திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பாடம்20 நிரல்படுத்து வெண்பாக்கள்!

பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம். அவற்றுள் ஒன்று வெண்பாவில் தொகைபடுத்துதல்.

ஓரின நூல்களை நினைவுகொள்ளவும் ஒன்றைப் படித்தபின் அடுத்ததைப் படிக்கவும் நூலகங்களில் இன நூல்களை வரிசைபடுத்தி அடுக்கவும் இப்பட்டியல் செய்யப்பட்ட வெண்பாக்கள் பயன்படும். பழநூல்கள் அழியாமல் பாதுகாக்கவும் நூல்பற்றிய ஆராய்ச்சிக்கும் இவ்வகை வெண்பாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.

காட்டு:-

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்! -பழம்பாடல்

இப்பாடலைப் பாருங்கள்:- வள்ளுவரின் திருக்குறளுக்கு முற்காலத்தில் யார்யார் உரைகண்டிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறது.

சக்கரவா கம்கிளிஆந் தைநாரை அன்னம்க
ரிக்குருவி கௌதாரி காடைஅன்றில் -கொக்கு
குயில்கருடன் காக்கைபுறா கோழிஇரா சாளி
மயில்கழுகு கோட்டான்வெள வால்! -அழகிய சொக்கநாத பிள்ளை

இப்பாடலில் பறவைகளின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்! -அகரம்.அமுதா

தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்களா பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு! -அகரம்.அமுதா

முன்னிரு வெண்பாக்களில் காய்கறிப் பெயர்களையும் மரங்களின் பெயர்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் -பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்! -வ.சுப.மாணிக்கனார்

இவற்றைப்போல் நிரல்படுத்த வெண்பாக்களை நீங்களும் செய்துபார்க்களாம். சிறப்பாக வரும் வெண்பாவைப் பின்னூட்டத்தில் இடுமாறும் கோருகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "நாளை நமதென்றே நம்பு!"

அகரம்.அமுதா

25 கருத்துகள்:

 1. இன்னும் ஃபுல்லா படிக்கலைங்க. இருந்தாலும் ஆர்வக் கோளாறு எக்கச்சக்கமாய் போய்ட்டதால இரு முயற்சிகள்.

  எதையெழுத யென்றெண்ணி ஏதும்தோன் றாமல்
  கதையாவது வந்துவிழும தற்குமுன் - எதையாவது
  நாலுவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
  நாளை நமதென்று நம்பு!

  இருபத்தொன் றொன்றுகிண்டி பேருந்து இஸ்டாப்பி
  லூறும் நிலையிலெகிறிப் பாய்ந்து - முருகன்
  கபாலென பர்சடித்துத பால்என விழவன்
  கபாலமுன் அதிவேகக் கார்.

  (இது சும்மா லுலுலாய்க்கு..!! ;-) )

  பதிலளிநீக்கு
 2. இடிக்கு மிளையாய்த் துடிக்கு மிளையே
  முடிக்கும் விதியும் முடியும் - விடிந்திடும்
  வேளை வருகையில் வேலை வரட்டுமே
  நாளை நமதென்றே நம்பு!

  பதிலளிநீக்கு
 3. திண்ணமாங் கூடதில் தாய்ப்பலகைத் தட்டெழுதி
  வண்ணத் திரைக்குறுந் தட்டுடன் - எண்ணகம்
  வன்தட்டு் அச்சுப் பொறிவருடி சுட்டெலி
  மென்பொரு ளுங்கணினி யாம்.

  திண்ணமாங் கூடதில் - காபினெட்
  தாய்ப்பலகை - மதர் போர்டு
  தட்டெழுதி - கீ போர்டு
  வண்ணத் திரை - மானிட்டர்
  குறுந்தட்டு - சிடி
  எண்ணகம் - ராம் நினைவகம்
  வன்தட்டு - ஹார்டு டிஸ்க்
  அச்சுப்பொறி - பிரிண்டர்
  வருடி - ஸ்கேன்னர்
  சுட்டெலி - மௌஸ்
  மென்பொருள் - சாப்ட்வேர்
  எல்லாம் சேர்ந்தால் கணினி. :)

  பதிலளிநீக்கு
 4. இன்னும் ஒரு முயற்சி ::

  நான்காம்மா டிச்சுவர் வேதனைத்து நின்றவன்முன்
  நன்குகற்கும் புத்திரந கைசிந்தித்(து) - வேண்டாங்
  கடம்போக் கமுயல்வோங் காற்றடித்து நகர
  விடறியது வேர்வையீரக் கால்.

