புதன், 4 மார்ச், 2009

38 விளாங்காய்!

பொதுவாக வெண்பா எழுதும் நம்மில்பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எழுதிவிடுகிறார்கள். புதிதாக வெண்பா எழுதுபவர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது.

அதென்ன விளாங்காய்? அசைபிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா?

ஈரசைச்சீர்கள்:-

நேர்நேர் -தேமா
நிரைநேர் -புளிமா
நிரைநிரை -கருவிளம்
நேர்நிரை -கூவிளம்

மூவசைச்சீர்கள்:-

நேர்நேர்நேர் -தேமாங்காய்
நிரைநேர்நேர் -புளிமாங்காய்
நிரைநிரைநேர் -கருவிளங்காய்
நேர்நிரைநேர் -கூவிளங்காய்


வெண்பாவைப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர்களே இயன்றுவரும் என்பது யாவரும் அறிந்ததே.

பூவரசு -இச்சொல்லைப் பிரித்துப்பார்ப்போம்.

பூ/ அர/ சு -நேர் நிரை நேர் -கூவிளங்காய் (பூ -நெடில், அர -குறிலிணை, சு -குறில்) ஆக இணைந்து கூவிளங்காயாயிற்று.

சொன்னதாரோ -இச்சொல்லை அசைபிரிக்கும் போதும் நாம் "சொன்/ னதா/ ரோ" -நேர் நிரை நேர் -கூவிளங்காய் என்றே அசைபிரிக்கிறோம். (சொன் -குறிலொற்று, னதா -குறிநெடில், ரோ -நெடில்) ஆக கூவிளங்காய் என்றாயிற்று.

முன்னோர் வழங்கும் முறைப்படியும் அசைபிரிக்கும் வாய்பாட்டுப் படியும் "சொன்னதாரோ"
எனுஞ்சொல்லைக் கூவிளமாகக் கொள்வதே சரி.

ஆயினும் வெண்பாவிற்குள், "சொன்னதாரோ" என்பனபோன்ற சொற்கள் (நடுவசை குறிநெடிலாக அமைவது) பெரும்பகுதி வராது தவிற்பதே நன்று.

காய்ச்சீராக அமைந்த ஒருசொல்லின் நடு அசை "குறிநெடிலாக" அமைவதை விளாங்காய் என்கிறோம்.

காட்டுகள் சில:-

சன்/னலோ/ரம் -கூவிளாங்காய்
மங்/கலா/ன -கூவிளாங்காய்
வெத்/துவே/ட்டாய் -கூவிளாங்காய்


சரி. விளாங்காயாக அமைந்தசீர் ஏன் வெண்பாவில் வரக்கூடாது? இப்படியொரு கேள்வியெழுவதும் இயல்பே. காரணம் என்னவென்றால் வெண்பாவில் காய்ச்சீர் இயல்பாக, அதாவது நடுஅசை "குறிலிணை"யாக அமைகிறபோது எழும் ஓசையும் அதே நடுஅசை "குறிநெடி"லாக அமையும்போது எழும் ஓசையும் மாறுபட்டவை. அசைப்படி பார்த்தால் இரண்டும் கருவிளங்காய் அல்லது கூவிளங்காய்ச்சீர்களே. ஆயினும் ஓசைஅடிப்படையில் விளாங்காயாக அமையும் சீர் வெண்பாவின் ஒசையை மணித்துளிநேரம் (நிமிடநேரம்) நீட்டித்து வெண்பாவிற் குறிய இயல்போசையைக் கெடுத்துவிடுவதாக நம் முன்னோர்கள் கருதுகிறார்கள்.

யானறிந்த எந்த மரபிலக்கியங்களிலும் விளாங்காய்ச்சீர் அமைத்து எழுந்த வெண்பாக்களை நான் இதுவரைக் கண்டதில்லை.

