திங்கள், 15 டிசம்பர், 2008

32.வேற்றுமையணி!

இருபொருள்களின் ஒற்றுமையைக் கூறியபின் அவற்றை வேற்றுமைப் படுத்திக் கூறுவது வேற்றுமையணியாம்.

காட்டு:-
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு!


தீபட்டால் பிறரது உடலில் புண்ஏற்படும். அதுபோலவே நாவும் பிறரைச் சொல்லால் சுடும். சுடும்தன்மையால் தீயும் நாவும் ஒருதன்மையுடையதே. ஆயினும் தீவடு ஆறிவிடும். நாவடு ஆறா.

தீ மற்றும் நாவின் செயல்கள் ஒருதன்மையதே யாயினும் அதனால் விளையும் வினைகளில் மாறுபாடுடையமையால் இவ்வணி வேற்றுமையணியாம்.


வலிமிகும் இடங்கள்!

11.நெடில்தொடர் உயிர்த்தொடர் குற்றியலுகரங்களின் அடுத்து டற சொற்கள் இரட்டித்தால் வலிமிகும்.

காட்டு:-
வீடு பாடம் -வீட்டுப்பாடம்
காடு புலி –காட்டுப்புலி
மாறு கருவி –மாற்றுக்கருவி
சோறு பயல் -சோற்றுப்பயல்

குறிப்பு:-
இதில் மெல்லினத்திற்கும் இடையினத்திற்கும் முன்னால் சொற்கள் இருக்குமானால் வலிமிகா.

காட்டு:-
எருது மாடு –எருத்துமாடு
நாடு மரம் நாட்டுமரம்
வீடு நாய் -வீட்டுநாய்

12.அகர இகர ஆய் போய் முதலிய வினையெச்சங்களை அடுத்தும் வலிமிகும்.

காட்டு:-
வர போனார் –வரப்போனார்.
விளக்கம்:- ர் அ-ர இது அகர வினையெச்சம் என நினைவிற் கொள்க.

உலாவ சொன்னான் -உலாவச்சொன்னான்
தேட சொன்னேன் -தேடச்சொன்னேன்.

வாடி போனான் -வாடிப்போனான்.

ட் இ-டி இது இகர வினையெச்சமென்பதை நினைவிற்கொள்க.

கூறி சென்றான் -கூறிச்சென்றான்
கூடி செல்வோம் -கூடிச்செல்வோம்.

ஆய் எனமுடியும் வினையெச்சத்தை அடுத்து வலிமிகும்.

வந்ததாய் சொல் -வந்ததாய்ச்சொல்.
பரிவாய் பார் –பரிவாய்ப்பார்.

பரிவு ஆய் பார்-ஆய் வருமிடங்களில் வலிமிகுவதைக் காண்க.

போய் என்னும் வினையெச்சத்தின் பின்னும் வலிமிகும்.

போய் சொல் -போய்ச்சொல்
போய் பார் –போய்ப்பார்.

13.எட்டு பத்து என்னும் எண்ணுப்பெயரை அடுத்து வரும் சொற்களின் வலிமிகும்.

காட்டு:-
பத்து பாட்டு –பத்துப்பாட்டு.
எட்டு தொகை –எட்டுத்தொகை.

14. ண்டு ந்து ம்பு எனவரும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வலிமிகும்.

காட்டு:-
குண்டு பையன் -குண்டுப்பையன்.
தண்டு கீரை –தண்டுக்கீரை
உணர்ந்து பார் –உணர்ந்துப்பார்.
நடந்து செல் -நடந்துச்செல்
பாம்பு பல் -பாம்புப்பல்.

15. ஒரெழுத்தொருமொழி அஃறிணைப் பெயர்மென் வல்லினம் வந்தால் வலிமிகும்.

காட்டு:-
ஆ சொல் -ஆச்சொல்
கோ பாய்ந்தது –கோப்பாய்ந்தது.
ஈ கடித்தது -ஈக்கடித்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி: - தண்ணென மாறும் தழல்!

ஆகரம்.அமுதா

6 கருத்துகள்:

 1. கைப்பொருள் அற்ற வறியோர் மெய்ப்பொருள்
  தேறாத் துறவிக்கு மேல்

  கைப்பொருள் இல்லாத மனிதரும், மெய்பொருள் காணாத் துறவியும் அவரவர் பொருள் (உணவு, ஞானம்) குறித்து வாடுவர்.

  வறியவருக்கு உணவு எவர் கொடுத்தாலும் வயிற்றுத் துன்பம் நீங்கி விடும். ஆனால் மெய்ஞானம் அவ்வாறு எளிதில் கிட்டுவதில்லை. :-)))

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் வேற்றுமையணியைப் பற்றிய குறட்கும் மிக்க நன்றிகள் முகவை அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. அமுதா... என் முயற்சி...

  கோபமெனும் பெருந்தீ இறையெனக் களித்த
  சாபமென் றுறுத்தும் போதெலாம் - லோபியின்
  கண்மணி தாமரைக் கண்களால் சிரித்திடத்
  தண்ணென மாறும் தழல் !

  பதிலளிநீக்கு
 4. மீண்டுமோர் அழகிய முயற்சி! வாழ்த்துகள்.

  திருத்திய வெண்பா:-

  கோபம் எனும்தீ இறையெனக் கீந்த
  சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
  கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்
  தண்ணென மாறும் தழல் !

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி அமுதா. எனது வெண்பாக்களை பொறுமையாக அழகாக திருத்தி செம்மைப் படுத்தும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். சிறிது முன்னேற்றம் கண்டு வருகிறேன் என்றே நினைக்கிறேன்.

  என்னைப் போன்ற கவிதை வாசனை இல்லாதவனுக்கும் கூட மூன்று நாட்களில் மூன்று வெண்பா எழுதவைத்த உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அதுஎன் கடமை நண்பரே! முயற்சி திருவினையாக்கும்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com