  பதிலளிநீக்கு
 5. வசந்த குமார் இரத்தினகிரி இருவரும் பிண்ணி எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். இரத்தினகிரியாரின் நிரல்படுத்து நேரிசை வெண்பா அருமை. அருமை. என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

  வசந்த குமார்! தங்களின் முதலிரு வெண்பாக்களில் கனிச்சீர் வருகிறது. மாவிளம்காய் இம் மூன்று சீர்களே வரவேண்டும். மூன்றாம் வெண்பா பாதி விளங்கிப் பாதி விளங்கவில்லை. வெண்பாவைப் பொருத்தவரை ஒவ்வொரு சீரும் தனிச்சீராக வருவதே சிறப்பு. முயலுங்கள் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. முதலிரண்டு வெண்பாக்களின் திருத்திய வடிவங்கள் இன்று பதிக்கப்படும். ;-)

  மூன்றாம் வெண்பாவைப் பற்றி ::

  ஒண்ணுமில்லைங்க. வெண்பா வடிவில் ஒரு குட்டிக் கதை சொல்ல முயற்சி பண்ணி, அது ரொம்ப காம்ப்ளிகேடடா போய்டுச்சு.! விளக்கிச் சொல்லிடறேங்க! ::

  நான்காம் மாடிச் சுவர். வேதனைத்து நின்றவன் முன், நன்கு கற்கும் புத்திரனின் நகை. சிந்தித்து, வேண்டாம் (இம்முடிவு). கடன் போக்க முயல்வோம். (திரும்பி இறங்க முயல்கையில்) காற்று அடித்து நகர, இடறியது வேர்வை ஈரக் கால்.

  விழுந்து இறந்தானா, பிழைத்தானா என்பது வாசகர்கள் கற்பனைக்கே...!! ;-)

  எளிமையாக எழுதச் சொன்னதால், ஒரு முயற்சி ::

  குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
  அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
  எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
  தில்லாளால் முன்பேயே யான்!

  பதிலளிநீக்கு
 7. ஆகா! வாழ்த்துகள் வசந்தகுமார் அவர்களே. மிக அருமை. இறுதியாக அனுப்பிய குரங்கு வெண்பா அருமை. மிகவும் சுவைத்தேன்.

  பதிலளிநீக்கு
 8. ஆகா..!! நீங்களே பாராட்டீங்களா..! மகிழ்வாய் இருக்குதுங்க. அதனால இதையும் ஒரு பார்வை பார்த்திடுங்க..!! ::

  ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
  பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
  கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
  சைக்கிளை எண்ணுகிறேன் நான்!

  பதிலளிநீக்கு
 9. முதலிரண்டு வெண்பாக்களின் திருத்திய வடிவங்கள் :: (சரியா ? பார்த்துச் சொல்லுங்கள் அமுதா!)

  எதையெழுத யென்றெண்ணி யேதுந்தோன் றாமல்
  உதையேதும் வந்துவிழு தற்குமுங்க தையேதும்
  நான்குவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
  நாளை நமதென்று நம்பு!

  இருபத்தொன் றொன்றுகிண்டி பேருந்து இஸ்டாப்பி
  லூரும் நிலையிலெகிறிப் பாய்ந்து, முருகன்
  கபாலென பர்சடித்து(த) பாலென வீழவங்க
  பாலமுன் வேகக் கார்.

  இதுவும் ஒரு சிறுகதை முயற்சி தாங்க.
  கரெக்டா? பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்க.வாழ்க.வாழ்க. ஏரோப்ளேன் வெண்பா அருமை. ஆங்கிலச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கலந்து எழுதுவது ஒருவிதம். இது தற்கால முறை. இம்முறையைப் பலரும் எதிர்த்தாலும் இப்பொழுது பலராலும் இம்முறையில்தான் எழுதப்படுகிறது. ஆங்கில சொற்களைக் கலந்து எழுதும்போதும் தமிழில் எழுதுவது போலவே புணர்ச்சி விகுதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என் தமிங்கிலிஸ்.காமை ஒருமுறை முதலிலிருந்து பார்வையிடவும். வெண்பா அருமை. வாழ்க.

  ஓர் ஐயம். ஏரோப்ளேன், ஏர்பஸ், இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

  திருத்தப் பட்ட வெண்பாவில் முதல் வெண்பா அருமை. தளைதட்டாமலும் இருக்கிறது. இரண்டாம் வெண்பாவின் இரண்டாம் அடியில் தளைதட்டுகிறது.

  நிலையிலெகிறிப் + பாய்ந்து

  மற்றபடி தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. நிறைய வெண்பாக்களைப் படியுங்கள். இலகுவாக வெண்பா எழுத படிப்புமுறை வழிவகுக்கும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. ஓர் நிரல்படுத்து வெண்பா முயற்சி:-

  மரங்கொத்தி வாத்துமைனா வெளவால் மயில்சக்
  கரவாகம் கௌதாரி காடை -பருந்துநாரை
  அன்னம் குயில்கோழி ஆந்தை புறாகிளி
  அன்றில் கழுகுகா கம்!