கீழ்வரும் தஞ்சை இனியனின் வெண்பாவை வாய்விட்டு ஓசையோடு படித்துப் பாருங்கள்.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் -அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! பஸ்பிடித்து
சிங்கார சென்னைவந்து சேர்!
-தஞ்சை இனியன்

இரண்டாமடியின் முதற்சீரும், இரண்டாம் சீரும் ஓசை அடிப்படையில் நீள்வதைத்தங்களால் உணர முடிகிறதா?

மங்/கலா/ன ஆ/டைபோ/தும் - இவ்விரு சொற்களும் காய்ச்சீருக்குறிய ஓசையைச் சற்றே கூட்டிக்காட்டுகிறதல்லவா?

ஆகவே இவ்விரு சொற்களும் அவ்வெண்பாவிற்குறிய இயல்போசையைக் கெடுத்துவிடுகின்றன. ஆகவே நடுஅசை குறிநெடிலாக அமைப்பதைத் தவிர்க்கவும்.

சிலவேளைகளில் விளாங்காய்ச்சீராக அமைவதைத் தவிர்க்கமுடியாததாகிவிடுமானால் முடிந்த வரை வகையுளிசெய்தாவது (விளாங்காயாக வருஞ்சொல்லின் மூன்றாவது அசையைப் பிரித்து அடுத்த சொல்லொடு இணைத்துவிடுவது) வெண்பா ஆக்குவதே சிறந்த வழியாம்.

கீழுள்ள எனது வெண்பாவைப் பாருங்கள்:-

வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!
-அகரம் அமுதா

முதலடியின் மூன்றாம் சீர் "வெத்துவேட்டாய்" கூவிளாய்காய்ச் சீராக வந்துள்ளது.

எனது மற்றொரு வேண்பாவில்...

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!


நான்காம் அடியின் இரண்டாம் சீரைக் கவனியுங்கள். "பேர்சுதாகர்" என வந்து ஓசை நீள்கிறது. ஆகையால் இவ்விளாங்காயைத் தவிர்ப்பதற்காக ஈற்றடியை இப்படி மாற்றினேன்,

"பருவமியற் பேர்சுதா கர்!"

குறிப்பு:- வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "ஊருக்(கு) உழைத்தல் உயர்வு!"


அகரம் அமுதா

7 கருத்துகள்:

 1. கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சிறு
  துரும்பையுங் கிள்ளாத தலைவரே ! - இரும்புச்
  சேரிலே அமர்ந்து நாட்டாமை செய்வதினும்
  ஊருக்(கு) உழைத்தல் உயர்வு !

  சுமாராவாவது இருக்கா? :)))

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் மகேஷ் அவர்களே. தங்களின் இவ்வெண்பாவைப் படித்தவுடன் சிரித்துவிட்டேன். அத்துணை நகைச்சுவையாக அருமையாக எழுதியுள்ளீர்கள். சில இடங்களில் தளை தட்டுகிறது. சரிசெய்தால் நலம். இப்படி இருக்கலாம் எனக்கருதுகிறேன்.

  கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்
  துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்
  (ச்)சேரில் இருந்தபடி நாட்டாமை செய்வதினும்
  ஊருக்(கு) உழைத்தல் உயர்வு !

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி அமுதா.... ஊக்கமே ஆக்கம் !!

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா4 மே, 2009 அன்று 10:27 PM

  பேருக்கு வாழாது பேச்சுக்குச் சொல்லாது
  காருக்கும் காணி வரப்பேற்ற நீரொக்க
  பாருக்கு நன்றிசெய்; பாவலரும் பாராட்ட
  ஊருக் குழைத்த லுயர்வு

  பதிலளிநீக்கு
 5. அட.... அட... அருமை.அருமை.அருமை. வாழ்த்துகள்! தோழரே!? தங்களின் ஆற்றலெண்ணி வியக்கின்றேன். தொடர்ந்து பங்குபெறுக.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் அமுதா அவர்களே உங்கள் பணி சிறப்பாகவுள்ளது.இன்று தான் உங்கள் வலைப்பூவினைக் கண்டேன்.நல்ல செய்திகளைக் கொடுத்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றிகள் கல்பனா அவர்களே! மீண்டும் வருக. ஆதரவு தருக.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com