திங்கள், 9 பிப்ரவரி, 2009

37.இரட்டுற மொழிதல் அணி!

ஒருசொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருவது இறட்டுற மொழிதல் ஆகும்.

காட்டு:-

மேகமும், கணினியும்!

பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

இப்பாடல் மழைமேகத்திற்கும், கணினிக்கும் உள்ள பொதுத்தன்மைகளைக் குறிப்பிட்டு ஆகையால் இவையிரண்டும் ஒன்றே என்று வரையப்பட்டுள்ளது காண்க.



யானையும், நெற்றாளும்!

கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடுதலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

இருபொருளைத் தொடர்புபடுத்துப் பேசுவன யாவும் இரட்டுற மொழிதல் அணியாகும்.


ஒற்றுமிகா இடங்கள்!

5.நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின் வலிமிகா. (உருபு –கு)

பொன்னி கணவன் -பொன்னிகணவன் (பொன்னிக்குக் கணவன்)
அரச குரு –அரசகுரு (அரசருக்குக் குரு)

6.ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வலி மாகா. (உருபு –அது, உடைய)

அரசி சிலம்பு –அரசிசிலம்பு (அரசியுடைய சிலம்பு)
தோழி பை –தோழிபை (தோழியுடைய பை)

7.ஏழாம் வேற்றுமைத் தொகையில் சில இடங்களில் வலிமிகா. (உருபு -இல், கண், இடம்.)

வாய் பாடு –வாய்பாடு (வாயில்பாடு)

8.எழுவாய்த்தொடரில் வலிமிகா.

கோழி கூவிற்று –கோழிகூவிற்று
புலி தாவிற்று –புலிதாவிற்றி.

குறிப்பு:-எது கூவிற்று? எது கத்திற்று? என்ற வினாவால் வரும் விடை கோழி, புலி எனவரும். இப்படி வந்தால் அது எழுவாயாம். எழுவாயுடன் கூவிற்று தாவிற்று என வினைச்சொல் வல்லெழுத்தில் தொடங்கினாலும் வலிமிகா.

9.ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வலிமிகா.

அவனோடு போனாள் -அவனோடுபோனாள்
கந்தனோடு பேசினேன் -கந்தனோடுபேசினேன்.

10.ஐந்தாம் வேற்றுமை உருபுகளை அடுத்து வலிமிகா. (உருபு -இருந்து, நின்று)

மரத்திலிருந்து குதித்தான் -மரத்திலிருந்துகுதித்தான்
கையினின்று பறித்தேன் -கையினின்றுபறித்தேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெஞ்சு பொறுக்குதிலை யே!


அகரம்.அமுதா

11 கருத்துகள்:

 1. வணக்கம் திரு அமுதா. வெண்பா என்ற வார்த்தையே என்க்கு மகிழ்ச்சியை தரக்கூடியது.இன்று முதல் உங்கள் மாணவியாக கற்க போகிறேன்.
  என்னைப்போல் புதிதாக படிப்பவர்களுக்கு அறிமுகம் ,அடுத்து பாடம் 1.பாடம்2 என தொட்ர்ந்து வந்தால் எளிதாக இருக்கும்.மாறி மாறி வருவது தொடந்த பயிற்சிக்கு தடையாக உள்ளது.இதற்கு பழைய பதிவுகள் முதலில் வருவது போ வடிவமைப்பை மாற்றலாமோ? அல்லது பாடம் 11,பாடம் 2 என லேபிள் இட்டு கிளிக் செய்தால் நேராக வேண்டியப் பாடத்திற்கு போகும் படியாக செய்யமுடியுமோ?இனக்கு சரியாக தெரியவில்லை. முடிந்தால் உதவி வெய்யவும்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்
  http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_4092.html

  பதிலளிநீக்கு
 3. என் முதல் வெண்பா சரியாக உள்ளதா என தயவு செய்து கூறவும்.

  பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்க
  காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்
  காவிரி தன்னொடு என்றுமேத் தீராதோ
  ஈழத் தமிழர் இடர்.

  தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
  எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
  என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
  வெண்பா வரைந்தேன் விரைந்து.

  பதிலளிநீக்கு
 4. இயல்பான எழுத்தோட்டத்தில் அழகாக செய்திகளைக் கோர்த்தளித்துள்ளீர்கள். வாழ்த்துகள். மேலும் அறிமுகம் பகுதியில் எனது வலைப்பதிவைக் குறிப்பிட்டு எழுதியமைக்குக் கோடி நன்றிகளை தங்களின் தாள்களில் காணிக்கையாக்குகிறேன். நன்றிகள்;.

  பதிலளிநீக்கு
 5. திருமதி உமா அவர்களுக்கு வணக்கங்கள். தங்கள் பின்னூட்டத்தைக் காலதாமதமாக வெளியிடுவதற்கு மன்னிக்கவும்.சில நாட்களாக இணையப்பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. தாங்கள் வெண்பா எழுதக்கற்றுக்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்களும் தங்களைப் போன்றோரும் வெண்பா கற்றுக்கொள்ள அதில் எழும் ஐயங்களைப்போக்க நான் அணியமாக இருக்கிறேன். பொதுவாக வெண்பாப் பாடங்களைப் பாடம் 1, பாடம்2 பாடம்3 என்ற தளைப்புகளிட்டே கொடுத்திருக்கிறேன். இருப்பினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க லேபில்கள் இடுகிறேன். வெண்பாவில் எவ்வகை ஐயம் தங்களுக்கு எழுந்தாலும் எனது தனிமடலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தயங்காமல் கேளுங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பொருப்பில்லாத் தனத்தோடு ஒரு வார காலமாக இணையப்பக்கத்திற்கு வராத என்னை முதலில் மன்னித்துவிடுங்கள் உமா அவர்களே! உங்கள் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மீண்டும் புத்துணர்வோடு எழுதத் துவங்குகிறேன்.
  தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
  எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
  என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
  வெண்பா வரைந்தேன் விரைந்து.
  இத் தங்களின் வெண்பா இலக்கணப்படி சரியாகவும் முறையாகவும் அமைந்த இன்னிசை வெண்பா. பால் பால் என்று பல இடங்களில் வந்தமையான் இதைச் சொற்பொருட் பின்வரு நிலையணி எனல் தகும். இது தங்களின் முதல் வெண்பாவாக இருக்குமானால் எனது ஒருகோடி வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். பாடலின் பொருளே முதல் வெண்பா எனப்பறைசாற்றிவிடுகிறது. முதல் முயற்சியிலேயே இத்தனை அருமையாகவும் இனிமையாகவும் உங்கள் உள்ளக்கிடங்கையைத் தெளிவாகச் சொல்லமுடிந்ததென்றால் நிச்சயமாக நீங்கள் முறையாகப் பயில்வீர்களானால் மரபில் தேர்ந்த கவிராகிவிடலாம். நானெல்லாம் மரபுப்பாக்கள் எழுதத் தான்றோன்றித்தனமாகக் கற்றுக்கொண்ட போது (எனக்கு யாரும் கற்றுத்தர முன்வரவில்லை.) எனது முதல் வெண்பா அல்லது முதல் ஓரிரு மாதங்களில் எழுதிய வெண்பாக்கள் ஒன்றுகூட பொருளுடையதாக இருந்ததில்லை. எழுதி எழுதி நான் மட்டுமே சுவைத்துவிட்டு (ரசித்துவிட்டு)க் கிழித்துப் போட்டுவிடுவேன். அந்த வகையில் தங்களுக்கு வெண்பாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. தங்கள் ஐயங்களைத் தயங்காமல் கேளுங்கள். விடையறுக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
  பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்

  காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்

  காவிரி தன்னொடு என்றுமே தீராதோ
  ஈழத் தமிழர் இடர்.
  இவ்வெண்பாவும் இன்னிசை வெண்பாவே. படிப்பதற்கு ஓசை நயத்துடன் அருமையாகப் பாருந்தியுள்ளது. சதுரங்கக் காய் -(இடையில் க்-மிக வேண்டும்) மேலும் என்றுமே தீராதோ - (இவ்விடத்தில் வலிமிகக் கூடாது)
  ஒரு சிறு ஐயம். பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக் காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால் -இவ்விடத்தில் எனக்குப் பொருள் புரியவில்லை. சதுரங்க நாடகத்தில் எது ஓரங்கமாகிறது? எதனைத் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை. தனிமடலில் அருள்கூர்ந்து விளக்குவீராக.
  தங்கள் முதல் முயற்சியிலேயே பட்டையைக் கிளப்பிவிட்டீர்கள். இதோ உங்களுக்கு இவனின் வெண்பா வாழ்த்து.
  பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
  சொல்லாண்டு பாடுகிறேன் தூயவளே! -இல்லாண்டு
  செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
  வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி திரு அமுதா அவர்களே.சிக்கிமுக்கி அவர்களுடன் தாங்கள் வெண்பாவிலேயே கருத்து பரிமாற்றம் செய்ததுபோல் வெண்பாவிலான தங்கள் வாழ்த்துக்கு வெண்பாவிலேயே பதிலிருக்க ஆசைதான்.கொஞ்சம் கற்றுக்கொண்டு வருகிறேன்.தங்களைப்போன்ற சிறந்த ஆசிரியர் இருக்கும் போது நாங்கள் எழுதுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. யாப்பிலக்கணம் முறையாக கற்க வேண்டும் என்பது என் பலவருட ஆவல்.தங்களின் திறமையான விளக்கத்தால் நற்பயன் அடைந்துள்ளேன்.உங்கள் பாடங்களை print எடுத்துவைத்துள்ளேன்.நிதானமாக படித்து ஒற்று தவறுகளை எல்லாம் போக்கிக்கொள்கிறேன்.மறுபடி நன்றி.

  பதிலளிநீக்கு
 8. முயல்க உமா அவர்களே! முயற்சி திருவினையாக்கும். பாவகைகளிலேயே வெண்பாவில் விளையாடுவது என்பது மிகவும் எளிது. நான் வெண்பா எழுதத் துவங்கிய புதிதில் எதை வெண்பாவாக்குவது எனத் தெரியாமல் "பேசாமல், ஆசானிடமே வெண்பாவில் கேள்விகளைக் கேட்டு விளையாடினால் என்ற என்றெழுந்த சிந்தனையால் சிலவெண்பாக்களை எழுதினேன். அதற்கு அவர் அளித்த பதில்களையும் இப்பகுதியில் கண்டு மகிழலாமே! http://agaramamutha.blogspot.com/2009/01/blog-post_14.html ,

  மேலும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுடன் நேர்காண்பதைப்போலக் கற்பனையாக ஒரே வெண்பாவில் கேள்வியும் பதிலும் அமைத்து எழுதிய வெண்பாக்களை இப்பகுதியிற் காணலாம். http://thamizhchcherukkan.blogspot.com/2009/01/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 9. நிற்காது என்றுமிது முட்களால் ஆனதிது
  சற்றே தளராது ஓட்டத்தில் - உற்றுநோக்கி
  கற்றால் இமைபொழுதும் சோரா தியங்கிடுமே
  சுற்றும் கடிகாரம் மீன்

  விவேக்பாரதி

  பதிலளிநீக்கு
 10. அசைவுகள் ஆயிரம் காணும் ஒருநல்
  தசையால் அதுஉரு வாகும் - இசையும்
  திசையெல் லாம்இது பொய்ஆடும் ஒன்றாம்
  விசையுறு பந்தும் மனது !.

  விவேக்பாரதி

  பதிலளிநீக்கு
 11. நல்லவை தான்விதைத்து நாட்டுப் பிணிபோக
  அல்லும் பகலும் உழைத்திடுவார் - கல்மலையும்
  நல்லுலகும் போற்றும் உழவரும் நற்றமிழைச்
  சொல்லும் புலவரும் ஒன்று !

  -விவேக்பாரதி

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com