திங்கள், 6 செப்டம்பர், 2010

ஆசிரியர் போற்றுதும்!

இந்த ஆசிரியர் நாளில் நம் வெண்பா வலையிற் பயிலும் அனைவரும் தாங்கள் பயின்ற ஏதேனும் ஒரு பாவடிவில் தங்களின் பள்ளிக்கால நினைவுகளை முன்னிருத்தியோ, பொதுப்படையாகவோ ஆசிரியர்களை வாழ்த்திப் பாவடிக்க அழைப்பு விடுக்கின்றேன்.

தங்களுக்கான தலைப்பு - ஆசிரியர் போற்றுதும்

அகரம் அமுதன்

33 கருத்துகள்:

 1. அஞ்சில் எமைவளைத்து
  அமுதனைய கல்வியினை
  நெஞ்சில் நிறைக்கின்ற
  நேர்த்தியெலாம் கற்றவரே!

  பேசரிய மாண்பெல்லாம்
  பிள்ளைகள் எமைச்சேர
  ஆசிரிய பணிசெய்யும்
  அன்பின் தெய்வங்காள்!

  பொற்போடு எமைநடத்திப்
  புகழ்மணக்கும் கல்வியினைக்
  கற்போடு கற்பிக்கும்
  கடமையிற் பெரியோரே!

  குன்றளவு கொடுத்தாலும்
  குறையாத செல்வத்தை
  இன்றளவும் எமக்களித்து
  இன்புறும் வள்ளல்காள்!

  ஈன்றோரின் மேலாக
  எம்நெஞ்சில் நிறைபவரே!
  சான்றோராய் எமைமாற்றும்
  சாதனைகள் புரிபவரே!

  எச்செல்வம் அளித்தாலும்
  எச்சமின்றித் தீர்வதுண்டு...
  மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
  விளிவின்றி வளருமன்றோ!

  பள்ளிக் கூடமெனும்
  பண்பட்ட கோயிலின்
  உள்ளே எழுந்தருளும்
  உயர்தெய்வம் நீங்களன்றோ!

  தாய்மொழி என்றெவரும்
  சாற்றும் மொழியினையும்
  ஆய்ந்தெமக்கு ஊட்டுகின்ற
  அன்னையரும் நீங்களன்றோ!

  அறிவு நீர்பாய்ச்சி
  அகந்தைக் களையகற்றி
  செறிவுடைய விளைநிலமாய்ச்
  செய்உழவர் நீங்களன்றோ!

  சிலையின் இறுதிநிலை
  சீர்மிகு கண்திறப்பாம்…
  விளையும் பயிரெமக்கோ
  விழிதிறப்பே முதல்நிலையாம்...
  எண்ணோடு எழுத்தென்னும்
  இருகண்கள் திறக்கின்ற
  திண்ணிய பணிசெய்யும்
  சிற்பியரும் நீங்களன்றோ!

  அன்றாடம் எமைநாடி
  அறிவு புகட்டுமுமை
  இன்றிந்நாள் எம்நெஞ்சில்
  இருத்திப் புகழ்கின்றோம்!

  வாழ்நாள் முழுவதையும்
  மாணவர் எமக்களித்து
  வீழ்நாள் இலாக்கல்வி
  விளைக்கும்நீர் வாழியவே!

  பதிலளிநீக்கு
 2. நுண்கலையும் நூலறிவும் நல்கியவை நீக்குமலை
  புண்ணகந்தைப் பேயறுத்து போக்குமலை - மண்தலையில்
  பாசிறிதும் இல்லார்வெண் பாப்புனையப் பண்ணிவிடும்
  ஆசிரியன் அண்ணா மலை.

  பதிலளிநீக்கு
 3. அவனடியாரின் பாடல் அருமை அருமை. வாழ்க. மற்றவர்களும் ஆசிரியர் பற்றிப் பாப்புனைய வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. எண்சீர் வெண்செந்துறை
  (எட்டு ஈரசைச் சீர்களை கொண்ட ஈரடிப் பா)
  [தமிழநம்பி அய்யா நடத்தும் ’மரபுப்பா பயிலரங்கம்’ தளத்தில் பயின்றது)

  பொருளிலா ஓசையை புகழ்பெறும் பாட்டென
  ......பெரியமாற் றந்தரும் பொறியா சிரியராம்
  அறிவிலா அகந்தையை அடக்கியுள் இரைச்சலை
  ......அகற்றிடும் அமைதியே அருட்குரு உருவமாம்.

  பதிலளிநீக்கு
 8. வீழ்ச்சிகள் யாவையும் வெற்றியாய் மாற்றிட
  ஆழ்ந்தநற் கல்வி அறிவையும் - வாழ்விலென்றும்
  தாழ்ந்திடா நன்நெறியுந் தந்திடும் ஆசிரியர்
  வாழ்வின் வரனே வணங்கு!