  வசந்த குமார்! நீங்களும் நிரல்படுத்து வெண்பா முயன்று பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 12. அன்பு அகரம் அமுதா...

  கொஞ்சம் முயற்சி செய்து பார்த்ததில், என்னால் முடிந்த அளவிற்கு எழுதிய ஒரு நிரல் படுத்து வெண்பா ::

  சிமற்றும் சிபிபியும் ஜாவா பிஎச்பிபே
  சிக்ஜே டுஈஈ டிசிஎல்பெர்ல் சிப்பில்
  கொசகொசகூட் டங்கள னைத்திற்கும் அன்னை
  அசம்ப்ளியே என்ப தறி.

  தங்களது தீர்ப்பிற்கு காத்து! (காத்திருக்கிறேன் என்று முடிக்க வர மாட்டேங்குது! ;-)) )

  பதிலளிநீக்கு
 13. ஓ.. மறந்து விட்டேன். ஏரோப்ளேன் என்பது நம்ம ஏரோப்ளேன். ஏர்பஸ் என்பது ட்ராவல் பஸ்ஸுங்க. புஷ்பேக் வசதி எல்லாம் இருக்குமே, அது..!

  மறு திருத்தல் செய்யப்பட்ட வெண்பா..! (நீங்க சரிதான்னு சொல்ற வரைக்கும் விடறதா இல்லை..!)

  இருபத்தொன் றொன்றுகிண்டி பேருந்து இஸ்டாப்பி
  லூரும் நிலையிலெம்பிப் பாய்ந்து, முருகன்
  கபாலென பர்சடித்து(த) பாலென வீழவங்க
  பாலமுன் வேகக் கார்.

  பதிலளிநீக்கு
 14. இரு வெண்பாக்களும் ஓகே! ஆகாய விமானத்தையும் ஏர்பஸ் என்றழைப்பார்கள் அல்லவா? நான் அந்தப் பொருளில் கொண்டுவிட்டேன் அவ்வளவே. நிரல்படுத்து வெண்பா தமிழில் முயன்று பாருங்களேன்?!

  எபிசிடிஇ எஃஜிஹெச் ஐஜெகெஎல் எம்என்
  ஒபிகியு ஆரெஸ் டியுவி –டபிள்யுஎக்ஸ்
  ஒய்யிசட்டாம் இங்கிலிஷ்லெட் டர்ஸ்!

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 15. அன்பு அகரம் அமுதா...

  தங்கள் பின்னூட்டத்திற்கு பதில் உடனே கொடுக்க முடியவில்லை! மாப்பு கொடுக்கவும்.

  கதையை முடித்த பின் தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். கதையை எழுதி முடித்த பின் உங்களிடம் காட்டி, வெண்பாக்கள் ஓ.கே.வா? என்று கேட்க நினைத்திருந்தேன்.

  அதற்குள் நீங்களே முந்திக் கொண்டு கேட்டு விட்டீர்கள்.

  இப்போது கதையைப் படித்துப் பார்த்துக் கூறுங்கள், " வெண்பாக்கள் ஓ.கே.வா..?"

  ராஜா வருகை.

  பதிலளிநீக்கு
 16. அருமை, கலக்குக! வெண்பாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது தங்களுக்கு, வாழ்த்துகள்,

  பதிலளிநீக்கு
 17. அன்பு அகரம் அமுதா...

  மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு..!!

  /*
  ///////பேசு மொழி மாறு!//////
  இவ்வீற்றடி தளைதட்டுகிறது,கவனிக்கவும்
  */

  பேசு :: நேர் நேர் - தேமா

  மொழி :: நிரை

  மாறு :: நேர் நேர் - காசு வாய்ப்பாடு.

  தளை எங்கே தட்டுகின்றது. எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!

  //ஆகாசம்பட்டு சேஷாசலம்

  இவர் யாருங்க..? எனக்குத் தெரியாது. அறிமுகம் கொடுங்களேன். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு பதிவு இவரைப் பற்றி எழுதுங்களேன்.

  பதிலளிநீக்கு
 18. அன்பர்களே, இதேபோல் ஒன்று இரண்டு எனத்தொடங்கி பதினெட்டு வரை எழுதப்பட்ட பாடலையும் நற்றிணை நல்ல குறுந்தொகை என்று தொடங்கும் தனிப்பாடலையும் இயன்றால் இந்தப் பதிவில் இடவும்.

  பதிலளிநீக்கு
 19. அன்பு அகரம் அமுதா...

  மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு..!!

  1.
  ///////பேசு மொழி மாறு!//////
  இவ்வீற்றடி தளைதட்டுகிறது, கவனிக்கவும்

  பேசு :: நேர் நேர் - தேமா

  மொழி :: நிரை

  மாறு :: நேர் நேர் - காசு வாய்ப்பாடு.

