்டும் மீண்டும் வந்தாலும் வேறு பொருளைத் தாங்கி நிற்றல் காண்க. முதலடியிலுல்ல பால் ஆவின்பாலையும், இரண்டாமடியின் முதற்சீராகிய பால் -மீது எனும் பொருள்படுவதாகவும் (வேறெதன் பாலும் -வேறெதன் மீதும்) இரண்டாமடியின் தனிச்சீரும் மூன்றாமடியின் முதற்சீருமாகிய பால் எனுஞ்சொல் பக்கங்களைக் குறிப்பனவாயும் (அப்பாலும் இப்பாலும் -அப்பக்கமும் இப்பக்கமும்) நான்காமடியின் முதற்சீராகிய பால் இனத்தைக் குறிப்பதாயும் (பெண்பால் -பெண்ணினம்) அமைந்தமை காண்க.

வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்
கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ!
–கவிகாளமேகம்.

விளக்கம்:-
மூன்றாமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது காலின் அடிப்பகுதியையும் நான்காமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது தயிர்கடையும் மத்தால் அடிப்பதையும் குறிக்கிறது. ஆக இருவேறு பொருளைக்கொண்ட ஒரே சொற்றொடர் என்பதால் மடக்கணியாயிற்று.

பாண்டியன்தா ரானேன் பசலைமுலைப் பாலானேன்
ஆண்டிகையில் ஏந்திய ஒன்றானேன் -வேண்டியபோ(து)
உள்ளங்கைத் தேனானேன் ஓர்மதலைப் பூத்ததன்பின்
உள்ளங்கைத் தேன்நான் உனக்கு!


விளக்கம்:-
மூன்றாமடியிலுள்ள உள்ளங்கைத் தேன் என்பது உள்ளங்கையில் ஏந்திய இன்சுவை பொருந்திய தேனையும் நான்காமடியிலுள்ள உள்ளங்கைத்தேன் என்பது உள்ளம் கைத்தேன் எனவும் (உள்ளத்திற்கு ஒவ்வாமல் ஆகிவிட்டேன்) இருவேறு பொருள்களைக் கொண்டது.

ஒற்றுமிகா இடங்கள்!

1.அது, இது, எது, அவை, இவை, எவை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு –என வரும் சொற்றொடர்களை அடுத்து வலிமிகா.

காட்டு:-
அது சென்றது ---அதுசென்றது
அவை கண்டன ---அவைகண்டன
அவ்வளது தொல்லை ---அவ்வளவுதொல்லை
அவ்வாறு சொன்னான் ---அவ்வாறுசொன்னான்.

2.படி, உடைய, ஒரு, இரு, சில, பல –ஆகிய சொற்களைஅடுத்து வலிமிகா.

காட்டு:-
அப்படி செய் ---அப்படிசெய்
என்னுடைய பேனா ---என்னுடைய பேனா
சில கன்றுகள் ---சிலகன்றுகள்
பல பாடங்கள் ---பலபாடங்கள்
இரு கை ---இருகை (இதில் க்-கைச் சேர்த்தால் அமர்வதற்குறிய நாற்காலியைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகிவிடும். கவனம்தேவை.)

3.உம்மைத் தொகையில் வலிமிகா.

காட்டு:-
செடி கொடி ---செடிகொடி (செடியும் கொடியும்)
குட்டை குளம் ---குட்டைகுளம் (குட்டையும் குளமும்)

குறிப்பு:-
இராப்பகல், ஏற்றத்தாழ்வு, போன்ற சில சொற்களில் சொல்நயத்திற்காக வலிமிகும் என்பதை அறிக.

4.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகா. (உருபு-ஐ)

காட்டு:-
வீடு கட்டினேன் ---வீடுகட்டினேன் (வீடுடைக்கட்டினேன்)
கிணறு தோண்டினான் --- கிணறுதோண்டினான் (கிணற்றைத் தோண்டினான்)

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

அகரம்.அமுதா