  பதிலளிநீக்கு
 9. மனத்தை தொட்டது திரு அவனடியாரின் பா. மிக அருமை.
  திரு அமுதன் அவர்களின் பா மிக அருமை.
  //அன்றாடம் எமைநாடி
  அறிவு புகட்டுமுமை
  இன்றிந்நாள் எம்நெஞ்சில்
  இருத்திப் புகழ்கின்றோம்!//

  ஆஹா இஃதை நாங்கள் தங்களுக்குச் சொன்னதாகக் கொள்ளவும். அன்றாட பல பணிகளுக்கிடையில் வலையில் மிக அருமையாக பாடம் நடத்தி "மண்தலையில்
  பாசிறிதும் இல்லார்வெண் பாப்புனையப் பண்ணி"விட்டீர். நன்றி சொல்வது எளிதல்ல.கற்றது கையளவென்றாலும் அனைத்தும் தங்களால் என்பதால் நன்றியுடன்.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. பாவல நண்பர்களே (உமா/அண்ணாமலை/வசந்த்/அப்பாதுரை/சவுக்கடி/திகழ் மற்றும் பலருக்கும்): வணக்கம்!
  அமுதனார் அன்றாடப் பணியில் மூழ்கினாரோ என்று நினைக்கும்படி காணாமல் போய்விட்டார். ஆதலினால் தங்கள் நற்பாக்களை இட்டு அவரை இங்கே ஈர்க்க வேண்டுகிறேன்.
  .........................................
  அமுதனையப் பாக்களை அற்புதமாய் ஆர்க்கும்
  கிமைப்பொழுதில் இன்முகத்தோ டீயும் - அமுதனாம்
  ஆசிரியர் ஆழ்ந்தார் அவர்பணியில் ஆதலில்பா
  யோசியா தீங்கிடுவீர் யாத்து.
  .........................................

  பதிலளிநீக்கு
 12. வெண்டாழிசை - 4
  காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய்
  காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய்
  காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய் + (புளி/கரு) காய்
  காய் + (புளி/கரு) காய் + மலர் அ/ பிறப்பு
  [தமிழநம்பி அய்யா நடத்தும் ’மரபுப்பா பயிலரங்கம்’ தளத்தில் பயின்றது)

  1.
  சித்திகளின் சிறப்புகளை சிறுமதியர் அறியாரே
  பத்தரிடம் பணம்பொருளைப் பறித்திடலாம் பலவிதத்தில்
  இத்துறையில் இகழ்சேரப் புகழ்.

  2.
  விஞ்ஞானம் விரிவடையும் விளைவுகளால் வினை;முடிவில்
  இஞ்ஞாலம் இயலாது இறைவனையே இறைஞ்சுருக
  அஞ்ஞானம் அகற்றிடுமவ் வருள்.

  3.
  பொதுச்சொத்தில் விளையாடி பெறும்பணத்தைக் குவித்ததனால்
  பொதுநலநாட் டரசுகளின் பெருமதிப்பை இழந்தோமே
  இதுபோலோர் இழிசெயலும் இலை.

  4.
  விற்பனையை விரைந்துயர்த்த விளம்பரத்தில் வனிதையரை
  தெற்றனவே தெருவோரம் திரையிடுவார் துகிலுரித்து
  எற்றைக்கும் இழுக்கலவோ இவர்க்கு !

  பதிலளிநீக்கு
 13. குறள் வெண்பா:

  பற்றினால் பாருடலம் பற்றிடும் பாழகந்தைப்
  புற்றுநோய் போக்கடிப் போம்.


  ’பார்’ - ’உலகம்’ என்றும், ’காண்’ என்றும் கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 14. அன்புடையீர், மேலேயுள்ள வெண்பாவில் ‘கிமைப்பொழுதில்’ என்று உள்ள இரண்டாம் அடி முதல் சீரை ‘இமைப்பொழுதில்’ என்று திருத்திக்கொள்ளவும். நன்றி.
  .........................................
  அமுதனையப் பாக்களை அற்புதமாய் ஆர்க்கும்
  இமைப்பொழுதில் இன்முகத்தோ டீயும் - அமுதனாம்
  ஆசிரியர் ஆழ்ந்தார் அவர்பணியில் ஆதலில்பா
  யோசியா தீங்கிடுவீர் யாத்து.
  .........................................

  பதிலளிநீக்கு
 15. வாழ்க. வாழ்க. உமா மற்றும் அவனடியாரின் பாக்கள் அனைத்தும் அருமை. அருமை

  பதிலளிநீக்கு
 16. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

  1.
  மாபாவி யாமகந்தை மாய்த்திடுவான் மாரமணன்
  தீபாவ ளித்திருநா ளில்.

