திங்கள், 8 டிசம்பர், 2008

31.பிறிது மொழிதல் அணி!

உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!


உவமானம்:-
மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியே யாயினும் இறகினை அளவிற்கு அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சும்முறிந்துவிடும்.

உவமேயம்:-
எத்துணை வலிமையான போற்படையை உடைய மன்னனாக இருப்பினும் எதிரிகளை வென்றுவிடலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாகப் போர்நடத்துவானாயின் அது அவனுக்குத் தோல்வியிலேயே முடியும்.

பாடலில் உவமானம் குறிப்பிடப்பட்டு உவமேயம் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!

உவமானம்:-
எலிகளான பகை கூடிக் கடல்போல் ஒலியெழுப்பினாலும் என்ன தீமை உண்டாகும்? பாம்பானது மூச்சுவிட்ட அளவில் அவையெல்லாம் அழிந்துவிடும்.

உவமேயம்:-
நெஞ்சுரமற்ற போற்பயிற்சியற்ற பெரும்படையானது திரண்டு வந்து போரிடினும் நெஞ்சுரம் மிக்க சிறுபடையிடம் தோற்றழிந்துவிடும்.


சிறப்புப்பாடம் - ஒற்று மிகுமிடங்கள்!

6) அத்துணை இத்துணை எத்துணை- எனவரும் அளவுகுறிக்கும் சொல்லுடன் கூடிய சுட்டுவினாக்களின் முன்னம் வலிமிகும்;

காட்டு:-
அத்துணை +பெரியது – அத்துணைப்பெரியது
இத்துணை +சிறியது - இத்துணைச்சிறியது
எத்துணை +செலவு – எத்துணைச்செலவு

7) என இனி ஆக போல விட ஆய் மற்ற மற்றை – போன்ற அகர இகர ஐகார ஈற்று வினை எச்சங்களின் பின் வலிமிகும்.

காட்டு:-
நன்றென +சொன்னாள் - நன்றெனச்சொன்னாள்
இனி +செல் - இனிச்செல்
அவனாக +பேசினான் - அவனாகப் பேசினான்
புலிபோல +பாய்ந்தான் - புலிபோலப் பாய்ந்தான்
நஞ்சைவிட +கொடியது – நஞ்சைவிடக்கொடியது
போவதாய் +சொன்னான் - போவதாய்ச்சொன்னான்
உருவமற்ற +கதை – உருவமற்றக்கதை
மற்றை +பொருள் - மற்றைப்பொருள்

8) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வலிமிகும்
காட்டு:-
அறியா +பிள்ளை – அறியாப்பிள்ளை
காணா +பொருள் - காணாப்பொருள்
(குறிப்பு:- காணாத அறியாத த- ஈறுகெட்டது)

9) வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துவரும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வலிப் புணர்ச்சியிலும் வலிமிகும்.

காட்டு:-
வேற்றுமைப்புணர்ச்சி:-
மாட்டின் +கொம்பு - இன் உருபு கெட்டு மாட்டுக்கொம்பு எனவரும்.
கொக்குத்தலை – கொக்கின் +தலை
ஆட்டின் +காம்பு –ஆட்டுக்காம்பு

அல்வலிப் புணர்ச்சி:-
பருப்பு +உடைய +சட்டி –என்பது பருப்புச்சட்டி எனவரும்
காய்கறிக்கடை – கய்கறிகளை உடைய கடை
கிழக்குத்திசை –கிழக்காகியதிசை

க்கு ச்சு ட்டு த்து ப்பு ற்று –என வல்லினம் இரட்டுறும் சொற்களையடுத்து வரும் கசதப எழுத்துகளையுடைய வினைச்சொற்களின் முன்வலிமிகும்.

செத்து +போ – செத்துப்போ
கற்று +தா – கற்றுத்தா
விட்டு +தா – விட்டுத்தா
இச்சு +தா - இச்சுத்தா
ஏற்று +கொள் - ஏற்றுக்கொள்

10) தனிக்குறிலைச் சார்ந்து வரும் முற்றியலுகரத்தின் பின் வலிமிகும்;

காட்டு:-
திரு +குறள் - திருக்குறள்
திரு +புகழ் - திருப்புகழ்
தெரு +கோடி – தெருக்கோடி

இக்கிழமைக்கான ஈற்றடி:- வன்முறையை வேரறுப்போம் வா!

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. சிறப்புப் பாடம்! வலிமிகுமிடங்கள்

    அருமை

    பதிலளிநீக்கு
  2. எத்தனை தாக்கங்கள் எவ்வளவு சேதங்கள்
    தீர்ந்ததோ தாகம் உயிர்நாசம் செய்வோர்க்கு
    நண்பா, படைதிரட்டி நேர்நிறுத்தி நெஞ்சுயர்த்தி
    வன்முறையை வேரறுப்போம் வா!

    பதிலளிநீக்கு
  3. மும்பைக் கலவரத்திற்குத் தங்கள் இவ்வெண்பா சரியான பதிலடி நண்பர் சங்கர் அவர்களே! வாழ்த்துகள். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெண்பா படையுங்கள்.

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com