திங்கள், 11 ஆகஸ்ட், 2008

பாடம்18 முடுகியல்!

பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.

முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவையாவன 1- முற்றுமுடுகியல் வெண்பா 2- பின்முடுகியல் வெண்பா.

முற்றுமுடுகியல்:-

மேகநிற மான்மருக வீறுதணி கேசவிது
வாகடின மேவுமிவ ளாவியருள் -வாகுவளை
நத்தத்தத் திற்பற்றி நச்சுப்பைக் குட்டத்து
நிர்த்தத்திற் கிச்சித்த நீர்! -யாரோ

இவ்வெண்பா முழுமுடுகு வெண்பாவாக அமைந்துள்ளமை நோக்குக.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன –தானதன
தத்தத்தத் தத்தத்த தத்தத்தத் தத்தத்த
தத்தத்தத் தத்தத்த தா!

என்னும் வண்ணத்தைக் கொண்டியன்றது அப்பாடல்.

முற்றுமுடுகியல் வெண்பாவைக் காட்டிலும் பலராலும் பின்முடுகியல் வெண்பாக்களே அதிகம் பாடப்பட்டு வந்துள்ளது.

காட்டு:-
நடையூறு சொன்மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் -புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்! -புறப்பொருள் வெண்பா மாலை!

இவ்வெண்பாவை நன்கு உற்று நோக்குக. இறுதி இரண்டுவரிகள்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் தா! –என்னும் வண்ணத்தோடு முடிந்துள்ளமை காண்க.

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில் மனையிருக்கச் -சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு!

இப்பட்டினத்தார் பாடலை நோக்குக. இறுதி இருவரிகள் வல்லெழுத்துகள் மிகுந்து வண்ணத்துடன் அமைந்திருத்தல் காண்க.

அரங்கநாதக் கவிராயர் என்போர் பின்முடுகியலில் வேறோர் புதுமையையும் செய்துள்ளார். வெண்பாவில் முகன்மையாகப் பயின்றுவரும் வெண்டளையை நீக்கி வண்ணத்தோடு செய்திருப்பதே அது.

மையல்கொண் டாளுன்மீது வந்தணைவாய் இப்போதே
செய்யவள்சேர் திண்புயவி நாயகனே! -தொய்யில்
முலைபசத்து குழலவிழ்ந்து மொழிமறந்து விடவயர்ந்து
மலைவுகொண்டு நிலைமயங்கி மான்!

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. இறுதி இருவரிகளில் வண்ணம் பயிலலால் வெண்டளை நெகிழ்தலை.

இதுவோர் புறமிருக்க காளமேகப் புலவர் மேலுமோர் புதுமையைச் செய்துள்ளார்.வெண்பா முழுவதும் வல்லினம் மிகப் பாடுவதுதான் அப்புதுமை.

காட்டு:-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க -கைகைக்குக்
காக்கைக்கு கைக்கைக்கா கா!

தத்தித்தா தாதுதி தாதூதி தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது!

இவ்விரு வெண்பாவும் முழுக்க முழுக்க வல்லினம் மிகுந்து வந்தமை காண்க. இதுபோல் மெல்லினம் இடையினம் மிகவும் பாடி அசத்தியுள்ளார்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மெய்யடா மெய்யடா மெய்!

அகரம்.அமுதா

13 கருத்துகள்:

  1. பெய்யெனப் பெய்த மழையெலாம் மாறியின்று
    பொய்யெனப் பொய்த்தது கண்டமனம் - துய்க்கவலை
    மொய்த்து விழிநீர் மழைபொழி சோகந்தான்
    மெய்யடா மெய்யடா மெய்.

    பதிலளிநீக்கு
  2. கலக்குகிறீர்கள் ரத்தினகிரி அவர்களே!

    வெண்பா அருமை அருமை அருமை!

    அதென்ன துய்க்கவலை?

    பதிலளிநீக்கு
  3. துய்க்கவலை - வினைத்தொகை

    துய்த்த கவலை, துய்க்கும் கவலை - உணர்ந்து வருந்தும் கவலை என்று பொருள் படும்.

    பதிலளிநீக்கு
  4. ஐயம் தீர்த்தமைக்கு மிக்க நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு
  5. தொடைமீதில் கால்போட்டுத் தொப்புளின்கீழ் கைபோட்
    டிடையோ டியன்றவரை இன்புற் -றுடல்தளர்ந்தால்
    பெய்வளையைப் பேயென்பார் பேடியவர் வெற்றுரைகள்
    பொய்யடா பொய்யடா பூவைதரும் இன்பமொன்றே
    மெய்யடா மெய்யடா மெய்!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  6. ரத்தினகிரியாரின் வெண்பா மிக்க அருமை.
    பாராட்டுகள்.
    தியாகராஜன்.

    பதிலளிநீக்கு
  7. தங்கத் தமிழ்திருடித் தம்மொழிபோல் மாற்றியதும்
    பொங்கல்புத் தாண்டழிக்கும் பொய்யுரையால் -தங்கருத்தை
    மெய்யாக்கி னாரென்ற மெய்யறிஞர் வாணரின்*சொல்
    மெய்யடா மெய்யடா மெய்!

    பன்றியுடன் சேர்ந்த பசுவின் கதையாகிக்
    குன்றிக் குலமழிக்கும் கோடறியாய் -இன்றும்நாம்
    தெய்வத் திருப்பெயரால் தேட்டம் இழப்பதெல்லாம்
    மெய்யடா மெய்யடா மெய்!

    வாணர்* -தேவநேயப் பாவாணர்

    பாத்தென்றல்.முருகடியான்

    பதிலளிநீக்கு
  8. ஒன்றே குலமென்(று) உயர்ந்த மரபணுவில்
    நன்றே புரிவதுபோல் நஞ்சேற்றி -இன்றுவரை
    உய்வாரை நீங்க உரைத்தத் திருக்குறளே
    மெய்யடா மெய்யடா மெய்!

    கண்டாலும் கேட்டாலும் கள்ளுண்ட போதைத்தரும்
    பெண்டிற் பெருஞ்சிறப்பே பேரின்பம் -என்றிருக்கும்
    மெய்யைப் புறமொதுக்கி மெய்யறிவுப் பெற்றவர்சொல்
    மெய்யடா மெய்யடா மெய்!

    பாத்தென்றல் முருகடியான்

    பதிலளிநீக்கு
  9. தற்புகழ்ச்சிப் பேசித் தருக்கித் திரிவார்முன்
    பொற்புகழ்ச்சிச் சொன்னால் புரிந்திடுமா? -நற்புகழைச்
    செய்யடா செய்கவெனச் செப்புவதால் தீங்குவரல்
    மெய்யடா மெய்யடா மெய்!

    பாத்தென்றல்.முருகடியான்

    பதிலளிநீக்கு
  10. முலைபசத்து குழலவிழ்ந்து மொழிமறந்து விடவயர்ந்து
    மலைவுகொண்டு நிலைமயங்கி மான்!

    இறுதி இருவரிகளில் வண்ணம் பயிலலால் வெண்டளை நெகிழ்தலை//

    எப்படி இங்கு வெண்டளை நிகழ்கிறது என்று கொஞ்சம் விளக்க முடியுமா ?

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. அகரம்.அமுதா : வெண்பா அருமை

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com