  2.
  அபாயம் அணுவளவும் அல்லா தொருநல்
  உபாயம் உரைத்தான் உணர்.

  3.
  நானென்னும் நீசன் நரகா சுரன்வீழத்
  தானுண்மைத் தீபா வளி.

  4.
  அகரத்தோ டனைத்து அரும்புலவர் அன்பில்
  திகழ்ந்திடும் தீபா வளி.

  பதிலளிநீக்கு
 17. கடைசிக் குறளை கீழ்க்கண்டவாறு திருத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்:

  அகரத்தோ டாழ்ந்த அரும்புலவர் அன்பு
  திகட்டாதத் தீபா வளி.

  பதிலளிநீக்கு
 18. ஞாயிறு 21-11-2010 மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம்; அதையொட்டி இரு பாடல்கள்.

  தமிழநம்பி ஐயா-வின் மரபுப் பா பயிலரங்கத்தில் பயின்ற வெளிமண்டிலம் வகையில்:

  வெளிமண்டிலப் பா
  நான்கு இயற்சீர்கள் + ஒரு தனிச்சொல் கொண்ட நாலு அடிகள் உள்ள பா; நாலு அடிகளிலும் ஓரெதுகை, ஒரே தனிச்சொல்):

  1.
  நான்முகன் நாரணன் நாடிடும் நாயக - நமச்சிவனே
  நான்-நான் எனவுன் நாட்டியங் கண்டார் - நமச்சிவனே
  நான்மறை ஓதிடும் நாவினில் நவில்பவன் - நமச்சிவனே
  நானுனைத் தேடி நைந்தழி வேனோ - நமச்சிவனே


  2.
  காலனைக் கொன்றிடும், காத்திடும் கார்த்திகை - தீபவொளி
  மாலயன் மமதையை மாய்த்திடும் மலையிதன் - தீபவொளி
  ஆலமாம் அகந்தை அறவோ டழித்திடுந் - தீபவொளி
  கோலமோ கோவணன் குறுநகைக் கோவவன் - தீபவொளி

  நான்கு ஆன்மிகப் பாதைகளின் சாரம்:

  3.
  செயலும் பலனும் சிவனிடம் கர்ம - யோகமிதே
  அயர்வுறும் அகமவன் அடிமை பக்தி - யோகமிதே
  முயன்று மூச்சினுள் முருகன் ராஜ - யோகமிதே
  அயலாம் அகந்தை அழித்திட ஆன்ம - யோகமிதே

  பதிலளிநீக்கு
 19. உயர்திரு அவனடியார் அவர்களுக்கு. தங்களின் பாக்கள் மூன்றும் அருமை. வாழ்க

  என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ள வேண்டுகின்றேன். நன்றிகள்

  agaramamuthan@gmail.com

  பதிலளிநீக்கு
 20. அனைவருக்கும் வணக்கம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் [வந்துட்டோமில்ல!]

  திரு அவனடிமையாரின் கர்ம, ராஜ, பக்தி, ஆன்ம யோக பா மிக அருமை. [தங்களின் பாக்களும் அழகான கருத்துக்களும் வழிகாட்டலும் இவ்வெண்பா குடும்பத்தின் மூத்தவர் என்ற உணர்வை எனக்கு உண்டுபண்னுகின்றன. தங்களின் ஆசியோடு மீண்டும் எழுதுகிறேன்.

  ஆசிரியர் அமுதன் அவர்களுக்கு என் வணக்கங்களும். நன்றியும்.

  பதிலளிநீக்கு
 21. ஊழல்

  கறுப்புப் பணததை கடிதே பெருக்கும்
  இருக்கை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி
  அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை
  உடுத்தி இருக்குமாம் ஊழல்.

  பதிலளிநீக்கு
 22. உமா அவர்களே: வருக வருக.

  //மூத்தவர் என்ற உணர்வை//

  அருள்மனம் பூத்தநல் அன்பர்கள் ஆரும்
  விரும்பிடும் மூத்தவர் தாம்.

  ஊழல் வெண்பா அற்புதம். ஊழல்/லஞ்சம் நாட்டையே விழுங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
  வளர்த்துவிட்டோம். இந்நஞ்சை நாட்டிலிருந்து அறவே ஒழிக்கவும் பல நிறுவனங்கள்/தனி மனிதர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

  வெண்பாவில் இரண்டாம் அடி, இரண்டாம் சீர் தளை தட்டுகிறதே.

