திங்கள், 6 அக்டோபர், 2008

பாடம் 25 எடுத்துக்காட்டு உவமையணி!

உவமைக்கும் உவமேயத்திற்றும் இடையில் போல போன்று என்ற பொருள்தரும் உவமையுருபுகள் தொகைநிலையில் வருவதே எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!

உவமானம்:-

நுகர்வதால் அனிச்சமலர் வாடிவிடும்.

உவமேயம்:-

விருந்து படைக்கையில் நம்முகத்தில் சிறுகுறி தென்படினும் விருந்தினர் முகம் வாடிவிடும். போல, அதுபோல என்பன போன்ற உவமையுருபுகள் தொகை நிலையாதல் காண்க.


பகல்வெல்லும் கூகையைக் காகம் இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

உவமானம்:-

வலியில் குறைவலிபடைத்த காகமும் பகல்வேளையில் வலிபடைத்த கூகையை எளிதில் வென்றுவிடும்.

உவமேயம்:-

இவ்விகலாகக் கருதும் மன்னவன் தன்பகைமுடிக்க வேளைகருதிச் செயல்பட வேண்டும். உவமையுருபு தொகைநிலை.


துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் -அன்புள்ளாய்!
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் ஆதவன்
காயில் இருக்கும் கனி!

உவமானம்:-

1.சூழ்ந்துள்ள இருள் சூரியன் தோன்றக் கெடும்.2.இன்சுவை பொருந்திய கனியானது துவர்ப்பும் புளிப்பும் கூடிய காயில் ஒளிந்துகிடக்கிறது.

உவமேயம்:-

துன்பம் வருதல் கண்டு மயங்காதே. அதையோர் பொருட்டாக் கருதாக்கால் மறைந்துவிடும். அதுபோல உவமையுருபு தொகைநலையாதல் காண்க.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கருவிழி இல்லாத கண்!"

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

  1. முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
    பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
    அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
    கருவிழி இல்லாத கண்.

    பதிலளிநீக்கு
  2. //துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
    இன்னல் விலகலாம் எக்கணமும் -அன்புள்ளாய்!
    தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் ஆதவன்
    காயில் இருக்கும் கனி! //
    ஆகா, அருமை!
    காயில் இருக்கும் கனி! -
    இவ்வரிகள் ஆயிரமாயிரம் பொன் பெறும்.

    பதிலளிநீக்கு
  3. முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
    பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
    அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
    கருவிழி இல்லாத கண்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com