  தளை எங்கே தட்டுகின்றது. சொல்லிக் கொடுங்களேன். எனக்குத் தெரியவில்லை!

  2.
  //ஆகாசம்பட்டு சேஷாசலம்

  இவர் யாருங்க..? எனக்குத் தெரியாது. அறிமுகம் கொடுங்களேன். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு பதிவு இவரைப் பற்றி எழுதுங்களேன்.

  3.தங்களது பதிவுகளில் இருக்கும் எனது வெண்பாக்களை எனது பதிவிலும் பதித்துக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதி தேவை.

  பதிலளிநீக்கு
 20. பாலராஜன் கீதா வேண்டுதலுக்கிணங்க‌ வசைக்கோர்கவி காளமேகத்தின் ஒன்றிரண்டு மூன்று பாடல் இதோ


  ஒன்றிரண்டு மூன்று நான்கைந்தா றேழெட்டு
  ஒன்பதுபத் துப்பதி னொன்று பன்னி
  ரெண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
  னாறுபதி னேழ்பதி னெட்டு


  மற்றோர்பாடல் எனக்குத் தெரியவில்லை, தெரிந்தவர்கள் இடுவார்களாக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
   ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
   கற்றறிந்தோ ரேத்தும் கலியோ டகம்புறமென்(று)
   இத்திறத்த எட்டுத் தொகை.

   நீக்கு
 21. வணக்கம் வசந்தகுமார் அவர்களே

  பொதுவாக வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீரில் மட்டுமே ஓரசைச்சீர் வரவேண்டும், ஆனால் பதினாம்காம் சீர் மொழி=நிரை ஓரசைச்சீர் வந்துள்ளது, வெண்பா இலக்கணப்படி குற்றமாகும்,

  ஈற்றடியின் முதற்சீர் பே/சு=நேர்+நேர் என வந்துள்ளதால் அடுத்தசீர் நிரையில் துவங்கவேண்டும் மொழி என நிரையில் துவங்கினாலும் அடுத்துவரவேண்டிய நிரை அல்லது நேர்+நேர் அசைகள் குறைகின்றன, இறுதிசீர் மாறு=காசு என மடிவதால் அதற்குமுன்னுள்ள சீர் காய்ச்சீராகவோ அல்லது கருவிளமாகவோ இருத்தல் வேண்டும்,

  பேசு + மொழி +மாறு
  நேர்நேர்+ நிரைநேர்நேர்+ நேர்பு அல்லது நேர்நேர்+ நிரைநிரை+ நேர்பு என முடிதல் வேண்டும், இடையில் மொழி என ஓரசைமட்டுமே வந்துள்ளது,

  ======================================================================

  //ஆகாசம்பட்டு சேஷாசலம்

  இவர் யாருங்க..? எனக்குத் தெரியாது. அறிமுகம் கொடுங்களேன். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு பதிவு இவரைப் பற்றி எழுதுங்களேன்.//

  அடுத்த பாடம் ஆகாசம் பட்டு சேஷாசலம் பற்றித்தருகிறேன்,

  ======================================================================

  /////தங்களது பதிவுகளில் இருக்கும் எனது வெண்பாக்களை எனது பதிவிலும் பதித்துக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதி தேவை./////

  இதையெல்லாம் என்னிடம் கேட்கவேண்டுமா? பலரையும் வெண்பா எழுதத் தூண்டுவதே நம் நோக்கம், நாம் வழங்கும் ஈற்றடிக்கு வெண்பா எழுதுவதால் அது தங்களுடையது இல்லை என்றாகிவிடுமா? தங்களது கற்பனையில் உருவான தங்களது வெண்பாவை தாங்கள் எங்குவேண்டுமானாலும் இடலாம், நம் "வெண்பா எழுதலாம் வாங்க!" ஒரு பயிற்சிக்களம் மட்டுமே

  பதிலளிநீக்கு
 22. மிக்க நன்றி அகரம் அமுதா..!

  பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. சத்தமில்லாமல் திருத்தி விட்டேன். ;-)

  ஆர்வக் கோளாறில் கொஞ்சமாய்ப் படித்த பாடங்களை வைத்து சில வெண்பாக்கள் எழுதி விட்டேன். இனிமேல் தான் தாண்டி விட்ட வெண்பா பாடங்களை படிக்கப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. வசந்த் இதற்கெல்லாம் கவலைகொள்ள வேண்டாம்,

  "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்",
  படிக்கப்படிக்க மீண்டும் மீண்டும் எழுதஎழுத வெண்பா இலகுவாகிவிடும், பயிற்சியைக் கைவிட்டுவிடாமல் தொடருங்கள், வெற்றி நிச்சயம், வாழ்த்துகள்,

  பதிலளிநீக்கு
 24. ஓ, இப்படியொரு வகையிருக்கா, நல்லது!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com