  (அமுதனாசிரியர் அவர் பணியில் மூழ்கி அடிக்கடி தளத்திற்கு வரமுடியாமல் இருப்பதால், ஒருவருக்கொருவர் நிறை/குறைகளை சொல்வதில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்)

  நன்றி. மேலும் பாமழையைப் பொழிக என்று வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. பாழும் பிணநாற்றம் பைந்தமிழ் நாட்டில்நஞ்
  சூழலின் ஊத்தை மணத்தால்.

  பதிலளிநீக்கு
 24. கறுப்புப் பணததை கடிதே பெருக்கும்
  இருக்கை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி
  அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை
  உடுத்தி இருக்குமாம் ஊழல்.  அழகோ அழகு. மிக அருமையான அழகான உருவகம் வாழ்க தோழி

  பதிலளிநீக்கு
 25. ////////(அமுதனாசிரியர் அவர் பணியில் மூழ்கி அடிக்கடி தளத்திற்கு வரமுடியாமல் இருப்பதால், ஒருவருக்கொருவர் நிறை/குறைகளை சொல்வதில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்//////////

  கண்டிப்பாக நிறைகுறைகளை உரைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு அவனடியாரே!

  பதிலளிநீக்கு
 26. பாழும் பிணநாற்றம் பைந்தமிழ் நாட்டில்நஞ்
  சூழலின் ஊத்தை மணத்தால்.

  பொருள் விளங்கவில்லை.

  முதலடியின் நான்காம் சீர் 'நாட்டில் நம் சூழலின்' எனப் படிப்பதா?

  அல்லது

  நாட்டில் நஞ்சு ஊழலின்' எனப் பிரித்துப் படிப்பதா?

  இரண்டாம் முறையில் கொள்ள வேண்டுமாயின், நஞ்சு என்பது பேச்சு வழக்கு. நச்சு என்பதே எழுத்து வழக்கு. ஆக, 'நாட்டில் நச்சு ஊழலின்' - எனவர வேண்டும் எனக்கருதுகின்றேன். சரியா?

  பதிலளிநீக்கு
 27. அவனடிமையார் அவர்களுக்கு என் நன்றி

  இருக்கை வேண்டியே ஏய்க்கும் //


  இருக்கையை வேண்டியே - இருகைகளைக்கூப்பி ஓட்டு வாங்கி பிறகு ஏய்க்கும்
  நாற்காலியை பெறவேண்டி யாரையும் ஏய்க்கும்

  பதிலளிநீக்கு
 28. வலைகொண்டு தாய்த்தமிழை வாழவைக்கும் நண்பா
  நிலைகொள்ளும் நின்பெயரும் நிச்சியமாய் நாளை
  மலைபோல் தடைகள் மறைந்தே ஒழியும்
  தலைமகன் நீயிருக்கை யில்

  பதிலளிநீக்கு
 29. என் வெண்பா ஆசிரியருக்கு வாழ்த்துப்பா

  பதிலளிநீக்கு
 30. //இரண்டாம் முறையில் கொள்ள வேண்டுமாயின், நஞ்சு என்பது பேச்சு வழக்கு. நச்சு என்பதே எழுத்து வழக்கு. ஆக, 'நாட்டில் நச்சு ஊழலின்' - எனவர வேண்டும் எனக்கருதுகின்றேன். சரியா?//

  சரிதான் அய்யா! திருத்திவிட்டேன், இதோ:

  பாழும் பிணநாற்றம் பைந்தமிழ் நாட்டில்நச்(சு)
  ஊழலின் ஊத்தை மணத்தால்.

  (ஊழல் அறவாழ்வின் சாவைக் குறிப்பதால், பிணநாற்றம் என்றேன்)

  பதிலளிநீக்கு
 31. உமா அவர்களுக்கு:

  இருகை (இரண்டு கைகள்) / இருக்கை (நாற்காலி) - நல்ல சொல்லாடல் ; ஆனால் இந்த இரண்டில் ஒன்றைத்தான் குறிக்கமுடியும் (ஒன்றிற்கு (க்) ஒற்று கூடாததாலும் மற்றொன்றுக்கு ஒற்று வேண்டியிருப்பதாலும்)

  நிற்க; நான் மேலே குறிப்பிட்டது தளை விதியைப் பற்றி: இரண்டிலுமே ’மாமுன் நிரை’ தளை விதி தட்டுகிறது என்றேன் (’இருக்கை’ அ. ’இருகை’ - புளிமா; தொடர்ந்து வருவது ‘வேண்டியே’ - கூவிளம்)

  ஒருவேளை நான்தான் எதையோ பார்க்கத் தவறுகிறேனோ ?

  நன்றி....

  பதிலளிநீக்கு
 32. திகழ் அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன். தொடர்ந்து வெண்பா மழை பொழிக. நன்றிகள்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com